அறிக்கைகள்

போராடும் ஜனநாயக உரிமையை மறுப்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

போராட்டத்தில் ஈடுபட முயன்ற டாஸ்மாக் பணியாளர்களையும் தொடங்கிவைத்த தோழர் இரா.முத்தரசன் உள்ளிட்டோரையும் கைது செய்திருப்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு அரசு கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து சில்லறை மதுபான வியாபாரத்தை நேரடியாக மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் சில்லறை மதுபான வியாபாரப் பிரிவுக்கு 34 ஆயிரம் பணியாளர்கள் ஒப்பந்தப் பணியாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர். கடந்த 21 ஆண்டுகள் பணித் தொடர்ச்சி இருந்தும் பணி பாதுகாப்பற்ற பணிச் சூழலில் பணி புரிந்து வருகின்றனர். அவர்கள் 2006 ஆம் ஆண்டு முதல் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.

தற்போது பணி நிரந்தரம், அரசுப் பணியாளர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 11.02.2025 ஆம் தேதி தலைமைச் செயலகம் முன்பு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர்.

கடந்த 2024 அக்டோபர் 2 ஆம் தேதி டாஸ்மாக் பணியாளர்கள் முன் வைத்த கோரிக்கைகள் மீது அரசு தரப்பில் சுமூகத் தீர்வு காண முயற்சி எடுப்பார்கள் என எதிர்பார்த்தனர். கடந்த நான்கு மாதங்களாக மாவட்டம் தோறும் போராட்ட ஆயத்த மாநாடுகள் நடத்தப்பட்டன. இன்று 11.02.2025  காலை 10 மணிக்கு தொங்கு தோட்டச்சாலை அருகில் டாஸ்மாக் பணியாளர்கள் திரண்டு சங்கத் தலைவர் நா.பெரியசாமி முன்னாள் எம்.எல்.ஏ தலைமையில்  தலைமைச் செயலகம் செல்ல முயற்சிக்கும் போது, காவல்துறையினர் தடுத்து கைது செய்து, அண்ணா கலையரங்கிலும், திருவல்லிக்கேணி அரசு சமுதாயக் கூடத்திலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை அடைத்து வைத்துள்ளனர்.

போராட்டத்தை தொடங்கி வைத்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ஆதரித்துப் பேசிய ஏஐடியூசி தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் த.தனசேகரன், விடுதலை சிறுத்தைகள் தொழிலாளர் முன்னணி பொதுச் செயலாளர் இ.முத்துபாண்டி, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத் தலைவர் ஏ.இ.பாலுசாமி, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர் மற்றும் பணியாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் மாரியப்பன், அகில இந்திய பார்வாட் பிளாக் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் மாயாண்டி உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (10.02.2025) போராட்டத்திற்காக புறப்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வழிமறித்து கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் வீட்டுக்காவலில்  வைக்கப்பட்டுள்ளனர். இப்படிப் போராடும் ஜனநாயக உரிமைகளை மறுக்கும் தமிழ்நாடு காவல் துறையின் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உட்பட கைது செய்யப்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button