மீள முடியாத நெருக்கடியில் மேற்கத்திய வல்லரசுகள்; டிரம்ப் – ஜெலன்ஸ்கி ‘மோதல்’ வெளிப்படுத்துவது என்ன?
வ.மணிமாறன்

உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்சுக்கும் இடையே கடந்த மாதம் நிகழ்ந்த ‘மோதல்’ பரபரப்பாகவும் அதிர்ச்சியுடனும் பார்க்கப்பட்டது.
உக்ரைனில் உள்ள அரிய வகை கனிம வளங்களின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிவந்த நிலையில், இருநாட்டு அதிபர்களுக்கு இடையிலான ‘மோதல்’ பல்வேறு கேள்விகளையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. எதிர்பார்த்த வெற்றியை உக்ரைனும் அதன் பின்னணியில் இருந்து போரை நடத்திக்கொண்டிருக்கும் மேற்கத்திய வல்லரசுகளும் பெற முடியவில்லை. இந்நிலையில், அமெரிக்கா சென்று அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்துப் பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
திட்டமிட்டபடி அமெரிக்கா சென்றார் அதிபர் ஜெலன்ஸ்கி. அதிபர் டிரம்ப் அவரை வரவேற்று உபசரித்தார். ஆனால் இருநாட்டு அதிபர்களின் கணக்குகளும் வெவ்வேறானவை.
அரிய வகை கனிமங்களை எடுக்க வாய்ப்பளித்து, உக்ரைன் பாதுகாப்புக்கு உத்தரவாதமும் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவியை தொடர்ந்து பெறவும் திட்டமிட்டார் அதிபர் ஜெலன்ஸ்கி. ஆனால், இதுவரை ஆயுதங்களையும் நிதியுதவியையும் வாரி வழங்கியதற்கு ஈடாக உக்ரைனில் இருந்து அரிய வகை கனிமங்களை எடுப்பது அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டம். அதுவும் கடந்த காலங்களைப் போன்று ‘தாராள மனப்பான்மை’யுடன் கனிமங்களை எடுப்பதற்கான உரிமையைப் பெற டிரம்ப் கணக்குப் போட்டார்.
இருவேறுபட்ட நோக்கங்கள்
அமெரிக்காவில் இரண்டு அதிபர்களும் பேச்சு நடத்தினர். தங்களுடைய விருப்பங்களை ஜெலன்ஸ்கி முன்வைத்தார். இதனால் அதிர்ந்த டிரம்ப், வரலாற்றில் இதற்கு முன் நடந்திராத வகையில் பேசினார். காரசார விவாதம். சோகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நகைச்சுவை அங்கு அரங்கேறியது.
உக்ரைனில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். அமெரிக்காவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், நிதியையும் ஆயுதங்களையும் வாரி வழங்கி ஜோ பைடன் நடத்திக்கொண்டிருந்த போரில் இருந்து அமெரிக்கா விடுவிக்கப்பட வேண்டும் என்பதே தம்முடைய நோக்கம் என்று அதிபர் தேர்தல் பரப்புரையின் போதே டொனால்ட் டிரம்ப் கூறிவந்தார். அதே நிலைப்பாட்டைத்தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பின் போதும் வெளிப்படுத்தினார். இது ஜெலன்ஸ்கியின் எதிர்பார்ப்புகளுக்கு மாறானது என்பதால், காரசார விவாதம் ஏற்பட்டது.
இந்தக் காட்சிகளைக் கண்ட பலரும், டிரம்ப் ஒரு கோமாளி, அமெரிக்காவை வீழ்த்த யாரும் தேவையில்லை டிரம்ப் ஒருவரே போதும் என நினைத்தனர். ஆனால் அவர் தேர்தல் பரப்புரையின் போது கூறியதையே தற்போதும் செயல்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் கடன் மிக அதிக அளவில் (36 டிரில்லியன் டாலருக்கும் மேல்) உள்ளது. அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி, இருப்பு சரிந்து வருகிறது. ஆசிய / பசிபிக் பிராந்தியத்திலும் மத்திய கிழக்கிலும் மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய சூழலில் அமெரிக்கா அதற்குத் தயாராக இல்லை. டொனால்ட் டிரம்ப் இதனைப் புரிந்துள்ளார். உலக அரங்கில் அமெரிக்காவின் மிகைத் தோற்றம் கலைந்துவிடக் கூடாது. மேல்நிலை வல்லரசாகவே தொடர வேண்டும் என நினைக்கிறார்.
இதனால் அமெரிக்காவின் முன்னுரிமைகளை மாற்ற விரும்புகிறார். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவர நினைக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைனில் நீடிக்கும் போரில், ரஷ்யாவின் கை ஓங்கும் நிலையில் உள்ளது. பனிப்போர் காலத்தைவிட மோசமான அளவுக்கு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவு இந்த மூன்று ஆண்டுகளாக முடங்கியுள்ளது. இதனால் அமைதிப் பேச்சு நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வருவதுடன், ரஷ்யாவுடனான உறவை இயல்பாக்க வேண்டும் என டொனால்ட் டிரம்ப் விரும்புகிறார்.
ஜெலன்ஸ்கியின் திட்டம்
அமெரிக்காவின் இந்த விருப்பங்களுக்கு எதிரானது உக்ரைன் அதிபரின் திட்டம். போரில் ரஷ்யா தோற்கடிக்கப்பட்டு, ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும். அதுவரை என்ன விலை கொடுத்தேனும் போரைத் தொடர வேண்டும் என ஜெலன்ஸ்கி விரும்புகிறார். இதனால் ஏற்படும் மனித இழப்புகளையோ பேரழிவுகளையோ பற்றி அவருக்கு கவலையில்லை.
அமெரிக்காவின் நிதியையும் ஆயுதங்களையுமே பெருமளவு சார்ந்திருக்கும் உக்ரைனுக்கு, அவை நிறுத்தப்பட்டால் மரண அடியாக இருக்கும். பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய ஆட்சியாளர்களின் ஆதரவு இருந்தாலும் பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியாது. இதனால் போரில் இருந்து ஒதுங்காமல் அமெரிக்காவைத் தடுக்க உக்ரைன் நினைக்கிறது.
இந்தச் சூழலில் அரிய வகை கனிமங்களை எடுப்பதற்கான உரிமை தொடர்பாக இருநாட்டு அதிபர்கள் பேச்சு நடத்திய போது ஏற்பட்ட ‘மோதல்’ இருவேறு விருப்பங்களை வெளிப்படுத்துகிறது. இதில், அமெரிக்காவை எப்படியாவது போருக்குள் இழுத்துவிட வேண்டும் என்ற அவசர உணர்வை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், மூன்றாம் உலகப் போருக்குள் தள்ளிவிடப் பார்க்கிறார் என்ற எரிச்சலை அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் வெளிப்படுத்தினர்.
பேரழிவு நிலையில் உக்ரைன் படைகள்
உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்தே பிரதேசங்களையோ, நகரங்களையோ கைப்பற்றுவதைவிட உக்ரைன் படைகளை அழிப்பதே ரஷ்யாவின் உத்தியாக இருக்கிறது என்று போரியல் ஆய்வாளர்கள் கூறினர். தற்போது மீள்வதற்கு சாத்தியமில்லாத பேரழிவு நிலையை உக்ரைன் படைகள் எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதனை உக்ரைன் ஆதரவு ஊடகங்களே வெளிப்படுத்துகின்றன.
இந்த இக்கட்டான நிலையை எட்டுவதற்கு முன்பே ரஷ்யாவுடன் பேச்சு நடத்த உக்ரைன் முன்வந்திருக்க வேண்டும். ஆனால், அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ஆதரவு இருப்பதால், போரை நீட்டித்துக்கொண்டே சென்று மீள முடியாத நெருக்கடியில் அதிபர் ஜெலன்ஸ்கி தரப்பு சிக்கிக் கொண்டுள்ளது.
இதனை உணர்ந்துதான் டிரம்ப், ஜெலன்ஸ்கி இடையிலான காரசார விவாதத்துக்குப் பிறகு, ஐரோப்பிய ஆட்சியாளர்கள் ஜெலன்ஸ்கிக்கு ஆதரவைத் தெரிவித்தனர். லண்டனில் நடைபெற்ற மாநாட்டிற்கும் அழைத்து ஆதரவை வெளிப்படுத்தினர்.
எப்படி இருப்பினும், அதிபர் டிரம்ப் கூறியதுபோல், அமெரிக்கா வழங்கிவரும் நிதி மற்றும் ஆயுத உதவிகளை நிறுத்திவிட்டால், உக்ரைன் போரை நடத்துவதற்குத் தேவையான நிதியை வழங்கவோ அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதால் ஏற்படும் இடைவெளியை நிரப்பவோ ஐரோப்பிய ஆட்சியாளர்களால் முடியாது. அப்படியே வழங்கினாலும் இந்தப் போரின் முடிவை மாற்ற முடியாது. சில மாதங்களுக்குத் தாமதப்படுத்தலாம். அவ்வளவுதான்.
போரைத் தொடர்வதற்கான பெரும் நிதியையும் ஆயுதங்களையும் வழங்குவதாக பொய்யான நம்பிக்கையை தொடர்ந்து ஊட்டி வருவதன் மூலம் ஐரோப்பிய ஆட்சியாளர்கள், உக்ரைனை மேலும் மேலும் படுகுழியில் தள்ளி வருகின்றனர். இவர்களைப் போன்ற ‘நண்பர்கள்’ இருப்பதால், உக்ரைனிய மக்களுக்கு உண்மையில் எதிரிகள் தேவையில்லை. உளுத்துப்போன இந்த வல்லரசுகளுக்கு உக்ரைன் மக்கள் பட்டுமல்ல, உலக நாடுகளின் உழைக்கும் மக்கள் எழுச்சி முடிவுகட்டும்.