
கிறுக்கன் கிழித்த துணி கோவணத்துக்கு உதவும் என்று சொல்வார்கள். அதைப் போல அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சமீபத்தில் அறிவித்த சர்வதேச நிதி உதவிகள் நிறுத்தம் என்பதும் நமக்குப் புரியும் வண்ணம் பல செய்திகளை தந்துள்ளது.
அமெரிக்காவில், மியாமியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கையை உயர்த்துவதுக்காக 21 மில்லியன் டாலர்களை நாம் எதற்காகச் செலவிட வேண்டும்?
அடுத்த நாள் அவர் மற்றொரு நிகழ்வில் இந்தக் குற்றச்சாட்டை மீண்டும் கூறினார். 21 மில்லியன் டாலர்கள் எனது நண்பர் பிரதமர் மோடிக்கு இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கையை உயர்த்துவதற்காகச் செல்கிறது என்று பேசினார்.
அதன் பிறகு நடந்த கன்சர்வேடிவ் அரசியல் நடவடிக்கை மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்த முறை “இந்தியாவின் தேர்தல்களுக்கு உதவியதற்காக 18 மில்லியன் டாலர்கள்” என்று கூறி, அதை ஒரு வணிக ஊழல் (கிக்பேக்) திட்டம் என்று கூறி அதை மீண்டும் எழுப்பினார்.
இதனை தொடர்ந்து, எலோன் மஸ்க்கின் (Dodge) அரசாங்கத் திறன் துறை இந்தியாவில் ஓர் அரசியல் தீயைப் பற்ற வைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) நிதியுதவி தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், நிதி அமைச்சக அறிக்கை ஒன்று, 2023-&24 நிதியாண்டில் நாடு 750 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.6,501 கோடி) பொருளாதார உதவியைப் பெற்றதாகக் கூறியுள்ளது.
இந்தியா எப்போது இந்நிதியைப் பெறத் தொடங்கியது?
பல ஆண்டுகளாக சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிதி உதவி நிறுவனம் இந்தியாவிற்கு நிதியுதவி அளித்து வருகிறது.
இந்தியாவிற்கான அமெரிக்க இருதரப்பு உதவி 1951 இல் தொடங்கியது. அதன் தொடக்கத்திலிருந்து, அமெரிக்க நிறுவனம் பல்வேறு துறைகளில் 555 க்கும் மேற்பட்ட இந்தியத் திட்டங்களுக்கு 17 பில்லியன் டாலர்கள். சுமார்.ரூ.1.5 லட்சம் கோடி நிதியை வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ‘சோழியன் குடுமி சும்மா ஆடுமா?’ என்பதைப் போல சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை விழுங்கத் துடிக்கும் ஏகாதிபத்தியச் சுரண்டல் கொள்கைதான் அமெரிக்கா இப்படிப்பட்ட உதவிகளைச் செய்வதாகும். ஆனால், அதன்மூலம் பல லட்சம் கோடி ரூபாய்களை இந்தியாவில் இருந்து அது சுருட்டி உள்ளது. எ.கா. பி.எல்.48 கோதுமை ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா விதித்த நிபந்தனைகளை கூறலாம்.
கடந்த நான்காண்டுகளில் அளிக்கப்பட்ட நிதி
அமெரிக்க நிதி உதவி மூலம் இந்தியாவிற்கு வழங்கிய நிதியில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை கடந்த நான்கு ஆண்டுகளில் வந்ததாகும் என்று இந்தியப் பொருளாதாரம், உலகச் சந்தை, போன்றவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கும் பணக் கட்டுப்பாட்டுத் தளம் (மணி கன்ட்ரோல்) கூறியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் அமெரிக்க நிறுவனத்திடமிருந்து இந்தியா 650 மில்லியன் டாலர்களை சுமார் ரூ.5,634 கோடி பெற்றது. இதன்மூலம், 2001 முதல் இந்தியாவிற்கான மொத்த ஒதுக்கீடு $2.86 பில்லியனை அதாவது ரூ.24,789 கோடியைத் தொட்டது.
நிதி அமைச்சகத்தின் விளக்கம்
இந்திய நிதி அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு நிதி தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக அல்ல, மாறாக விவசாயம் உள்ளிட்ட பிற திட்டங்கள் தொடர்பான 7 திட்டங்களுக்காக வழங்கப்பட்டது. தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க நிதிகள் இந்தியாவில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்தும் நாங்கள் ஆராய்வோம் என்றும் கூறியுள்ளது.
இருப்பினும், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை, இந்தியாவில் அத்தகைய நிதி ஒருபோதும் விநியோகிக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது. மேலும் யு.எஸ்.எய்டு ஊழியர்களும் அத்தகைய திட்டம் இருப்பதை மறுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் பல்லவி!
டிரம்பின் பேச்சு இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, சர்வதேச சிவில் சமூகமும், மனித உரிமைக் குழுக்களும் அதைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதாக நீண்ட காலமாகக் குற்றம்சாட்டி வருகிறது. இதனால் ஆம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் முதல் கிரீன்பீஸ் வரை உலகின் மிகவும் மதிக்கப்படும் பல அமைப்புகள் இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச அமைப்புகள் பாஜக அரசுக்கு எதிராகச் செயல்படவும், நாட்டின் விவகாரங்களில் தலையிடவும் முயற்சி செய்கிறார்கள் என்பதற்கு டிரம்பின் குற்றச்சாட்டுகள் சான்றாக இருப்பதாக பல பாஜக தலைவர்களும் அமைச்சர்களும் தெரிவித்து வருகின்றனர். பாஜக ஐ.டி பிரிவின் தலைவர் அமித் மாளவியா, “இந்தியத் தேர்தலில் செல்வாக்கு செலுத்தி பிரதமர் மோடியைத் தவிர வேறு ஒருவரை பதவியில் அமர்த்தும் முயற்சி உண்மையில் நடந்திருப்பதை டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்” என்று கூறினார்.
இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் ஜன்தீப் தன்கர், இந்த நாட்டின் ஜனநாயகச் செயல்முறை நமது தேர்தல் முறையின் தூய்மையைக் கெடுக்கக் கையாளப்பட முயற்சிக்கப்பட்டது குறித்து தான் அதிர்ச்சியடைந்ததாகக் கூறி எரியும் தீயில் எண்ணெய் வார்த்துள்ளார். அதே நேரத்தில் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான சஞ்சீவ் சன்யால், இந்த அமெரிக்க நிதி உதவியை “மனித வரலாற்றில் மிகப்பெரிய மோசடி” என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸின் எதிர்வினை
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, காங்கிரஸ் கட்சி, டிரம்ப் மற்றும் மஸ்க் இந்தியாவை அவமதித்தபோது பாஜக அமைதி காத்து வருகிறது, “அமெரிக்காவிலிருந்து போலிச் செய்திகளை” பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
“எலான் மஸ்க் ஒரு போலிக் கூற்றைப் பரப்புகிறார். டிரம்ப் டாக்காவிற்கும் டெல்லிக்கும் இடையில் வித்தியாசம் தெரியாது குழப்பமடைந்துள்ளார்,” என்று காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கூறியதுடன். “பாஜக இதற்குப் பதிலளிக்க வேண்டும் இந்தியாவின் ஜனநாயகம் குறித்து பாஜக ஏன் போலிச் செய்திகளைப் பரப்பியது? என்று வினா தொடுத்துள்ளார்.
உலகளாவிய அளவில் செயல்படும் சங்பரிவார் அமைப்புகள்!
கடந்த காலங்களில் சி.ஐ.ஏ. மூலம் நிதியுதவி அளித்து, இந்திய மதவெறி அமைப்புகளை கம்யூனிச அபாயத்தை தடுக்க வளர்த்தன.
ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (RSS) இரண்டாவது ‘சர்சங்க்சாலக்‘ ஆன எம்.எஸ்.கோல்வால்கர், உலகெங்கிலும் உள்ள இந்துக்கள், அவர்களின் குடியுரிமையைப் பொருட்படுத்தாமல், ஒன்றுபட வேண்டும் என்று வாதிட்டவர்.
ரகிப் ஹமீத் நாயக்திவ்யா திரிவேதி
‘ஹவுடி மோடி’ நிகழ்வுக்கு முன்பு, செப்டம்பர் 21, 2019 அன்று டெக்சாஸின் ஹூஸ்டனில் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த சிலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
இந்தியாவிற்கு வெளியே சங் பரிவார் செயல்பாட்டை 1947 ஆம் ஆண்டு வாக்கில் கென்யாவில் தொடங்கினர். 1990 களில் இந்த நெட்வொர்க்கின் வளர்ச்சி அதிகரித்தது.
1970 இல் விஸ்வ இந்து பரிஷத் ஆஃப் அமெரிக்கா (VHPA), அல்லது உலக இந்து கவுன்சில் ஆஃப் அமெரிக்கா உருவாக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு முதல், அமெரிக்காவில் 150 ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள் இருந்தன. கூடுதலாக வி.எச்.பி.ஏவின் 40 பிரிவுகளும் இந்து மாணவர் கவுன்சிலின் 44 பிரிவுகளும் இருந்தன.
இது அமெரிக்காவில் உள்ள இந்துக்கள் தொடர்பான பிரச்சினைகளுடன் மட்டும் நின்றுவிடாமல், இந்திய அரசியலில் தீவிரமாகப் பங்கேற்றது. ஒரு வெளிநாட்டவர் தனது தாய்நாட்டின் அரசியலில் ஏன் தீவிரமாகப் பங்கேற்பார் என்பதைப் புரிந்துகொள்ள, அரசியல் அறிஞர் பெனடிக்ட் ஆண்டர்சன் கூறிய “நீண்ட தூர தேசியவாதம்“ என்ற பதம் நமக்குப் புரிந்து கொள்ள உதவும்.
புலம்பெயர்வின் குற்ற உணர்வும், வெளிநாட்டவர் மீதான பதற்றமும் சேர்ந்து, ஒரு புலம்பெயர்ந்தவரை “அவர் அதன் நீதி அமைப்புக்குப் பதிலளிக்க வேண்டியவர் அல்ல” என்று அந்த நாட்டில் அரசியல் செய்யத் தள்ளுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதைப் பற்றித் தனது புத்தகமான “The Spectre of Comparisoners: Nationalism, South East Asia and the World” இல் பிரதிபலிக்கும் ஆண்டர்சன், நீண்ட தூர தேசியவாதம் “எதிர்காலத்தின் அச்சுறுத்தும் அறிகுறி” என்று எச்சரித்துள்ளார்.
கோவிட் நிதியிலும் மானியம் பெற்ற சங்பரிவார் அமைப்புகள்
அல் ஜசீராவில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஐந்து இந்துத்துவ குழுக்கள் அமெரிக்கச் சிறு வணிக நிர்வாகத்தால் விநியோகிக்கப்பட்ட கூட்டாட்சி கோவிட் நிவாரண நிதியிலிருந்து குறைந்தது $833,000 கடன் உள்ளிட்ட மானியங்களைப் பெற்றதாக வெளியிட்டுள்ளது.
சேவா இன்டர்நேஷனல் ஆர்.எஸ்.எஸ்சின் சேவா பாரதியின் வெளிநாட்டு சேவைப் பிரிவு, வி.எச்.பி.ஏ.வில் வித்யாலயா அறக்கட்டளை (வி.எச்.பி நடத்தும் திட்டம்), இந்துத்துவ எழுத்தாளர் ராஜீவ் மல்ஹோத்ரா தலைமையிலான இன்ஃபினிட்டி அறக்கட்டளை மற்றும் வாஷிங்டன் டி.சி.யைத் தளமாகக் கொண்ட குழுவான இந்து அமெரிக்க அறக்கட்டளை (எச்.ஏ.எஃப்) ஆகிய ஐந்து அமைப்புகள் சங்க பரிவாரத்துடன் தொடர்பு கொண்டவைகளாகும்.
ஆக மதவெறி கலவரங்களுக்கும், அரசியல் நிலவரங்களைத் தனக்கு ஏற்ற முறையில் மாற்றுவதற்கும் வெளிநாட்டு நிதி அதுவும் கிறிஸ்தவ நாடுகளின் வசூலிக்கப்படும் நிதி, இஸ்லாமிய நாடுகளில் வசூலிக்கப்படும் நிதி பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
மறுபுறத்திலோ தங்களது உற்பத்திக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராடும் விவசாயிகள், கல்விக்கு நிதி கேட்டுப் போராடும் மாணவர்கள், எதிர்க்கட்சிகளோ அல்லது முற்போக்கு ஜனநாயக இடதுசாரி கட்சியினர் ஒன்றிய ஆட்சியை எதிர்த்துப் போராடினால் வெளிநாட்டுச் சதி என்று அவர்களால் சபிக்க முடிகிறது. வெளியில் இருந்து அது தூண்டப்படுவதாகச் செய்திகளைப் பரப்பவும் முடிகிறது.பெரும் நிறுவனங்களின் கொள்ளையே கொள்கையாகிப் போன உலக மயம் அதற்கு ஒத்திசைவாக ஆடும் அமெரிக்கா என அனைத்திலும் சுரண்டல் அரசியல் வியாபித்திருக்கிறது. இதனை எதிர்த்து முறியடிக்க நீண்ட கால போராட்டத்திற்குத் தயாராக வேண்டும்.