அறிக்கைகள்

விகடன் குழும இணயதளம் முடக்கம் – கருத்துரிமையை பறிக்கும்  பாசிச நடவடிக்கைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின் முன்னணி வார இதழான “ஆனந்த விகடன்”, தனது இணைய தளத்தில், அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து சென்ற, இந்தியர்களை கைகள், கால்களில் விலங்கு போட்டு திருப்பி அனுப்பிய அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் திமிர்த்தனமான  நடவடிக்கையினையும், அமெரிக்க அரசின் ஆணவச் செயலை நியாயப்படுத்திய ஒன்றிய அரசையும் விமர்சிக்கும் முறையில் ஒரு “கேலிச்சித்திரம்” வெளியிட்டிருந்தது.

இதனை சகித்துக் கொள்ள முடியாத ஒன்றிய அரசு விகடன் குழும இணைய தளத்தை முடக்கி வைத்து மிரட்டும் செயலில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

விகடன் குழுமம் ஊடகத் துறையில் நீண்ட பாரம்பரியம் கொண்டது. அரசியல், பொருளாதார, சமூக பிரச்சினைகளில் மட்டும் அல்லாமல் கலை, இலக்கியம், தொல்லியல் ஆய்வு, வரலாறு, அறிவியல் என அனைத்துத் துறைகளிலும் தனது கருத்துக்களை வெளிப்படையாக முன் வைத்து வருவதே அதன் சிறப்பு மிக்க பாரம்பரியமாகும். இதன் காரணமாக சிறை செல்லவும் தயங்காத தைரியமும், துணிவும் கொண்ட பாரம்பரியம் கொண்டது.

விகடன்  ஊடக குழுமம் மட்டுமல்ல, பாஜக, ஆர்.எஸ்.எஸ், அதன் பரிவாரங்கள், அவைகளின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் எந்த ஊடகத்தையும் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லை என்பதே அனுபவமாகும். சர்வதேச அளவிலான ஊடக சுதந்திரப் புள்ளிக் கணக்கில், 180 நாடுகளுடன் ஒப்பிடும் போது கடந்த  2014 ஆம் ஆண்டில் 140வது இடத்தில் இருந்து 2024 ஆண்டில் 159வது இடத்துக்கு சரிந்து விழுந்துள்ளது. கௌரி லங்கேஷ் உட்பட இதுவரை 61 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 25க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் சிறை தண்டனைக்கு ஆளாகியுள்ளனர். ஊடக சுதந்திரத்தைப் பொறுத்தவரை படுமோசமான நிலவரத்தை வெளிப்படுத்தும் நாடு என, நமது நாடு  அடையாளப்படுத்தப்படுகிறது.

பாஜகவிற்கு எதிராக பெரு மூச்சு விடுவதையும் கூட அனுமதிக்க முடியாத, பாசிச வெறித்தனம் வெளிப்பட்டிருப்பதை, விகடன் குழும இணைய தளம் முடக்கம் காட்டுகிறது. இந்தக் கருத்துரிமை பறிப்பு பாசிச நடவடிக்கைக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button