![](https://www.janasakthi.in/wp-content/uploads/2025/02/republic-1-780x470.jpg)
“இந்தியா 1950 ஜனவரி 26ம் தேதியிலிருந்து, மக்களால், மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தைக் கொண்டு இயங்கும் ஒரு ஜனநாயக நாடாக இருக்கும். அடுத்து அதன் ஜனநாயக அரசியல் சாசனம் என்னவாகும்? அதனை இந்தியாவால் பாதுகாக்குமா அல்லது மீண்டும் இழக்க நேரிடும்!” என்று 1949 நவம்பர் 25 அன்று அரசியலமைப்புச் சபையில் தனது கடைசி உரையின் போது பி.ஆர்.அம்பேத்கர் தனது அச்சத்தை வெளிப்படுத்தினார்.
நமது குடியரசின் 75வது ஆண்டு நிறைவோடு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்ட நூறாவது ஆண்டையும் நாம் கொண்டாடுகிறோம். இது ஆழ்ந்த சிந்தனைக்கான தருணம். இன்று, குடியரசை வரையறுக்கும் கோட்பாடுகளும், நம் அனைவரது எதிர்காலமும் கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் அரசியலமைப்பின் விழுமியங்களைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருந்து வருகிறது. மேலும் அது வரைவு செய்வதிலேயே குறிப்பிடத்தக்கப் பங்களிப்புச் செய்திருக்கிறது. அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் முன்வைத்த மதச்சார்பற்ற அரசு எனும் கோட்பாட்டை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக ஆதரித்து நிற்கிறது. “இந்து ராஜ்ஜியம் எனும் கருத்து நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும்” என்று அம்பேத்கர் எச்சரித்தார். அதே நேரத்தில், சோசலிசம் எங்கள் தொலைநோக்கு இலக்காக இருந்தது. இந்திய மக்களிடையே வருமானத்திலும், சொத்துக்களிலும் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க வேண்டும் என்ற அரசியல் சாசனத்தின் வழிகாட்டும் கோட்பாடு, சோஷலிச இலட்சியத்துக்கு இணங்கியதாகும். ஆகவே அதன் நோக்கம் அரசியல் சுதந்திரம் மட்டுமே அல்ல, பொருளாதார மற்றும் சமூக நீதியையும் உள்ளடக்கியதாகும்.
இந்தியாவின் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் நமக்கு ஒரு கூட்டாட்சி அரசியலை வழங்கினர். மொழிவாரியாக மாநிலங்களை மாற்றியமைப்பதிலும், அதிகாரத்தைப் பரவலாக்குவதிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் முன்னணியில் இருந்தது. மதச்சார்பின்மை, மக்கள் நலம், கூட்டாட்சி கொள்கைகள் இந்திய அரசின் கட்டமைப்பில் பின்னிப் பிணைந்துள்ளன. ஆனால் இன்று, இந்தக் கொள்கைகள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதைக் காண்கிறோம்.
மதப் பெரும்பான்மைவாதத்தின் எழுச்சி இன்று குடியரசுக்கு மிகவும் கடும் அச்சுறுத்தலாகி இருக்கிறது. இது இந்தியா ஒரு பன்முகச் சமூகம் என்ற அடித்தளக் கருத்தின் மதிப்பைக் குறைக்கிறது.
“இந்து-முஸ்லீம் பிரச்சினையை வலுக்கட்டாயமாக்கி, முஸ்லிம்கள் அடிபணியச் செய்வதற்காக எடுக்கப்படும் முயற்சிகளை முறியடிக்கும் பணிகளில் இந்த நாடு நிரந்தரமாக ஈடுபடும்.’’ என அம்பேத்கர் எச்சரித்தார். சமீபத்திய ஆண்டுகளில் நடந்த கொடூரமான கும்பல் படுகொலைச் சம்பவங்களால் முஸ்லிம்கள் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர். மதச்சார்பின்மை மீதான இந்தத் தாக்குதல்கள், 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தைத் தொடர்ச்சியாக மீறுபவையாகும்.
பொருளாதாரச் சமத்துவமின்மை அதிகரித்துக் கொண்டே வருவது, குடியரசுக்கு இன்னொரு முக்கிய அச்சுறுத்தலாகும்.
அரசியல் சாசனத்தின்படி, ஒரு நலஅரசின் தொலைநோக்குப் பார்வை, அரசியல் ரீதியானது மட்டுமல்ல, பொருளாதார ஜனநாயகத்தையும் உறுதி செய்வதும் அதன் கடமையாகும். இருப்பினும், இன்று, ஒரு சிலரின் கைகளில் செல்வம் குவிந்து கொண்டே செல்வதை நாம் பார்க்கிறோம். இதுவும் ஒரு சமூக மற்றும் அரசியல் பிரச்சினையாகும். நாடு அடைந்து வரும் வளர்ச்சியினால் கிடைக்க வேண்டிய நன்மைகளில் இருந்து, விளிம்புநிலை மக்கள் முற்றிலும் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இது அமைதியின்மையை அதிகரித்து, வகுப்புவாத அரசியலுக்கு வளமான நிலத்தை உருவாக்குகிறது, அங்கு ஏழைகள் வர்க்க நலன்களை விட மத அடையாளத்தின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் எதிராக இன்று மோதிக் கொள்ள ஆயத்தப்படுத்தப்படுகிறார்கள்.
மேலும், பாஜக- ஆர்எஸ்எஸ் ஆட்சியின் கீழ் இந்தியாவின் கூட்டாட்சி முறைமை பாழ்படுத்தப் படுகிறது. அரசியலமைப்பின் முதலாவது பிரிவு, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று அறிவிக்கிறது. ஆனால், மாநில அதிகாரங்களுக்கு உட்பட்ட விஷயங்களில், ஒன்றிய அரசு சட்டங்களை இயற்றி முடக்குகிறது. ஜனநாயக வழிமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களின் மதிப்பையும் செயல்பாட்டையும் குறைப்பதற்கு, காலனி அடிமைக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஆளுநர் பதவியைத் தவறாகப் பயன்படுத்துகிறது.
கூட்டாட்சி முறைமை என்பதன் சாரத்தை அரிக்கும் வகையில், அதிகாரங்கள் அனைத்தையும் மையப்படுத்துகிறது. இதன்மூலம் பண்பாடு, மொழி, மதத்தைத் திணிக்கிறது. மாநிலங்களின் சுயாட்சியை மேலும் நீர்த்துப்போகச் செய்வதற்காக “ஒரு நாடு, ஒரு தேர்தல்” என்ற திட்டத்தை முன்னெடுக்கிறது.
இன்று வலதுசாரி, வகுப்புவாத அரசியல் மற்றும் சலுகை சார் முதலாளித்துவம் ஆகியவை அரசியல் சாசனத்தின் நோக்கங்களையும் விழுமியங்களையும் வெட்டிக் குறைக்கின்றன. ஒரு நெருக்கடியை நாம் எதிர்கொள்கிறோம்.
இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கான குடியரசை மீண்டும் நிலை நிறுத்துவதற்கான போராட்டத்தில் இணையுமாறு ஒவ்வொரு குடிமகனையும், ஒவ்வொரு முற்போக்கான சக்தியையும், ஒவ்வோர் உண்மையான தேசபக்தரையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அழைக்கிறது.
நமது அரசியல் சாசனத்தின் தொலைநோக்குப் பார்வையிலிருந்து உத்வேகம் பெற்று, அது அனைவருக்கும் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் கண்ணியத்தையும் உறுதி செய்யும் ஓர் உயிருள்ள ஆவணமாக நிலைப்பதை உறுதிசெய்யப் பாடுபடுவோம்.