கட்டுரைகள்

தி.க.சி. எனும் இலக்கிய ஜனநாயகவாதி

வேலாயுத முத்துக்குமார்

தி.க.சி. நூற்றாண்டு (1925-2025)

சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் வடிவும், பொலிவும், வேகமும் பெற்றிருந்த மக்கள் இலக்கிய பேரெழுச்சியின் வீரியமிக்க மூத்த சுடர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் தி.க.சி என்று அறியப்படுகின்ற தி.க.சிவசங்கரன்.

பன்நெடுங்கால இலக்கிய அனுபவத்தை கொண்டிருந்த எழுத்தாளர்கள் சிலரில், தி.க.சி.யைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். நவீன இலக்கிய அபிவிருத்தியானது திட்டவட்டமான முற்போக்குப் பாதையிலேயே செல்ல வேண்டுமென்பது தி.க.சி.யின் எண்ணித் துணிந்த நிலைப்பாடாடுகளில் ஒன்றாகும். புதிய மனிதனுக்காக – புதிய வாழ்க்கைக்காக – புதிய கலாச்சாரத்திற்காக, கலை, இலக்கியம் படைக்கப்பட வேண்டும் என ஓங்கி ஒலித்த அவருடைய குரல், காலத்தின் குரலாக இன்றளவும் விஞ்சி நிற்கின்றது.

கவிஞர், சிறுகதையாளர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர், திரை விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர், பத்திரிகையாளர் எனப் பல்வேறு படைப்பிலக்கியத் தளத்தில் செயல்பட்டு வந்த போதிலும் கூட, தமிழிலக்கிய சமூகத்தால் அவர் இலக்கிய விமர்சகராகவே அடையாளப்படுத்தப்பட்டார்.

இலக்கியம் என்பது யதார்த்த வாழ்க்கையிலிருந்து எழுகிறது. அந்த யதார்த்த வாழ்க்கை சமுதாயத்தினால் சமைக்கப் பெறுகிறது. சமுதாயம் இல்லாமல் தனி மனிதன் இல்லை. ஆகவே இலக்கியம் என்பது சமுதாயத்தின் சொத்தாகும் என்று தன்னுடைய இலக்கிய வாழ்வின் ஆரம்பக்காலம் முதலே சொல்லி வந்த தி.க.சி, மார்ச் 30,1925 ஆம் ஆண்டு கணபதியப்பன் – பர்வதத்தம்மாள் தம்பதியருக்கு மகனாக, நெல்லை மாவட்டம் சீவலப்பேரி கிராமத்தில் பிறந்தார்.

பள்ளிப்படிப்பிற்குப் பிறகு, 1941இல் நெல்லை இந்துக் கல்லூரியில் தி.க.சி அடியெடுத்து வைத்த போது, பாரதிதாசன், வ.ரா ஆகியோரது படைப்புகளுடன் அவருக்கு பரிச்சயம் ஏற்பட்டது. அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வெளிக்கொண்டு வந்த ‘ஸ்டூடண்ட்’ என்கிற ஆங்கில இதழையும், தடை செய்யப்பட்டிருந்த மாக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலையும் கல்லூரி நூலகத்திலிருந்து எடுத்து வாசித்தார். கல்லூரிப் பருவக் காலத்திலேயே இடதுசாரி வாலிபர் அமைப்போடும், மாணவர் அமைப்போடும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.

இதற்கு காரணமாக விளங்கியவர் சிந்துபூந்துறை சண்முகம் அண்ணாச்சி. 1941ஆம் ஆண்டு நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்து சிறை சென்ற அவர், அங்கு பொதுவுடைமைத் தத்துவங்களைப் பயின்று, சிறையிலிருந்து வெளிவந்த பின்பு கம்யூனிஸ்ட் தோழராக உருமாறித் தொண்டாற்றத் தொடங்கினார். கட்சியின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக தமது சொந்த செலவிலேயே சோவியத் நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டார்.

நெல்லை மாவட்ட ‘ஜனசக்தி’ பத்திரிகையின் முகவராக செயல்பட்ட அவர், தான் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை விளக்க வகுப்புகளையும் நடத்தினார். ‘ஜனசக்தி’ பத்திரிகையையும், அதன் பிரசுரங்களையும் ஆயுதமாகக் கொண்டு, நெல்லையில் பல இளைஞர்களை கம்யூனிஸ்ட் தோழர்களாக்கிய பெருமை சண்முகம் அண்ணாச்சிக்கு உண்டு. நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையிலிருந்த அவரது வீடு அரசியல் நூல்களை உள்ளடக்கிய சிறந்த நூலகமாக விளங்கியதால், அந்நூலகத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டார் தி.க.சி.

இதே சமயத்தில், நெல்லை நகரத்தைச் சேர்ந்த நண்பர்களுடன் இணைந்து ‘நெல்லை வாலிபர் சங்கம்‘ என்கிற அமைப்பை ஆரம்பித்து நடத்தி வந்தார் தி.க.சி. இச்சங்கத்தை தொடக்கத்தில் விளையாட்டுத்தனமாக ஆரம்பித்தாலும், பின்தொடர்ந்த நாட்களில் பேச்சுக்கலையில் பயிற்சி பெறுவதற்கும், எழுத்துக்கலையில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கும், கலை, இலக்கியம் குறித்து விவாதிப்பதற்கும் அவர் பயன்படுத்திக் கொண்டார். இச்சங்கத்தின் சார்பாக ‘இளந்தமிழன்’ என்கிற கையெழுத்துப் பத்திரிகையை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார்.

அடிப்படையில் பொதுவுடைமை சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்த தி.க.சி, அத்தத்துவத்தின் அழகியல் நோக்குடனேயே அனைத்துப் படைப்புகளையும் விமர்சனம் செய்து வந்தார். ரசனையே விமர்சனத்தின் அடிப்படையாக இருந்தாலும், ரசனையுடன் தத்துவார்ந்த சிந்தனையும் இணைகின்ற போது தான் விமர்சனமானது மிக சரியானதாக அமையும் என்கின்ற கருத்தை தன்னுடைய விமர்சனப் பாதையில் அவர் வலியுறுத்தி நின்றதோடு, அதில் பெருத்த வெற்றியையும் கண்டார். விமர்சனம் என்பது ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். படைப்பாளியைக் கண்டனம் செய்து மட்டம் தட்டி மகிழக்கூடிய அழிவு வேலை விமர்சனம் கூடாது என்பதில் அவர் இறுதிவரையில் உறுதியாக இருந்தார்.

1945இல் தாம்கோஸ் வங்கி பணியாளராக இணைந்த அவ்வருடத்தில், பேராசிரியர் நா.வானமாமலை உடனான அரசியல் – இலக்கியத் தொடர்பும், 1947இல் எட்டயபுரம் பாரதி விழாவுக்குப் பிறகான தோழர் ஜீவாவின் தொடர்பும், தி.க.சி.யை ஒரு முற்போக்கு எழுத்தாளனாக, மார்க்சிய அழகியல் படைப்பாளியாக மாற்றின. வங்கிப் பணியில் சேர்ந்த நாள் முதலே வங்கிப் பணியாளர் சங்கம் கட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டார். தி.க.சி.யை ‘கம்யூனிஸ்ட்’ என அடையாளம் கண்டுகொண்ட வங்கி நிர்வாகம், 1948 நவம்பர் மாதம் அவரை சென்னைக்கு மாற்றி உத்தரவிட்டது.

‘இந்திய நாட்டுக்கு கிடைத்த சுதந்திரம் போலிச் சுதந்திரம் என்றும், நேருவின் ஆட்சி முதலாளித்துவ ஆட்சி என்றும் நேரு அரசாங்கத்தைத் தூக்கி எறிய வேண்டும் என்றும்‘ நாடு தழுவிய போராட்டம் தொடங்கியது. இதன் காரணமாக, நேரு தலைமையிலான இந்திய அரசாங்கம் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தது . அக்காலக்கட்டத்தில் தலைமறைவாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கும் , தோழர்களுக்கும் ரகசியமாக கடிதங்களை கொண்டு போய் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த தோழர்களில் ஏ.எஸ்.மூர்த்திக்கும், தி.க.சி.க்கும் கணிசமான பங்குண்டு. கட்சியின் மூத்த தலைவர்கள் கே.பாலதண்டாயுதம், பி.மாணிக்கம் ஆகியோர் தலைமையில் அரசியல் பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பையும் தி.க.சி பெற்றார்.

இக்காலத்தில் கட்சிப் பத்திரிகையான ‘ஜனசக்தி’யும் தடை செய்யப்பட்டிருந்த வேளையிலே, தி.க.சி.யினுடைய அறையில் கவிஞர் தமிழ் ஒளி தலைமறைவாக தங்கி இருந்திருக்கிறார். பொதுவுடைமை இயக்க ஏடுகளான ‘முன்னணி’, ‘போரணி’, ‘ஜனயுகம்‘, ‘புதுமை இலக்கியம்‘ ஆகியவற்றின் ஆசிரியர் குழுவில் தமிழ் ஒளியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் அவர் பெற்றிருந்ததோடு, வல்லிக்கண்ணன் ஆசிரியராக இருந்த ‘ஹனுமான்’ இதழிலும், கு.அழகிரிசாமி – தொ.மு.சி.ரகுநாதன் பொறுப்பாசிரியர்களாக இருந்த ‘சக்தி’ ஏட்டிலும், சிறுகதை, மொழிபெயர்ப்பு கட்டுரைகள், புத்தக மதிப்புரைகளை எழுதி வந்தார்.

1950இல் மொழிபெயர்ப்புக் கலைக்கு இருந்த முக்கியத்துவத்தை முன்னிறுத்தி, சில நூல்களை தி.க.சி மொழிபெயர்த்தார். ‘காரல் மார்க்ஸ் இல்வாழ்க்கை’ என்கிற கட்டுரையே அவரது முதல் மொழிபெயர்ப்பு நூலாகும். நூல் வடிவம் பெற்ற அவரது படைப்புகளில் இம்மொழிபெயர்ப்பு நூலே முதலாவதாகும். அதே ஆண்டின் இறுதியில் தமிழ்ப் புத்தகாலய அதிபர் கண.முத்தையா அறிவுறுத்தலின் பேரில், சோவியத், சீன நாவல்களையும், மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகளையும் மொழி பெயர்த்தார் தி.க.சி. அவைகள் முறையே, ‘வசந்த காலத்திலே (மார்ச்-1951), சீனத்துப் பாடகன் (நவம்பர்-1951), போர் வீரன் காதல் (நவம்பர்-1951) ஆகிய சோவியத், சீன நாவல்களாகவும், மாக்ஸிம் கார்க்கியின் ‘எது நாகரீகம்..? கலாச்சாரத்தைப் பற்றி’ (மார்ச்-1951) ஆகியவை கட்டுரை நூல்களாகவும் தமிழ்ப் புத்தகாலய வெளியீடுகளாக வந்தன. இந்நூல்களுக்கு கிடைத்த அங்கீகாரமே பின்னாட்களில் சென்னையில் சோவியத் செய்தித்துறையில் 25 ஆண்டுகாலங்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை அவருக்குப் பெற்றுத் தந்தன.

மே, 1952 முதல் மே 1962 வரை, தனது வங்கிப் பணியுடன் இயக்கப் பணியாக, அண்ணாச்சி என்றழைக்கப்பட்ட எழுத்தாளர் சிந்துபூந்துறை எஸ்.சண்முகம் அவர்களுடன் இணைந்து ‘நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ்’ எனும் பதிப்பகத்தையும் நடத்தி வந்தார் தி.க.சி. இப்பதிப்பகம் மூலம் அரசியல் போதனை நூல்களையும், ரஷ்ய, சீன இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்களையும் அவர்கள் பதிப்பித்து வந்தனர். வ.க., தொ.மு.சி, சிந்துபூந்துறை அண்ணாச்சி ஆகியோர்களின் மொழிபெயர்ப்புகளை இப்பதிப்பகம் வெளியிட்டது.

மணிக்கொடி பரம்பரையைச் சேர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைப் படைப்புகளைப் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகளை ‘தாமரை’யில் அவரெழுதினார். இக்கட்டுரைகள், தமிழிலக்கிய படைப்பாளிகள், விமர்சகர்கள், பதிப்பாளர்கள் மற்றும் வாசகர்களிடையே பெருத்த வரவேற்பை அவருக்குப் பெற்றுத் தந்தன.

19 ஆண்டுகால வங்கிப்பணியை ராஜினாமா செய்துவிட்டு, 1965இல் சோவியத் துறையில் இணைந்த அவர் 1990 வரையில் பணியாற்றினார். இங்கு பணியாற்றிய காலத்திலேயே, ‘தாமரை’யின் பொறுப்பாசிரியராக கடமையாற்றும் பேறையும் அவர் பெற்றார். 1965 முதல் 1972 வரை ‘தாமரை’யின் நூறு இதழ்களுக்கு ஆசிரியராக திகழ்ந்து, நசிவு இலக்கியங்களுக்கு எதிரான இயக்கத்தை தோற்றுவித்தார். ‘வியட்நாம் போராட்டச் சிறப்பிதழ், சிறுகதை சிறப்பிதழ், கரிசல் சிறப்பிதழ், மொழிப்பெயர்ப்பு சிறப்பிதழ்’ என சிறப்பிதழ்களை கொண்டு வந்ததோடு, பல படைப்பாளிகளை அதில் வளர்த்தெடுத்து உருவாக்கி, படைப்பாளிகளின் படைப்பாளியாக அவர் திகழ்ந்தார்.

‘தி.க.சி திறனாய்வுகள்’ (பிப்ரவரி 1993), ‘விமர்சனத் தமிழ்’ (ஏப்ரல் 1993), ‘விமர்சனங்கள்-மதிப்புரைகள்-பேட்டிகள்’ (டிசம்பர் 1994) ‘மனக்குகை ஒவியங்கள்’ (மார்ச் 1999) ‘தமிழில் விமர்சனத்துறை -சில போக்குகள்’ (டிசம்பர் 2001) ஆகியவை அவர் எழுதி வெளிவந்த நூல்கள். இதில் ‘விமர்சனங்கள்-மதிப்புரைகள்-பேட்டிகள்’ நூலே அவருக்கு 2000ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத் தந்தது.

படைப்பாளிகள் இலக்கிய ஞானத்தை பெறுவது முக்கிய கடமையென்றும், அவர்களது படைப்புகள் தேசிய மற்றும் சர்வதேச தரத்துக்கு இணையாகத் திகழ வேண்டும் என்கிற உன்னத லட்சியத்தோடும் செயல்பட வேண்டும் என்றும் தனது ஆரம்ப காலத்திலிருந்தே வலியுறுத்தி வந்தவர் தி.க.சி. ஒரு படைப்பானது பொதுவாக வாழ்க்கையில் காணப்படும் யதார்த்த நிலைகளையும், பிரச்சினைகளையும் சித்திரிப்பதை தவிர அதை விமர்சனப்படுத்துவதாகவும் அமைதல் வேண்டும். ஒரு படைப்பாளியின் படைப்பில், கலையழகு (Artistic Beauty), உலகளாவிய மனிதகுல நேயம் (Social Outlook), சமூக நோக்கு (Universal Humanism) ஆகிய மூன்று அம்சங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று அடிக்கடிக் குறிப்பிட்டுச் சொல்லி வந்தார் தி.க.சி.

இவையனைத்தையும் தாண்டி ஒரு படைப்பாளி அடிப்படையில் சிறந்த மனிதனாகவும் இருக்க வேண்டும் என்பதை தீவிரமாகவே வலியுறுத்தி வந்தவர். இலக்கிய வாழ்க்கையைப் பொறுத்தவரையில் அவரது இலக்கியச் சிந்தனையும், எழுத்தும், களப்பணியும், சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பயன்பட்டிருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு பார்க்கின்ற போது, சொந்த வாழ்க்கையிலும், இலக்கிய வாழ்க்கையிலும் தி.க.சி ஒரு பெருவாழ்வு வாழ்ந்த கலைஞனாகவே வாழ்ந்து சென்றிருக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button