மாநில செயலாளர்

நாகை நோக்கி – 2

கட்சிக் கடிதம்

போர்க்குணமிக்க தோழர்களே!

1936 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நமது அகில இந்திய விவசாயிகள் சங்கத்திற்கு அனைவரும் சேர்ந்து சங்கக் கொடியினை உருவாக்கினார்கள்.
அத்தகைய கொடி என்பது எதுவாக இருக்குமென ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம் இல்லை.

ஆம் செங்கொடிதான் சங்கத்தின் கொடி என ஒரு மனதாக முடிவு செய்தனர்.
அனைவராலும் ஏற்கப்பட்ட அம்மகத்தான செங்கொடி, ஒரு மாநிலத்தில், ஒரு மாவட்டத்தில் என்று சுருக்கிக் கொள்ளாமல் நாடு முழுவதும் பற்றிப் பரவியது. நாடெங்கும் பட்டொளி வீசிப் பறந்தது.

எக்கொடியைக் கண்டும் மிரளாதவர்கள் எந்நிறம் கண்டும் கலங்காதவர்கள் சிவப்புக் கொடியைக் கண்டு மிரள்கின்றார்கள். அன்று முதல் இன்று வரை மிரள்வது யார்?
ஏழை எளிய மக்களா? சிறு, குறு நடுத்தர விவசாயிகளா? விவசாயத் தொழிலாளர்களா? இல்லை! மாறாக வாராது வந்த மாமணியே, மாணிக்கமே வா வா என வரவேற்று மகிழ்கிறார்கள்.

வெள்ளை ஆட்சியர் மிரண்டனர், ஜமீன்தார்கள் மிரண்டனர், பெரும் பண்ணையார்கள்(நிலப்பிரபுக்கள்) அரண்டனர் மடாதிபதிகள் மிரண்டனர்! ஏன்?
இவர்களிடம்தான் நாட்டில் உள்ள நிலங்கள் எல்லாம் இருந்தன. நஞ்சை என்றாலும் அது புஞ்சை நிலமாயினும் அவர்களுக்கே சொந்தம்!

அரசு புறம்போக்கா? ஆற்றுப்படுக்கையா? மேய்ச்சல் புறம்போக்கா? குளத்துப் புறம்போக்கா? சாலைப் புறம்போக்கா? அவைகள் எவையாயினும் அவர்களுக்கே சொந்தம்! ஏன் சுடுகாடு கூட அவர்களுக்குத்தான் சொந்தம். நாடு முழுமைக்கும் இந்நிலையே!
இந்நிலையில் வாழும் மக்கள் எவராயினும் இவர்களுக்கு அடிமைகள்.
இவர்களில் முற்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் பண்ணையார்களுக்கு மேனேஜராக, மணியக்காரராக, கணக்கு எழுதுபராக, ஊர் கர்ணமாக, கிராம முனிசிப்பாக(பட்டாமணியார்) போன்ற பணிகளில் அமர்த்திக் கொள்வார்கள்.

இவர்கள் சிறு எண்ணிக்கைதான் என்றாலும் இவர்கள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை.
மற்றவர்கள் குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மக்கள் எனப் பெரும்பான்மையாக உள்ளனர்.

இவர்களில் சிறு, குறு விவசாயிகள் குத்தகை சாகுபடியாளர்கள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள். இவர்களின் எண்ணிக்கை பெரிது! இவர்கள் அனைவரும் உழைப்பாளி மக்கள்தான்! ஐயமில்லை!

இவர்கள் தாங்கள் அனைவரும் உழைப்பாளி மக்கள், நம்மை ஆதிக்கக்காரர்கள் சுரண்டுகிறார்கள், அவர்களுக்கு ஆளும் வர்க்கம் சலாம் போடுகின்றது! இவர்களை ஒரு சேர ஒழித்துக் கட்ட நாம் ஒன்றிணைய வேண்டும்! அமைப்பாய் அணி திரள வேண்டும் என்ற சரியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் நந்தி போல் நின்று நகர மறுத்து தடுத்து நிறுத்துவது எது?

இன்னும் அது தொடர்கின்றது. அவ்வளவு சக்தி வாய்ந்தது எது? சகித்துக்கொள்ள முடியாத, அருவருக்கத்தக்க சாதிதான் அது.

அத்தகைய சாதியைப் பயன்படுத்தி உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தித் தங்களை நிலை நிறுத்திக் கொண்டார்கள் ஆதிக்க சக்திகள்.

ஆதிக்கக் கூட்டத்தின் சதிவலையில் இருந்து மக்களை விடுவிப்பது என்ன அவ்வளவு சுலபமான பணியா?

அவ்வளவு எளிதல்ல, கடினமான மிகக் கடினமான பணிகள்தான்.
அத்தகைய கடினமான பணிகளைத்தான் நம் முன்னோர்கள் மேற்கொண்டார்கள்.
அவர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்கள். சுயநலம் என்றால் அவர்களுக்கு என்னவென்று தெரியாது.

அவர்களின் இரு கண்களுக்கும் தெரிந்தது நாட்டின் விடுதலை. அத்தகைய விடுதலைக்காக நாட்டில் உள்ள மக்களை எல்லாம் அமைப்பாய் அணி திரட்ட வேண்டும்.
நகர்ப்புறங்களில் உள்ள தொழிலாளர்களை அணி திரட்ட வேண்டும். அவர்கள் மட்டும் போதுமா? கிராமப்புற விவசாயிகளை, பாட்டாளி வர்க்கத்தின் நம்பகமான தோழர் விவசாயத் தொழிலாளர்களை அணி திரட்டி வேண்டும்.

இத்தகைய பணிகள் குறித்துப் பேசுவதும் எழுதுவதும் அன்றும் சரி இன்றும் சரி சுலபமானது!
ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவது, செயல்படுத்துவது எங்கனம் என்றால் இப்பணியில் ஈடுபடுபவர்கள் எவராக இருப்பினும் அவர்களுக்கு இரு உழைப்புகள் தேவை!
ஒன்று மூளை உழைப்பு மற்றொன்று உடல் உழைப்பு!

இவையிரண்டில் ஒன்று பழுதாயினும் பயனில்லை. இதனைத்தான் நம் எல்லோருக்கும் எளிதில் புரியும் படியாக, ‘‘தத்துவமில்லா நடைமுறை குருட்டுத்தனமானது. நடைமுறையில்லாத் தத்துவம் மலட்டுத்தனமானது’’ என மார்க்சியம் போதிக்கின்றது. இதனைச் செயல்படுத்திட நமது தலைவர்கள் தத்துவம் பயின்றார்கள். மார்க்சியம் எனும் மகத்தான, வெல்வதற்கரிய தத்துவத்தைக் கசடகக் கற்றுத் தேர்ந்தார்கள்.
தேர்ந்தது மட்டுமல்ல, அதனைச் செயல்படுத்த, மக்களிடம் செல்லுங்கள், மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள் என மாமேதை லெனின் கூறியதை நமது மதிப்புமிக்க முன்னோர்கள் மேற்கொண்டார்கள்.

கிராமங்களை நோக்கி அவர்களின் பாதங்கள் அச்சமின்றி, நம்பிக்கையோடு நடைபோட்டது.
சாதியால் பிளவுபட்டு நின்ற அம்மக்களைச் சந்தித்தார்கள். ஒரு நாளா? இரு நாளா? ஒரு இரவா ஒரு பகலா?

இரவையும் பகலையும் ஒன்றாக்கினார்கள். பசி, பட்டினி குறித்துக் கவலைப்படவில்லை! கருமமே கண்ணாயினர்.

அவர்களிடத்தில் அமர்ந்து, அவர்கள் கூறியதை அலுப்பு, சலிப்பின்றிச் செவிமடுத்துக் கேட்டார்கள்.

தங்களின் துன்பங்களை, துயரங்களை அவர்களின் மொழியில் சொன்னார்கள். கேட்பவர்கள் அவர்கள் மொழியைக் கண்டு முகம் சுளிக்கவில்லை. மாறாக மதிப்பளித்தார்கள். இவர்கள் அளித்த மதிப்பு அவர்களுக்கு நம்பிக்கையூட்டியது. தலைவர்கள் பால் மதிப்பு ஏற்பட்டது.
தலைவர்கள் அம்மக்கள் மொழியில் உன் துன்பம் துயரம் சுரண்டல், அடக்குமுறை அனைத்தையும் எதிர்கொள்ள உங்களிடம் மகத்தான சக்தி இருக்கின்றது. அச்சக்தியை அறியா காரணத்தால் அல்லல்படுகின்றீர்கள். அச்சக்தியைப் பெற நீங்கள் ஒன்றுபட வேண்டும். உழைப்பாளி மக்கள் என்கிற முறையில், சுரண்டப்படும் மக்கள் என்கிற முறையில், அடக்குமுறைக்கு ஆளானவர்கள் என்ற முறையில் ஒன்று படுங்கள், ஓர் அணியாகத் திரளுங்கள், அமைப்பாகத் திரளுங்கள். சங்கம் காணுங்கள். ‘தங்கம் சாதிக்காததைச் சங்கம் சாதிக்கும்’ என்கிற தத்துவத்தை எளிய முறையில் எடுத்துரைத்தார்கள்.

அம்மக்களுக்குப் புதியதோர் வெளிச்சம் கிடைத்தது, புதிய பாதை தெரிந்தது.
ஊர்தோறும் சங்கம் உருவானது. கிராமங்கள் தோறும் காவல் தெய்வமாக செங்கொடி பறந்தது.

இவ்வாறு அணு அணுவாக உருவான சங்கம், மாபெரும் சங்கமாக உருவெடுத்தது.
அவ்வாறு முடிவெடுத்தது ஆலமரமாக விழுது விட்டு அடர்ந்து, படர்ந்து இருக்கும் மாபெரும் இயக்கமான அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மகத்தான மாநாடு தேசிய 30வது மாநாடு நாகை நகரில் கோலாகலமாக ஏப்ரல் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறவுள்ளது.

மாநாட்டின் நிறைவு நாளான ஏப்ரல் 17ஆம் நாள் மகத்தான பேரணி மாபெரும் பேரணி, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்குபெறும் பேரணி பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.

இம்மகத்தான மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட நாகை நகரில் கடந்த 6.3.2025 அன்று வரவேற்புக் குழு அமைப்பதற்கான கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதுக்கோட்டை, தஞ்சை தெற்கு, தஞ்சை வடக்கு, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் என மிகுந்த ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் கலந்து கொண்டு நல்ல பல கருத்துகளை எடுத்துக் கூறி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட 151 தோழர்களைக் கொண்ட வரவேற்புக் குழு அமைத்து, நிர்வாகிகளையும் தேர்வு செய்துள்ளனர்.
மாநாட்டுப் பணிகள் தொடங்கி விட்டன. சுவர் விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மற்றவை அடுத்த வாரம் சந்திப்போம். வணக்கம்

தோழமைமிக்க,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button