
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க, தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. இன்றைய தேர்தல்களில், தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் விவாதிக்கப்பட்ட நிலை மாறி, தமிழ்நாட்டின் சமூக, அரசியல்,பொருளாதார, சித்தாந்த பரப்புகளின் மீது பெரும் தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியா விடுதலை அடைந்தபோது, தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார, கல்வி நிலை கடைக் கோடியில் கிடந்தது. இன்று கல்வியையும் பொருளாதாரத்தையும் சேர்த்துப் பார்த்தால் தமிழ்நாடு இந்தியாவின் முதல் மாநிலமாகும்.
தமிழ்நாட்டில் நடந்த மத மோதல்கள் மிக மிகக் குறைவு. பெருமளவிலான நகரமயமாக்கம், சாதிய மோதல்களையும் பெருமளவு குறைத்துள்ளது. வேறெந்த மாநிலத்தை விடவும் சமூக அமைதி நன்கு நிலவுகிறது.
இந்தியாவிலேயே அதிக கோவில்கள் உள்ள மாநிலமும் தமிழ்நாடு தான். லட்சக்கணக்கில் மக்கள் கூடும் திருவிழாக்கள் எந்தச் சச்சரவும் இன்றி ஆண்டுதோறும் நடந்து கொண்டிருக்கின்றன. வடபுலத்தாரால் சிந்திக்கவே முடியாத மத நல்லிணக்கம் இங்கு உண்டு.
தேர்தல் லாபத்துக்காக, இந்த சீரிய பண்பாட்டை, சமூக அமைதியை குலைக்கும் வகையில், அரசியல் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன. ஒன்றிய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த சீரழிக்கும் செயல்பாட்டை முன்னெடுக்கிறது.
2047ல், கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 சதமாக இலக்காகக் கொண்டு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இலக்கை இப்போதே தமிழ்நாடு தாண்டி விட்டது. அது மட்டுமல்ல, 86 சதவீத பெண்கள் மேல்நிலைக் கல்வி பயிலுகிறார்கள்.
இவற்றையெல்லாம் முடக்கும் வகையில், தமிழ்நாடு அரசு இருமொழிக் கொள்கையை தொடர்கிறது என்ற காரணத்தால், தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதி 2,152 கோடி ரூபாயை தர முடியாது என்று சொன்னதோடு, அந்த பணத்தை குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு மடை மாற்றி உள்ளது பெரும் துரோகம் ஆகும்.
மொழி மட்டுமல்ல, தேசிய கல்விக் கொள்கையின் படி, மூன்று, ஐந்து, எட்டு, பத்து, பன்னிரண்டு வகுப்புகளில், மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதியாக வேண்டும். தேர்வு என்பதையே பெரும் அச்சத்துக்குரியதாக்கி, பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்கள் நிம்மதி இழந்த பதட்ட நிலைக்கு உட்படுவதை பார்க்கிறோம்.
இத்தனை தேர்வுகளை எழுதி, அதிக மதிப்பெண்களை பெற்றாலும், கல்லூரிக்கு செல்ல மீண்டும் நுழைவுத் தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும். அதற்காக தனியார் பயிற்சியகங்களில் லட்சக்கணக்கான ரூபாயை செலவழித்தாக வேண்டும் என்பதெல்லாம் கல்வியை வளர்ப்பதா?
தமிழ் வழியாக கடந்த அறுபது ஆண்டுகளில் கல்வி கற்றோர் எந்த வகையில் சோடை போனார்கள்? உள்நாட்டு அறிவியல் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், நாசா உள்ளிட்ட வெளிநாட்டு விண்வெளி ஆய்வுகளில் கூட தமிழ்நாட்டு மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதை ஏன் ஒன்றிய அரசு காண மறுக்கிறது?
அதுமட்டுமின்றி பட்ட வகுப்புகளிலும், ஓராண்டு படித்தால் சான்றிதழ், இரண்டு ஆண்டு படித்தால் டிப்ளமா, மூன்று ஆண்டு படித்தால் பட்டம் வழங்கப்படுமாம்.
இவை அனைத்தும் சேர்ந்து, மாணவர்கள் இடையே படிப்பை விட்டு விலகும் போக்கை ஊக்குவிக்கும். மாணவர்களை வகுப்பறைகளுக்கு ஈர்க்க, சிங்காரவேலர், காமராஜர் காலத்தில் இருந்து எடுக்கப்பட்ட பெருமுயற்சிகளை முடமாக்கும் உள்நோக்கம் இந்த திட்டத்தில் உள்ளது.
அதைப்போலவே, தமிழ்நாடு அரசு உருவாக்கி வைத்திருக்கிற மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில், தமிழ்நாட்டு மாணவர்களுக்கான இடம் குறைக்கப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை, ஒன்றிய அரசின் முகவராக இருக்கிற ஆளுநர் தன் விருப்பத்திற்கு ஏற்ப நியமிக்கிறார். பிற்போக்கும், அறிவியலுக்கு பொருந்தாத மூடத்தனங்களும் நிறைந்தவர்கள் பெரும் கல்வி நிறுவனங்களுக்கு பொறுப்பேற்க வைக்கப்படுவது திகிலூட்டுகிறது.
பறை இசையும், கரகாட்டமும், நாடகங்களுமாக நிறைந்திருந்த கிராம, நகர்ப்புற அம்மன் கோவில் விழாக்கள், இன்று விளக்கு பூஜை, வடமொழி மந்திரம் என மாற்றப்பட்டு உள்ளது.
தெய்வங்களுக்கு ஆடு கோழி பலி கொடுத்து, பல நூற்றாண்டுகளாக புலால் உண்பவர்களையே, புலால் உண்பது ஒழுக்கமற்ற செயல் என்று பேச வைத்திருக்கிறார்கள். திட்டமிட்டு தமிழ்நாட்டு பண்பாடு சிதைக்கப்படுகிறது.
ஏன் இந்தி கற்க வேண்டும் என்று சிறு பிள்ளைத்தனமான அற்பக் காரணங்களை சிலர் கூறுவதும் ஊடக வெளிச்சம் பெறுவதும் கவலையளிக்கிறது.
இவற்றுக்கு எதிரான போராட்டத்தை, எல்கேஜி பிள்ளைகளின் சண்டை என்று, எதிர்கால முதல்வர் கனவுகளில் திளைப்பவர்கள் வர்ணிப்பது, ஆர்எஸ்எஸ்ஸின் குரல் அடுத்தவர்கள் தொண்டைகளிலும் திணிக்கப்பட்டு இருப்பதற்கு சிறந்த சான்றாகும்.
தமிழ்நாட்டின் விழுமியங்களை பாதுகாக்க, மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.