கட்டுரைகள்

வக்ஃபு சொத்துகளுக்கு ஆப்பு வைக்கும் ஒன்றிய அரசு. சட்டத் திருத்தத்தின் நோக்கம் என்ன?

வ.மணிமாறன்

வக்ஃபு சொத்துக்களில், வக்ஃபு வாரியத்தில் முறைகேடுகள், அத்துமீறல்கள் நடக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு என்று கூறி வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது மோடி அரசு. இதன் உண்மையான நோக்கம் என்ன?

 

உத்தரப்பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் வக்ஃபு சொத்துகள் நகரங்களில் குவிந்து கிடக்கின்றன. அவை கார்ப்பரேட்டுகளுக்கும் காவி சங்கிகளுக்கும் கண்ணை உறுத்துகின்றன. இதற்காகத்தான் இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஏப்ரல் 2 ஆம் தேதி, வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்பொழுதே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. அடுத்த நாள் மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 8 மணி நேரத்துக்கும் மேலாக கடும் விவாதம் நடைபெற்றது.
இறுதியாக நடைபெற்ற வாக்கெடுப்பில், வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும் எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனால் மக்களவையில் வக்ஃபு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று மாநிலங்களவையில் நள்ளிரவு வரை காரசார விவாதம் நடைபெற்று நிறைவேற்றப்பட்டது.

“இஸ்லாமியர்கள் நினைத்த இடங்களை எல்லாம் வக்ஃபு என அறிவிக்கின்றனர். இதற்கு எதிராக நீதிமன்றத்திலோ அரசிடமோ முறையிட முடியாது. வக்ஃபு வாரியம், வக்ஃபு தீர்ப்பாயம் போன்றவற்றில் முறையிடச் சென்றால், அங்கு அனைவருமே இஸ்லாமியர்கள். அவர்களே விசாரித்து அவர்களே தீர்ப்பு எழுதுகின்றனர். இதில் அரசோ நீதிமன்றமோ தலையிட முடியாது. மோடி அரசு பெரும் அநீதியை அகற்றி இருக்கிறது. ஏழை முஸ்லீம்களுக்கும் இஸ்லாமியப் பெண்களுக்கும் நீதியைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது.” இவை அனைத்தும் பாஜகவின் பொய்த் தொழிற்சாலை மூலம் பரப்பிக் கொண்டிருப்பவை.

வக்ஃபு சட்டத் திருத்தத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. மத சுதந்திரத்தில் மோடி அரசு தலையிடுகிறது. மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்துவது, சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை என நாடாளுமன்றத்திலேயே எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. இது குறித்து விரிவாகப் பார்ப்பதற்கு முன் வக்ஃபு என்றால் என்ன? வக்ஃபு வாரியத்தை நிர்வகிப்பது யார் என்பது குறித்துப் பார்க்கலாம்.

வக்ஃபு என்றால் என்ன?

வக்ஃபு (Waqf) என்பது இஸ்லாமிய சட்டப்படி, ஒரு சொத்தை அறப்பணிகளுக்காகவோ, சமயப் பணிகளுக்காகவோ தானமாக வழங்கி, அதன் வருமானத்தை பொது நலனுக்குப் பயன்படுத்துவதாகும். வக்ஃபு என்பது அரபு வார்த்தை. அதாவது தங்குதல் என்று அர்த்தம். அல்லாவின் பெயரால் ஒரு சொத்து வக்ஃபு செய்யப்படும்போது, ​​அது என்றென்றும் அல்லாவின் பெயரிலேயே இருக்கும். அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. 1998 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “ஒரு சொத்து வக்ஃபு ஆனவுடன், அது என்றென்றும் வக்ஃபாகவே இருக்கும்” என்று கூறியுள்ளது. வக்ஃபு சொத்துகளை வாங்கவோ விற்கவோ, யாருக்கும் மாற்றவோ முடியாது. அதன் பயன்பாடு வக்ஃபு வாரியத்தால் கட்டுப்படுத்தப்படும்.

எளிமையாகச் சொன்னால், இந்துக்களில் கோவிலுக்கு சொத்துகளை எழுதி வைப்பதுபோல், இஸ்லாமில் கடவுளின் பெயரால் சொத்துகளை தானமாகக் கொடுப்பது என்று கூறலாம். இப்படி வழங்கப்படும் வக்ஃபு சொத்துக்களில் பள்ளிவாசல், தர்கா, அடக்கத் தலங்கள் போன்றவையும், மதரசா, மருத்துவமனை, அனாதை இல்லம், பள்ளி மற்றும் தொண்டு நிறுவனங்கள் போன்றவை செயல்பட்டு வருகின்றன.

வக்ஃபு வாரியம்

வக்ஃபு சொத்துக்களை திறமையாக நிர்வகிப்பதற்காக, வக்ஃபு சட்டம்-1995ன் படி, வக்ஃபு வாரியங்கள் அமைக்கப்பட்டன. இந்தச் சட்டம் வக்ஃபு வாரியத்துக்கு அதிகாரத்தையும் செயல்பாடுகளையும் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் வக்ஃபு சட்டம்-1995ன் படி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு வக்ஃபு வாரியம் செயல்பட்டு வருகிறது. இதேபோன்று நாடு முழுவதும் 35 வக்ஃபு வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன.

“வக்ஃபு வாரியத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும் சொத்துகளும் உள்ளன. பழமையான பள்ளிவாசல்கள், ஈத்காக்கள், தர்காக்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன” என்கிறார் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் உறுப்பினர் பாத்திமா முசாஃபர்.

வக்ஃபு திருத்தச் சட்டம்

வக்ஃபு சட்டத்தில் 40க்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டு, “ஒருங்கிணைந்த வக்ஃபு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம்” (Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act) என்று பெயரிடப்பட்டு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வக்ஃபு வாரியத்தின் மேலாண்மை மற்றும் நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் சட்டத் திருத்தங்கள் தேவை என்று ஒன்றிய பாஜக அரசு கூறியுள்ளது.

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால், வக்ஃபு சொத்துகளின் வருமானம் எவ்வளவு? அவை யாருக்குப் போகிறது? என்ற விவரங்கள் வெளிப்படையாக இல்லை. வக்ஃபு சொத்து என்று எதை வேண்டுமானாலும் இஸ்லாமியர்கள் அறிவிக்கலாம். அதை யாரும் தடுக்க முடியாது. நீதிமன்றமோ, அரசோ கூட தடுக்க முடியாது என்று பாஜகவினர் புளுகி வருகின்றனர்.

வக்ஃபு சொத்துக்கள் ஏழை இஸ்லாமியர்களுக்குப் பயன்படவில்லை. வக்ஃபு வாரியத்தில் பெண்களுக்கோ, இஸ்லாமியர்களில் உள்ள பல்வேறு பிரிவினருக்கு வாய்ப்போ வழங்கப்படவில்லை என்றும் பாஜகவினர் கவலைப்படுகின்றனர். இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் பாஜகவினர் கூறுகின்றனர்.

உண்மை என்ன? என்று பார்ப்போம்.

முக்கியமான திருத்தங்களும்,
எதிர்ப்புக்கான காரணங்களும்

நன்கொடை வழங்குபவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.

புதிதாக இஸ்லாத்துக்கு மாறியவர்கள், வக்ஃபுக்காக நன்கொடை வழங்கும் உரிமையை இந்தத் திருத்தம் பறித்துவிடுகிறது. இஸ்லாமிய மத நடைமுறையை ஐந்து ஆண்டுகளுக்கு பின்பற்றுவது என்பதற்கான வரையறை என்ன? அதற்கு யார் சான்றளிப்பது? என்ற கேள்வி எழுகிறது. அதாவது ஒருவர் வக்ஃபு நன்கொடை வழங்க ஒன்றிய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டியவராகிறார். ஆனால், இந்து சமய அறநிலையத்துறைக்கு நன்கொடை அளிக்க விரும்பும் ஒருவருக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. அரசியலமைப்புச் சட்டத்தின் 26வது பிரிவு வழங்கியுள்ள மத சுதந்திரத்துக்கு எதிரானது.

ஒன்றிய வக்ஃபு கவுன்சில், மாநில வக்ஃபு வாரியங்களில் குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் இஸ்லாமியர் அல்லாதவர்களாக இருக்க வேண்டும். வக்ஃபு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்ற அவசியம் நீக்கப்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 26வது பிரிவு, மத மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக அமைப்புகளை நிறுவி அவற்றைப் பராமரிக்கவும், அசையும் அசையா சொத்துகளை வாங்கவும் சொந்தமாக வைத்திருக்கவும் சுதந்திரம் அளிக்கிறது. இந்த உரிமையைப் பறித்து, வக்ஃபு வாரியங்களை அதிகாரமற்றதாகவும், ஒன்றிய அரசின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுத்தக் கூடியதாகவும் இந்தத் திருத்தம் மாற்றுகிறது.

வக்ஃபு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்ற அவசியம் நீக்கப்படுவதன் மூலம், அரசுக்கு சாதகமான பிற மதத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, வக்ஃபு சொத்துக்களை அரசுக்கு சாதகமாக அபகரிக்கும் வழிகளை உருவாக்கிக் கொடுக்கிறது. இப்படி இந்துசமய அறநிலையத்துறையில் மாற்று மதத்தினரை தலைமைச் செயல் அதிகாரியாகவோ உறுப்பினராகவோ நியமிக்க பாஜக அனுமதிக்குமா?

அண்மையில், தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே ராஜகோபால பெருமாள் கோவிலின் அறங்காவலராக நர்கீஸ் கான் என்ற இஸ்லாமியரை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நியமித்திருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். அல்லாவைத் தவிர யாரையும் கடவுளாக ஏற்றுக் கொள்ளாத இஸ்லாமியர் எப்படி இந்து கோவில்களைப் பராமரிப்பார்? அவர் எப்படி கோவில்களில் வழிபாடு நடத்துவார்? என்று பாஜகவினர் விமர்சித்தனர். நர்கீஸ்கான் என்ற பெயர் கொண்டவர் இஸ்லாமியர் அல்ல, இந்துதான் என்பது வெளிச்சத்துக்கு வந்தவுடன் சங்கிகள் வாயை மூடிக்கொண்டனர்.

தற்போது, வக்ஃபு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாத இருவரை நியமிக்க சட்டத் திருத்தம் கொண்டுவந்திருப்பது எந்த வகையில் நியாயம்?

தீர்ப்பாயங்களின் முடிவை எதிர்த்து 90 நாள்களுக்குள் உயர்நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்யலாம்.
இந்தச் சட்டத்தின் பிரிவு 107-ஐ நீக்கி வரம்பு சட்டம் 1963 (Limitation Act, 1963)-ஐ இதற்குள் கொண்டுவரப்படுகிறது. இந்த வரம்பு சட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு சட்டரீதியான தடையை விதிக்கிறது.

இந்தத் திருத்தங்களால், வக்ஃபு சொத்துக்களை 12 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள், அதற்கு உரிமை கொண்டாடுவதற்கும், அவற்றை சொந்தமாக்கிக் கொள்வதற்கும் வழி அமைத்துத் தருகிறது. இஸ்லாமிய சமூகத்துக்கு பின்புல பலமாக இருக்கக் கூடிய வக்ஃபு சொத்துக்களை அழித்து நிராதரவாக மாற்றக் கூடியது.

வக்ஃபு சொத்துக்களை ஆய்வு செய்ய, குறிப்பாக அரசுக்கு சொந்தமானது என்ற சர்ச்சைக்குரிய வக்ஃபு சொத்துக்களை ஆய்வு செய்ய கணக்கெடுப்பு ஆணையர்கள் மற்றும் கூடுதல் ஆணையர்களால் அங்கீகரிக்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் அதற்கு மேல் தகுதியுடைய மூத்த அதிகாரிகள் இந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இது தொடர்பான முடிவுகளில் தீர்பாயங்களுக்குப் பதில் மூத்த அதிகாரிகளே இறுதி முடிவெடுப்பவர்களாக இருப்பர்.

இந்தத் திருத்தம், வக்ஃபு தீர்ப்பாயங்களின் அதிகாரத்தை அரசு அதிகாரிகளுக்கு மாற்றக்கூடியது. குறிப்பிட்ட சொத்துக்கு அரசும் வக்ஃபு வாரியமும் உரிமை கோரினால், அரசு அதிகாரிகளே இறுதி முடிவெடுப்பார்கள். அரசு அதிகாரிகள் எப்படி முடிவெடுப்பார்கள்? என்பது வெளிப்படையாகத் தெரிந்ததுதான்.

உத்தரப்பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில், வக்ஃபு சொத்துகள் நகரங்களில் நிறைய உள்ளன. அவை கார்ப்பரேட்டுகளுக்கும் காவி கூட்டத்துக்கும் கண்ணை உறுத்துகின்றன. அவற்றை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்குத்தான் மோடி அரசு இந்தத் திருத்தங்களைச் செய்திருக்கிறது. வக்ஃபு சொத்துகளில் பராமரிப்பதில் முறைகேடும் ஊழலும் நடக்கிறது என்றால், இந்தச் சட்டத்திருத்தம் அதனைத் தடுக்கக் கூடியது அல்ல. குரங்கு அப்பம் பிரித்துக்கொடுத்த கதை போல், வக்ஃபு சொத்துகளை கபளிகரம் செய்வதற்குத்தான் இந்தத் திருத்தம் உதவும்.

வக்ஃபு சொத்துக்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் சட்டம் இயற்றப்பட்ட ஆறு மாதங்களுக்குள் நியமிக்கப்பட்ட போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

ஆறு மாதங்களுக்குள் வக்ஃபு சொத்துக்களின் தகவல்களை பதிவேற்ற முடியாவிட்டால், அந்தச் சொத்துகளை சர்ச்சைக்குரியதாக ஒன்றிய அரசு அறிவித்துவிடும். அவற்றின் உரிமை யாருக்கு? என்பதையும் அரசே முடிவெடுக்கும் சூழல் உருவாகிவிடும். இதற்குத்தான் இந்தத் திருத்தம்.

வக்ஃபு சொத்துக்களை தணிக்கை செய்ய இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) அல்லது அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தணிக்கை செய்வதற்கு உத்தரவிட ஒன்றிய அரசுக்கு அதிகாரம்.

வக்ஃபு கணக்குகளைத் தணிக்கை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளிடமே இருந்து வந்தது. தற்போது இந்த அதிகாரம் பறிக்கப்பட்டு ஒன்றிய அரசுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் சிறுபான்மை விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, வக்ஃபு வாரியத்திடம் தற்போது இந்தியா முழுவதும் சுமார் 8.7 லட்சம் சொத்துகள் உள்ளன. அவை சுமார் 9.4 லட்சம் ஏக்கர் நிலத்தில் பரவியுள்ளன. அவற்றின் மதிப்பு சுமார் 1.2 லட்சம் கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இப்படி வக்ஃபு சொத்துகள் நாடு முழுவதும் குவிந்து கிடக்கின்றன. ராணுவம் மற்றும் ரயில்வே அடுத்து அதிக சொத்துகள் இருப்பது வக்ஃபு வாரியத்திடம் தான் என்று ஒன்றிய அரசும் பாஜக சங்கிகளும் அலறுகின்றனர்.

இந்து மதத்தில், மடங்களின் கட்டுப்பாட்டில் எவ்வளவு சொத்துகள் இருக்கின்றன? காஞ்சி சங்கரமடம், தருமபுர ஆதீன மடம், திருப்பனந்தாள் மடம், மதுரை ஆதீன மடம், நாங்குநேரி ஜீயர் மடம், ஜக்கி வாசுதேவ் மடம்.. இப்படி ஏராளமான மடங்களிடம் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் குவிந்து கிடக்கின்றன. அவை யாருக்குப் பயன்படுகின்றன? இங்கு நடைபெறும் முறைகேடுகள், ஊழல்களை தடுப்பது எப்படி? என்பதற்கு ஒன்றிய பாஜக அரசு பதிலளிக்குமா? வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் போன்ற திருத்தத்தை மோடி அரசு கொண்டுவருமா?

வறுமை, பண வீக்கம், பணத்தின் மதிப்பில் வீழ்ச்சி, வேலையின்மை, சிறுகுறு நடுத்தரத் தொழில்களின் முடக்கம், சுற்றுச்சூழல் மாசுபாடு இப்படி பல்வேறு பிரச்சனைகள் மக்களை வாட்டுகின்றன. வாழ்விழந்து திகைத்து நிற்க வைத்துள்ளன. ஆனால் மதவெறி தலைக்கேறிய சங் பரிவாரங்கள், இந்தியாவின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் இஸ்லாமியர்கள்தான் என்று கட்டமைத்து வருகின்றன. இதற்குப் பெயர்தான் பாசிசம். அரசுக் கட்டமைப்பையே பாசிச மயமாக்கி வருகின்றன. மதங்களைக் கடந்து, உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு பாசிஸ்ட்டுகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். அந்தநாள் வெகுதொலைவில் இல்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button