கட்டுரைகள்

இந்திச் சுமையினை இளைஞர் மேல் ஏற்றவேண்டாம்

மே.து.ரா.

பெரும்பான்மை மக்கள் இந்தி மொழி பேசுவதால் அந்த மொழியினை ஏற்றுக்கொள்வதுதான் முறை என்றும் இது நாட்டுப் பற்றுக்கான அளவீடாகத் திகழ்கிறது என்றும் கூறப்படுவது உண்மையில்லை.

முதலில் பெரும்பான்மையோர் பேசுகின்ற மொழியாக இந்தி உள்ளது என்பதே தவறானதாகும். இதனையொட்டி, ஒரு மாநிலத்தில் பெரும்பாலான இன மக்கள் பேசுகின்ற மொழியை அந்த மாநிலத்தின் பொது மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் கீழமை நீதிமன்ற மொழியாகவும் கல்வி மொழியாகவும் இன்ன பிற பயன்பாடுகளின் மொழியாகவும் ஏற்றுக்கொள்வதில் பிறருக்குத் தயக்கம் இருப்பதில்லை. ஆனால், இந்திய ஒன்றியத்தில் மிகுதியானோரால் இந்தி பேசப்படுவதால், அதனை ஏற்றுக்கொள்வதுதான் முறையானதாக அமையும் என்பதும் பொருந்தாத ஒப்பீடாகும்.

இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டோர் 43.63% மட்டுமே என்று 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் கூறுகிறது. மைதிலி, பேசுப்புரி, மகாகி (பீகார்), விரசு, அவதி, கனோசி (உ.பி.), புந்தேல்கண்டி (ம.பி), சூரசேனி (குசராத்), அரியானாவி (அரியானா) போன்ற பல மொழிகளை இந்தி உள்வாங்கிக் கொண்டது. இதனால்தான், இந்தி மொழி பேசுவோரின் அளவு கூடியுள்ளதாகத் தெரிகிறது.

இந்திய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள பிற மொழி இனங்களின் எண்ணிக்கை அளவோடு ஒப்பிடுகையில் இது மிகுதி என்பதை மறுப்பார் இல்லை. அதே வேளையில், பிற மொழி பேசுவோர் இந்தி பேசுவோரைவிடக் கூட்டளவில் மிகுதியாக இருக்கின்றனர் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

ஆனாலும், இந்தி மொழியினைத் தாய்மொழியாகக் கொண்டோர் இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பரவலாகக் குடியேறியிருக்கவில்லை. ஆறு அல்லது ஏழு மாநிலங்களில் மட்டுமே அவர்கள் குவிந்து கிடக்கின்றனர் என்றும் கூறலாம்.

அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் பதினான்கினைப் பேசுவோர் அங்குள்ள மக்கள் பிரிவினர் ஆவர். அவர்களுக்கெல்லாம் இந்தி தாய்மொழியாக இருக்கவில்லை; தெரிந்த மொழியாகவும் இருக்கவில்லை.
இந்திய ஒன்றிய மாநிலங்களின் நிலப்பரப்பு முழுதும் பரவலாகப் பேசப்படும் மொழியாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட குறுகிய பகுதியில் மட்டுமே பெசப்படுவதாகவே இந்தி இன்று வரை தொடர்கிறது.

இந்தி பேசும் 43.63% என்போர், இந்திய மாநிலப் பகுதிகளெங்கும் விரவிக் கிடைக்கவில்லை. ஆகவேதான், பெரும்பான்மையோர் பேசும் மொழி என்ற கூற்று அடிப்படையில்லாமல் சரிந்துவிடுகிறது.

அட்டவணை எட்டில் இடம் பெற்றுள்ள மொழிகளில் பெரும்பாலானவை, குறிப்பிட்ட இன மக்களின் தேசிய மொழிகளாக விளங்குகின்றன. இந்தி பேசுவோர் பல தேசிய இனங்களைச் சார்ந்தோர் ஆவர். அவர்களுக்கெனத் தனித்தனியே தேசிய மொழிகள் இருக்கின்றன. இதனால், அவர்களில் பலரால் பேசப்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட மக்கள் இனத்தின் தேசிய மொழி என்ற பெருமையை இந்தி பெறவில்லை.

இதனால், இந்தி ஒரு தேசிய மொழி அல்லது இணைப்பு மொழி அல்லது தொடர்பு மொழி என்ற தகுதியினை நடைமுறையில் எவ்வகையிலும் பெற்றுவிடவில்லை. இதனை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இந்தியும் ஒரு குறிப்பிட்ட குறுகிய பகுதியில் வாழ்கின்ற மக்களால் பேசப்படுகின்ற ஒரு மொழி என்ற நிலை மட்டுமே இன்று வரை நீடித்துக்கொண்டிருக்கிறது.

மாறாக, எந்த மாநிலமாக இருந்தாலும், அந்த மாநில இன மக்களின் மொழி, அந்தக் குறிப்பிட்ட மாநிலத்தில் 80 அல்லது 90% மக்களுக்கு மேலாகத் தாய் மொழியாகவும் தெரிந்த மொழியாகவும் பரவிக் கிடக்கிறது. இதனால், அந்த மாநில இன மக்களின் தேசிய மொழியாக, ஆட்சி மொழியாக, தொடர்பு மொழியாக, இணைப்பு மொழியாக அந்த மொழி இயல்பாக அமைந்துவிடுகிறது.

இந்த வேறுபாட்டினைத்தான் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். இந்த அடிப்படை நிலைமைகளைத்தான் இந்தியை வலியுறுத்துவோர் காணத் தவறுகின்றனர்.
இதனாலேயே, இந்திய ஒன்றியத்தின் தேசிய மொழியாக மட்டுமின்றி, இணைப்பு அல்லது தொடர்பு மொழியாகும் தன்மைகளையும் தகுதிகளையும் இந்தி இழந்துவிடுகிறது. அத்துடன், பல தேசிய இன மக்கள் வாழும் மாநிலங்களின் ஒன்றியமாக மட்டுமே இந்தியா உருவாக்கப்பட்டிருப்பதால், ஒன்றிய நாடு என்ற அளவுகோலுக்கு அப்பால், அதற்கான தனித் தேசியம் எதுவுமில்லை.

மேலும், தேசிய நீரோட்டத்தில் கலப்பதென்பது, இந்தி மொழி பேசுவதாலோ, ஒரு குறிப்பிட்ட கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்றுக்கொள்வதாலோ, வேறு எத்தகைய முறையிலோ மட்டும் வருவதில்லை. இன்னும் ஒற்றைத் தன்மையை அனைவர்பாலும் புகுத்துவதால் செயற்கையாகவும் தேசிய நீரோட்டம் உருப்பெற்றுவிடுவதில்லை.

பல்வேறு இனங்களின் தனித்தன்மையுள்ள சமூக, பொருளிய, பண்பாட்டு, மொழி போன்ற போக்குகளை ஏற்றுக்கொண்டு, அவற்றினூடாக மக்கள் நலன்களைப் பேணி வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் இணைந்து செயல்படுவது மட்டுமே தேசிய நீரோட்டத்தில் கலப்பதாக இருக்க முடியும்.

இந்த அடிப்படைகளைப் புறக்கணித்துவிட்டு, இந்திய இன மக்களின் ஒன்றியத்தை, சமயம், மொழி, ஆட்சியமைப்பு, கல்வி, பண்பாடு, உணவு, உடை என்பன போன்ற இன்னும் பல வழிகளில் ஒற்றைத் தன்மையுடையதாக்கக்கூடிய எந்த முயற்சியும் பயன் தராது. அவை பிணைப்பதற்கு மாறாகப் பிரிவினையைத்தான் முன்னெடுக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.

இந்திய ஒன்றிய மக்களை அடிமைப்படுத்திய வேற்று நாட்டு மொழியாக இருப்பதாலேயே ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளாமல், உள்ளூர் இந்தியை ஆட்சி மொழியாக்கிய அடிப்படையே தவறானதாகும். ஏனெனில், இந்தியாவைப் பொருத்த மட்டும், இந்தி பேசாத இன மக்களுக்கு இந்தி வேற்று மொழியாகத்தான் இருக்கிறது. இப்படியான பல முரண்களை மேலும் மிகுதிப்படுத்தும் வகையில், தற்போது பா.ச.க. முன்னெடுத்து வரும் சமூக, பொருளிய, பண்பாட்டு, அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டு பார்க்கும்போது, இந்தி அல்லது அவர்களது மனதிலிருக்கும் சமக்கிருதம் பிறருக்கு வேற்று மொழி என்பதற்கு அப்பால், அடிமைப்படுத்தும் மொழியாகவும் உருவெடுத்துக்கொண்டிருப்பதை மறுக்க இயலாது.

இதனால்தான், தேசியக் கல்விக் கொள்கைக்கும் தடைகள் தானாகத் தோன்றிவிடுகின்றன. பாடத்திட்டம் எதுவாக இருந்தாலும் அறிவியல், கணக்கு போன்ற அடிப்படைப் பாடங்களில் பெருத்த வேறுபாடுகள் இருக்கப்போவதில்லை. முதல் அல்லது மூன்றாவது மொழி என்பதோடு மட்டும் எதிர்ப்புகள் அடங்கிவிடவுமில்லை. பண்டைய கல்வி முறை என்று சனாதனத்தைப் புகுத்துவதும், இடைநிற்றலுக்கான இடைச்செருகல்களைத் திணிப்பதும், குலக்கல்விக் கூறுகளைச் சேர்ப்பதும், இவை போன்ற வேறு பல அறிவியலுக்கு அப்பாலான சமூக, பண்பாட்டுப் படையெடுப்புகளுக்கும் சேர்த்துத்தான் எதிர்ப்புகள் எழுகின்றன.

சமூக, பொருளிய, பண்பாட்டு, வரலாற்றுப் பின்புலத்தில் வேறுபட்டு, 144 கோடி என்ற அளவில் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் பெருகிக் கிடக்கும் பல இன மக்கள் வாழும் ஓர் ஒன்றியத்தில், அனைவருக்கும் ஒரே கல்விக் கொள்கை என்பது பொருந்தும் என்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அந்தந்த மாநிலங்களின் வேண்டல்களுக்கு ஏற்றதானதொரு கல்விக் கொள்கையை, அவர்களது வரலாற்றுப் பின்புலத்தில், அவர்களே வகுத்துக்கொள்வதில் சிக்கல்களும் எழப்போவதில்லை; தடைகளும் வர வாய்ப்பில்லை.
ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரையில் தாய் மொழியில்தான் கற்பிக்கவேண்டும் என்று தேசியக் கல்விக் கொள்கை வலியுறுத்துவதால், தமிழ் போன்ற மாநில மொழிகளை அது ஊக்குவிக்கிறது என்று கூறுவதும் வேடிக்கையாகத்தான் உள்ளது. குழந்தைகளிடம் இனிப்பைக் காட்டி, இருப்பதையும் பறிக்கும் முயற்சி இது.

இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களும் தொடக்கநிலைக் கல்விக்குத் தாய் மொழியைப் பயன்படுத்தவே விரும்புகின்றன. ஆனால், பெற்றோர் மனநிலை, வணிகச் சூழல் போன்றவை இதற்குத் தடையாக இருக்கின்றன. இவற்றை மாற்றுவதற்கான போராட்டங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், ஒன்றிய அரசு நடத்துகின்ற கேந்திரியப் பள்ளிகள், நவோதயாப் பள்ளிகள், பிரதமரின் வளரும் இந்தியாவுக்கான பள்ளிகள் (பிஎம்ஸ்ரீ) ஆகியவற்றில்கூட, தேசியக் கல்விக் கொள்கையில் கூறியுள்ளவாறு தொடக்கக் கல்வியினைத் தாய் மொழியில் தருதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், மாநில மொழிகளைப் பயிற்று மொழியாக்கும் வாய்ப்பு என்று சொல்லுவதை நம்ப முடியவில்லை.

ஏனெனில், தாய்மொழிக் கல்வியினூடாக, தேர்வுகள் அல்லது மதிப்பீடுகள் என்ற பெயரில் இடைநிற்றலுக்கான சூழலும் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்து, இடைநிலைக் கல்வியில் புகுத்தப்படும் அறிவியலுக்கும் இன்றைய வளர்ச்சிகளுக்கும் பொருத்தமில்லாப் போக்குகளையும் கணக்கில் கொள்ளாமல் இருந்துவிட முடியாது. தேசியக் கல்விக் கொள்கை, இந்தித் திணிப்புக்காக மட்டுமல்லாமல், அதன் உள்நோக்கங்களுக்காகவும் மறுக்கப்படுகிறது.

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்று, நவோதயா பள்ளிகள், பிரதமரின் வளரும் இந்தியாவுக்கான பள்ளிகளைத் தமிழ்நாட்டில் தொடங்கினால், நிதி உதவி பெருமளவில் கிடைக்கும் என்பதில் உள்ள மாயத்தை மறந்துவிடக்கூடாது. குறிப்பிட்ட சில தகுதி கொண்ட மாணவர்களுக்கு மட்டும் சிறப்புக் கல்வியினைத் தருவதற்காக ஒன்றிய அரசால் நடத்தப்படும் அல்லது தேர்ந்தெடுக்கப்படும் பள்ளிகளுக்கு நிதி உதவி செய்வதுதான் அந்தத் திட்டங்களின் நோக்கம். மாறாக, அனைத்துப் பள்ளிகளுக்கும் பயன்படத்தக்கவாறு மாநிலங்களுக்குத் தரும் நிதி ஒதுக்கீடு அல்ல அவை.

எடுத்துக்காட்டாக, 8,66,361 தொடக்கப் பள்ளிகள் உள்ள உத்திரப் பிரதேசத்தில் 35 பள்ளிகளும், 8,459 மேல்நிலைப் பள்ளிகளில் 141 பள்ளிகளும் மட்டுமே பிரதமரின் வளரும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஒன்றிய அரசின் நவோதயாப் பள்ளிகள் மாவட்டத்திற்கு ஒன்றுதான் நடத்தப்படுகின்றன. அதாவது, உ.பி.யில் 76 நவோதயாப் பள்ளிகளே உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையும் குறைவு.

ஒன்றிய அரசின் இந்தப் பள்ளிகள் மேல்குடியினரை உருவாக்கும் முயற்சிகளேயன்றி, அனைவருக்குமாக அமையவில்லை. இந்தியினை மூன்றாவது மொழியாக ஏற்றுக்கொண்டாலும், நவோதயா மற்றும் பிரதமர் பள்ளிகள் எங்கோ ஒன்றுதான் இருக்கும். இந்தப் பள்ளிகளில் அனைத்தும் கட்டணமின்றிக் கிடைக்கின்றன என்றாலும், 1 அல்லது 2% மாணவர்களே பயன் பெறுவர். தெளிவாகக் கூறவேண்டுமென்றால், ஏறத்தாழ 2% மாணவர் பயனடைவர் என்பதற்காக 98%த்தினர் மீது இந்தி திணிக்கப்படும். இதற்காக, இந்தித் திணிப்பையும் தேசியக் கல்விக் கொள்கையையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துவது நேர்மையானதாகத் தெரியவில்லை.

உ.பி. போன்ற மாநிலங்களில் தமிழ் மூன்றாவது மொழியாக இருக்கும்போது, தமிழகம் மட்டும் இந்தியை ஒதுக்கிவிட்டுத் தனித்திருக்கக்கூடாது என்றும் எடுத்துக்காட்டப்படுகிறது. இந்தி பேசும் மாநிலங்கள் உள்ளிட்டு எதுவாக இருந்தாலும், தமிழர் அல்லது பிற மொழியினர் உள்ள பகுதிகளில் அந்தந்த மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன என்பதை எவரும் மறுக்கவில்லை. ஒன்றிரண்டு பள்ளிகளில் இது இருக்கலாம். இவையெல்லாம் பெரிதும் தமிழ் அல்லது பிற மொழி அமைப்பினர் நடத்தும் பள்ளிகளாகவே இருக்கும். இது எல்லா மாநிலங்களில் உள்ள மொழிச் சிறுபான்மையினருக்கும் பொருந்துவதாகும். பொதுப் பள்ளிகளில் தமிழ் அல்லது தொடர்பில்லாத பிற மாற்று மொழிகள் மூன்றாவதாகக் கற்பிக்கப்படுகின்றனவா என்பதைத்தான் பார்க்கவேண்டும்.

அத்தகையதொரு நிலை இந்தி மாநிலங்களில் இல்லை என்பது வெளிப்படையான உண்மையாகும். மூன்றாவது மொழி என்பது அவர்களது பாடத்திட்டத்திலேயே இல்லாதபோது, வேறொரு மொழி கற்பது என்பதைக் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது.
அய்ரோப்பிய நாடுகளில் தொடக்க நிலையில் பல மொழிகள் கற்பிக்கப்படுகின்றன, இளம் பருவத்தில் கூடுதலான மொழிகளைக் கற்பது சுமையாக இருக்காது என்றெல்லாம் உண்மைக்கு மாறாகப் பேசப்படுகிறது. அய்ரோப்பிய நாடுகளில் தாய் மொழியுடன் அறிவு மொழியாக ஆங்கிலம், ரசியன், செர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளில் ஏதாவதொன்று கற்பிக்கப்படுகிறது. பெரும்பாலும் அவர்கள் கற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள், ஒரே மொழி இனத்தைச் சார்ந்தனவாகவே இருக்கின்றன என்பதையும் பார்க்கவேண்டும்.

இளம் அகவையில் பல மொழிகளைக் கற்றுக்கொள்வது, மாணவர் நல்ல அறிவாற்றல் வளர்ச்சியை அடையப் பயப்படும் என்று தேசியக் கல்விக் கொள்கையினை உருவாக்கிய குழுவின் தலைவரும் முன்னாள் இந்திய வானிலை ஆய்வு அமைப்பின் தலைவருமான கே. கத்தூரிரங்கன் குறிப்பிடுகிறார். இது கல்வியாளர் அல்லது உளவியல் வல்லுநர்களால் எப்போதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

எடுத்துக்காட்டாக, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே கற்றுத் தரப்படுகிறது. ரசியா, செர்மனி, பிரான்சு, சீனா போன்ற வளர்ந்த நாடுகளிலும் தொடக்க, இடைக்கல்வி நிலைகளில் இரண்டாவது மொழி என்பதே அவர்களது கல்வித் திட்டத்தில் இடம்பெறவில்லை. விலக்காக ஒன்றிரண்டு இடங்களில் இருக்கலாம்; அவ்வளவுதான். கூடுதல் மொழிகளைக் கற்பது கூடுதல் அறிவாற்றலைத் தரும் என்பது உண்மையென்றால், வளர்ச்சியடைந்த நாடுகள் இத்தகைய நடைமுறையினைப் பின்பற்றியிருக்கும்.

சமக்கிருதம் மற்றும் இந்தி அல்லாத மக்கள் மேல் சுமைகளை ஏற்றுவதற்கான மறைமுகத் திட்டங்களாகவே கத்தூரிரங்கனின் கூற்று அமைந்திருக்கிறது.

சென்னையில் உள்ள இந்திப் பரப்பு அவையில் படிப்போர் கூடி வருகின்றனர், அதனால் இந்தியைப் பள்ளிகளிலேயே கற்றுக் கொடுத்துவிடலாம் என்பது கேட்பதற்கு நன்றாகத்தான் தெரிகிறது. மக்கள் தொகை கூடும்போது, இந்தி படிப்போர் எண்ணிக்கையும் கூடுவது இயல்புதான். சென்னை இந்திப் பரப்பு அவையில் தமிழ்நாட்டிலிருந்து படிப்போர் மிகுந்தும் பிற மாநிலங்களைச் சார்ந்தோர் குறைந்தும் காணப்படுகின்றனர். தமிழ்நாட்டின் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படாவிட்டாலும், அந்த மொழியினைப் பயின்று கொள்வதற்குத் தடையேதும் இருக்கவில்லை என்பது எளிதாகவே புரிந்துவிடுகிறது. சென்னையில் உள்ள இந்திப் பரப்பு அவை தனது பணிகளைத் தொடரத் தமிழ்நாடு அரசும் மக்களும் தடைகளை ஏற்படுத்திவிடவில்லை.

விருப்பமுள்ளோர் இந்தி கற்றுக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. 2023இல் தமிழ்நாட்டில் 1.29 கோடிப் பள்ளி மாணவர் இருந்தனர். ஆனால், சென்னை இந்திப் பரப்பு அவையில் 2024 இல் இந்தி படித்தோர் 3,50,665 மாணவர்தாம். இவர்களில் தமிழ்நாட்டில் உள்ள பிற மொழி பேசுவோரும் அடங்குவர் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். 2%க்குச் சற்று மேலான மாணவர்களின் விருப்பத்துக்காக, அனைவரையும் இந்தி படிக்குமாறு வற்புறுத்த வேண்டியதில்லை.

ஒன்றிய அரசு மற்றும் சார்ந்த நிறுவனங்களின் பணிகளுக்கான தேர்வுகளை எழுத இந்தி துணையாக இருக்கும் என்பது அவலத்தின் எல்லையாகும். இந்திய ஒன்றியத்தைப் பொருத்தமட்டில் 5 கோடிக்கு மேலாக இருப்பவை 10. இரண்டு கோடிக்கு மேல் 18. ஒரு கோடிக்கு மிகையாக 21 மாநிலங்கள் உள்ளன. ஒரு கோடிக்கும் குறைவாக இருந்தாலும், 10 சிறு மாநிலங்கள் அய்ரோப்பிய நாடுகள் பலவற்றையும்விட மக்கள் அளவில் மிகுதியானவை.
இந்த நிலையில், மாநிலங்களின் ஒன்றியமாகத் திகழும் ஒரு நாட்டில், அந்த நாட்டின் அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகளின் வேலைவாய்ப்புகளுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியை மட்டுமே சார்ந்திருக்கவேண்டும் என்ற நிலை இருப்பது பெரும் இழுக்காகும். எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளிலும் வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகள் நடத்தப்படவேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாகும்.

ஆங்கிலம் அல்லது இந்தியில் தேர்வுகளை எழுதுகின்ற போது, இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டோர் மிகுந்த பயன் பெறுவதும், வேற்று மொழியினருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதும் கண்கூடு. ஏற்றத்தாழ்வுகளுக்கும் இது இடம் தந்துவிடுகிறது. இதனாலேயே இந்தி பேசாத மக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.
தமிழ்நாடு அரசு தனது குறைகளை மறைப்பதற்குத்தான் இந்தித் திணிப்பினைக் கையில் எடுத்துள்ளது என்பது அரசியல் சார்ந்த குற்றச்சாட்டாகும். விடுதலைக்கு முன்னர் 1938ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பல அரசியல் கட்சிகள் பொறுப்பில் இருந்தபோதிலும், இந்தித் திணிப்புக்கான எதிர்ப்புத் தீ அணையாமல் நீடித்து வருகிறது.

பயன்பாட்டு மொழியாக இல்லாத சமக்கிருதம் கல்வி அமைப்பில் நடுவப் புள்ளியாக இருக்கும் என்றும், சமக்கிருதத்துக்கு அப்பால்தான் மேலும் பிற மொழிகள் கற்றுத் தரப்படலாம் என்றும் தேசியக் கல்விக் கொள்கை வெளிப்படையாகவே குறிப்பதால்தான் அய்யம் எழுகிறது. சமக்கிருதத்துக்காகவே இந்தி முன்மொழியப்படுகிறது என்ற அச்சமும் தோன்றுகிறது.

இந்தித் திணிப்பினால் தமிழ் மொழி அழிந்துவிடும் என்ற நிலை என்றும் இருந்ததில்லை. கடந்த பல நூற்றாண்டுகளாகச் சமக்கிருதம் பண்பாட்டு அளவிலும், வேறு சில மொழிகள் ஆட்சி வலுவிலும் தமிழ்நாட்டில் கோலோச்ச முயன்றன. ஆனால், இவற்றையெல்லாம் மீறித்தான் தமிழ் மேலெழுந்துள்ளது. இன்றும் உயிர்ப்புடன் நிலைத்திருக்கிறது.
5300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பைப் பயன்படுத்திய ஓர் இனம், எழுத்துக்களை அறிமுகப்படுத்திய ஒரு மொழி, பிற மொழிகளின் தாக்கத்தால் தடுமாறிவிடும் என்றோ, தானாகத் தாழ்ந்துவிடும் என்றோ எவரும் நினைக்கவில்லை.

ஆனால், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் அரசமைப்புள்ள ஒரு நாட்டில், வீணாக மொழிச் சுமையினை ஏற்றி முன்னேற்றத்தை முடக்கச் செய்துவிடக்கூடாது என்பதால்தான், எதிர்க் குரல்கள் எழுகின்றன; தடுப்புகள் உருவாகின்றன; தற்காப்புகள் வேண்டியதாகின்றன.
ஒரு மொழியை மிகுதியாகப் படிக்கவேண்டுமா என்பதல்ல சிக்கல். அந்த மொழியினால் எத்தகைய பயனும் இல்லை என்பதுதான் இங்கு முன்னிற்கிறது; திணிப்புதான் முன்தோன்றுகிறது. இந்த உண்மைகளைத்தான் பா.ச.க.வும் ஒன்றிய அரசும் இந்தித் திணிப்பாளர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button