
படிப்பதால், பயனும் இயலாததால், இழப்பும் இல்லையென்று தெரிந்தும், மூன்றாவது மொழியாக இந்தியும், சமக்கிருதமும் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு எவ்வளவுதான் முட்டுக்கொடுத்தாலும், முன்னேற்றம் வந்துவிடப் போவதில்லை.
முன்வைக்கின்ற அடிப்படை நோக்கங்கள் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லுமென்றால், இளைஞர்கள் மட்டுமன்றி, மக்கள் கூடத் தாமாக முன்வந்து இந்தி போன்ற மூன்றாவது மொழியினைப் படிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
மூன்றாவது மொழியொன்றை, அதாவது இந்தியினைக் கற்கும் வேண்டல் இல்லாத நிலையிலும், அதற்கான அடிப்படைகள் இல்லாத போதிலும் இந்தி படிக்கவேண்டும் என்று வற்புறுத்துவோர் பொருத்தம் இல்லாத பல காரணிகளை எடுத்துரைக்கின்றனர். இந்தக் காரணிகள் அவ்வப்போது மாறுகின்றன; விளக்கம் தருவோருக்கு ஏற்ப வேறுபடுகின்றன.
ஆனால், இன்று இந்திக்காக வலிந்து பேசுவோர் வரிந்து கட்டிக்கொண்டு கூறுகின்ற அனைத்தும் இதற்கு மாறாகவும் முரணாகவும் இருக்கக் காணலாம்.
1. இந்தி படித்தாகவேண்டும்
2. இந்தி படிக்க முடியும்
3. இந்தி படிக்க வாய்ப்புத் தரவேண்டும்
4. இந்தி கற்காமலிருப்பது பேரிழப்பு
5. இந்தி படித்தோர், படிக்காதோர் என்ற பாகுபாடு கூடாது
என்று பல வகையிலும், வெவ்வேறு நிலைகளில் இந்தி வலியுறுத்தப்பட்டு வருகிறது. மிரட்டலுடன், நிதி உதவி மறுத்தலாகவும் அது மாறிவருகிறது.
இவற்றின் பின்புலத்தில், கீழ்க்கண்டவாறு பல விளக்கங்கள், காரணிகள், அடிப்படைகள், அறிவுறுத்தல்கள், அச்சுறுத்தல்கள் முன்வைக்கப்படுகின்றன:
- இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக இந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. அதனால், இந்தியைக் கற்பது கடமையாகிறது.
- ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களின் மக்களை இணைப்பதற்கு இந்தி மொழி பயன்படுகிறது.
- வேற்று நாட்டு மொழியொன்று இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது.
- இந்தி திணிக்கப்படவில்லை. இந்தி அல்லது வேறு ஏதாவது ஒரு இந்திய மொழியினைக்கூடக் கற்றுப் பயன் பெறலாம்.
- நாடு முழுதும் ஒரே கல்வித் திட்டத்தில் வருவதால், தமிழ்நாடு அதை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
- இந்தியைப் புறக்கணிப்பது, இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமைக்கு எதிரானது.
- இந்தியை ஏற்காதது நாட்டுப் பற்று இல்லாததைக் குறிக்கிறது.
- மக்களாட்சி அமைப்பில் பெரும்பான்மை முடிவை ஏற்கவேண்டும்.
- மாநில மொழிகளைப் புதிய கல்வித் திட்டம் ஊக்குவிப்பதால், அதன் ஒரு பகுதியாக இருக்கும் இந்தி போன்ற மூன்றாவது மொழியொன்றைப் படிக்கவேண்டும்.
- செல்வ வளம் கொண்டோர் தனியார் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி கற்கின்றனர். ஆனால், அரசுப் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இந்தி மறுக்கப்படுகிறது. அதனால், தமிழ்நாட்டில் மும்மொழிப் பாடம் அனைவருக்கும் கிடைக்கவேண்டும்.
- ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளிலும் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளிலும் இந்தி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படுவதால், ஏற்கனவே இந்தி இருந்து கொண்டிருக்கிறது. அரசுப் பள்ளி ஏழை மாணவர்களுக்கு மட்டும் மறுப்பது கூடாது.
- நவோதயா வகைப் பள்ளிகள், பிரதமர் (பிஎம்சிறீ) மேன்மைப் பள்ளிகள் போன்றவை தரமான கல்வியினைக் கட்டணமின்றி வழங்குவதால், மும்மொழித் திட்டத்தினை ஏற்றுக்கொண்டால், தமிழ்நாட்டு மாணவர்களும் பயன் பெறலாம்.
- இந்தியைப் படிக்கும் தன்விருப்ப உரிமையை மாணவர்களுக்கு மறுக்கக்கூடாது.
- இந்தியைப் படிக்க விடாமல் தடுப்பது புது வகைத் தீண்டாமையாகும்.
- இந்தி நுழைவதால் தமிழ் மொழிக்கு அழிவு ஏதும் நேராது. இதனால் இந்தி படிப்பதற்குத் தடையில்லை.
- இந்தி படிக்க விருப்பம் இல்லையென்றால், சமக்கிருதம் படிக்கலாம்.
- இளம் பருவத்தில் மூன்றாவது மொழியொன்றை பயில்வது எளிதாக இருக்கும். அதனால், இந்தி அல்லது மற்றொரு இந்திய மொழியினைக் கற்பதில் சுமை ஏதுமில்லை.
- அய்ரோப்பிய நாடுகளில் பல மொழிகளில் கற்றுத் தரப்படுகின்றன அதுபோல இங்கும் கற்க முடியும்.
- பிற மாநிலங்கள் இந்தியை ஏற்கும்போது தமிழ்நாடு மட்டும் தனித்திருக்கக்கூடாது.
- ஒன்றிய அரசுப் பணிகள் மற்றும் வங்கி, அஞ்சல், ரயில்வே, படை போன்ற வேறு பணிகளுக்கான தேர்வுகள் பெரிதும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் நடத்தப்படுவதால், இந்தி பயில்வது வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பயனுள்ளதாகும்.
- பிற மாநிலங்களில் உள்ள தனியார் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு இந்தி மொழிதான் பயன்படும்.
- தமிழகத்தைச் சார்ந்தோர் பிற மாநிலங்களில் தொழில் தொடங்க வேண்டுமெனில் இந்தி தெரிந்திருக்க வேண்டும்.
- நாட்டை ஒன்றுபடுத்த இந்திதான் அடிப்படையாக இருக்கிறது.
- இந்தி படிக்காமல் தேசிய நீரோட்டத்திலிருந்து விலகிச் சென்று விடக்கூடாது.
- அடுத்த சில ஆண்டுகளில் இந்திய ஒன்றியத்தின் தேசிய மொழியாக இந்தி உருவெடுக்கும். அதனால், இன்றைய இளைஞர்கள் இந்தி படித்தாகவேண்டும்.
- ஒரு மாநிலத்தில் பெரும்பான்மையோர் பேசும் மொழியினை அங்கு வாழும் பிறர் ஏற்றுக்கொள்வது போல, இந்திய ஒன்றிய மாநிலங்களில் பெரிதும் பேசப்படும் இந்தி மொழியினை, அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கடமையாகிறது.
- தமிழ்நாடு அரசின் இயலாமைகளையும் குறைகளையும் மறைக்கத்தான் இந்தி எதிர்ப்பு முன்னெடுக்கப்படுகிறது.
- இந்தி மொழி பரப்பு அவையில் (இந்தி பிரச்சார சபா) இந்தி படிப்போர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் மிகுந்து வருவதால், பள்ளிகளிலேயே இந்தியினைக் கற்றுக் கொடுத்துவிடலாம்.
- 1960களில் நிலவிய இருமொழிக் கொள்கை என்ற கருத்தாக்கம் காலத்தைக் கடந்து பயனற்றதாகிவிட்டது. இன்றைய வேண்டல்களுக்கு மும்மொழித் திட்டம்தான் வேண்டியதாக இருக்கிறது.
- மன வளம் எண்ணங்களின் மேன்மை, துய்க்கும் பயன் போன்றவற்றைப் பெற இந்தி பயன்படுகிறது.
இந்தி வணிகர்களிடம் பேசவும், தண்ணீர் பூரி (பானி பூரி) விற்போரிடம் கேட்கவும், வட மாநிலப் பயணிகளுடன் உரையாடவும் இந்தி படிக்கவேண்டும் என்பன போன்ற சிறுபிள்ளைக் கூற்றுக்களை இங்குச் சேர்க்கவில்லை.
இவையெல்லாம் பாரதிய சனதாக் கட்சியின் தமிழகத் தலைவர்களும் ஒன்றிய அமைச்சர்களும் அவ்வப்போது கூறி வருவனவாகும்.
அடிப்படையிலேயே பல்வேறு போக்குகளையும் நோக்குகளையும் பயன்களையும் விரிவாகப் பார்த்த பின்னர், இத்தகைய கூற்றுகளுக்கு விளக்கம் தரவேண்டியதில்லை என்றாலும், சில புரிதல்களுக்காக இவற்றை மேலாய்வு செய்யவேண்டியதாகிறது.
தொடக்கத்தில், அடிப்படையாக வினாக்கள் சிலவற்றை எழுப்பவேண்டியுள்ளது. தேசியக் கல்வித் திட்டத்தில் மூன்றாவது மொழியாக இந்திதான் முன்மொழியப்பட்டிருந்தது. தமிழக அரசின் எதிர்ப்பினையடுத்து, இந்தி அல்லது பிற இந்திய மொழிகளில் ஒன்று எனத் திருத்தப்பட்டது. பிற மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை, அதாவது இந்தியை ஏற்றுக்கொண்டுவிட்டதால், இது தமிழ்நாட்டுக்கான தனித் திருத்தம் எனலாம்.
இந்தி பேசாத மாநிலங்கள் மூன்றாவது மொழியாக இந்தியைப் படிக்கவேண்டும் என்பதற்காக இதுவரை சொல்லப்பட்ட காரணிகள் யாவும், அடிப்படைகள் அனைத்தும் இதில் அடிபட்டுப் போய்விடுகின்றன. கடந்த 75 ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வந்தவை பொய்யானவைகளாக மாறிவிட்டன. இந்தித் திணிப்பானது, அடுத்து சமக்கிருதத்தை முன்னிறுத்துவதற்கான முதல் முயற்சி என்பது இதிலிருந்து தெளிவாகிவிடுகிறது.
மூன்றாவது மொழியாக இந்தி அல்லாமல், மணிபுரி அல்லது அசாமி போன்ற மொழி ஒன்றைப் பயின்றால் அதனால் தமிழ்நாட்டு மாணவர்கள் பெறக்கூடிய நன்மைகள் யாவை?
பல்வேறு மொழி மக்களை இந்தி இணைக்கும், வேலை வாய்ப்புகள் பெருகும், வணிகம் மேலோங்கும், ஒன்றிய அரசு சார்ந்த போட்டித் தேர்வுகளுக்குப் பயனாகும், வேறு மாநிலங்களில் தொழில் தொடங்க உதவும் என்றெல்லாம் கூறப்பட்டவை உண்மையானவை அல்ல என்பது இப்போது வெளிப்பட்டுவிட்டது. அடிப்படைகளே தகர்ந்துவிடுவதால், மூன்றாவது மொழி என ஒன்று வேண்டியதில்லை என்பதுதான் உறுதிப்படுகிறது.
மேலும், ஒன்றிய அரசின் பாடத்திட்டப் பள்ளிகள், நவோதயா பள்ளிகள், பிரதமர் (பிஎம்ஸ்ரீ) மேன்மைப் பள்ளிகள் ஆகியவற்றிலும் மூன்றாவது மொழியாக இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்தப் பள்ளிகளில் தமிழ்நாட்டில் மட்டுமாவது, இந்திக்கு மாற்றாக வேறு ஏதேனும் ஒரு இந்திய மொழியினைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்தும் தெளிவு பெறவேண்டியுள்ளது.
இந்தி என்ற மூன்றாவது மொழியினை ஏற்றுக்கொண்டால்தான், நவோதயா, பிரதமர் மேன்மைப் பள்ளி ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் தொடங்க முடியும் என்ற கட்டுப்பாட்டையும் இப்போது தளர்த்திவிடுவார்களா என்ற வினாவுக்கு விளக்கம் எதுவும் கிடைக்கவில்லை.
இந்திய மொழிகளில் ஏதாவதொன்றினை, ஏதோவொரு முறையில் மும்மொழிக் கொள்கையாகத் தமிழ்நாட்டில் புகுத்திவிட்டு, தமிழ்நாட்டின் இரு மொழிக்கொள்கைக்கு மூடுவிழா நடத்திவிட்டு, சில ஆண்டுகள் கழித்து மூன்றாவது மொழி இந்திதான் என்று வற்புறுத்தித் திணிக்கச் செய்யப்படும் மாயமா இது என்ற அய்யமும் எழாமல் இல்லை.
இந்தித் திணிப்பிற்கே மும்மொழி முழக்கம்!
வேறு இந்திய மொழிகளுக்குப் போதுமான ஆசிரியர்கள் கிடைக்கமாட்டார்கள் என்பதால், இந்தியைத் திணிப்பதற்கான மறைமுகத் திட்டம்தான் இது. ஏதாவது ஒரு மொழி என்பதற்குத் தமிழ்நாடு அரசும் மக்களும் தொடர்ந்து அய்யமும் அச்சமும் எதிர்ப்பும் தெரிவிக்கும் நிலையில், இத்தகைய நம்பிக்கை தராத உறுதிமொழிகளை ஏற்க இயலவில்லை.
செல்வ வளம் கொண்டோர் தனியார் பள்ளிகளில் மும்மொழிகளைக் கற்கின்றனர் என்றும், ஏழை மாணாக்கருக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு, இரு மொழிகள் மட்டுமே கற்கும் நிலை உள்ளது என்றும் பா.ச.க.வினர் கூறி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களும் பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களும் தெளிவான விளக்கங்களையும் விவரங்களையும் சான்றுகளுடன் தந்த பின்னரும், திரும்பத் திரும்பத் தவறான கருத்துகளையே பரப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் கூட்டு எண்ணிக்கை ஏறத்தாழ 58,000 ஆகும். இதில் மெட்ரிக் உள்ளிட்ட தனியார் பள்ளிகள் 12,690 என்ற அளவில்தான் உள்ளன. ஒன்றிய அரசின் பாடத்திட்டப் பள்ளிகள் 1,835 மட்டும்தான். அதாவது, 3.16% பள்ளிகள் மட்டுமே மும்மொழிக் கொள்கை என்ற அளவில் மூன்றாவதாக இந்தியைக் கற்பித்து வருகின்றன.
இவற்றிலும்கூட 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் மட்டுமே இந்திப் பாடங்கள் இருக்கின்றன. தெளிவாகச் சொல்வதென்றால், இந்த மூன்று ஆண்டுகளில் அவர்கள் படிக்கும் இந்தி மொழி முழுமையாகப் பேசவும் எழுதவும் தெரியுமளவில் இருப்பதில்லை. அவர்களும் படித்தார்கள் என்று கூறத்தக்க அளவில்தான் இது அமைந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 53,475 அரசுப் பள்ளிகள், மெட்ரிக் உள்ளிட்ட 12,690 தனியார் பள்ளிகள், ஆக 56,165 பள்ளிகளில் இரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படுகிறது.
தமிழ் அல்லது ஆங்கிலம் என எது பயிற்சி மொழியாக இருந்தாலும், இரு மொழிகள் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன. இந்தி அல்லது வேறு மூன்றாவது மொழி அந்தப் பள்ளிகளில் இல்லவே இல்லை. மூன்றாவது மொழி என்ற வகையில் இந்தி இல்லாததால், இந்திக்கான தேர்வுகளும் நடத்தப்படுவதில்லை. இதன்றி, தமிழ் கட்டாயப் பாடமாக இருக்கவேண்டும் என்ற அரசாணையும் உள்ளது.
நகரப்புறங்களில் உள்ள மிகச் சில மெட்ரிக் பள்ளிகளில் மட்டும் வேற்று மொழியினருக்கு வாய்ப்புத் தரும் வகையில் தமிழுக்கு மாறாகத் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, இந்தி, செர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளைத் தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய வாய்ப்பினைத் தவறாகப் பயன்படுத்தி, சில தமிழ் மாணவர்களும் விதிகளைப் புறந்தள்ளித் தமிழுக்கு மாற்றாக வேறு ஏதாவதொரு மொழியினைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அவர்கள் குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவில் இருக்கவில்லை என்பதுதான் உண்மை நிலை.
எனவே, வளமிக்க மாணவர் தனியார் பள்ளிகளில் மும்மொழிகளைக் கற்பதாகவும், ஏழை மாணாக்கருக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு, இரு மொழிகள் மட்டுமே படிப்பதாகவும் பா.ச.க. தலைவர்கள் கூறிவருவது முழுமையான பொய்யாகும்.
அத்துடன் விரும்பும் மொழியை, அதாவது இந்தியைப் படிக்கின்ற உரிமை பறிக்கப்படக்கூடாது என்று பா.ச.க. கூறுகிறது.
ஆனால், வேண்டாத மொழியான இந்தியினைப் படிக்க மறுக்கின்ற உரிமையும் வழங்கப்படவேண்டும் என்பதை பா.ச.க. ஏற்றுக்கொள்வதாக இல்லை.