ஏஐடியுசி: எழுச்சியின் வரலாறு -9
1906ல் அரசு அமைத்த குழுவின் பரிந்துரைப்படி 1911ல் மூன்றாவது தொழிற்சாலைச் சட்டம் வந்தது. 9 வயதுக்கு மேற்பட்ட குழந்தைதான் தொழிலாளியாக பணிபுரிய முடியும் என்பதால், வயதுச் சான்றிதழ் தரவேண்டும் என்று இந்தச் சட்டம் கூறுகிறது. வேலைநேரத்தை 12 மணி நேரமாகக் குறைத்தது.
நிறைய போராட்டங்களும், வேலைநிறுத்தங்களும் நடைபெற்றாலும் கூட, தொழிற்சங்கம் என்ற சொல்லின் மெய்யான பொருளுக்கேற்ப தொழிலாளி வர்க்க அமைப்புக்களாக அவை இயங்கவில்லை. பரஸ்பர மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டன.
1914ல் முதல் உலகப் போர் வெடித்து, 1918 வரை நீடித்தது. அநேகமாக உலகமே இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதின. தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகள், கச்சா பொருட்களைப் பெறுவதற்காகவும், தமது உற்பத்திப் பொருட்களை விற்கச் சந்தை தேடியும், உலகைத் தமக்குள் மறுபகிர்வு செய்வதற்காகவுமே உலக மக்கள் மீது இந்தக் கொடுமையான போர் சுமத்தப்பட்டது. அதுவரையில் அறிந்திராத பெரும் அழிவுக்கு உலகம் ஆட்படுத்தப்பட்டது.
இடையில், 1917ல் ரஷ்யாவில் நடந்த சோஷலிஸ்ட் புரட்சி, அந்த நாட்டின் போக்கை மட்டுமல்ல, இந்தியத் தொழிற்சங்கங்களின் தன்மையையும் மாற்றி அமைத்தது. வர்க்க உணர்வுடன் கூடியவையாக வார்த்தெடுத்தது. ஒரு புதிய நவீன தொழிற்சங்க இயக்கம் உருவாக வழி வகுத்தது.
(இன்னும் வரும்)
கட்டுரையாளர்: டி.எம்.மூர்த்தி
தேசிய செயலாளர், ஏஐடியுசி
ஆசிரியர், ஜனசக்தி