கட்டுரைகள்

கந்தர்வனின் “சாசனம்”

ஆ.சிவசுப்பிரமணியன்

குரலற்ற மனிதர்களைக் கதை மாந்தர்களாக்கி அவர்களின் ஏழ்மையையும் துயரத்தையும் முன்வைத்து பச்சாதாபத்தைக் கோருகிற எழுத்துக்களாக கந்தர்வனின் எழுத்துக்கள் எந்த இடத்திலும் இல்லை.

மாறாக அவரது எழுத்துக்கள் காலங்காலமாக அவர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த உரிமைகளையும் சாதிக்கும் ஆணாதிக்கத்திற்கும் எதிரான சமதர்மச் சிந்தனையைக் கதைகளினூடாக வாழ்வினூடாக வாசிப்பவர்களின் மனங்களிலும் ஏற்றிச் சக மனிதர்கள் மீதான நேசச் சிந்தனையைச் சுரக்கச் செய்கிற எழுத்துக்களாகவே காலத்திற்கும் நிலைத்திருக்கும் (தினேஷ் பழனிராஜ்).

ஆங்கிலத்தில் சார்ட்டர் (Charter) என்று குறிப்பிடப்படும் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படும் சொல் ‘சாசனம்’. சமஸ்கிருத மூலச் சொல்லான இச்சொல்லுக்கு மாற்றாக மக்களின் பயன்பாட்டில் உள்ள சொல் ‘பத்திரம்’ என்பதாகும். சொத்துக்களின் மீதான உரிமையை இது வெளிப்படுத்தி நிற்பதால் உரிமைப் பத்திரம் என்று குறிப்பதும் உண்டு. இத் தன்மையால் இது பாதுகாப்பாகப் பேணப்பட வேண்டிய ஒன்று என்பதன் அடிப்படையிலேயே பத்திரம் என்று குறிப்பிட்டார்கள் என்று கூறுவோரும் உண்டு. சரி, சொல்லாராய்ச்சிக்குள் நுழையாமல் கதைக்குள் நுழைவோம். இக் கதையின் களம் மதுரையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள மாவட்டத்தில் அடங்கிய கிராமமாகும்.

கதைக்கரு

கதை சொல்லியின் அப்பா அடிக்கடி ஒரு பத்திரத்தைத் தன் வீட்டில் ‘ஆள்பத்தி அறைக்குள் (ஆவண அறை)’ இரும்புப் பெட்டிக்குள் தேடிக் கொண்டே இருக்கிறார். அது என்ன பத்திரம் என்ற ஆர்வம் வாசகனுக்குத் தோன்றும் போது கதை சொல்லியின் தாத்தா அறிமுகம் செய்யப்படுகிறார்.

அப்பகுதியை ஆளும் மகாராஜா தன் ஊர்ப்பக்கம் வருகை தந்த போது அப் பகுதியின் பேஷ்கார் (வட்டாட்சியர் போன்று ஒரு பகுதியின் வருவாய் அதிகாரி. உருது மொழிச் சொல்) பதவி வகித்த தாத்தா வேளாவேளைக்கு மகாராஜாவுக்கு நல்ல சாப்பாடு போட்டு, மன்னிக்கவும் நல்ல விருந்து வைத்து செம கவனிப்புக் கவனித்தார். மனம் குளிர்ந்துபோன மகாராஜா அரண்மனைக்குத் திரும்பியதும் அப்பகுதி விளை நிலங்களையும் கிராமங்களையும் பேஷ்காருக்கு சாசனமாக எழுதிக் கொடுத்தார். அப்போது ஏற்கெனவே பயிர் செய்து கொண்டிருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்கிறீர்களா? சொல்லாமல் இருப்பாரா கதாசிரியர்! இது தான் நடந்தது:

‘தாத்தா அரண்மனைக்குப் போய் சாசனங்களையும் பட்டயங்களையும் வாங்கி வந்த எட்டு நாட்களுக்குள் இருபத்தோரு கிராமங்களில் ஆள்களைத் திரட்டினார். தங்களுடையதென்று எண்ணி உழுதுகொண்டிருந்த குடியானவர்களை நிலங்களில் இருந்தும் ஊர்களிலிருந்தும் மகாராஜாவின் சாசனங்களைக் காட்டி விரட்டினார். அடிதடிகளும் நாலு கொலைகளும் நடந்ததாகப் பேச்சுண்டு.

சாசனம் என்கிற கதைத் தலைப்பு இப்ப புரிஞ்சிப் போச்சி என்கிறீர்களா? சரியாப் புரிஞ்சிருக்காது. கதையே இப்பதான் தொடங்குது. பேஷ்கார் தாத்தாவுடைய கல்யாண குணங்கள் தெரியவேண்டாமா! அதைக் கதைசொல்லியின் வாயிலாகக் கேட்போமே! கதையின் தொடக்கப் பகுதியிலியே ‘‘தாத்தா வீட்டிலிருந்து எப்போது புறப்பட்டுப் போனார். எந்த ஊரில் யார் வீட்டிலிருக்கிறார். ராத்திரி எத்தனை மணிக்கு வருவார் என்பதெல்லாம் வீட்டில் யாருக்கும் தெரியாது. உள்ளூரில்தான் தங்கியிருக்கிறார் என்பதுபோல் நக்கலாக ஒருவர் சொல்ல,” “அதெல்லாமில்லை சிறைக்குளமோ, பண்ணாந்தையோ, கீரத்தையோ எங்கேயிருக்காகன்னு யார் கண்டா? என்று அடுத்த ஆள் பேசிவிடும்” ‘சில சமயம் விடியற்காலையில் சிவந்த கண்களோடு வந்து சேர்வாராம். வந்ததும் பரபரவென்று வீட்டு ஆட்கள் ஒரு அண்டா நிறையத் தண்ணீர் கொண்டு வந்து வாசலில் வைப்பார்கள். குளிரக் குளிரக் குளித்து வேட்டி துண்டை நனைத்துப் போட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைவாராம்’ என்று தாத்தாவை அறிமுகப் படுத்திவிடுகிறார் கதை சொல்லி. இதுக்குமேல தாத்தாவின் இராப்பயணத்தின் இரகசியத்தைக் கண்டறிய ஒரு துப்பறியும் சாம்புவோ சங்கர்லாலோ வாசகருக்குத் தேவையில்லைதானே? ஊர் அறிந்த ரகசியம்!

சரி. தாத்தாவ விட்டு விலகி கதை சொல்லியின் அப்பா தேடும் சாசனம் என்னவென்று பார்ப்போமே! அவர் தேடுவது ‘ஊர்க்கோடியில் குறவர் குடிசைகளுக்கு மத்தியில்’ ஒரு பிரமாண்டமான புளிய மரமும் அது நிற்கும் துண்டு நிலமும், தன் குடும்பத்திற்குரியது என்பதற்குச் சான்று கூறும் சாசனம் தான். அந்த ஒத்தப் புளியமரத்தில் இருந்து கிடைக்கும் புளி மிகவும் சுவையானது. குறவர் குடியிருப்புக்கு நடுவில் இருப்பதால் கொறட்டுப் புளி என்று அவர் அதை அழைப்பார். கதை சொல்லியின் அப்பாவுக்கு இது ‘ரொம்பப் பிடித்தமானது.‘ “வெகு தூரத்திலிருந்து பார்த்தால் ஒரு குன்று பச்சையாய் நிற்பது தெரியும். அருகில் வந்து அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் கிளைகளோடு அடர்ந்த அந்த மரத்திற்குள் ஒரு தோப்பு அசைந்தாடுவது போலிருக்கும்.”

ஆண்டு தோறும் புளியம்பழம் உலுக்க கதை சொல்லியின் அப்பா பத்து ஆட்களோடும் ஒரு கட்டுச் சாக்குகளோடும் அந்த ஒத்தப் புளியமரத்தடிக்குப் போவார். அவர் போகும் முன்னர் முதல் நாளே தான் வரப்போவதைச் சொல்லியனுப்பிவிடுவார். பன்றிக் கழிவுகளையெல்லாம் குடியிருப்பவர்கள் அகற்றி தரையைச் சுத்தமாக்கி வைத்திருப்பார்கள். புளி உலுக்கலன்று தனியாய் உள்ள ஒரு குடிசையில் இருந்து கிழவி ஒருத்தி தன் மகளுடன் வெளியே வருவாள். அக்கிழவியின் மகளை, ‘குறவர் கூட்டத்திலிருந்து விலகி தனியாய் ஆகாயத்திலிருந்து வந்து பிறந்தது போல கிழவியின் மகள் தாத்தா ஜாடையில் தாத்தா நிறத்தில் வந்து நிற்பாள். அப்பாவுக்கும் அந்தப் பொம்பிளைக்கும் பதினைஞ்சு வயசு வித்தியாசமிருக்கும்; சின்னவள்.’ என்று அறிமுகப்படுத்துகிறார் கதைசொல்லி. இதைப் புரிந்து கொள்ள ஓர் உரையாசிரியர் தேவையில்லைதானே!

தன்னுடன் உறவுகொண்டு வாழ்ந்து, தனக்கு ஒரு பெண் பிள்ளையையும் பெற்றுக்கொடுத்த ஒரு விளிம்பு நிலை சமூகத்துப் பெண்ணுக்குப் பேஷ்கார் தாத்தா வைத்துவிட்டுப் போன அற்பமான சொத்துதான் இந்தப் புளியமரமும் அது நிற்கும் நிலமும் என்பது வாசகனுக்குப் புரிந்துவிடுகிறது. கதை சொல்லியின் அப்பன்காரனுக்கும் இது வெளிப்படையாகத் தெரிந்த உண்மைதான். என்றாலும் பாவிப்பயல்! புளியமரத்தையும் அது நிற்கும் துண்டு நிலத்தையும் தனதாக்கிக்கொள்ள சாசனத்தைத் தேடிக்கிட்டேஏஏஏஏஏஏஏ இருக்கான். சரி கதை முடியப்போகுது. அதுக்கு முன்னாடி நடந்த இரண்டு நிகழ்வுகள் இருக்கே, அதுதான் கந்தர்வனை அடையாளம் காட்டுது.

வழக்கம் போல் புளியம் பழம் உலுக்கியபிறகு தன் காலால் சிறிது புளியம் பழத்தைத் தள்ளி கிழவிக்கென்று ஒதுக்குவது கதைசொல்லியின் அப்பாவின் வழக்கம். அது போல் ஒதுக்கியபோது அக்குவியலின் முன்னால் வந்த ஒருவன் ‘இதையும் அள்ளிக்கிட்டுப் போயிருங்க’ என்றான். அவன் வேறுயாறுமில்ல. கிழவியின் மருகன்தான் (பேஷ்கார் தாத்தாவுக்கும் தான்!). ‘சற்றுக் கலங்கிப் போனாலும் விட்டுக் கொடுக்காமல்’ “இதையும் அள்ளிக்கட்டுங்கடா” என்று சொல்லிவிட்டு அப்பா நடந்தார்.

இது நடந்த மறுவருடம் மறுநாள் புளியம்பழம் உலுக்கப்போவதாகக் கூறிவிட்டு வழக்கம் போல் பத்துப் பேரோடு போனார். ‘மரத்தடிக்குப் போகையில் தரையெங்கும் பன்றிக்கழிவுகள். எங்கும் அசிங்கமும் நாற்றமும்.’ கயிற்றுக் கட்டிலில் கிழவி உட்கார்ந்திருக்க, மகளும், மருமகனும் பிள்ளகளுடன் நின்றார்கள். குறவீட்டு ஆள்களும் மொத்தமாகக் கூடியிருந்தனர். கிழவியின் மகளைக் கடுமையாகப் பார்த்தவாறு “என்ன இதெல்லாம்” என்று அதட்டினார்.

“இனி மேற்பட்டு இந்த மரத்தை நாந்தான் உலுக்குவேன். இதிலே எனக்குப் பாத்தியதை உண்டு” என்று கிழவியின் மகள் பேசத் தொடங்கியதும் என்ன நடந்தது? கந்தர்வன் கூற்றாகவே கேட்போமே! அப்பாவுக்கு கால் நடுங்கியது. உதடு கோணியது. “போதும் போதும். பேச்சை நிறுத்து என்று அதற்கும் மேல் அந்தப் பொம்பிளை பேசப்போவதைப் பதறிப் போய் நிறுத்தினார்…….. தலையைச் சாய்த்துக் குனிந்து நடந்து வீடுவந்து சேர்ந்தார். அதற்கப்புறம் அப்பா ஆள்பத்தி அறைக்குள் நுழைந்து பெட்டியைத் திறந்து சாசனம் எதையும் எடுத்துப் பார்க்கவே இல்லை”.

கதை முடிந்தது. உயிருள்ள சாசனம் வாய் திறந்த பின்னர் எழுத்து வடிவிலான சாசனம் மதிப்பற்றுப் போனது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button