கட்டுரைகள்

உலக மகளிர் நாளில் சபதமேற்போம்: பாசிச மோடியை வீழ்த்துவோம்!

மு.கண்ணகி

மார்ச் – 8 உலக மகளிர் நாள். உலகம் முழுவதும் சுரண்டப்படும் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்காக மார்க்ஸ் வழிகாட்டுதலில் முதல் அகிலம் அமைக்கப்பட்டது. புகழ் பெற்ற மேதினப் போராட்டமும் ஏங்கல்ஸின் உதவியுடன் இரண்டாவது அகிலத்தின் வளர்ச்சிப் போக்கில் சோசலிஸ்ட் பெண்கள் இயக்கம் உதயமானது.

கிளாரா ஜெட்கின் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தையும், அதன் விளைவாக வளரும் சமூக அரசியல் சமத்துவத்தையும் அளிக்க வல்லது என்பதை வலுவாக வலியுறுத்தினார். முதலாம் உலகப் போருக்குப் பின் நிறைய பெண்களின் பங்கேற்பு உழைப்பு சந்தைக்கு கிடைத்த பிறகு, கிளாரா ஜெட்கின் உழைக்கும் அம்மாக்களுக்காக பேசவும் எழுதவும் தொடங்கினார்.

வீட்டிலும் வெளியிலும் அதிகப்படியான உழைக்கும் நேரங்கள் போதுமான அளவில் சரியான கவனிப்பின்மை, ஓய்வின்மை பெண்ணுடைய நலத்தை பெரிதும் பாதித்ததை நோக்கிய கிளாரா ஜெட்கின் எட்டுமணி நேர வேலை, சனி மதியம் ஓய்வு, தாய் சேய் நலம் தொழிற்சாலைகளில் பெண் மேற்பார்வையாளர்கள், வேலைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம், கடுமையான வேலைகளிலிருந்து விலக்கு ஆகியவற்றை வலியுறுத்தினார்.

அலெக்ஸாந்திரா கொலந்தாய், பெண்களுக்கு என தனி இயக்கம் தோற்றுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பெண்களுக்கான ஒட்டுரிமையும் நேரடியாக சரிசமமான, ரகசியமான ஓட்டு, சமமான வேலைக்கு சமமான சம்பளம், பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு, பிரசவம் மற்றும் பிள்ளை வளர்ப்புக்கு அரசின் முழுப்பண உதவி ஆகியவற்றை வலியுறுத்தினார்.

கிளாரா ஜெட்கின் வழிகாட்டுதலில் ஜெர்மானியர் ஸ்டட்கார்ட் நகரில் 1907 ஆம் ஆண்டில் முதல் முறையாக உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. பெண்களுக்கு வாக்குரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்க நகரில் 1908 மே 3 அன்று மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதுவே முதல் மகளிர் தினம். 1909ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது தான் முதன் முறையாக கடைபிடிக்கப்பட்ட மகளிர் தினம்.

உலக அளவில் மகளிர் தினம் கடைபிடிக்க வரலாற்று சிறப்புமிக்க மாநாடு 1910ல் டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகனில் சோசலிஸ்ட் பெண்கள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் நடைபெற்றது. 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், ஆண்டு தோறும் மகளிர் தினம் கொண்டாட வேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல் உலக போரின் உச்சமாக ரஷ்ய- ஜெர்மனி இடையே 3 ஆண்டுகள் போர் நடைபெற்றது. இதில் கொல்லப்பட்டவர்கள், போர்க்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், இப்படிப் பறிகொடுத்த லட்சக்கணக்கான தாய்மார்கள், வேதனையில் துடித்த இல்லத்தரசிகள் போரை நிறுத்த வேண்டும், மன்னராட்சி ஒழிய வேண்டும் என்று லெனின் தலைமையில் கம்யூனிஸ்டுகளும், சோசலிஸ்டுகளும் போராடினர். இதில் சோசலிஸ்ட் பெண்களும் பங்கெடுத்தனர்.

தங்களோடு குழந்தைகளும், மற்றவர்களும் பசியோடு துடிப்பதை பொறுக்க முடியாமல் பெண் தொழிலாளர்கள், நிலக்கரிச் சுரங்கங்கள், தொழிற்சாலைகள் ஆலைகளில் 16 மணி நேரம் வேலை, சுகாதாரம் காற்று, உணவு, தூக்கமின்றி பணி செய்த பெண்களும் கொதித்து எழுந்தனர். 1917 மார்ச் 8 ரஷ்ய தலைநகர் பெட்ரோகிராடில் பெண்கள் வீதியில் இறங்கி போராடினார்கள். போராட்டத்தில் துப்பாக்கிச்சூடும், படுகொலைகளும் மேலும் எதிர்ப்பை உறுதிப்படுத்தின. இப்புரட்சியில் ஜார் மன்னர் வீழ்ந்தார்.

மார்ச் 8 ஐ ரஷ்ய பெண் தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினமாக கொண்டாட முடிவு செய்தனர். இந்த முடிவே உலகம் முழுவதும் மார்ச் 8 உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. பெண்கள் அமைப்புகளின் பல்வேறு போராட்டங்கள் மார்ச் 8 ஐ சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்க வலியுறுத்தியது.

போராடிப் பெற்ற உரிமை நாளான மார்ச் 8 மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது. 1975 ல் ஐ.நா சபை சர்வதேச மகளிர் ஆண்டாக அறிவித்து கௌரவித்தது. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் போராடிப்பெற்ற உரிமை தினம். நகைக் கடை, ஜவுளி கடை, பன்னாட்டு நிறுவனங்களின் பொருள்களின் விற்பனைக்கான விளம்பர நாளாக கடைபிடிக்கப்பட்டு வருவது வருத்தத்திற்குரிய செய்தியாகும்.

போராட்ட வரலாறு மறைக்கப்பட்டு உலக மகளிர் தினம் விளம்பர கொண்டாட்டமாக மாற்றப்படும் சூழலில், அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள், மாற்றுக் கருத்து முன்வைப்பவர்கள் மீதான தாக்குதல்கள் நாடு முழுவதும் வெறுப்புணர்வை உண்டாக்கிவிடுதல், தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், கல்வி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் என நாடு முழுவதும் அபாயகாரமான நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்போம் என்று வாய் ஜாலம் காட்டும் பா.ஜ.க அரசின் அமைச்சர்களும், ஆதரவாளர்களும் பெண்களுக்கு எதிராக மட்டுமல்ல, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விலைவாசி உயர்ந்து, வேலையின்மை ஏழை, எளிய மக்கள் மீதான சுமை அதிகரித்துள்ளது. வாழ்வாதார உரிமை பறிபோய் கொண்டுள்ளது. மதவாத அரசியல், சாதி ரீதியாக பிளவுபடுத்துதல் மூலம் ஏற்படும் கலவரங்களில் பெண்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர். மோடி அரசின் பிற்போக்குத்தனமான கொள்கைகளால் பெண்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது.

இந்திய விடுதலைப் போரிலும் பெண் விடுதலை,  சமூக, பொருளாதார, அரசியல் விடுதலை, ஆண், பெண் சமத்துவம், வேலை, கூலி, வாக்குரிமை, கல்வி உரிமை, சுகாதாரம், மருத்துவம், உணவு, தண்ணீர் அடிப்படை தேவைகளுக்காகப் போராடுகிறது. சமூக மாற்றத்திற்கான போராட்டங்களை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் முன் எடுக்கிறது.

இந்தியாவில் ஒன்றிய மோடி அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஒரு கட்சி, அதிபர் ஆட்சி முறையை அமல்படுத்தி கூட்டாட்சி முறைக்கு எதிரான, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்கிறது.

பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஆட்சி நடத்தி நெருக்கடியை கொடுத்து வருகிறது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் நெருக்கடி ஏற்படுத்தி தேர்தல் மூலம் வெற்றி பெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுகிறது. ஆர்.எஸ்.எஸ். ன் பாசிச கொள்கையை நிறைவேற்ற ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கிறது. மாற்றுக் கருத்து சொல்பவர்களை கொலை செய்வதன் மூலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது.

பா.ஜ.க. ஆட்சியில் பெண்கள், சிறுபான்மை மக்கள் மீது வன்முறைத் தாக்குதல் அதிகரித்துள்ளது. காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் சிறுமி ஆசிபா தொடங்கி மணிப்பூர் பெண்கள் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வுகளாக தொடர்ந்து வருகிறது.

பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை காரணம் காட்டி, இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது. பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களும் கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் இருந்து குழந்தைகளை கத்தி முனையில் எடுத்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவங்களும் அரங்கேறியது.

பில்கிஸ் பானுவின் குடும்பத்தில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதோடு அவரது குடும்பத்தினரும் குழந்தைகளும் கோரப் படுகொலை செய்யப்பட்டனர். அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் 11 பேர் தண்டிக்கப்பட்டார்கள். குஜராத் நீதிமன்றம் நன்னடத்தை விதியின் அடிப்படையில் குற்றவாளிகளை விடுவித்தது. உச்சநீதிமன்றம் தலையிட்டு மீண்டும் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட வேண்டுமென்று தீர்ப்பளித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வாங்கி பெருமை சேர்த்த தங்க மகள்கள் மல்யுத்த வீராங்கனைக்களுக்கு மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பா.ஜ.க.வின் எம்.பி.யுமான பிரிஜ் பூசன் சரண்சிங் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் டில்லியில் ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் மூன்றுமாத காலமாக போராடினர். கண்டுகொள்ளப்படாத நிலையில் போராட்டம் வலுவடைந்த போது பிரிஜ் பூசன் சரண்சிங் கைது செய்யப்பட்டனர்.

பெண்களுக்கு எதிரான, பாசிச மோடி அரசின் நடவடிக்கைகளைத் தடுத்திட இந்தியப் பெண்கள், மதச்சார்பற்ற ஜனநாயக அரசியலமைப்பை நிலைநிறுத்த. வெறுப்பு அரசியலையும் மதவெறி அரசியலையும் நிராகரிப்போம்! என்று சர்வதேச மகளிர் தினத்தில் உறுதியேற்போம்! செயல்படுத்துவோம்!

கட்டுரையாளர்: மு.கண்ணகி
மாநிலச் செயலாளர்
இந்திய மாதர் தேசிய சம்மேளனம்

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button