13 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து முடிந்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் காலனி நாடுகளான வெறும் 10 நாடுகள் மட்டும் பங்கேற்கும் இந்தப் போட்டியை உலகப் போட்டி என்று அழைக்கப்பது விந்தையாக இருக்கிறது.
இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்று பெரிதும் நம்பப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டது.
இறுதிப் போட்டிக்கு முன்னர் வரை நடைபெற்ற 9 லீக் போட்டிகளிலும் பத்தாவது அரை இறுதிப் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் தொடர் வெற்றிகளை சாதித்தது! இந்தப் போட்டிகளில் இந்திய வீரர்களின் விளையாட்டு பிரமிக்கத்தக்கதாக இருந்தது.
பேட்டிங்கில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் இந்தியா இந்த முறை பவுலிங்கிலும் சிறந்து விளங்கியது. இத்தோடு இந்திய வீரர்கள் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளனர். இதுவே இந்தியா வெற்றி அடையும் பெரிதும் நம்பப்பட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஆட்சியாளர்களும், சங்கிகளும் இதை மேலும் ஊதிப் பெருக்கிவிட்டார்கள்! இந்திய வெற்றி குறித்து நிதானமாக பேசப்படவில்லை.
ஆஸ்திரேலியாவை இந்திய அணி ஊதித் தள்ளிவிடும்! பந்தாடிவிடும்! அடித்து நொறுக்கி விடும்! ஆஸ்திரேலிய அணி அலறுகிறது! அந்த அணி நம்பிக்கை இழந்து விட்டது! என்ற அளவுக்கு பிரச்சாரம் மேலோங்கி இருந்தது.
அளவுக்கு மீறிய அதீத நம்பிக்கை தடுமாறித் தகர்ந்தது. இந்திய அணி தோல்வியை தழுவியது! அணி வீரர்களை மட்டுமல்ல ஆட்சியாளர்களையும் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களையும் சோகம் கவ்விக்கொண்டது.
வெற்றி களிப்பில் நிதானம் தவறிய போதும் தோல்வியின் போது நிதானம் நிலைநாட்டப்பட்டது. ஆஸ்திரேலியா வீரர்கள் சொன்னது போல் அமைதியை நிலைநாட்டி விட்டார்கள்!
ஒருவேளை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடி இந்தியா தோற்று இருந்தால் நிலமை என்னவாயிருக்கும்?
10 போட்டிகளில் தொடர் வெற்றியும் பல்வேறு சாதனைகளையும் குவித்த இந்திய அணி வீரர்களை நாமும் பாராட்டுகிறோம். அதே நேரத்தில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய வீரர்களுக்கு நாமும் ஆறுதல் தெரிவிக்கிறோம்.
விளையாட்டு போட்டிகளில் எதுவும் நடக்கலாம்! இதுதான் நடக்கும் என்று அறுதியிட்டு கூற முடியாது. கடந்த உலகக் கோப்பை போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி இந்த முறை லீக் போட்டிகளில் கூட தாக்கு பிடிக்காமல் ஆறாவது இடத்தையே பிடிக்க நேர்ந்தது! இது யாரும் எதிர்பார்க்காத ஒன்று?
இந்திய வீரர்களே சாதனை படைத்தார்கள் என்பது போன்று காட்டப்படுகிறது. ஆனால் உண்மையில் அப்படியல்ல. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்களும் சாதனை படைத்துள்ளார்கள்.
அதிக ரன்கள் விராட் கோலி- 765
அதிக அரை சதம் விராட் கோலி- 6
அதிக பவுன்டரிகள் விராட் கோலி- 68
தொடர் நாயகன் விராட்கோலி –
அதிக சிக்ஸர்கள் ரோஹித் சர்மா – 31
அதிக விக்கெட்டுகள் முகமது சமி – 24
சிறந்த பவுலிங் முகமது சமி – 7/57
அதிக டாட் பால் மும்ரா – 372
அதிக மெய்டன் ஓவர் மும்ரா – 9
வெற்றி சதவீத புள்ளிகள். இந்தியா – 90.9
இதைத் தவிர இந்திய வீரர் விராட் கோலி மூன்று சதங்களை அடித்ததுடன் ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் அடித்த 49 சதம் என்பதை 50 சதங்கள் அடித்ததன் மூலம் முறியடித்து உள்ளார்.
இவ்வாறு இந்திய வீரர்களின் சாதனை பாராட்டும் வகையில் அமைந்தது.
அதிக சதம் குவின்டன் டிகாக் (தென் ஆப்பிரிக்கா) – 4
இரட்டை சதம் அடித்தவர் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) 201
இறுதிப் போட்டியில் சதம் அடித்தவர் டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா) ரன்கள்- 137
6 வது முறையாக உலக கோப்பையை வென்ற அணி ஆஸ்திரேலியா.
என்றவாறும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
சாதனை பட்டியலில் முதலிடம் வகித்த இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது ஏன்?
இந்திய அணியின் தோல்விக்கு பேட்டிங், பவுலிங், மற்றும் பில்டிங் ஆகிய மூன்றும் காரணமாக அமைந்தது ஏன்?
காரணங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
- இந்திய அணியின் செயல்பாடுகள் தொடர்பான காரணங்கள்.
- ஒன்றிய மோடி அரசின் தலையீடுகள்
- அளவு மீறிய சங்கிகளின் சண்டித்தனங்கள்
- பிரத்யேக அடிப்படை காரணங்கள்.
அணி செயல்பாடுகள் தொடர்பான காரணங்கள்:
- ஒரே மாதிரியாக அமைக்கப்பட்ட வியூகம்.
- சொந்த மண்ணில் ஆடுகளம் பற்றிய மதிப்பீட்டில் குறைபாடு.
- எதிர் அணியின் திறமை பற்றி குறைவான மதிப்பீடு.
- ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லாத போது சுப்மன் கில், ரோகித் சர்மா மற்றும் சிரேஸ் ஐயர் ஆகிய மூவரும் அடித்தாடத் தொடங்கி அவுட் ஆனது.
- ஆஸ்திரேலியா அணியில் 9 பேர் வரை பேட்டிங் செய்கிறார்கள். ஆனால் இந்திய அணியில் 7 பேர் மட்டுமே பேட்டிங் செய்ய முடிகிறது.
- ஆஸ்திரேலியா அணியில் ஆல் ரவுண்டராக பலர் இருக்கிறார்கள். ஆனால் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மட்டுமே இருக்கிறார்.
- இந்திய அணியில் 50 ஓவர்கள் வீசுவதற்கு ஐந்து பவுலர்கள் மட்டுமே உள்ளனர் 6 வது பவுலர் இல்லை.
- ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும், இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவும் சிறப்பாக பந்து வீசக்கூடிய அஸ்வின் போட்டியில் இறக்கப்பட்டிருக்க வேண்டும். விராட் கோலி உள்ளிட்டோ இதை வலியுறுத்தியும் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இதை செய்ய தவறிவிட்டார்.
- கூட்டு ஆலோசனை, கூட்டு முடிவு, மற்றும் கூட்டுச் செயல்பாடு என்பது இறுதிப் போட்டியின் போது இல்லை.
ஒன்றிய மோடி அரசின் தலையீடுகள்
- உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான ஜெய்ஷா முழுமையாக களம் இறக்கப்பட்டார்.
- கிரிக்கெட் விளையாட்டு வியாபாரம், அரசியல் மற்றும் மதவாத தளமாக மாற்றப்பட்டுவிட்டது.
- 12,50,507 பேர்கள் பார்வையாளர்களாக விளையாட்டு மைதானத்திற்கு ஈர்க்கப்பட்டனர்.
- விளம்பர ஒளிபரப்புக்கு 10 நொடிக்கு 11 லட்சம் முதல் 15 லட்சம் வரை! அதுவும் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி மற்றும் இறுதிப் போட்டி ஆகியவற்றுக்கு 10 நொடிக்கு 35 முதல் 45 லட்சம் வரை என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
- அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் முதல் தர மைதானமா? அல்லது இரண்டாம் தர மைதானமா? இரண்டும் அல்ல! மூன்றாம் தர மைதானத்தை உலகக்கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்து திணிக்கப்பட்டது.
- இறுதிப் போட்டி துவங்கும் முன்பு குடியரசு தினம், சுதந்திர தினம் கொண்டாடுவதைப் போன்று இந்திய விமானப் படையின் ‘சூர்யாகிரண்’ குழு விமானங்கள் ஸ்டேடியத்தின் மீது பறந்து போர்க்காலம் போன்று சாகசம் செய்தது. இது மோடி அரசின் திட்டமிட்ட மூக்கு நுழைப்பு..
- ஒரு லட்சத்து 32 ஆயிரம் டிக்கெட்டுகளில் 30000 டிக்கட்டுகள் மட்டும் முறையாக விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை சங்கிகள் மூலம் விற்பதற்கு கடை திறந்து விடப்பட்டது.
- உலக கோப்பையின் முதல் நாள் போட்டியில் கோலாகல துவக்க விழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்தியாவில் அப்படி நடத்தப்படவில்லை.
- 1983 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் கபில்தேவ் மற்றும் மகேந்திர சிங் டோனி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு அழைக்கப்படவில்லை.
- இவர்கள் இருவரும் மோடியையும் அவரின் இந்துத்துவ அரசியலையும் ஆதரிப்பவர்கள் அல்ல என்பதே இவர்கள் அழைக்கப்படாததற்கு காரணம்.
- உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 40 தொழிலாளர்களின் உயிர்கள் பற்றி கவலைப்படாமல் இந்திய பிரதமரும், உள்துறை அமைச்சரும் கிரிக்கெட் கேலரியில் அமர்ந்து விளையாட்டை பார்த்தனர்.
- மைதானத்தில் இருக்கக்கூடிய பெரிய திரையில் பிரதமர் கையசைப்பது போன்ற படம் காட்டப்பட்டது! அதைக் கண்டு ரசிகர்கள் யாரும் ரசிக்கவில்லை என்பது அவருக்கே அதிர்ச்சியாக இருந்திருக்கும்!
- வெற்றிக் கோப்பையை ஆஸ்திரேலியா அணி தலைவரிடம் வழங்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நடந்து கொண்ட விதம் முகம் சுளிக்க வைத்து. இது உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது.
- மோடி அரசு உலகக்கோப்பை கிரிக்கெட்டில் முழுமையாக தலையிட்டதின் நோக்கம் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்திய வெற்றியை வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஆதாயமாக பயன்படுத்துவது என்பதே காரணம்.
அளவு மீறிய சங்கிகளின் சண்டித்தனம்:
- உலகக் கோப்பை கிரிக்கெட் என்பதை மதிக்காமல் சங்கிகளின் நிகழ்வுகள் போல மாற்றியது.
- எதைப் பற்றியும் கவலைப்படாமல் எங்கள் விருப்பப்படிதான் உலகக் கோப்பை கிரிக்கெட்டை நடத்துவோம் என்ற அதிகார தோரணையில் நடத்தினார்கள்.
- பாஜக- ஆர் எஸ் எஸ் அமைப்புகளின் ஐடி விங்குகளும், சங்கிகளும் இரட்டை வியூகமாக களமிறக்கப்பட்டன.
- கங்கை நதி தீரங்களிலும், முக்கிய புனிதஸ்தலங்களிலும் இந்தியாவின் வெற்றிக்காக பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. சில இடங்களில் யாகங்கள் வளர்க்கப்பட்டன.
- இறுதிப் போட்டிக்கு சங்கிகளையும் திரட்ட வேண்டும் டிக்கெட் விற்பனையில் கொள்ளை அடிக்கவும் வேண்டும் என்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
- ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நுழைவு டிக்கெட்டுகள் கள்ள விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட் விலை 40,000 முதல் 2 லட்சம் வரை விற்று கல்லா கட்டியது சங்கிக் கூட்டம்.
- இதே அகமதாபாத் ஸ்டேடியத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதிய போட்டியில் ‘ஜெய் ஸ்ரீ ராம்‘ என்று கூப்பாடு போட்டு உலக அளவில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது. இதைப் பற்றி எல்லாம் சங்கிகளுக்கு எந்தக் கவலையும் இல்லை.
- ஜெய் ஸ்ரீ ராம் என்று கூப்பாடு போட்ட சங்கி கூட்டத்தின் வாய்கள் இறுதிப் போட்டியில் கட்டப்பட்டு விட்டன.
- இந்த உலக கோப்பை போட்டி வியாபார ரீதியில் வென்றுள்ளது. ஆனால் அரசியல் ரீதியில், மதவாத ரீதியில் மண்ணைக் கவ்வியுள்ளது.
அடிப்படை காரணங்கள்:
மேலே குறிப்பிட்ட மூன்று வகையான காரணங்களும் இந்திய அணியின் தோல்விக்கு காரணங்கள் என்றாலும் இவைகள் தவிர்த்து நான்காவதாக ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது.
1928ல் இந்திய கிரிக்கெட் வாரியம் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை பிராமணர்கள் ஆதிக்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்திய வீரர்களை தேர்வு செய்வதில் இந்த ஆதிக்கத்தின் தலையீடு இருக்கிறது. அணியை வழி நடத்தும் கேப்டன்கள் தேர்விலும் இந்த தலையீடு இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இரண்டு முறை உலக கிரிக்கெட் கோப்பை வெல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டு முறையும் இந்திய அணிக்கு தலைமை தாங்கியவர்கள் பிராமணர் அல்லாதவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இறுதிப் போட்டி என்று வரும்போது அதை எதிர்கொள்கின்ற மன வலிமை, தன்னம்பிக்கை முக்கியமானவையாகும். ஒரு வகையான பதற்றம் பற்றிக் கொள்ளும்.
இந்த உலகக் கோப்பை போட்டியில் தொடர் வெற்றி என்பதால் மெத்தனமும் பாஜக மற்றும் சங்கிகளால் ஊதிப் பெருக்கப்பட்ட வெற்றி என்ற வெறி என்பதும் மிகுந்த அழுத்தத்தை கொடுத்து விட்டது. இந்த அழுத்தம் ஏற்கனவே இருக்கும் பதற்றத்தை அதிகரிக்க செய்துவிட்டது.
இந்திய அணியின் தோல்விக்கு இதுவே பிரதான காரணம்!
இந்திய அணியின் வீரர்களை மாற்றினால் மட்டும் போதாது இந்திய கிரிக்கெட் வாரியத்தையே மாற்றி அமைக்க வேண்டும். இரண்டிலும் பிராமண ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
தகுதி, திறமை இருந்தும், சாதி காரணமாக வீரர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என நீண்ட கால நியாயமான சந்தேகம் நீக்கப்படும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியமும் கிரிக்கெட் வீரர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும்.
வேறு வகையான குறுக்கு வழிகள் எதுவும் இல்லை!
கட்டுரையாளர்:
இளசை கணேசன்
(8220468816)