மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தெலுங்கானாவில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் தோல்வியைத் தழுவியது. இதில், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களை பாஜகவிடம் காங்கிரஸ் பறிகொடுத்துள்ளது. மத்தியப்பிரதேசத்தை தக்கவைத்துக்கொண்ட பாஜக, கடந்த முறையைவிட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
2022 டிசம்பரில் இமாச்சலப் பிரதேசத்திலும், 2023 மே மாதம் கர்நாடகாவிலும் பாஜகவைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ், தற்போது நடைபெற்ற தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது ஏன்?
தேர்தல் உத்தியில் தவறிய காங்கிரஸ்
கர்நாடகா காங்கிரஸ் கட்சியில் சித்தராமையாவுக்கும் டி.கே.சிவகுமாருக்கும் இடையேயான உட்பகையை புறம்தள்ளிவிட்டு, சிறப்பான பரப்புரையை மேற்கொண்டது. மறுபுறம், பாஜகவின் பிளவுவாத இந்துத்துவ அரசியலை விரிவாக அம்பலப்படுத்தியது. இதனால் கர்நாடகாவில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இந்த வெற்றி மூலம் பாஜகவை தோற்கடிப்பதற்கான திறனை பெற்றுவிட்டதாக நம்பி ஐந்து மாநிலத் தேர்தலை காங்கிரஸ் எளிதாக எடுத்துக்கொண்டது.
ஆனால், கர்நாடகா தேர்தல் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட பாஜக, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் இந்துத்துவ பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவதை முக்கிய உத்தியாக கையாண்டது.
இதற்கு நேர்மாறாக, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் உட்பூசல்களை எதிர்கொண்டது. அதேநேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு எதிரான மக்களின் எதிர்ப்பலையை காங்கிரசால் சாதகமாக்கிக்கொள்ள முடியவில்லை.
ராஜஸ்தான் முதலமைச்சராக இருந்த அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சராக இருந்த பூபேஷ் பாகேல் இருவரும் பசு பாதுகாப்பு அரசியல் மற்றும் ராமாயண நிகழ்ச்சிகளை நடத்தினர். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான கமல்நாத், திக்விஜய சிங் இருவரும் கட்சி வகுத்த திட்டத்தைப் பின்பற்றாமல் தங்கள் சொந்த பிரச்சாரங்களை மேற்கொண்டனர். பாஜக வழியில் சென்று மென்மையான இந்துத்துவ அரசியலை முன்வைத்தனர். அதாவது மென்மையான இந்துத்துவா என்பதும் இந்துத்துவாதான் என்பதை மறந்து விட்டு அவர்கள் நடந்து கொண்டனர். கமல்நாத் ஒருபடி மேலே சென்று இந்தியா இந்து நாடு என்றார். சனாதானம் குறித்து பாஜகவின் நிலைபாட்டையே அவர் பிரதிபலித்தார். முக்கியமாக ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளைப் புறக்கணித்துவிட்டு தேர்தலை எதிர்கொண்டது பெரும் தோல்வியை சந்திக்க காரணமாகிவிட்டது. ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளை இணைத்துக்கொள்வதுடன், அதன் தலைவர்களை பரப்புரைக்கு அழைத்திருக்க வேண்டும். இதனை விடுத்து பெரியண்ணன் மனப்பான்மையுடன் எவரையும் இணைத்துக் கொள்ளாமல் செயல்பட்டது வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை தவறவிடுவதற்கு காரணமாகிவிட்டது.
ஒருபுறம், சமூகநீதிக் கோட்பாடுகளுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பரப்புரை செய்தனர். மறுபுறம் இந்துத்துவ அரசியலை, அதன் அடிப்படையிலான திட்டங்களை மாநிலத் தலைவர்கள் பரப்புரை செய்தனர். காங்கிரஸ் கட்சியின் இந்த உள்முரண்பாடுகளை பாஜக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது.
மத்தியப்பிரதேசத்தில் தவறவிட்ட வெற்றி வாய்ப்புகளுக்கான இந்தக் காரணங்களில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக்கொள்வது அவசியமாகும்.
ராஜஸ்தானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆம்ஆத்மி, சமாஜ்வாடி கட்சி, ஆசாத் சமாஜ்வாடி மற்றும் பழங்குடியின கட்சிகள் 16% வாக்குகளைப் பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ்கட்சி 2% வாக்குகளைப் பெற்றுள்ளன. இப்படி வாக்குகள் பிரிந்ததால் பாஜக எளிதில் வென்றது என்பதே உண்மை. ‘இந்தியா’ கூட்டணியில் இணைந்துநின்ற கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்காததே இங்கும் தோல்விக்கு காரணமாகும்.
அதேபோல, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸைவிட 7% வாக்குகளை பாஜக கூடுதலாகப் பெற்று 163 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 66 இடங்களிலும், பாரத் ஆதிவாசி கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. சமாஜ்வாடி, ஆம்ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆசாத் சமாஜ் கட்சிகள் வாக்குகளை பிரித்தன. பழங்குடி மக்கள் தொகுதிகளில் ஆதிவாசி கட்சி வாக்குகளை பிரித்ததால், பாஜக 12 இடங்களில் வெற்றி பெற்றது.
சத்தீஸ்கரில் பாஜக 46% வாக்குகளை பெற்று 55 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 42% வாக்குகளை பெற்று 35 இடங்களில் வென்றுள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியில் 2 வது இடத்தையும், பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளையும் பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆசாத் சமாஜ் மற்றும் பழங்குடி கட்சிகள் தனித்து களம் கண்டதால், வாக்குகள் பிரிந்து காங்கிரஸ் பெரும் தோல்வியை அடைந்தது.
பாஜகவை அம்பலப்படுத்த தவறிய காங்கிரஸ்
ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்திய மக்கள் விரோத திட்டங்களை, செயல்பாடுகளை காங்கிரஸ் அம்பலப்படுத்த தவறியது. மக்களுக்குப் பெரும் சுமையாக உள்ள விலைவாசி உயர்வு, குறிப்பாக சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் விலை உயர்வுகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதில் காங்கிரஸ் சுணக்கம் காட்டியது. வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி, பொருளாதார வீழ்ச்சி, அரசு ஊழியர்களைப் பாதிக்கும் புதிய ஓய்வூதிய திட்டம் போன்றவற்றை அம்பலப்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது.
இளம் தலைமுறை தலைவர்களைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தாதது, தலைவர்களுக்கு இடையிலான ஈகோ (தானே பெரியவன்) சிக்கல் என எல்லாம் சேர்ந்து, வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைத்தது போன்ற நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
மூன்று மாநிலங்களில் பெற்றிருப்பது “ஹாட்ரிக்” வெற்றி என்று பிரதமர் மோடி கூறியபோது, அதனை அனைத்து ஊடகங்களும் வழிமொழிந்தன. மூன்று மாநிலங்களில் பெற்றுள்ள வெற்றியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலிலும் மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்ற பிரச்சாரத்தை பாஜகவினரும் கார்ப்பரேட் ஊடகங்களும் மேற்கொண்டு வருகின்றன.
இது உண்மையா? என்றால் இல்லை என உறுதியாகச் சொல்ல முடியும். எதிர்க்கட்சிகளை உளவியல் ரீதியாகப் பலவீனப்படுத்தி, அவர்களின் மனஉறுதியைக் குலைத்து சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் என பாஜக கணக்குப் போடுகிறது. அதாவது சண்டை தொடங்கும் முன்பே எதிரணியின் மன வலிமையை சிதைக்கும் உத்தியை பாஜகவும் சங்கப் பரிவார் அமைப்புகளும் பிரச்சாரமாக முன்னெடுக்கின்றன.
நான்கு மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள மொத்த வாக்குகள் 4 கோடியே 81 லட்சத்து 31 ஆயிரத்து 463 (4,81,33,463) ஆகும். காங்கிரஸ் கட்சிக்கு 4 கோடியே 90 லட்சத்து 77 ஆயிரத்து 907 (4,90,77907) வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் பறிகொடுத்துள்ளது.
இந்த 4 மாநிலங்களிலும் பாஜகவைவிட காங்கிரஸ் 9.5 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. மிசோரமையும் சேர்த்தால் பாஜகவைவிட 11 லட்சத்துக்கும் மேல் கூடுதலான வாக்குகளை காங்கிரஸ் பெற்றுள்ளது.
ராஜஸ்தானில் பாஜக 41.7% வாக்குகளும், காங்கிரஸ் 39.6% வாக்குகளும் பெற்றுள்ளன. 2% மட்டுமே வித்தியாசம்.
சத்தீஸ்கரில் பாஜகவுக்கு 46.3% வாக்குகளும் காங்கிரஸுக்கு 42.2% வாக்குகளும் உள்ளன. 4% வித்தியாசம்.
மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 8%-க்கும் அதிகமாக வித்தியாசம் உள்ளது. பாஜக 48.6% வாக்குகளும், காங்கிரஸ் 40% வாக்குகளும் பெற்றுள்ளன.
இந்த மூன்று மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், காங்கிரஸ் கட்சி 40% க்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளது. இதனால் இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு வருவது கடினமான ஒன்றல்ல.
தெலுங்கானாவில் காங்கிரஸ் 39.4% வாக்குகளும், பாஜக 13.9% வாக்குகளும் பெற்றன.
வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் 20% வாக்குகளைப் பெற்றுள்ள காங்கிரஸ் ஓரிடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது ஆனால் 5% வாக்குகளை பெற்றுள்ள பாஜக இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நம் நாட்டின் தேர்தல் நடைமுறையில் உள்ள இதுபோன்ற சிக்கல்களுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.
பாஜகவின் தொடர் வெற்றி கட்டுக்கதைகள்
2018ல் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக தோல்வியடைந்தது. ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த மூன்று மாநிலங்களிலும், இந்தி பேசும் மற்ற பகுதிகளிலும் பாஜக அமோக வெற்றி பெற்றது.
அதேபோல், 2003 தேர்தலில் இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற 2004 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றியை ஈட்டியது. இதன் பொருள், சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் தன்மை முற்றிலும் வேறுபட்டது என்பது தான்.
எனவே, சட்டசபை தேர்தலில் பெற்ற வாக்குகளை, மக்களவைத் தேர்தலிலும் பெறுவதை காங்கிரஸ் உறுதி செய்வதுடன், இடதுசாரிகள் உட்பட ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்தி, வலிமையான கூட்டணியை அமைக்க வேண்டும். இதன் மூலம் மிகப்பெரும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதை எவராலும் மறுக்க இயலாது.
சாதிவாரி கணக்கெடுப்பால் தேர்தல் தோல்வியா?
இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனை சாதிவாரி கணக்கெடுப்பு. ராகுல் காந்தியின் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை இதர பிற்படுத்தப்பட்டோரிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது வடிகட்டிய பொய். காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரகர்கள் இதனை மக்களிடம் முறையாக எடுத்துச் செல்லவில்லை என்று சொல்லலாம்.
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட தலைவர்களான அருண் யாதவ் மற்றும் தலித், பழங்குடி தலைவர்களை திறமையுடன் பயன்படுத்த தவறியதையும் இங்கே சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. எனவே தேசிய சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில், மண்டல் 2.0 எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ‘இந்தியா’ கூட்டணி ஒரு சரியான உத்தியை வகுக்க வேண்டும். அது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை ஈட்டித் தருவதில் பெரும் பங்காற்றும்.
இதர பிற்படுத்தப்பட்டோரை மனதில் கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தி பிரச்சாரம் செய்த போது, மத்திய பிரதேசத்தில் அது பற்றி கமல்நாத் வாய் திறக்கவில்லை.
ஏற்கனவே, இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள முதலமைச்சர் நிதிஷ்குமார் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி இடஒதுக்கீட்டையும் அதிகரித்து வழங்கியுள்ளார். இதனை சரியாகப் பயன்படுத்தியிருந்தால் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளுக்கான நம்பகத் தன்மையை மேலும் அதிகரித்திருக்கும்.
சமீபத்தில், பிஹார் முன்னாள் துணை முதலமைச்சரான பாஜகவின் சுஷில் மோடி, ஏற்கனவே ஓபிசி சமூகத்தினருக்கான திட்டங்களை போதுமான அளவு பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்றும், அவரது தகுதியை நிரூபிக்க சாதிவாரி கணக்கெடுப்பைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்த இந்தியாவின் சமூக பொருளாதார பகுப்பாய்வுக்கும் இந்திய ஜனநாயகத்தில் அனைவரும் உரிய அதிகார பங்களிப்பை பெறுவதற்கும் சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம். அதனை தேர்தல் களேபரத்தில் காணடித்திட ஆர்எஸ்எஸ், பாஜக துடிக்கிறது.
காங்கிரசும் ராகுலும் சாதிவாரி கணக்கெடுப்பை முன்வைத்ததால் தான் தலித்துகளும் பழங்குடியினரும் காங்கிரசை விட்டு விலகிச் சென்றுவிட்டனர் என்று கம்பி கட்டும் கதை ஒன்றையும் சிலர் பரப்பி வருகின்றனர். இவற்றையும் மீறி 2024 மக்களவைத் தேர்தலில் பிரதான பேசுபொருளாக மாறும் என்பது உறுதி.
காங்கிரஸ் கடந்த கால தவறுகளில் இருந்து விடுபட்டு, ‘இந்தியா’ கூட்டணி கட்சியினரோடு விட்டுக் கொடுத்துச் செல்லும் போக்கை மேற்கொள்ள வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலை வழக்கமான தேர்தலாக கருதாமல், இந்திய வகைப்பட்ட பாசிச அரசியலை எதிர்கொள்ளும் இந்தியாவின் இரண்டாவது விடுதலைப் போர் என்பதையும் மனதில் கொண்டு காங்கிரஸ் செயலாற்ற வேண்டும்.
கட்டுரையாளர்:
த.லெனின்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
(தொடர்புக்கு: 9444481703)