நேரடியாகவும், மறைபொருளாகவும், சொற்களாலும், செயல்களாலும் நுட்பமான தாக்குதல் தொடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.
இந்த நாட்டில் சிறுபான்மையினர், இறை மறுப்பாளர்கள், சாதிய படிநிலைகளை எதிர்ப்பவர்கள், சுரண்டலை ஒழிக்க செயல்படுபவர்கள், சுற்றுச்சூழலியலாளர்கள், அறிவியலை மட்டுமே முன்வைப்பவர்கள், ஆட்சேபனை குரல் எழுப்புபவர்கள் எல்லோர் மீதும் இந்தத் தாக்குதல் நடந்து வருகிறது.
எந்தப் பக்கம் இருந்து தாக்குதல் வரும்? எதனை கையில் எடுப்பார்கள்? சொல்லப்படும் கருத்தை சிதைத்து, திரித்து சொன்ன நோக்கத்துக்கே நேர்மாறான அர்த்தம் கொண்டதாக எவ்வாறு மாற்றுவார்கள்? என்று எளிதில் புரிந்து கொள்ள இயலாது.
ஒரு பக்கம் அது மேட்டிமைத்தனம் கொண்டதாக இருக்கும். வேறொரு வழியில் மரபுகளின் பெயரால் இருக்கும். வாயடைப்பதற்கான கீழ்த்தரமான தாக்குதலாகவும் இருக்கும்.
சொல்லும் பொய்களை எல்லாம் நியாயப்படுத்துவதற்கு, செயற்கை நுண்ணறிவு வரை அதி நவீன சாதனங்களை பயன்படுத்துவார்கள்.
ஒரே விஷயத்தை தனக்கு வேண்டியவர் செய்தால் அதற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டாடுவார்கள். தாக்கப்பட வேண்டியவர் என்று முடிவெடுத்து விட்டால், கூட்டமாக சேர்ந்து தமக்கான வேலைகளை பகிர்வு செய்து கொண்டு சல்லி சல்லியாக பிரித்தெறிவார்கள்.
பிக் பாஸ் என்ற பிரபலமான நிகழ்ச்சியில் நடப்பதை எல்லாம் யாரால் சகித்துக் கொள்ள முடியும்? நமது இயல்பான வாழ்க்கைக்கும் அங்கு நடப்பவற்றுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? அதை நடத்துபவர்களுக்கு பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. அதனை முன்னிறுத்தி அந்த வீட்டுக்குள் வாழும் மனிதர்களை மரப்பாவைகள் போல தமது விருப்பத்திற்கு ஏற்ப விளையாட வைக்கிறார்கள்.
ஆனால் அது மிகப் பலரால் பார்க்கப்படுகிறது. அதைத் தொகுத்து வழங்குவதற்கு கமலஹாசனும் வருகிறார். அது சரியாக இல்லை என்று சொல்பவர்களுக்கு பத்தாம் பசலி என்று பட்டம் சூட்டப்படுகிறது.
ஒரு திரைப்பட விழாவில் மன்சூர் அலிகான் எனும் நடிகர், தான் நடித்த படத்தில் எதிர்பார்த்தவாறு பெண் நடிகர்களுடனான காட்சிகள் அமைக்கப்படவில்லை என்று பேசினார்.
வணிக மயமாக்கப்பட்டுவிட்ட, கார்ப்பரேட் நிதி ஆதரவுடன் நடத்தப்படுகிற, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிற இத்தகைய மேடை நிகழ்ச்சிகளிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் அதேபோன்று பேசுவது இப்போது சாதாரணமாகப் போய்விட்டது. என்றாலும், அதனால் ஒரு பெண் பாதிக்கப்பட்டதாக உணர்ந்தால் அவருக்கு நீதி கோர அனைத்து உரிமைகளும் உண்டு.
வேறு நிகழ்ச்சிகளிலும் இவ்வாறு பேசப்படுகிறது என்பதாலேயே, அவரும் அவ்வாறே பேசலாம் என்று உடன்பட முடியாது. பெண்களையும், ஆண் பெண் உறவுகளையும் மலினப்படுத்தி, கொச்சையாகப் பேசும் எந்த ஒரு நிகழ்வும் கண்டிக்கப்பட வேண்டியதே ஆகும்.
மேடையில் பேசும்போதே அவர் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும். இது போல பேசுபவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கும். ஆனால் அந்தப் படத்தின் இயக்குனரும் படத்தில் நடித்தவர்களும் அவர் பேசியதை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சி முடிந்த பின்பு அதனை கண்டிப்பதாக அறிக்கை விடுகின்றனர்.
தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான திருமதி குஷ்பு அவர்கள், மன்சூர் அலிகான் பேசிய கருத்துகள் குறித்து ஆணையத்தின் மூத்த உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளதாகவும், ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளார். இதுபோன்ற இழிவான சிந்தனையுடன் உள்ள யாரும் தப்பிக்க முடியாது. இவரைப் போன்றவர்கள் சமூகத்தில் பெண்கள் குறித்து இழிவான கருத்துகளைக் கூறி வருகின்றனர் என காட்டமாக பதிவிட்டு இருந்தார்.
அதைப்போலவே, தேசிய மகளிர் ஆணையம் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில், நடிகை திரிஷாவை பற்றி நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது குறித்து கவலை தெரிவித்துள்ளது. “இந்த விஷயத்தில் நாங்கள் தானாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களைப் பயன்படுத்துமாறு டிஜிபிக்கு உத்தரவிடுகிறோம்” என்று பதிவிட்டுள்ளது.
அதன்படி நடவடிக்கை எடுக்கப்படுவது நல்லது.
அதே நேரத்தில் இதேபோன்று இன்னொரு படத்திற்கான அறிமுக விழாவில், உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் அவர்கள் தான் நடித்த ஒரு படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சியில் தனக்கு ஒரே ஒரு மூவ்மெண்டோடு முடித்து விட்டதாகவும், அந்தப் பெண் நடிகருடன் தான் பேசக்கூட இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். அப்போதும் எல்லோரும் சிரித்து மகிழ்ந்து அதை வரவேற்றனர்.
திரைப்பட ஆண், பெண் நடிகர்கள் பற்றி நடிகரும் பத்திரிகையாளருமான ஒருவர் மிக மோசமான, இழிவான, கண்ணியக் குறைவான பதிவுகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.
இவர்களைப் பற்றி எல்லாம் மகளிர் ஆணையம் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? மகளிர் ஆணைய உறுப்பினர் அவர்கள் ஏன் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை?
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்ததற்காக பல நூறு இஸ்லாமிய மாணவிகள் தேர்வு எழுதவே அனுமதிக்கப்படாமல் அவருடைய எதிர்காலமே சீரழிக்கப்பட்டது. அந்த மாணவிகளைச் சூழ்ந்து கொண்டு கிண்டலும் கேலியும் பேசி பெரும் அச்சுறுத்தலை ஒரு கூட்டமே செய்தது. இவையெல்லாம் காணொளிகளாகவே வந்தன.
மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக தெருக்களில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டனர். இதுபோல இன்னும் பல சம்பவங்கள் நடந்திருப்பதாக அந்த மாநில முதல்வரே சொன்னார். இவற்றை எல்லாம் ஏன் மகளிர் ஆணையம் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை.
இப்போது ஆணைய உறுப்பினர் பொங்கி எழுவதும், உடனே ஆணையம் காவல்துறைக்கு உத்தரவு விடுவதும், சம்பந்தப்பட்ட நடிகரின் பெயர் மன்சூர் அலிகான் என்று இருப்பதால் தானா என சந்தேகம் எழுகிறது.
திருமதி குஷ்பூ அவர்கள், அவர் தற்போதுள்ள கட்சியில் சேர்வதற்கு முன்னால், சொன்ன ஒரு கருத்துக்காக அவர் மீது இந்துத்துவ மதவெறி சக்திகள் தொடுத்த துவேஷக் கணைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஏராளமான நீதிமன்றங்களில் அவர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. காரணம் அவரும் பிறப்பால் ஒரு இஸ்லாமியர். அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் முற்போக்கு சக்திகள்தான் அவரை ஆதரித்து நின்றன.
திரைப்படங்களில் கொடூரமான வில்லன்களுக்கும் அவரது அடியாட்களுக்கும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ பெயர்கள் வைக்கப்படுவது தற்செயலானது அல்ல.
வடமாநிலங்களில், தனது மதத்தை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய எந்த ஒரு செயலையும் செய்ய முடியாத அச்சுறுத்தலுக்கு இன்றைக்கு முஸ்லிம்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். தமது பெயரை கூட வெளிப்படையாக சொல்வதை தவிர்க்கிறார்கள்.
தாக்குதல்களுக்கு பயந்து, இந்துக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் முதலீடு செய்ய மக்கள் விரும்பவில்லை. சந்தைகளில் பொருட்கள் வாங்க செல்வதில்லை
கடைக்காரர்கள் முஸ்லீம் பெயர்கள் அல்லது உருது எழுத்துகள் கொண்ட பலகைகளைப் பயன்படுத்துவதில்லை. இந்துக்கள் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை கட்டுமானம் இதர சிறு சிறு வேலைகளைச் செய்யும் முஸ்லீம் அங்கு செல்வதைக் குறைத்துள்ளனர்.
துணிச்சலான பத்திரிகையாளர் ஸ்வாதி சதுர்வேதி, “ஐ ஆம் எ ட்ரோல்” என்ற தனது நூலில், பாஜகவின் சமூக ஊடக உலகின் இருண்ட இடைவெளிகளை நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறார். இதன் போலிச் செய்திகளைத் தூண்டுவது, வெறுப்பைத் தூண்டுவது, மற்ற மதத்தினர் மீது சந்தேகத்தை வலுவாக விதைப்பது, மதவெறியை ஊட்டுவது, வன்முறையைத் தூண்டுவது மற்றும் ஜனநாயகத்துக்கு குழிபறிப்பது ஆகியவற்றில் ஆர்எஸ்எஸ்- பாஜகவின் தொழில்நுட்பப் படை வெறிகொண்டு இயங்குகிறது.
நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலிலும், இப்போது நடக்கும் ஐந்து மாநில தேர்தல்களிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பொய்ச் செய்திகள் ஏராளமாக பரப்பப்பட்டு வருகின்றன. ‘வட மாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர் என்று சொல்லி ஆயிரக்கணக்கானவர்களை அச்சமுற்று சொந்த மாநிலத்துக்கு திரும்ப வைத்த அந்த ஒரு பொய்ச் செய்தி, அவர்களது சமூக ஊடகத்தின் வலிமை என்னவென்று நமக்கு தெளிவுபடுத்துகிறது.
தனது பத்தாண்டு ஆட்சியில் சொல்வதற்குரிய சாதனை எதுவும் ஆர்எஸ்எஸ்- பாஜக விடம் இல்லை. மக்களை பிளவுபடுத்தி நிறுத்துவதற்கு மதவெறி வெறுப்பு அரசியலே அதற்கு ஒரே ஆயுதமாகிறது. கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் தனது அதிகாரத்தால் பெரிதாக்கி, அதையே விவாதப் பொருளாக மாற்றுகிறது. எதிர் குரல்களை நசுக்குகிறது. கோடிக்கணக்கானவர்களை சென்றடையும் வண்ணம் நிமிடத்துக்கு ஒரு பொய் செய்தியை அந்தந்த மாநிலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப தயாரித்து பரப்புகிறது.
தமிழ்நாட்டில் அதற்கு மிகப்பெரும் ஆதரவு கிடைக்கவில்லை. தமிழர்களின் நல்லெண்ணம், நியாய உணர்வு, மனிதநேயம் ஆகியவற்றையே தனது நரித் தந்திரத்தின் மூலம் பலவீனங்களாக மாற்றி, வெறுப்பு அரசியலை திணிக்க வன்மத்தோடு தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
மன்சூர் அலிகான் பேச்சு அதற்கு இன்னொரு வாய்ப்பு!
கட்டுரையாளர்:
டி.எம்.மூர்த்தி
murthi.aituc@gmail.com