
அண்மையில் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பொன்று, நீதிமன்றங்களின் பொறுப்பற்ற போக்குகளைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.
குற்றவாளிக்கு 14 வயது என்பதை நீதிமன்றம் ஏற்க 25 ஆண்டுகள்!
கொலைக் குற்ற வழக்கொன்றில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட பதினான்கு அகவைச் சிறுவன் குறித்த வழக்கு அது. நிகழ்வின்போது முதிர்நிலை அடையாது பதினான்கு அகவை கொண்டவராக மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர் இருந்தார் என்பதைக் கணக்கில் கொள்ளாமல் அல்லது அதனை ஏற்றுக்கொள்ளாமல், தொடக்க நிலை நீதிமன்றங்களில் இருந்து உயர் நீதிமன்றம் உள்ளிட்டு, உச்ச நீதிமன்றம் வரை தீங்கிழைக்கப்பட்டிருக்கிறது என்பதை அந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.
பள்ளிச் சான்றிதழ், மருத்துவர் குழு அறிக்கை போன்ற எதையும் பொருட்படுத்தவில்லை, சிறார் காப்பகத்துக்குப் பரிந்துரை செய்யவில்லை, புதிதாகப் பல தரவுகள் தரப்பட்டும் அவை எடுத்துக்கொள்ளப்படவில்லை, வழக்கினை ஆழமாக நேர்மையுடன் அணுகவில்லை எனப் பல தவறுகளையும் நீதியர் விவரித்திருக்கிறார்.
நான்கு சுற்றுக்கள் மீண்டும் மீண்டும் வழக்காடப்பட்டும், உரிய தீர்வு தரப்படாமல் 2001 முதல் இருபத்தைந்து ஆண்டுகளை அந்தக் குற்றவாளி சிறையில் கழிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இடையில் இரக்க வேண்டுகோளினை ஆளுநர் ஏற்கவில்லை. குடியரசுத் தலைவர் இரக்க வேண்டுகோளினை ஏற்று, குற்றவாளி அறுபது அகவை வரை விடுதலை பெறக்கூடாது என்ற கட்டுடன், வாழ்நாள் சிறையெனத் தண்டத்தைக் குறைத்து ஆணையிட்டிருக்கிறார்.
நிகழ்வின்போது குற்றவாளி பதினான்கு அகவையில்தான் இருந்தார் என்பதை எடுத்துக் கூறவும் அதனை ஏற்கச் செய்யவும் இருபத்தைந்தாண்டுகள் கழிந்துவிட்டன. தற்போது அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
நீதியர் எம்.எம். சுந்தரேசு அவர்கள் தெளிவான கண்ணோட்டத்துடன், நீதிமன்றங்களின் செயல்பாடுகளையும் நடைமுறைகளையும் போக்குகளையும் ஆய்வுக்குட்படுத்தி, ஆழமான மீள்பார்வைக்கு அடிப்படை அமைத்திருக்கிறார் என்று இதனை எடுத்துக்கொள்ளவேண்டும்.
இந்த வழக்குக் குறித்துத் தனியாக ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும் என்றாலும், அரசமைப்புச் சட்டத்தையும் பிற சட்டங்களைப் புரிந்துகொள்வதிலும் உச்ச நீதிமன்றங்கள் பல வேளைகளில் தவறிவிடுகின்றன என்பதை வெளிப்படையாகவே அறிய முடிகின்றது. ஆழமாக நோக்காமலும் மேலோட்டமாகப் பார்த்தும் தங்கள் மனதில் பதிந்துள்ள கருத்துக்களுக்கு ஒப்பியும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்கூட அமைந்துவிடுகின்றன என்பது வியப்புக்குரியதுதான்.
இத்தகைய போக்குகள் தொடர்கின்றன என்பதோடு, பல வகைப்பட்ட தீங்குகள் மாநில அரசுகளுக்கு மட்டுமின்றி, வாழ்நிலையில் மக்களுக்கும் தனியருக்கும் ஏற்பட்டுவிடுகின்றன.
உச்ச நீதிமன்றத்தின் தீர்வுகள் அல்ல, தீர்ப்புகள் எப்படி அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாடுகளையே நிலைகுலையச் செய்துவிடுகின்றன என்பதைத் தொடர்ந்து காணலாம்.
மாநில சட்டப்பேரவைகளை கலைக்க முடியாது என்று ஆணி அறைந்த தீர்ப்பு
1959இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆட்சி கேரளத்தில் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகள் ஒன்றிய அரசின் உரிமையாகவே மாறிவிட்டது. 1977 நாடாளுமன்றத் தேர்தலையடுத்து, ஆட்சிப் பொறுப்பேற்ற சனதா, அரசமைப்புச் சட்டத்தின் 356 பிரிவைப் பயன்படுத்தி, பல மாநிலங்களில் இருந்த காங்கிரசு ஆட்சிகளைக் கலைத்தது. இதனை எதிர்த்து ராசசுத்தான் உள்ளிட்ட பல மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன.
பிரிவு 356இல் குடியரசுத் தலைவர், அதாவது ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது, மாநில அரசுகள் மக்களது நம்பிக்கையினை இழந்துவிட்டன என்று கருதப்பட்டாலும் ஆட்சியை நீக்கலாம், மக்களாட்சி முறையில் இது ஏற்றுக்கொள்ளத் தக்கதுதான், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஆட்சிக் கலைப்பினை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பில்லை என்றாலும் குடியரசுத் தலைவரின் முன்னுரிமையைப் பறிக்க முடியாது என்பன போன்ற அடிப்படைகளை முன்வைத்து ஏழு நீதியர்களைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பினை வழங்கியது.
சற்றேறக்குறைய இருநூறு பத்திகளில் பல வகைப்பட்ட மேற்கொள்களையும் தரவுகளாகக் கருதப்பட்டவற்றையும் உள்ளடக்கி, விரிவான முறையில் திரும்பத் திரும்ப ஒன்றிய அரசின் உரிமைகளை நிலைநாட்ட முயன்றது அந்தத் தீர்ப்பு. வேறு மாற்று இல்லை என்று அனைவரையும் நம்பவைக்க எடுத்துக்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு அளவேயில்லை. அடுத்து, இதனை அடியொற்றி, எழுபதுக்கும் மேற்பட்ட முறைகள், ஒன்றிய அரசின் ஆட்சியில் இருந்த கட்சிகளுக்குப் பிடிக்காத மாற்றுக் கட்சி மாநில அரசுகள் தொடர்ந்து கலைக்கப்பட்டு வந்தன.
ஆளுநருக்கு தனி அதிகாரம் உண்டா?
உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்டத்துக்கு மாறாக வழங்கும் உரிமைகளை, அதுதான் மாற்றவேண்டும் என்ற நிலை தற்போது உள்ளது. வேறு வகையில் நாடாளுமன்றச் சட்டங்கள் வழியாக மாற்றுத் தேட முடியும் என்றாலும், ஒன்றிய அரசு தனக்கு ஏற்புடையதாக அமைந்துள்ள முறைமைகளை மாற்ற முயலுவதில்லை.
இவ்வாறுதான், இல்லாத உரிமைகள் பல மாநில ஆளுநர்களுக்கும் பல்கலைக்கழக நல்கை ஆணையத்துக்கும் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுவிட்டன.
மாநில ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசால் அமர்த்தப்படுபவர்தான். ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டப்படி அவர் மாநிலத்துக்கு அனுப்பப்படும் ஒன்றிய அரசின் சார்பாளர் அல்லர். அந்த மாநிலத்தின் நலன்களைக் காக்க உறுதிமொழி எடுத்துக்கொண்ட அரசமைப்புத் தலைவர். அவ்வளவுதான்.
மாநில ஆளுநரின் செயல்பாடுகள் அனைத்தும், மாநில அமைச்சரவையின் அறிவுத்தல்களுக்குக் கட்டுப்பட்டு மட்டுமே இருக்கவேண்டும். இதனை உச்ச நீதிமன்றமும் பல தீர்ப்புகளில் ஏற்றுக்கொண்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுக் கூறியிருந்தாலன்றி, ஆளுநருக்குத் தன்விருப்பில் முடிவெடுக்க உரிமையோ, கடமையோ இல்லை. சில மாநிலங்களில் மட்டும், பிற்பட்ட பகுதிகள், வனப் பகுதிகள் போன்றவை தொடர்பாக ஆளுநர்களுக்குச் சிறப்புரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவையும் முழுமையானவையல்ல என்பதுதான் உண்மை நிலை.
ஆனால், மாநில ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசின் சார்பாளர்தான் என்பது ஏதோவொரு வகையில் நீதியர்களின் கருத்தில், மனதில் புகுந்துகொண்டுள்ளது போலத் தெரிகிறது. குறிப்பாக, அவர் ஒன்றிய அரசுக்குக் கட்டுப்பட்டவர் என்ற நிலையும் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் எந்தவொரு பிரிவிலும் அத்தகையதொரு நிலை இருப்பது போன்று காணப்படவில்லை.
அத்துடன், பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பு ஆளுநர் என்ற முறையில்தான் தரப்படுகிறது. ஆனால், ஆளுநராக இருக்கும் வேந்தர், மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்படாமல், வேந்தர் என்ற முறையில் தனித்தும் தன்னிச்சையாகவும் செயல்படலாம் என்ற உரிமையினைப் பெரிதும் நீதிமன்றங்களே வழங்கியுள்ளன எனலாம். பல மாநிலங்களில் இது தொடர்பான வழக்குகள் தொடுக்கப்பட்டபோது, உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் பல்கலைக்கழக வேந்தர்களுக்குத் தன்னிச்சையான தனியுரிமை இருப்பதாகவே உறுதிப்படுத்தியிருக்கின்றன.
பல்கலைக்கழகச் சட்டங்கள்தாம், ஆளுநர்களுக்கு வேந்தர் பொறுப்பைத் தந்திருக்கின்றன. ஆனால், அரசமைப்புச் சட்டம் அமைச்சரவையின் அறிவுறுத்தல்களுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்று தெளிவுபடுத்துகிறது. சட்டம் ஒன்றைக் கூறியிருந்தாலும், அரசமைப்புச் சட்டத்தின் முறைமைகளுக்கு அது மாறானதாக இருந்தால், அரசமைப்புச் சட்டத்தின் வரையறைகள் மட்டுமே முன்னுரிமை பெற்றுச் செல்லத்தக்கதாக அமையும் என்பது அடிப்படைப் பாடம்.
அரசியல் அடிப்படையில் அமைச்சரவை சில முடிவுகளை எடுக்கலாம், ஆனால் வேந்தர் என்ற முறையில் ஆளுநர்கள் அரசியலுக்கு அப்பால் முடிவுகளை எடுக்க முடியும் என்றுகூடச் சிலரால் வலியுறுத்தப்படுகிறது. நீதிமன்றங்களும் இத்தகைய மனநிலையினையே வெளிப்படுத்துகின்றன எனத் தோன்றுகிறது. ஆனால், இன்றைய சூழலில், ஆளுநர் என்ற பொறுப்பும்கூட முழுமையாக அரசியல் சார்ந்ததாகவே இருப்பதைக் காணலாம்.
சட்டம் வழங்காத தனி உரிமைகளை ஆளுநருக்கு வழங்கும் நீதிமன்றங்கள்
அண்மைக் காலத்தில், பல்கலைக்கழகச் செயல்பாடுகளில் ஆளுநர்களின் நடவடிக்கைகள், அவர்களை பொறுப்பில் அமர்த்திய ஒன்றிய அரசின் வேண்டல்களை நிறைவேற்றுவனவாகவே அமைந்துள்ளன. ஒன்றிய அரசின் கட்சி சார்ந்தோரை மட்டுமே துணைவேந்தராக அமர்த்துவதும், துணைவேந்தர் தேர்வுக் குழுவில் அத்தகையோரைச் சேர்ப்பதும், பல்கலை ஆணைக் குழு, ஆட்சிக் குழு ஆகியவற்றுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது, பேராசிரியர் தேர்வு என அனைத்திலும் ஒன்றிய ஆளும் கட்சியினரின் தலையீடு பெருகிவிட்டது.
இந்த நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் எண்ணங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் முரணாக உள்ளோரை ஊக்குவிக்கும் ஆளுநர்களுக்கு வேந்தர் என்ற முறையில் தனியுரிமைகளை வழங்குவது பொருத்தமற்றது என்பதுடன், அரசமைப்புச் சட்டத்துக்கும் மக்களாட்சி மாண்புகளுக்கும் முரணானது என்பதை நோக்கவேண்டும்.
இப்போது, பல்கலைக்கழக நல்கை ஆணையம் வெளியிட்டிருக்கும் பல வழிகாட்டுதல்கள் ஏற்கத்தக்கதாக இல்லாமல் எதிர்ப்புகளைக் கண்டு வருகின்றன. குறிப்பாக, துணைவேந்தர் தேர்வுக் குழுவில் மாநில அரசுக்குப் பங்கில்லாமல், ஆளுநர், பல்கலை நல்கை ஆணையம் மற்றும் தொடர்புள்ள பல்கலைக்கழகத்தினர் ஆகியோர் தேர்வு செய்யும் உறுப்பினர்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்பது அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழக நல்கை ஆணையம் என்பது உயர் கல்விக்கு நிதியுதவி வழங்குதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. அதற்கு, உயர் கல்வி தொடர்பான தரத்தினை உறுதிசெய்யவும் ஒருங்கிணைக்கவும் உரிமைகளை வழங்கியது பெரும் தவறாகும். இதனை ஏற்றுக்கொண்டால்கூட, உயர் கல்வியின் தரம், ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கு அப்பால், பல்கலைக்கழகச் செயல்பாடுகளில் தலையிட நல்கை ஆணையத்தின் எந்தவொரு பிரிவிலும் இடம் தரப்படவில்லை.
இருப்பினும், பேரா. யசுபால் வழக்கிலும் (2004) அதற்கு முந்தைய பல்வேறு வழக்குகளிலும், உயர் கல்வி தொடர்பான அனைத்துக்கும் பல்கலைக்கழக நல்கை ஆணையம் பொறுப்பு என்பது போன்ற ஒரு தோற்றத்தினை உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் ஏற்படுத்திவிட்டன. சட்டத்துக்குப் புறம்பான நல்கை ஆணையத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும் சட்டங்களாகவே நீதிமன்றங்கள் கருதிவிட்டன. ஆணையச் சட்டத்தின் அடிப்படைகளை ஆழ்ந்து நோக்காமல் இத்தகைய ஏற்பு வழங்கப்பட்டிருக்கிறது.
குறைந்த அளவு வழிகாட்டுதல்களாகவே பேராசிரியர் தேர்வுத் தகுதிகள் முன்னர் முன்மொழியப்பட்டன. அவற்றைத் திருத்தவும் மாற்றவும் மேம்படுத்தவும் மாநில அரசுகளுக்கு உரிமையும் கடமையும் இருந்தன. பேராசிரியர்களைத் தேர்வு செய்யும் குழுவினையும் முறையினையும் நல்கை ஆணையம் எப்போதும் வகுத்துக் கூறவில்லை.
ஆனால், தற்போது, துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் போன்ற நேரிடையான கற்பித்தலுக்குத் தொடர்பில்லாத பொறுப்புகளுக்கும் தகுதிகளைத் தன்னிச்சையாக ஆணையம் வலியுறுத்த வந்துவிட்டது. மேலும், எப்படித் துணைவேந்தர் தேர்வு செய்யப்படவேண்டும், தேர்வுக் குழு எப்படி அமையவேண்டும் என்பன போன்றவற்றிலும் தலையீடு தொடங்கிவிட்டது.
உச்ச நீதிமன்றம் தன் தவறுகளை திருத்த வேண்டும்
நீதிமன்றங்கள் ஏதோவொரு வகையில் ஆளுநருக்கும் நல்கை ஆணையத்துக்கும் சட்டத்துக்கு மாறாகக் கொடை போன்று வாரி வழங்கிய உரிமைகள் இன்று அனைத்து எல்லைகளையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றன. ஒன்றிய அரசு இதில் தலையிட வாய்ப்பில்லை. ஏனெனில், இவற்றைச் செயல்படுத்துவதே அதுதான்.
இருபத்தைந்து ஆண்டுகள் சிறையில் இருக்கச் செய்த உச்ச நீதிமன்றத்தின் தவற்றினை அதுவே திருத்தியது போன்று கல்விச் சூழலைச் செம்மைப்படுத்தவும் முன்வரவேண்டும்.
பொம்மை தீர்ப்பு ஆட்சிக் கலைப்பைத் தடுத்து போன்று, ஆளுநர்களையும் நல்கை ஆணையத்தையும் சட்ட முறைமைகளுக்குள் கொண்டுவரும் பொறுப்பும் கடமையும் இப்போது உச்ச நீதிமன்றத்திடம்தான் இருக்கிறது.