
பொய்க்கதைகளைப் பேசி புளுத்துப் போன வாய் திறந்து சீமான் என்பவர் கேட்டிருக்கிறார் ‘எங்கிருக்கிறது கம்யூனிஸ்ட்’ என்று.
பூட்டிய அறைகளுக்குள்ளும், பொலிவான மாளிகைகளுக்குள்ளும், பவுன்சர்கள் புடைசூழ ஏசி கார்களுக்குள்ளும், அவர் தேடினால் கம்யூனிஸ்டுகள் கிடைக்க மாட்டார்கள் தான்!
‘அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், செவிலியர்கள் போராடிய போது கம்யூனிஸ்டுகள் எங்கே போனார்கள்?’ என்று கொக்கரித்து கேட்கிறார்.
போராட்டங்களுக்கும், இந்த மனிதருக்கும் என்ன தொடர்பு? வேடிக்கை பார்க்க போயிருந்தால் கூட விவரம் தெரிந்திருக்கும். மேடை ஏறி நின்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக்கொண்டிருப்பவருக்கு என்ன புரியும்?
போராட்டங்கள் இவருக்கு பத்திரிகைகளில் படிக்கிற செய்தி! ஆனால் கம்யூனிஸ்டுகளுக்கோ போராட்டமே வாழ்க்கை. எந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் இல்லாமல் போய்விட்டார்கள்? கம்யூனிஸ்டுகள் ஒருங்கிணைக்காமல், வழிநடத்தாமல், உதவிக்கு நிற்காமல் இந்த நாட்டில் பெருவா£¤யான போராட்டங்களும் நடைபெற்றதில்லை.
சம வேலைக்கு சம ஊதியம் என்றால் என்ன? என்பதைப் பற்றியோ, குறைந்தபட்ச ஊதியம் குறித்தோ, அவற்றுக்காக பல்வேறு துறைகளில் கம்யூனிஸ்டுகள் நடத்திய, நடத்திக் கொண்டிருக்கிற போராட்டங்களைப் பற்றியோ சீமானுக்கு என்ன தெரியும்?
‘நான் ஆட்சிக்கு வந்தவுடன், வடக்கிலிருந்து வந்த தொழிலாளி மீதெல்லாம், கஞ்சா கேஸ் போடுவேன், கள்ளச்சாராய கேஸ் போடுவேன், சிக்கின கேஸை எல்லாம் அவனுக மேல போடுவேன். தானா ஓடிப் போவான்’ என்று பகிரங்கமாக இவர் மார்தட்டிக் கொண்டதை மறக்க முடியாது.
தமிழுக்கு கம்யூனிஸ்டுகள் செய்த பங்களிப்பு என்னவென்று தற்குறிகளுக்கு தெரியாமல் போகலாம். சட்டப்பேரவையில் முதலில் தமிழில் பேசியவர்கள் ஜீவாவும், பி.ராமமூர்த்தியும். மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஆணித்தரமாக வாதிட்டவர் தமிழராகப் பிறக்காத புபேஷ் குப்தா.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு தொழிலாளர்கள் சங்கம் என்று 1940 களிலேயே முதலில் பெயர் சூட்டிக்கொண்டவர்கள் கம்யூனிஸ்டுகள். தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனார் தனது உடலை கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தான் எழுதி வைத்தார்.
தமிழில் கதை, கவிதை, புதினம், திறனாய்வு துறைகளில் எல்லாம் புதிய பரிமாணத்தைத் தந்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர், வேளாண் அமைச்சர்களாக, பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சராக அமைச்சர்களாக, எம்பிகளாக எம்எல்ஏக்களாகப் பணி புரிந்திருக்கிறார்கள்.
ஊழல் செய்தார்கள், சொத்து சேர்த்தார்கள், வசதி மிக்க வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்று ஒருவரையாவது சொல்ல முடியுமா? பழைய காலத்தை கூட விடுவோம் தற்போது எம்எல்ஏ ஆகி 4 ஆண்டுகளாகியும் குடிசை வீட்டில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறாரே திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து, தோழர் நல்லகண்ணுவின் நூற்றாண்டைக் கட்சி கொண்டாடவில்லை என்று அங்கலாய்த்துக் கொள்கிறது ஞான சூனியம்.
மரியாதை செலுத்துகிறேன் என்று நல்லகண்ணு வீட்டில் போய் பார்த்துவிட்டு, அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டு 10 கேமராக்கள் முன்பு அளந்து விட்டுக் கொண்டிருந்தார். நல்லகண்ணு சொல்லித்தான் நான் அதைப் பேசினேன் என்று நாளை கதை விடலாம்.
பேசி முடிந்ததும், பத்திரிக்கையாளர்களை கையசைத்து அழைத்த, நூறு வயதாகும் தோழர் நல்லகண்ணு, “இங்கே இவர் பேசியதற்கும் எனக்கும் என் கட்சியும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று சொன்னார். சொல்லா அது, கழற்றி அடித்த அடி!
தமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக, ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்டுகள் மக்கள் பிரச்சனைக்காக தினம்தோறும் களத்தில் நிற்கிறார்கள். ஆனால் அங்கெல்லாம் சீமானை போல் கேமராக்களை எடுத்துச் சென்று படப்பிடிப்பு நடத்துவதில்லை.
மூலதனத்தின் கோரப் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்வதற்காக உழைப்பவர்கள் போராடுகிற செய்திகளை மக்கள் கவனத்துக்கு செல்லாமல் தடுப்பதற்காக, சமூகத்துக்கு பத்து பைசாவுக்கு பயனில்லாத, சீமானின் பஞ்ச் டயலாக்குகளை, வெற்று வாய்ச் சவடால்களை முதலாளித்துவ ஊடகங்கள் பரபரப்பாக்குகின்றன.
கிராமங்களில், கழுதையின் வாலில் காய்ந்த பனை ஓலையைக் கட்டி விடுவார்கள் குறும்புக்காரர்கள். அது தன் காலில் ஏதோ உரசுவதை உணர்ந்து, சரசரக்கும் ஓசையைக் கேட்டு, தன் பின்னால் பெரும் கூட்டம் வருவதாக கருதிக் கொண்டு “காள், காள்” என கத்திக்கொண்டு, குதித்துக் குதித்து ஓடும்.
ஓடுமட்டும் ஓடு!!