விஜயமங்கலம் கே.எம்.இரத்தினசாமி மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடி விஜயமங்கலம் கே.எம்.ஆர். என்கிற தோழர் கே.எம்.இரத்தினசாமி (105) இன்று (02.02.2025) மதியம் 12.30 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கே.எம்.இரத்தினசாமி விஜயமங்கலம் அருகில் உள்ள கினிப்பாளையம் என்ற ஊரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். உறவினர்கள் ஆலோசனையின் பேரில் வேலை தேடி, புலம் பெயர்ந்து மலேயா சென்றவர். மலேயாவில் கம்யூனிஸ்ட் கட்சியில் தமிழ்நாட்டை சேர்ந்த மலேயா கணபதி, ஆர்.எச்.நாதன் போன்றவர்களின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, அங்கு கம்யூனிஸ்டு கட்சியில் இணைத்துக் கொண்டவர். மலேயாவில் மலேயா கணபதி தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து, கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டு, இயக்கத்தில் முன்னணி வகித்த தமிழர்கள் நாடு கடத்தப்பட்டனர். அதில் கே.எம்.இரத்தினசாமி மீண்டும் தாயகம் திரும்பினார்.
பெருந்துறை அருகில் உள்ள வெட்டையன் கிணறு என்ற கிராமத்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட கம்யூனிஸ்டு கட்சியின் முதல் தலைமுறை தலைவர்களில் ஒருவரான ஆர்.கிஷன் அவர்களின் தொடர்பால், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.
விஜயமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் தொழிற்சங்க அமைப்புகளை உருவாக்கி, தொழிலாளர் நலனுக்கான போராட்டங்களை முன்னெடுத்து வந்தார்.
கம்யூனிஸ்டு கட்சி முன்னெடுத்த நில மீட்பு போராட்டத்திலும் பங்கேற்றவர். பல முறை சிறை சென்ற அனுபவம் பெற்றவர்.
கடசியின் மாவட்டக் குழு உறுப்பினர் வரை பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றி வந்தார். இவரது வாழ்விணையர் திருமதி பழனியம்மாள் சில வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டார். இவர்களுக்கு இளங்கோ, கருணாகரன், திருநாவுக்கரசு என்ற மூன்று மகன்களும், வசந்தகுமாரி என்ற மகளும் இருக்கின்றனர். இதில் கே.ஆர்.திருநாவுக்கரசு, பெருந்துறை ஒன்றிய ஊராட்சிக் குழு தலைவராகவும், கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்த உறுப்பினர் கே.எம்.இரத்தினசாமி மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு, செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.