
போர்க்குணமிக்க தோழர்களே!
மரம் ஆடாமல், அசையாமல் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கின்றது, விரும்புகின்றது.
ஆனால், காற்று அதனை விடுவதாக இல்லை. காற்று மெல்லமாக, சில நேரங்களில் வேகமாக, சில நேரங்களில் மிக வேகமாக, இன்னும் சில சில நேரங்களில் மிக வேகமாக, இன்னும் சில சில நேரங்களில் புயலாக அது மாறி சுழன்று சுழன்று வீசுகின்றபோது மரத்தால் என்ன செய்ய முடியும்! அதுவும் ஆடித்தானே ஆகவேண்டும் – அசைந்தாடித்தானே செய்யும்!
அதுபோன்று மகத்தான, புரட்சிகரமான இயக்கத்தில் இருக்கும் நாம், அமைதியாக இருக்கலாம். ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று நாம் விரும்பினாலும் அரசியல் காற்று நம்மை அமைதியாக இருக்க அனுமதிக்காது.
நமது நாட்டில் நடந்துகொண்டிருக்கும் அரசியல் காற்று, குழந்தைகளைக் கூடப் போராட வைக்கின்றது.
மாணவர்களை, இளைஞர்களை, பெண்களை, முதியவர்களைக் கூடப் போராட வைக்கின்றது.
இந்தியா என்கிற பெரு நாட்டில் அன்று முப்பது கோடியாக இருந்தாலும் இன்று அது நூற்றி நாற்பது கோடியாக இருந்தாலும் இந்து, இஸ்லாம், கிறித்தவம், சீக்கியம், பவுத்தம் எனப் பல மதங்கள் இருந்தாலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதிகள் இருந்தாலும் இவைகளில் பெரும்பான்மையான மக்கள் விவசாயம் சார்ந்த மக்கள் கிராமப் புற விவசாயப் பெருங்குடி மக்களே!
‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.’ என வான் புகழ் கொண்ட வள்ளுவப் பெருந்தகை போற்றிப் புகழ்ந்த பெருமக்கள் விவசாயிகள் ஆவர்.
அத்தகைய மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களுக்காக மட்டுமல்ல தங்களின் கோரிக்கைகளுக்காக மட்டுமல்ல, அதனுடன் சேர்ந்து நாட்டின் விடுதலையும் முக்கியமெனக் கருதி, அம்மக்களை அமைப்புரீதியாக அணிதிரட்டாமல் நாட்டின் விடுதலை பெற இயலாது எனக் கருதிய நமது முன்னோர்கள் அகில இந்திய அளவில் விவசாயிகள் சங்கத்தை 1936 ஆம் ஆண்டு, உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தொடங்கினார்கள்.
ஜமீன்தார்களுக்கு எதிராக பீகார் மாகாணத்தில் விவசாயிகள் கண்ட புகழ்மிக்க தலைவர் சகஜானந்த சரஸ்வதி அவர்களைத் தலைவராகவும் என்.ஜி.ரங்கா அவர்களை பொதுச் செயலாளராகவும் கொண்ட அகில இந்திய விவசாயிகள் சங்கம் தொடங்கப் பெற்றது.
விடுதலைப் போர்க்களத்தில் மாவீரனாகத் திகழ்ந்த சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் மிக நெருங்கிய நண்பர் சகஜானந்த சரஸ்வதி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மட்டுமன்றிப் புகழ்மிக்கத் தலைவர்களான ஜெயப் பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா, இஸட் ஏ அகமது, ராகுல் சாங்கிருத்யாயன், சுந்தரய்யா போன்ற மகத்தான தலைவர்கள் உருவாக்கிச் செயல்பட்ட அமைப்பே நமது அகில இந்திய விவசாயிகள் சங்கம்.
ஜமீன்தார் முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். நிலச் சீர்த்திருத்தம் வேண்டும், உழுபவனுக்கு நிலம் சொந்தமாக்கப் பட வேண்டும், ஊரகக் கடன்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற முழக்கங்களுடன், நாடு விடுதலை பெற வேண்டும், வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனச் சுதந்திர வேட்கையுடன் பிறந்ததுதான் நமது அகில இந்திய விவசாயிகள் சங்கம்.
அத்தகைய மகத்தான சங்கத்தின் அகில இந்திய 30வது மாநாடு தமிழ்நாட்டில், நாகப்பட்டினத்தில் வரும் ஆகஸ்ட் திங்கள் 15, 16, 17 ஆகிய மூன்று தினங்கள் சீரோடும் சிறப்போடும் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும், காஷ்மீர் முதல் குமரி வரை அனைத்து மாநிலங்களிலும் வட்டார, மாவட்ட, மாநில மாநாடு நடைபெற்று முடிந்து, அம்மாநாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 700க்கும் மேற்பட்ட பிரதிநிதித் தோழர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி, வங்கம், குஜராத்தி, ஒடியா, போஜ்புரி எனத் தங்களின் தாய்மொழியாகக் கொண்டவர்களோடு இந்தி பேசுபவர்களும் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்கள்.
சுருங்கக் கூறின் இந்தியா, நாகையில் கூட இருக்கின்றது. மூன்று தினங்களும் இந்திய மொழிகள் அனைத்தையும் கொண்ட மக்கள் ஒரு சேர கூட இருக்கின்றார்கள். வர்க்க ஒற்றுமையை மதம், சாதி, மொழிகள் பிளவுபடுத்திட முடியாது.
ஆம்! நம் நாட்டின் விவசாய வர்க்கம் அணி திரள இருக்கின்றது. அத்தகையவர்கள் வெறும் விவசாயிகள் மட்டுமல்ல; களம் கண்டவர்கள்.
பொருளாதாரச் சுண்டலுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியவர்கள். தாங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயம் வேண்டும் எனக் கோரி போராடி வருபவர்கள்.
இன்றல்ல, நம் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தி, நம் மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரிந்த வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, ஊரான், ஊரான் தோட்டத்திலே, ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா, காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லி காகிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்” என்று அன்று முழங்கியவர்கள். இன்றும் அம்முழக்கம் நாடு முழுதும் எதிரொலித்துக் கொண்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பட்டியல் இன மக்கள் மீது தொடுக்கப்பட்ட சமூக அடக்குமுறை கொடுமைகளுக்கு எதிராகக் களம் கொண்டு வெற்றி வாகை சூடிய பெருமக்களின் வழி வந்தவர்கள் சங்கமிக்கின்றார்கள் நாகையில்.
வற்றாத ஜீவ நதியாம் காவிரி, அதன் கிளை நதிகள் அனைத்தும் சங்கமிக்கும், வங்கக் கடல் கொண்ட நாகையில், நமது சங்கத்தின் அகில இந்திய மாநாடு.
வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், வெள்ளையர்களால் இயக்கப்பட்ட ஸ்டீல் ரோலிங் மில் தொழிலாளர்கள் போராட்டம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
அத்தகைய தொழிலாளர்கள் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, வழிகாட்டிய மாபெரும் தலைவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் ஆவார்.
அத்தகைய போராட்டம்தான் தஞ்சை தரணியெங்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை அமைப்பு ரீதியாக அணி திரள விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.
சங்கம் தொடங்கப்படுவதற்கு முன்பே, விவசாயிகள் பிரச்சனைகள் குறித்தும், அவர்களின் துன்ப துயரங்கள் குறித்தும், சிறு பிரசுரங்களை வெளியிட்ட ‘தாரா’ அச்சகம் இன்றும் நாகையில் இயங்கிக் கொண்டுள்ளது.
மணலூர் மணியம்மை ஆண் உடை தரித்து, விவசாயிகள் சங்கம் கண்டவர்.
இங்கே நாகூர் ஆண்டவரும், வேளாங்கண்ணி மாதாவும், எட்டுக்குடி முருகன் கோவிலும் அமைந்துள்ளது மட்டுமல்ல, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்வதும் நாகைதான்.
நாட்டின் விடுதலைப் போராட்டத்தில், மிக முக்கியப் போராட்டமான உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதும் நாகை மாவட்டத்திலுள்ள வேதாரண்யம்தான்.
1952 முதல் பொதுத் தேர்தலில் நாகை சட்டமன்ற இரட்டை உறுப்பினர் தொகுதியில் சிவராஜ், எஸ்.வடிவேல் ஆகிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல்களில் அனந்த நம்பியார், எம்.காத்தமுத்து, எஸ்.ஜி. முருகையன், கே.முருகையன், எம்.செல்வராசு, வை.செல்வராஜ் எனத் தொடர்ந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களைத் தேர்ந்தெடுத்ததும் நாகை தொகுதிதான்.
விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகிய இரு பெரும் வர்க்க அமைப்புகள் மிகுந்த பலத்துடன் அமைப்பு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இயங்கக் கூடிய, செயல்படக்கூடிய அமைப்புகளாகச் செயல்பட்டு வருவதும் நாகையை உள்ளடக்கிய ஒன்றுபட்டை தஞ்சை தரணியாகும்.
சாட்டையடிக்கும், சாணிப் பாலுக்கும் சாவு மணி அடித்ததும் இங்கேதான்.
பி.எஸ்.ஆர், மணலி, காத்தமுத்து, சிவராமன், இரணியன், களப்பால் குப்பு, ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், கோட்டூர் ராசு, சிவகுருநாதன் என நூற்றுக்கணக்கான தியாகிகளைத் தந்ததும் இம்மண்தான்.
அத்தகைய தியாக பூமியில்தான் 1964 க்குப் பின்னர், 1968இல் உலகம் கண்டிராத, கொடிய கொடுமை கீழ்வெண்மணியில் நடைபெற்றது. குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் என 44 உழைக்கும் மக்களைக் குடிசையில் அடைத்து தீயிட்டுக் கொளுத்திய கொடூரமும் இங்கேதான் நிகழ்ந்தது.
இத்தகைய தியாக பூமியில், நமது அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின், 30 வது தேசிய மாநாடு நடைபெற உள்ளது.
நமது பணிகள் என்ன?
அடுத்த வாரம் சந்திப்போம்!
வணக்கம்