
மாணவர் விரும்பும் மூன்றாவது மொழியினைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமையும் வாய்ப்பும் வேண்டும் என்றுதான் ஒன்றிய அரசு இப்போது பரப்புரை செய்துவருகிறது. பா.ச.க.வும் இந்தப் பச்சைப் பொய்யை வைத்துத்தான் பொழுதெல்லாம் போக்குக் காட்டுகிறது.
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎசுஇ) பாடத்திட்டத்தில் நடைபெறும் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி அல்லாமல் வேறொரு மொழியினைப் படிக்கும் உரிமை இதுவரை வழங்கப்படவில்லை.
மேலும், ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் அல்லது தமிழகப் பாடத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட சில தனியார் பள்ளி மாணவர்கள், இந்திக்காக மட்டுமே அத்தகைய பள்ளியில் சேர்கிறார்கள் என்ற கற்பனையும் கட்டமைக்கப்படுகிறது.
எதற்காக மாணவர்கள் ஒன்றிய அரசின் பாடத் திட்டத்தில் சேர்க்கப்படுகின்றனர்?
இந்தி அல்லது வேறொரு மொழியினைப் படிக்கவேண்டும் என்பதற்காகப் பெற்றோர் எவரும் தங்கள் குழந்தைகளை ஒன்றிய அரசுப் பாடத்திட்டத்திலுள்ள பள்ளிகளில் சேர்ப்பதில்லை.
தங்கள் குழந்தைகளின் எதிர்கால நலனுக்கு உதவும் என்பதற்காக மட்டுமே பெற்றோர் பலர் ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளை நாடுகின்றனர். இதனால், மாநில அரசின் பாடத்திட்டம் தகுதி குறைந்ததாக இருக்கிறது என்று பொருளாகிவிடாது. ஒன்றிய அரசின் பாடத் திட்டத்துக்கு இணையான தகுதியளவுக்குத் தற்போது தமிழ்நாட்டரசின் சமச்சீர் கல்வித் திட்டமும் மேம்படுத்தப்பட்டுவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை.
மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்விக்கான நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் பலவும் ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவதால்தான், பெற்றோர் அத்தகைய பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்கின்ற உண்மையை பா.ச.க.வினர் மறைத்துவிடுகின்றனர்.
இந்திக்காகவா மாணவர்கள் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்?
சில ஆண்டுகளுக்கு முன் மிகக் குறைவான எண்ணிக்கையில் 200 என்றிருந்த ஒன்றிய அரசின் பாடத்திட்டப் பள்ளிகள், இன்று 1835 என்று பெருகியிருப்பதற்கான அடிப்படையும் இதுதான். மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் அறிவியல், கணக்கு ஆகியவற்றையொட்டியே நடத்தப்படுகின்றன. அவை இந்தி மொழி அறிவுக்காக நடத்தப்படுவதில்லை. ஆகவேதான், அறிவியல், கணக்குப் பாடங்களைச் சிறப்பான முறையில் கற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் மட்டுமே பெற்றோர், அதுவும் செல்வநிலை கொண்ட பெற்றோர் ஒன்றிய அரசின் பாடப் பள்ளிகளிலும் தமிழக அரசின் பாடம் கொண்ட தனியார் பள்ளிகளிலும் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கின்றனர். அத்தகைய பள்ளிகளில் படித்தாலும், மொழிப் பாடங்களுக்கான மதிப்பெண்கள் நேரடிப் பயன் தருவதில்லை. அறிவியல், கணக்கு போன்ற பாடங்களின் மதிப்பெண்களே பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதனை வைத்துக்கொண்டு, ஏதோ இந்தி மொழி படிப்பதற்காகத்தான் இத்தகைய பள்ளிகளில் சேர்கின்றனர் என்று பா.ச.க.வினர் மாற்றிக் கூறி மயக்கம் தர முனைகின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும் அடிப்படை உண்மை இது.
பா.ச.க.வினர் கூறுவது போல விருப்ப மொழியினைப் பயிலும் வாய்ப்பும் உரிமையும் இந்தப் பள்ளிகளில் இருக்கின்றனவா? என்பதைப் பார்த்தால் அதுவும் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. மாநிலக் கல்வித் திட்டத்தில் மும்மொழிக் கொள்கையினை ஏற்றுக் கொண்டால்கூட, நாளை அந்த மூன்றாவது மொழியினைத் தேர்ந்தெடுக்கின்ற உரிமை அல்லது வாய்ப்பு மாணவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் கிடைக்காது. மாணவர் சேரும் பள்ளி எந்த மூன்றாவது மொழியினைப் பயிற்றுவிக்கிறதோ அந்த மொழியைத்தான் படித்தாக வேண்டும்.
மாணவரின் மொழி விருப்பம் மதிக்கப்படுகிறதா?
ஒரு பள்ளி வகுப்பில் 40 மாணவர் இருந்தால், சிலர் இந்தி, வேறு சிலர் மலையாளம், பிறர் தெலுங்கு, கன்னடம், சமக்கிருதம், செர்மன், பிரெஞ்சு என்று படிக்க விரும்பினால் அவர்களில் ஒவ்வொருவருக்காகவும் தனித்தனியே வேறு வேறு ஆசிரியர்களை ஏற்பாடு செய்வது எளிதல்ல. இதனால், ஒரு பள்ளி எந்த மொழியினைத் தருகிறதோ அந்த மொழியினைத்தான் மாணவர் தேர்ந்தெடுத்தாக வேண்டும். விருப்பு, வாய்ப்பு என்பதெல்லாம் வெறும் ஏட்டில்தான். இதுதான் இன்று நடைமுறையில் நடந்து வருகிறது. இதனால், விரும்பும் மொழியினைப் படிப்பது வெறும் மாயைதான் என்பது புலனாகிறது.
தமிழுக்கு மாறாக ஏன் வேற்று மொழியைத் தேர்ந்தெடுக்கின்றனர்?
இந்த இடத்தில் இன்னொரு உண்மையையும் பார்க்கத் தவறிவிடக்கூடாது. மூன்றாவது மொழி இருக்கட்டும். முதலாவது மொழியாகச் சிலர் தமிழுக்கு மாறாக, சமக்கிருதம், செர்மனி, பிரெஞ்சு போன்ற வேறு மொழிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர். இதற்கான அடிப்படைக் காரணி ஒன்றே ஒன்றுதான். அந்த மொழியினை அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுப்பதில்லை.
தமிழுக்கான பாடத்திட்டம் விரிவானது. தமிழ்ப் பண்பாட்டினை அறிந்து கொள்ளத்தக்கவாறு பண்டைய இலக்கியங்களில் இருந்து, இன்றைய இலக்கியங்கள் வரையிலான பாடங்கள், பிற இலக்கியங்கள், உரைநடைப் பகுதிகள், இலக்கணம் போன்றவை அதில் உள்ளடங்கியிருக்கும்.
ஆனால், சமக்கிருதம், செர்மனி, பிரெஞ்சு போன்ற மொழிப் பாடங்கள் அரிச்சுவடியில் தொடங்கித் தரப்படும் தொடக்க நிலைப் பாடங்கள் மட்டுமேயாகும். இதனால், இவற்றைப் படிப்பது எளிது, மதிப்பெண்கள் பெறுவது இன்னும் எளிது என்பதற்காகவும் அந்த மொழிப் பாடங்களைப் படிக்கக் குறைந்த கால அளவே போதுமானது என்பதற்காகவும் மட்டுமே அவை மாணவராலும் பெற்றோராலும் நாடப்படுகின்றன. மொழிப் பாடத்தைப் படிப்பதற்கான காலத்தை அறிவியல், கணக்கு போன்ற பாடங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளவே தமிழ் அல்லது தாய்மொழி புறக்கணிக்கப்படுகிறது; வேறு மொழிகள் விரும்பப்படுகின்றன.
புத்தகப் புழுவாக்கவா கல்வி?
விடுமுறை, விளையாட்டு. பொழுதுபோக்கு போன்ற அனைத்தையும் துறந்து, தேர்வுக்காக மட்டுமே, மதிப்பெண்கள் பெறுவதற்காக மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் நடைமுறை உலகில் நாம் இருக்கும்போது, மூன்றாவது மொழியையும் படித்துக் காலத்தையும் முயற்சியையும் உழைப்பையும் வீணடிக்க எந்த மாணவரும் பெற்றோரும் விரும்புவதில்லை என்பதை மறந்துவிடக்கூடாது.
ஆங்கில மொழியினைக் கற்றுக்கொள்ள – பேசவும் எழுதவும் தெரிந்துகொள்ள, மொழிப் பாடமாகப் படிக்கும் ஆங்கிலம் மட்டும் போதாது என்ற மனப்போக்கு மக்களிடம் பெரிதும் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஆங்கில மொழியினைக் கற்றுத் தரக்கூடிய முறை இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களிலும் மேம்படாமல் இன்னும் இருப்பதே இதற்குக் காரணியாகலாம். இதனாலேயே, ஆங்கிலவழிக் கல்வி முறையில்தான் ஆங்கிலத்தை அறியும் வாய்ப்பு மிகுதி என்ற தவறான நம்பிக்கை ஏனோ இன்று வரை நீடித்துக்கொண்டிருக்கிறது. ஆங்கிலவழிப் பள்ளிகளும் வணிக அளவில் பெருகி வருகின்றன.
மும்மொழி மயக்கம்!
ஒன்றிய அரசின் தயக்கம்!
அலுவல் மொழி இந்தி என்று தொடங்கி, இணைப்பு மொழி என்று தொடர்ந்து, வளத்துக்கான மொழி இந்தி என்று வற்புறுத்தி, வேலை வாய்ப்புக்கான மொழி என்று விரிவுபடுத்தி, வாழ்வுக்கான மொழி என்று விளக்கம் அளித்துப் பரப்புரை செய்து வந்தோர், இப்போது அனைத்தையும் துறந்து இந்திய மொழிகளில் ஏதாவதொன்று என்று தலைகீழ்ப் பாடம் எடுக்கின்றனர்.
இருந்தாலும், இவர்கள் முன்னெடுக்கும் அனைத்தும் முரண்பாடுகளுக்குள் சிக்கி நகைப்புக்குள்ளாகின்றன.
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்று மும்மொழிகளைக் கற்பித்தாகவேண்டும் என்று கடுமையாக நடந்துகொள்ளும் பா.ச.க. ஒன்றிய அரசு, அவர்கள் நடத்தும் பள்ளிகளிலேயே தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படைகளைப் பின்பற்றி வழிகாட்டவில்லை என்ற முரண்பாட்டினைக் காணலாம். ஆங்கிலம், தாய் மொழி ஆகிய இரண்டுக்கும் மேலாக, மூன்றாவதாக இந்தி அல்லது இந்திய மொழியில் ஒன்று என்பதுதான் தேசியக் கல்விக் கொள்கை வகுத்துக் கொடுத்துள்ள வரையறை அல்லது விதி. ஆனால், அத்தகையதொரு நடைமுறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பின்பற்றப்படவில்லை என்பதுதான் உண்மை நிலை.
- ஒன்றிய அரசு சார்ந்த நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத் திட்டத்தில் நடத்தப்படும் பள்ளிகளில் (CBSE) இந்தி மட்டும்தான் மூன்றாவது மொழியாக இருக்கிறது. மூன்றாவது மொழியாக இந்தி அல்லது இந்திய மொழிகளில் ஒன்று என்ற விருப்ப வாய்ப்பு இன்று வரை மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.
- ஒன்றிய அரசின் நவோதயா பள்ளிகளில் மூன்றாவது மொழியான இந்திக்கு மாறாக இந்திய மொழிகளில் ஒன்று என்ற விருப்பத் தேர்வு எந்த மாணவருக்கும் இதுவரை தரப்படவில்லை.
- பிரதமர் மேனிலைப் பள்ளிகளில் இந்தியல்லாமல் வேறொரு இந்திய மொழிப் பாடத்தை மூன்றாவதாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை இல்லை.
- கேந்திரிய வித்யாலயம் என்ற பெயரில் ஒன்றிய அரசு நடத்தும் பள்ளிகளிலும் இந்தியை மறுத்து வேறொரு இந்திய மொழியினைப் படிப்பதற்கான நிலை உருவாக்கப்படவில்லை.
- தேசியக் கல்விக் கொள்கை முன்மொழிகின்ற தாய் மொழிக் கல்வி என்ற நிலையும் ஒன்றிய அரசு சார்ந்த பள்ளிகளில் நடைமுறையில் இல்லை. அதாவது, ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி என்பது நடைமுறைப்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசு சார்ந்த பள்ளிகளில் ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரை பயிற்சி மொழியாகத் தமிழ் அறிமுகப்படுத்தப்படவே இல்லை.
இவ்வாறு, தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரைகள் ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று வரை உள்ளடக்கப்படவில்லை. நவோதயா பள்ளிகள், பிரதமர் மேனிலைப் பள்ளிகள், கேந்திரியப் பள்ளிகள் ஆகியனவும் தேசியக் கல்விக் கொள்கையை மதிக்கவுமில்லை, பின்பற்றவுமில்லை.
ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளிகளே தேசியக் கல்விக் கொள்கைக்கு மாறாக நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், தமிழ்நாடு அரசின் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டும் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கவேண்டும் என்று ஒன்றிய அரசு வற்புறுத்துவது எப்படி முறையாகும் என்று தெரியவில்லை.
பா.ச.க. அரசின் தொடர் நடவடிக்கைகள் யாவும் உள்நோக்கம் கொண்டவையாகத் தெரிகின்றன. நிதி மறுப்பில் தொடக்கி, பல்வேறு நிலைகளில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருவதைக் காணலாம். தமிழ்நாட்டை வஞ்சிக்கவேண்டும், தனித்தியங்கும் தமிழ்ப் பண்பாட்டினைச் சீர்குலைக்கவேண்டும் என்ற மனப்போக்கின் மறுவடிவமாக இப்போது மும்மொழிக் கொள்கை முன்னிறுத்தப்படுகிறது என்றுதான் கருதவேண்டியுள்ளது.