
போர்க்குணமிக்க தோழர்களே!
தமிழ்நாடு போர்க்களத்தில் நின்று கொண்டிருக்கின்றது. மூர்க்கத்தனமான மோடி அரசு தமிழ்நாட்டு மக்களோடு போர் தொடுத்துள்ளது.
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றே ஆகவேண்டும். மும்மொழிக் கொள்கையை ஏற்றே ஆகவேண்டும். மறுத்தால் உங்களுக்குக் கொடுக்க வேண்டிய ரூ.2512 கோடி ரூபாயைக் கொடுக்க முடியாது.
நிதி நிலை அறிக்கையில் ஆண்டுதோறும் தமிழகத்தைப் புறக்கணிப்போம், நிதி கொடுக்க முடியாது.
பேரிடர் நிதி கொடுக்க மாட்டோம்.
மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி, பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு ஊதியமாக வழங்க வேண்டிய ரூ.4,000 கோடியை வழங்க மாட்டோம்.
மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, தொகுதி சீரமைப்பு என்கிற பெயரால் தற்போதுள்ள 39 தொகுதிகளை 31 ஆக குறைப்போம்.
ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கொண்டு பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டோம்.
உச்சநீதிமன்றம் ஆளுநர் செயல்பாடு சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தாலும் அது குறித்து நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஆளுநரை நீக்கம் செய்ய மாட்டோம்.
மதச் சார்பின்மை கொள்கைக்குப் புறம்பாகச் செயல்படுவோம்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் நிறைவேற்றுவோம்.
அடுத்து கிறிஸ்தவர்களுக்குரிய சொத்துகளைக் கணக்கெடுத்து வருகின்றோம்.
மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தாமல் விடமாட்டோம்.
இவை எல்லாம் ஒன்றிய பா.ஜ.க வின் அத்துமீறிய ஜனநாயக விரோதச் செயல்பாடுகள் ஆகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
மோடி அரசின் மூர்க்கத்தனமான மக்கள் விரோத, ஜனநாயக விரோதச் செயல்பாடுகளுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு போர் புரிந்து வருகின்றார்கள்.
இப்போர் என்பது மகாபாரதப் போர் போன்று நிலம் பிடிப்பதற்கான போர் அல்ல.
ராமாயணம் போன்று பெண்ணை மீட்பதற்கான போர் அல்ல.
மாறாக தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதற்கான போர்.
தமிழ்நாட்டு மாணவர்களைக் காப்பதற்கான போர்.
நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு வேண்டுமெனக் கேட்டு நடக்கும் போர்.
அரியலூர் அனிதா முதல் 22க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் உயிர்த் தியாகத்தின் பெயரால் நடக்கும் போர்.
இத்தகைய போர் கட்டம் கட்டமாக நடந்து வருகின்றது.
ஒவ்வொரு கட்ட போரிலும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில், பாஜகவைத் தவிர மற்ற கட்சிகள் குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க உட்பட அனைவரும் தோள் கொடுத்து வருகின்றனர்.
காரண மென்ன? இப்போர் இரு அரசுகளுக்கிடையே மட்டுமே நடந்து வருகின்ற போர் அல்ல.
மாறாக எட்டுக் கோடி தமிழ் மக்களின் எதிர்காலத்திற்குரிய போராகும்.
இத்தகைய மகத்தான போர் என்பது நாட்டிற்கே வழிகாட்டக் கூடிய போராகும்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில உரிமைகளும், நலன்களும் காக்கப்படுவதற்கான தர்மத்தை நோக்கிய உச்சப் போராகும்.
இத்தகைய போர் என்பது ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போர் என்பதனை அக்கறை உள்ளோர் அனைவரும் அறியக் கூடும்.
ஜனநாயகத்தைச் சாகடித்து விட்டு, சாதிக்கப் போவது என்ன?
சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழியை அறியாத பாலகனும் உண்டோ?
ஆர்.எஸ்.எஸ் எனும் அமைப்பின் அரசியல் பிரிவாகச் செயல்படும் பா.ஜ.க தன்னை அரசியல் ரீதியாக எதிர்க்கும் அரசியல் கட்சிகளை, அரசியல் ரீதியாக எதிர்கொள்ள இயலாமல், தனக்குக் கிடைத்துள்ள அரசியல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மாற்றுக் கருத்துடைய அரசியல் கட்சிகளைப் பழி வாங்குவது, உடைப்பது என்ற அநாகரிகச் செயலைத் தானே பாஜக கூச்சநாச்சமின்றிப் பகிரங்கமாகச் செய்து வருகின்றது.
மகாராட்டிர மாநிலத்தில் இயங்கி வந்த, நாடறிந்த தலைவரான சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன ஆனது?
மகாராட்டிர மாநிலத்தையே தன் கைக்குள் வைத்திருந்த சிவசேனாவின் நிலை என்ன ஆனது?
இவற்றை எல்லாம் அறியா அரசியல் தலைவரா எடப்பாடி?
நீண்ட காலமாக அதிமுகவில் நல்ல தொண்டராக, சட்டமன்ற உறுப்பினராக, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக, அமைச்சராக, சசிகலாவின் ஆதரவைப் பெற்று முதலமைச்சராக நான்காண்டு காலம் பணியாற்றியவர். தற்போது பிரதான எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டு வருகின்ற எடப்பாடியார், பா.ஜ.கவின் நயவஞ்சக அரசியலை அறியாத சிறு பிள்ளையா?
முதலமைச்சராக இருந்த போது பா.ஜ.க ஒன்றிய அரசின் அனைத்து நிர்பந்தங்களுக்கும் அடிபணிந்த எடப்பாடியார், பின் ஏன் உறவைத் துண்டித்தார்?
பா.ஜ.கவுடன் ஏற்பட்ட அரசியல் உறவில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் தானே?
2023 செப்டம்பர் 25 ல் பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை. எந்தப் பிரச்சினை வந்தாலும் சந்திப்போம் என ஆவேசமாக முழங்கினார் எடப்பாடி.
2023 அக்டோபர் 4 ல் கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் எனக் கம்பீரமாக உரைத்திட்ட எடப்பாடியார்.
2023 அக்டோபர் 6ல் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என மார்தட்டிய எடப்பாடியார்.
2024 நவம்பர் 13 இல் இனிவரும் எந்தத் தேர்தலிலும் பா.ஜ.கவுடன் கூட்டணியில்லை எனச் சத்தியம் செய்த எடப்பாடியார்? அனைத்தையும் மறந்தது ஏன்?
நீங்கள் குலதெய்வமாகப் போற்றும், உங்களுக்கு வாழ்வளித்த உங்கள் அழகான முகத்தை ஊர் அறிய உலகறியச் செய்த இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதாவைப் பார்த்து, ஊழல் ஆட்சி செய்தவர் என உங்களோடு இருந்து கொண்டே பேசினாரே பா.ஜ.கவின் முன்னாள் தலைவர், பழைய காக்கி அண்ணாமலை கூறியதை அவ்வளவு எளிதில் உங்களால் எப்படி மறக்க முடிந்தது?
ஜெயலலிதா என் மனைவிக்குச் சமம் என்று கூறினாரே அண்ணாமலை அதைக் கூடவா உங்களால் மறக்க முடிந்தது.
ஓர் வகுப்புவாதக் கட்சி மக்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்துகிற கட்சி, சிறுபான்மை மக்களின் மீது இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்தும் நயவஞ்சகக் கட்சி, மதச்சார்பின்மை என்றால் அது எப்படி இருக்கும் எந்தக் கடையில் கிடைக்கும், கிலோ என்ன விலை என்று கேட்கக் கூடிய கட்சி என்பது எல்லாம் எடப்பாடியாருக்குத் தெரியாதா? புரியாதா?
உங்களை அச்சுறுத்துவது எது? கொடநாடு கொலை, கொள்ளை வழக்கா? அல்லது மகன் மீது உள்ள வழக்கா அல்லது உங்கள் சம்பந்தி மீது உள்ள வழக்கா? அல்லது உங்கள் மிக நெருங்கிய நண்பர் மீது உள்ள வழக்கா? அல்லது ஓபிஎஸ் உங்கள் மீது தொடுத்துள்ள வழக்கா? அல்லது உங்கள் கட்சி குறித்தும் தேர்தல் சின்னம் குறித்தும் நடைபெற்று வரும் வழக்கா?
எது உங்களை ஆட்டிப் படைக்கிறது?
எத்தகைய மிரட்டலுக்கு அஞ்சி நடுங்கி வாய் பேச முடியாத மௌன சாமியாராகி அமித்ஷா உதிர்த்த அமுதச் சொற்கள் அனைத்திற்கும் ஆமா போட்டீர்கள்.
உங்கள் கட்சியில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் பா.ஜ.கவை நெருங்கக் கூடாது என்றும், அது ஓர் அபாயகரமான நபர்களைக் கொண்டது என்றும், உறவாடிக் கெடுப்பவர்கள் என்றும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள் என்றும் அவர்களுடன் உறவு கொள்ளலாகாது என்றும் உரக்கக் கூறுவது எடப்பாடியாரின் காதுகளுக்கு எட்டவில்லையா?
அல்லது எட்டிய போதும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அடிமட்டத் தொண்டனை அலட்சியப் படுத்துகின்றாரா?
ஒட்டுமொத்தத் தமிழகம் ஒருசேர ஒன்றிய அரசின் துரோகங்களுக்கு எதிராகப் போர்க் குரல் எழுப்பி வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கும், தன் சொந்தக் கட்சித் தொண்டர்களுக்கும் எடப்பாடியார் துரோகம் இழைக்கலாமா?
நேற்று வரை எடப்பாடியராகத் திகழ்ந்தவர் எட்டப்பராக மாறலாமா?
எதிரிக்கு மன்னிப்பு உண்டு. துரோகத்திற்கு ஒருபோதும் மன்னிப்பு கிடையாது!
மீண்டும் சந்திப்போம்
வணக்கம்