தமிழ்நாடு கேட்டதும், மோடி கொடுத்ததும் : பேரிடரில் அரசியல் செய்யும் பொய்யர்கள்!
க.இப்ராகிம்
உழைத்தவனுக்கு ஊதியம் தர மறுப்பதும், குறைந்த ஊதியத்தை கொடுத்து அனுப்புவதுமே முதலாளித்துவ மனப்பாங்கு, இதை அப்பட்டமாக செயல்படுத்தி வருகிறது மோடி அரசு. 2014 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசுக்கு நேரடி வரி வருவாயாக 5.16 லட்சம் கோடி ரூபாயை தனது பங்களிப்பாக தமிழ்நாடு செலுத்தி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு பகிரப்பட்டது என்னவோ வெறும் 2.08 கோடி மட்டுமே. 2023 ஆம் ஆண்டு நவம்பர் வரை உள்ள காலகட்டத்தில் 23,661 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஜிஎஸ்டி பங்களிப்பாக செலுத்தியிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு வெறும் பாஜக அரசு 2,976 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதே சமயம் பாஜக அரசு ஆளும் உத்தரப்பிரதேசத்திற்கு 13,089 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த மாநிலத்தினுடைய பங்களிப்பு என்னவோ வெறும் 18,880 கோடி மட்டுமே. நாம் இவ்வாறு கொடுப்பதை குறை கூறவில்லை, அதே சமயம் ஒரு மாநிலத்திடம் இருந்து அதிகமாக பறித்துக் கொண்டு அவற்றை சரியாக பகிர மறுப்பதையே குற்றம் சாட்டுகிறோம்.
தமிழ்நாடு ஒன்றிய அரசிற்கு அளிக்கும் ஜிஎஸ்டி தொகையிலிருந்து, ஒரு ரூபாய்க்கு 29 காசுகள் மட்டுமே திரும்ப வருகிறது. அதே சமயம் உத்தரப்பிரதேசத்திற்கு ஒரு ரூபாய்க்கு 2.73 ரூபாய் திரும்பச் செல்கிறது. இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது? தமிழ்நாட்டு மக்கள் தொகை, தேவை, திட்டங்களுக்கான செலவு ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொண்டு கணக்கிட்டு வழங்கினால் கூட ஓரளவுக்கு தொகையை திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு குறுகிய மனப்பான்மையோடு, மாநிலங்களைப் பிரித்துப் பார்ப்பதாலேயே தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது, வியாபாரிகள், வர்த்தகர்கள், தொழில் நிறுவனங்கள் என்று பல தரப்பினரும் நட்டத்தை சந்தித்தனர். மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.
இத்தகைய பாதிப்பை சீர் செய்ய தமிழ்நாடு அரசு 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரண தொகையாக 12,659 கோடி ரூபாயும் ஒதுக்கும்படி ஒன்றிய அரசிடம் கேட்டது. மேலும் அதற்குப் பிறகு காற்றின் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கொட்டி தீர்த்து வரலாறு காணாத கனமழை ஏற்படுத்திய மோசமான விளைவுகளை சரிகட்ட 2,000 கோடி ரூபாயும் என்று மொத்தமாக 21,692 கோடி ரூபாய் கோரப்பட்ட நிலையில் முதலில் 450 கோடியும், அதன் பிறகு 450 கோடி ரூபாயை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கி இருக்கிறது.
அதேநேரத்தில் தமிழ்நாடு அரசு பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 24.25 லட்சம் குடும்பங்களுக்கு 1,486 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. கொடுத்தது என்னவோ தமிழ்நாடு அரசு தான் என்றாலும், அதற்கு உரிமை கொண்டாட தனது படை பட்டாளங்களை ஏவி விட்டிருக்கிறது மோடி அரசு.
தமிழ்நாடு அரசு கொடுக்கும் பணம் அனைத்துமே மோடியின் பணம் தான் என்று பாஜகவினர் சொல்கின்றனர். கேட்ட நிதியை ஒதுக்காத இந்த மோடி அரசு, தமிழ்நாடு அரசு கருவூலத்தில் இருந்து கொடுத்த தொகையை தங்கள் பணம் என்று கொண்டாடுவது மோசடி அல்லவா.
பேரிடர் காலங்களில் மோடி அரசுதான் தமிழ்நாட்டை பாதுகாத்தது மோடி என்று கூறுகிறார்களே சரியா? என்பதைப் பார்ப்போம்.
2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பேரிடர் காலங்களில் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கேட்ட தொகை 1,27,655.80 ரூபாய். ஆனால் கிடைத்தது என்னவோ 5,884.49 கோடி மட்டும் தான். இது வெறும் 4.61% மட்டுமே.
தமிழ்நாட்டின் நலனில் எந்த அக்கறையும் கொள்ளாத இந்த மோடி அரசு, பேரிடரிலும் அரசியல் செய்ய முயற்சி செய்கிறது. இதற்கு ஊதுகுழலாக மாறி இருக்கிறது தமிழ்நாட்டின் முன்னணி பத்திரிக்கை ஒன்று. கருத்து சித்திரம் என்ற பெயரில் கேடுகெட்ட சித்திரம் வெளியிடப்படுகிறது. ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அமைச்சர் பேரிடர் நிதி கேட்பது பிச்சை அல்ல, அது உரிமை. அதே சமயம் அதை மறுப்பது கௌரவம், அல்ல அநீதி.
கட்டுரையாளர்:
க.இப்ராகிம்
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்