கட்டுரைகள்

அமெரிக்காவுக்கு அடிமைச் சேவகம் செய்யவா இந்தியா?

த.லெனின்

மகாபாரத இதிகாசத்தில் சாந்தி பருவத்தின் கீழ் அமைந்துள்ள ராஜதர்ம அனுசாசனப் பருவத்தில், அம்புப் படுக்கையில் இருக்கும் பீஷ்மர், தனது பேரனும் அரசனுமாகிய தர்மராஜனுக்கு அரசாட்சி பற்றிப் போதிக்கிறார்.

அறிவுடைய மனிதன், எப்படி பசுமாட்டிடம் ஒரேயடியாகப் பாலைக் கறந்துவிடாமல், அதனைத் தொடர்ந்து பாதுகாத்து, பாலைச் சுரக்கவிட்டு, தினசரி கறக்கிறானோ, அதுபோல மன்னனும் தனது குடிமக்களைப் பாதுகாத்து, வளர்ச்சி அடையச் செய்து, தொடர்ச்சியாக வரி வருவாயை வசூலிக்க வேண்டும் என்கிறார் பீஷ்மர்.

ஆனால் இதிகாசப் பெருமை பேசும் மோடி அரசு அமெரிக்காவே பரிகாசம் செய்யும் அளவிற்கு உலகிலேயே அதிகம் வரி வசூலிக்கும் நாடாக இந்தியா மாறிவிட்டது. உழைக்கும் மக்கள், சாதாரண ஏழை, எளிய, மக்கள் மிக அதிகமான வரிச்சுமையையும், எதையும் தாங்கும் பெரும் பணக்காரர்கள் மிகக் குறைந்த வரி விதிப்பையும், வரிச் சலுகைகளையும் கொண்டிருக்கிற அதிசய நாடு இந்தியா! இதுதான் அவர்கள் கனவு காணும் ராம ராஜ்ஜியம்!

அமெரிக்காவுக்கே முன்னுரிமை!

புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் டிரம்ப் நிர்வாகம், “அமெரிக்க நலன்களுக்கு முன்னுரிமை” என்ற கொள்கையை வலியுறுத்துவதால், இந்திய –அமெரிக்க வர்த்தக உறவுகள் ஒரு புதிய அடிமை நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்தியா எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவு வரியை இந்திய இறக்குமதியின் மீது வரி விதிக்கும் பரஸ்பர வரியை ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அமல்படுத்தப் போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். இது இந்திய வர்த்தகத்தைப் பாதிக்கும் என்பதால், இந்த நடவடிக்கையைத் தவிர்க்க ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் அமெரிக்கா சென்று அந்நாட்டு வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக்குடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஏற்கனவே, கனடா, மெக்சிகோ போன்ற நாடுகள் மீது 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார்.

மெக்சிகோ அதிபர் தனிப்பட்ட முறையில் டிரம்புடன் தொலைபேசியில் உரையாடியதைத் தொடர்ந்து வரி விதிப்பை ஒரு மாதத்திற்கு டிரம்ப் ஒத்திவைத்துள்ளார். இதேபோல, கனடா மீதான வரி விதிப்பையும் அவர் ஒத்திவைத்துள்ளார். ஆனால் அதிபர் டிரம்புடன் ஆழமான நட்புறவைக் கொண்டிருந்தாலும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாகத் தலையிடவில்லை. சமீபத்தில் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்குச் சில நிமிடங்கள் முன்பாகத்தான் டிரம்ப் பரஸ்பர வரியை அறிமுகப்படுத்தப் போவதாகக் கூறினார் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

மோன நிலையில் மோடி!

மோடியின் அமெரிக்க வருகை உறுதி செய்யப்படுவதற்கு முன்பே, அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது இந்தியாவில் ஒரு அரசியல் புயலைக் கிளப்பியது. அவர்கள் நாடு கடத்தப்பட்டு, சங்கிலியால் பிணைக்கப்பட்டு, விலங்கிடப்பட்டு, இராணுவ விமானத்தில் தாய் நாட்டிற்கு அனுப்பப்பட்ட விதமும் அரசாங்கத்தைக் கையறு நிலைக்குக் கொண்டு சென்றது.

பிரதமர் மோடியிடமும் டிரம்ப் நேரடியாக வரி விதிப்பைப் பற்றிப் பேசிய போதும் பிரதமர் மோடி அதை எதிர்த்து ஒருவார்த்தைகூடப் பேசவில்லை. அதுமட்டுமின்றிக் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக இந்தியாவின் வரி விதிப்பை டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். அது ஏதோ இந்திய மக்களுக்குப் பரிந்து பேசுவதற்காக அல்ல மாறாக தனது பொருட்கள் இந்தியாவில் விற்கப்பட வேண்டும் என்றால் இந்த வரிக் கொடுமை அவர்களது வணிகத்தையும் பாதிக்கும் என்பதால்தான் இப்படிப் பேசி உள்ளார். ஆனால் இதற்கும் பிரதமர் மோடியோ, ஒன்றிய அரசு தரப்பிலோ ஒரு கண்டனமோ, எதிர்ப்போ கூட தெரிவிக்கப்படவில்லை. அடக்கமாக, அமைதிகாத்து மோன நிலை மூலம் தங்களது அமெரிக்க விசுவாசத்தை மெய்பித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் தனது ஓவல் அலுவகத்தில் அளித்த பேட்டியில், ‘‘பொருளாதாரம், நிதி மற்றும் வர்த்தக விவகாரத்தில் உலகின் அனைத்து நாடுகளாலும் அமெரிக்கா முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.கனடா, மெக்சிகோ மட்டுமின்றி இந்தியாவும் நம்மிடம் அதிக வரிகளை வசூலிக்கிறது. இந்தியாவில் எதையும் நாம் விற்க முடியாது. கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாம் அங்கு மிகக் குறைந்த வணிகத்தையே மேற்கொள்கிறோம். இப்போது இந்தியா தனது வரிகளைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் உண்மையில் என்ன செய்கிறார்கள் என்பது அம்பலமானதைத் தொடர்ந்து இப்போது ஒப்புக் கொண்டுள்ளனர். சீனாவிலும் இதே நிலைதான் என்று பேசி உள்ளார்.

மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் நம்மை மிகவும் வஞ்சிக்கின்றன. இந்தியா அதிக வரி வசூலிப்பதாக இந்தக் காலத்தில் மட்டும் 3 வது முறையாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டிய நிலையில், திடீரென இந்தியா வரியைக் குறைக்க ஒப்புக் கொண்டதாகக் கூறியிருப்பது அதன் சரணாகதியைக் காட்டுகிறது.

இதுதொடர்பாக ஒன்றிய அரசின் தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை. பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் சந்திப்பின் போது இருதரப்பினருக்கும் நன்மை தரும் வகையில் இருதரப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்வதென அப்போது முடிவு செய்யப்பட்டது. இதற்காக வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் அமெரிக்கா சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில், விவசாயப் பொருட்களுக்கான வரியைக் குறைக்க வேண்டும் என்றும், ஆயுதத் தளவாடங்களைத் தங்களிடம் அதிகமாக வாங்க வேண்டுமெனவும் அமெரிக்கா அழுத்தம் தருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தச் சூழலில் அதிபர் டிரம்ப், இந்தியா வரியைக் குறைக்கச் சம்மதித்துள்ளதாகக் கூறியிருப்பது பல்வேறு சந்தேக அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் மௌனத்தை விமர்சிக்கும் சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு!
தொடர்ந்து இந்தியாவை அவமானப்படுத்தும் டிரம்புடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்றும், பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் வரிகளை அறிவிக்க வேண்டும் எனவும் சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் (ஜிடிஆர்ஐ) தலைவர் அஜய் ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “தவறான தரவுகளைப் பயன்படுத்தி இந்தியாவைப் பகிரங்கமாக அவமானப்படுத்துகிறார் டிரம்ப். இதுபோன்ற சூழல் இருந்தால் இரு தரப்பிற்கும் வெற்றியைத் தரும் சமநிலையான முடிவு ஏற்பட சாத்தியமில்லை. எனவே, இந்தியா அமெரிக்காவுடனான அனைத்துவிதமான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இருந்தும் விலக வேண்டும். மற்ற நாடுகளைப் போல அமெரிக்காவை எதிர்கொள்ள வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விஷயத்தில் இந்தியாவின் மவுனம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மேலும் டிரம்பும் அவரது அதிகாரிகளும், ஒவ்வொரு நாளும் இந்தியாவைச் சிறுமைப்படுத்துவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயத் தற்சார்பை உடைக்க!

இந்தியாவில் விவசாயப் பொருட்களின் இறக்குமதிக்கு உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் இதற்காக வேளாண் சந்தையைத் திறக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதை இந்தியா ஏற்கக் கூடாது என்றும், அவ்வாறு வேளாண் சந்தையைத் திறந்துவிட்டால் இந்தியாவுக்குச் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்றும் அஜய் ஸ்ரீவஸ்தவா எச்சரித்தார்.

இந்தியாவில் விவசாயத் துறையை நம்பி 70 கோடி மக்கள் உள்ளனர். கிராமப்புற வேலைவாய்ப்பையும் இது அளித்து வருகிறது. ஆனால், அமெரிக்காவில் 70 லட்சம் பேர் மட்டுமே விவசாயத் துறையில் உள்ளனர். விவசாயத்திற்கான மானியமும் அமெரிக்காவில் பெருமளவு அளிக்கப்படுகிறது. எனவே, ஒரு சில விவசாயப் பொருட்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதித்தாலும்கூட அது ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துவிடும். அதன் பிறகு அவர்கள் மேலும் மேலும் சலுகைகளைக் கேட்கத் தொடங்கிவிடுவார்கள். நாட்டின் இறையாண்மைக்கும் தற்சார்புக்கும் பெரும் பங்கம் விளைவித்து விடும்!

பல அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு ஏற்கனவே குறைவான வரிதான் விதிக்கப்படுகிறது. உதாரணமாக, அமெரிக்க பாதாமிற்கு 5 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. பிஸ்தாவுக்கு 10 சதவீத வரி இருக்கிறது. அதேசமயம், இந்தியா விவசாயப் பொருட்களை அமெரிக்காவுக்குக் குறைவாகவே ஏற்றுமதி செய்கிறது. 5 பில்லியன் டாலர் மதிப்பிலான விவசாயப் பொருட்கள், பால் மற்றும் கடல்சார் பொருட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே, இப்போது அவர்களின் விவசாயப் பொருட்களுக்கு வரி விதித்தாலும் கூட அது இந்தியாவின் ஏற்றுமதியைப் பெரிய அளவில் பாதிக்காது.

அதேசமயம், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இன்று இந்தியா ஒப்புக்கொண்டால், எதிர்காலத்தில் அமெரிக்கப் பட்டியலில் மேலும் பல பொருட்கள் சேர்க்கப்பட்டுவிடும்.
பல நாடுகள் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்கு எதிராக நிற்கும் நேரத்தில், இந்தியாவும் அதையே செய்ய வேண்டும். குறுகிய கால தீர்வைவிட நீண்டகாலப் பொருளாதார மீள்தன்மையில் கவனம் செலுத்த வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கிராமப்புற வாங்கும் சக்தியையும் உயர்த்த வேண்டும். இத்தனை பணிகள் இருக்க இனிமேலும் மோடி அரசு மெத்தனம் காட்டலாமா? உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்று நம்மை உருக்குலைத்தது போதாதா? உள்நாடு என்றால் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவு! வெளியுறவுக் கொள்கை என்றால் அந்த கார்ப்பரேட்டுகளின் மூலவிசை அமெரிக்காவின் கட்டளைகளுக்குத் தெண்டனிடுவது இதுதான். இந்தியா என்றால் அவர்கள் பேசும் இந்துத்துவா விசம் என்பது புலனாகிறது அல்லவா!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button