கட்டுரைகள்

மனித குலத்துக்கு எதிரான போர்கள்: வெறி பிடித்த வல்லரசுகளுக்கு முடிவு கட்டுவது யார்?

வ.மணிமாறன்

போர் இந்த உலகத்தையும் மக்களையும் தின்று கொண்டிருக்கிறது. நாடுகளின் பெயரால், தேசத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் போர்களால் மக்கள் படும் இன்னல்கள் சொல்லி மாளாது.

பாலஸ்தீனர்களின் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் என அனைத்தும் இன்று இடிபாடுகளாக காட்சியளிக்கின்றன. குடிநீர் கட்டமைப்புகள் நொறுக்கப்பட்டுவிட்டன. இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி மக்கள் ஓடிக்கொண்டே இருந்தனர். பெற்றோர்களை இழந்து அனாதையான பிள்ளைகள், போருக்கு பிள்ளைகளைத் தின்னக் கொடுத்துவிட்டு கலங்கி நிற்கும் பெற்றோர்கள், உயிருடன் இருப்பது யார்? இறந்தது யார்? என்பதுகூடத் தெரியாத அவலம்.. இப்படிப் போரின் துயரங்கள் எண்ணற்றவை.

உலகம் முழுவதும் போரின் கொடூரங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வல்லரசு நாடுகளும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களும் இதுவரை இல்லாத அளவுக்கு தங்களின் பைகளை நிரப்பி வருகின்றன. கடந்த ஆண்டு (2024) மட்டும் உலகின் ஏழு பெரிய பணக்கார நாடுகள், தங்களின் ராணுவத் தேவைகளுக்காக 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் செலவிட்டுள்ளன. இவர்கள் நடத்திய போர்கள் உலகின் மிகப் பெரும்பான்மையான மக்களை படுகுழியில் தள்ளிவிட்டுள்ளன. ஆளும் வர்க்கத்திற்கு கனிம வளங்களையும் செல்வங்களையும் வாரி வழங்கி வருகின்றன.

2024 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இராணுவ பட்ஜெட் மட்டும் 82,430 கோடி டாலர். இந்தப் பணத்தின் ஒரு பகுதியை செலவிட்டால் உலகின் வறுமையைப் போக்கிவிட முடியும்.
உலகின் செல்வ வளம், வறுமை தொடர்பான கணக்கெடுப்புகளை வெளியிட்டுவரும் ஆக்ஸ்ஃபாம் நிறுவனம், மனிதகுலத்தின் பசிப் பிணியை ஒழிப்பதற்கு 3,200 கோடி டாலர் தேவை என மதிப்பிட்டுள்ளது. அமெரிக்கா மட்டும் ஆயுதத் தளவாடங்களுக்காகச் செலவிடும் தொகையில் மூன்றில் ஒரு பங்கை செலவிட்டால் வறுமையில் இருந்து உலக மக்களை மீட்டுவிட முடியும்.

பசித்தவனுக்கு உணவிடுவதைவிட அழுகிப்போன இந்த வல்லரசுகள், போர்களை மூட்டிவிடுவதிலும் போர் புரிவதிலுமே குறியாக இருக்கின்றன. எட்டுப் பெரிய பணக்கார நாடுகளின் ராணுவச் செலவுடன் ஒப்பிட்டால், சிறுதுளியை செலவிட்டாலே மனிதகுலம் வறுமையில் இருந்து மீண்டுவிடும்.

ஆனால், 15 ஆண்டுகளுக்கும் மேலாக உலகப் பசியைத் தீர்ப்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என உலக சுகாதார அமைப்பை கவலை தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ராணுவத்திற்காக அமெரிக்கா செலவிட்டதில் பாதியை மட்டும் செலவிட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் வறுமைக்கு மனிதகுலம் விடை கொடுத்துவிடும்.

அப்பாவி காசா மக்கள் மீது ஆயிரம் கிலோ எடையுள்ள குண்டுகளை மழையாகப் பொழிந்ததால், பேரழிவு ஏற்பட்டதைத் தவிர எதுவும் நடக்கவில்லை. ஆனால் அந்த நிதியை புவியில் அதிகரித்துவரும் கார்பன் அளவைத் தடுப்பதற்காகச் செலவிட்டிருந்தால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள் நுகர்வால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் தடுக்கப்பட்டிருக்கும். பெரும் நெருக்கடியில் இருந்து மனித குலம் மீண்டிருக்கும். காற்று மாசு அதிகரித்து வருவதால் அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு மூன்றரை லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர்.

வேறு வார்த்தைகளில் சொன்னால், ராணுவத்திற்காக அமெரிக்கா செலவிடும் தொகையை மனித குலத்திற்குச் செலவிட்டால், புவியில் கார்பன் அதிகரிக்காமல் தடுத்து விடலாம். உலக வறுமையை ஒழித்து விடலாம்.

நீண்ட தொலைவு இலக்குகளைத் தாக்கும் அதிநவீன ஏவுகணைகளை உக்ரைனுக்கு இங்கிலாந்து வழங்கியுள்ளது. இந்த ஏவுகணை ஒன்றின் விலை 10 லட்சம் டாலர் ஆகும். இப்படி உக்ரைன் போருக்காக 1300 கோடி டாலர் நிதியை இங்கிலாந்து செலவிட்டுள்ளது. இந்தத் தொகை, 24 ஆண்டுகளுக்கு இங்கிலாந்து மக்களின், உணவு, வாடகை, போக்குவரத்து உட்பட சராசரியான மாதாந்திர செலவுகளுக்குப் போதுமானது.

போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் நாட்டுக்கு 610 கோடி டாலர் நிதியும், 2024 ஆம் ஆண்டு மட்டும் இஸ்ரேலுக்கு 2300 கோடி டாலர் நிதியும் அமெரிக்கா கொடுத்துள்ளது. வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவும் பன்றிக் காய்ச்சல், கொரோனா போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தவும் பரவாமல் தடுக்கவும் இந்த நிதி போதுமானது என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

இருபது நாடுகளில் 50 விழுக்காட்டுக்கும் குறைவாகவே எழுத்தறிவு பெற்றுள்ளனர். இந்த நாடுகள் முழுமையான கல்வியறிவைப் பெற 1400 கோடி டாலர் செலவிட்டால் போதுமானது என்று யுனஸ்கோ மதிப்பிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஏழு பெரிய நாடுகளின் (G7) ஒரு மாத இராணுவ செலவுத் தொகையை ஆகும்.

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் கல்வி பெறுவதற்கான உள்கட்டமைப்பு. தடையற்ற மின்சாரம், மலிவான விலையில் அதிவேக இணைய இணைப்பு (இன்டர்நெட்) போன்றவற்றைப் பெறுவதற்கு 1 லட்சத்து 40 ஆயிரம் டாலர் செலவழிக்க வேண்டியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு முதல் 40 நாடுகளின் ராணுவங்களுக்குச் செலவிட்டதில் பாதித் தொகையை செலவிட்டாலே போதுமானதாகும்.

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு கல்வியும் அதனைப் பெறுவதற்கு உதவக்கூடிய இணைய வசதியும் கிடைத்துவிட்டால், மனித ஆற்றல் எத்தனை மடங்கு மலரும். பல லட்சம் புதிய அறிவியலாளர்கள், மருத்துவர்கள், கலைஞர்கள், பொறியாளர்கள் உருவாவர்கள். மனித குலம் அறிவொளி பெற்று மிளிரும். சமூகம் எதிர்கொண்டிருக்கும் எத்தனை பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான கண்டுபிடிப்புகள் வெளிவரும். ஆனால், போர் வெறி பிடித்த வல்லரசுகள், பல்லாயிரம் டன் குண்டுகளை வீசி பேரழிவில் பயணித்து வருகின்றன.

வறுமை, கல்வியறிவின்மை உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து மனிதகுலம் மீண்டிட, மகத்தான வளர்ச்சியைப் பெற்றிட மனித ஆற்றல் பன்மடங்கு பெருகிட தேவையான வளங்களும் நிதியும் இந்த உலகில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துவதற்கான விருப்பமோ அக்கறையோ இந்த ஏகாதிபத்தியவாதிகளுக்கு கிடையாது. போர் வெறிக் கூச்சல், இராணுவத்துக்கும் ஆயுதங்களுக்கும் அதிகமான செலவிட்டு வீணடிப்பது, ஆட்சியாளர்கள் ஊதாரித்தனமாக செலவிடுவது, வல்லரசுகளுக்கு இடையிலான மோதல்களில் ஈடுபடுவது, போன்றவற்றில்தான் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதனை மக்கள் மட்டுமே முடிவுக்கு கொண்டுவர முடியும். மக்கள் எழுச்சிதான் ஏகாதிபத்திய வாதிகளுக்கும் வல்லரசுகளுக்கும் முடிவு கட்டும். மக்கள் எழுச்சிதான் பேரழிவு ஆயுதங்களையும் காட்டுமிராண்டித்தனமான போர்களையும் முடிவுக்கு கொண்டுவரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button