
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை மாற்றியமைக்கக்கூடிய ஆணைகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துக் கொண்டிருப்பதை அவ்வப்போது காண்கிறோம். மாநில உரிமைகளை மறுப்பதாகவோ, மாற்றுவதாகவோ அவை அமைந்துவிடுகின்றன.
உயர் மருத்துவக் கல்வியில் மாநில அளவிலான, அதாவது இருப்பிட அளவிலான இட ஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்று அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதியர்களைக் கொண்ட அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் இணை என்று கூறி, சமயம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றைக் கொண்டு வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது என்ற அரசமைப்புச் சட்டத்தின் 15ஆவது பிரிவினை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனை அடிப்படையாகக்கொண்டு, இந்திய ஒன்றியத்தில் வாழும் அனைத்து மாநில மக்களும் இந்தியக் குடிமக்கள்தாம் என்று கூறும் 5ஆவது அரசமைப்புச் சட்டப் பிரிவினை மேற்கோள் காட்டி, மாநில அல்லது வாழும் பகுதி அளவிலான பாகுபாடுகளை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் எடுத்துக் கூறியுள்ளது.
5ஆவது அரசியல் சட்டப் பிரிவு என்பது குடியுரிமையை மட்டும் குறிப்பது என்பதை மனதில் கொள்ளவேண்டும். குடியுரிமை பற்றிய பிரிவினை எடுத்துக்கொண்டு, மாநில உரிமைகளைப் பறித்துவிட முடியாது என்பதை ஆழமாக நோக்க உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது என்றுதான் கூறவேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் பிரிவு, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்தான் என்பதை உறுதிபட விளக்கியுள்ளது. மாநிலங்கள் அனைத்தும் சேர்ந்த நிலப் பகுதிகளின் ஒன்றியம்தான் இந்தியா என்பது இதன் தெளிவான பொருளாகும்.
இதனை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, மாநில மக்களின் உரிமைகளை மறுப்பது அல்லது பறிப்பது என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையினையே ஆட்டம் காணச் செய்வதாகும். இது எவ்வாறு உச்ச நீதிமன்ற நீதியர்களின் பார்வைக்கு வரவில்லை அல்லது கொண்டுவரப்படவில்லை என்பதுதான் புதிராக உள்ளது.
அடிப்படையில் ஒன்றினை இங்கு மறந்துவிடக்கூடாது. இந்திய ஒன்றியம் என்பது தன்னுரிமையும் தனியுரிமையும் பெற்ற நாடாக எப்படி விளங்குகிறதோ அதே போன்று, ஒன்றியத்துக்குள் இடம்பெற்றிருக்கின்ற மாநிலங்கள் அனைத்தும் தமக்கே உரிய வகையில் தன்னுரிமையும் தனியுரிமையும் பெற்ற அலகுகளாக – பகுதிகளாக அமைந்திருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இதனை ஏற்காத நிலையில்தான், ஒரே நாடு ஒரே வரலாறு, ஒரே நாடு ஒரே இனம், ஒரே நாடு ஒரே பண்பாடு, ஒரே நாடு ஒரே சமயம், ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மொழி என்பன போன்ற பல்வேறு முன்னெடுப்புகளைப் பாரதிய சனதாக் கட்சி எடுத்து வருகிறது. இதில் தற்போது ஒரே நாடு ஒரே மக்கள் என்ற நிலையினை எடுக்க ஒன்றிய பா.ச.க. அரசு முயற்சிக்கும் கட்டத்தில், அதனை உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியிருப்பது அதிர்வினைத் தருவதாக இருக்கிறது.
ஒரு மாநிலத்தில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிகள் யாவும் முழுமையாக அந்த மாநில அரசின் பொருள் செலவில் நடத்தப்படக்கூடியனவாகும். இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், மாநில மக்கள் தரும் வரிப் பணத்தில் இருந்துதான் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றை ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து மாநிலங்களையும் சார்ந்த பொதுவான கல்லூரிகள் என்று வகைப்படுத்தி, நீட் போன்ற அனைத்திந்தியத் தேர்வு வழியில் சேர்க்கையினை வலியுறுத்துவதே அரசமைப்புச் சட்டத்துக்கு மாறானதாகும். அடுத்துச் சேர்க்கையையும் அனைத்திந்தியத் தர வரிசைப் பட்டியலைக் கொண்டு நிரப்பவேண்டும் என்பது ஏற்கத்தக்கதல்ல.
மாநிலத்தில் உள்ளோர்க்கு மட்டும் என்று இருப்பிட – வாழிட அளவில் வரையறை செய்து இட ஒதுக்கீடு செய்யாமல், ஒன்றிய அளவிலேயே சேர்க்கையினை நடத்தவேண்டும் என்று கூறுவது அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதாகத் தெரியவில்லை.
மாநிலங்களின் இருப்பை, மாநிலத்தில் வாழும் மொழி – இன மக்களின் தனித்தன்மைகளை ஏற்காத போக்கினை, அண்மையில் பா.ச.க. ஒன்றிய அரசுடன் சேர்ந்து உச்ச நீதிமன்றமும் கடைப்பிடித்து வருவதாகத் தெரிகிறது. இது இந்திய ஒன்றியம் என்ற கட்டுக்கோப்புக்கு உகந்ததாக இருக்கவில்லை.
அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது இணைப்பில், ஆட்சிப் பொறுப்புகள் அனைத்தும் ஒன்றியப் பட்டியல், மாநிலப் பட்டியல், ஒத்திசைவுப் பட்டியல் என்று பகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள், மாநிலப் பட்டியலில் உள்ள பொறுப்புகளைத் தன்னுரிமையுடனும் தனியுரிமையுடனும் மாநிலச் சட்டப்பேரவை வழியாகச் சட்டம் இயற்றிச் செயல்படுத்த முழுமையாக – முற்றாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில், நேரிடையாகவோ மறைமுகமாகவோ தலையிட ஒன்றிய அரசுக்கு எத்தகைய உரிமையும் வழங்கப்படவில்லை.
மருத்துவக் கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இருந்தாலும், மாநில மக்களின் பொருள் உதவியுடன் செயல்படும் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையினை முறைப்படுத்த அல்லது இட ஒதுக்கீடு செய்ய மாநில அரசுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது. தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இதனை மறுக்க முயல்கிறது.
இளநிலை (எம்.பி.பி.எசு.) மருத்துவக் கல்வியையும், உயர் மற்றும் சிறப்பு நிலை (எம்.டி., டி.எம். போன்றவை) மருத்துவப் படிப்புகளையும் உச்ச நீதிமன்றம் வேறுபடுத்திப் பேசுகிறது. இளநிலை மருத்துவக் கல்விக்கான சேர்க்கையில் மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு மட்டும்தான் இடம் என்று ஒதுக்கீடு செய்யலாம்; ஆனால் உயர், சிறப்பு நிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் தரமும் தகுதியும் பார்க்கவேண்டும் என்பதால், மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் உள்ள இடங்கள் யாவும் அனைத்திந்திய அளவில் தர வரிசை முறைச் சேர்க்கையில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் எனத் தீர்ப்புப் பேசுகிறது.
இளம் நிலை மருத்துவப் படிப்பில் தகுதி அடிப்படையில் சேர்ந்து கல்வியை முடித்த மருத்துவர்கள்தாம், பின்னர், உயர், சிறப்பு நிலை மருத்துவக் கல்விக்கு வருகிறார்கள் என்பதை உச்சநீதிமன்றம் ஆழ்ந்து பார்க்கவில்லை. இளம் நிலை மருத்துவப் படிப்பையும் உயர், சிறப்பு நிலை மருத்துவப் படிப்புகளையும் தகுதியடிப்படையில் பிரித்துப் பார்த்து, மாநில அளவில் சேர்க்கை, ஒன்றிய அளவில் சேர்க்கை என்று வேறுபடுத்துவது முறையாகத் தெரியவில்லை.
இந்திய ஒன்றியத்தில் குடியுரிமை கொண்டோர், ஒன்றியத்தின் எந்த மாநிலத்திலும் அல்லது எந்தப் பகுதியிலும் குடியேற உரிமையுண்டு என்பதைக்கொண்டு, மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையையும் அதோடு இணைத்துப் பார்ப்பது பொருத்தமாகப் படவில்லை.
பணி அளவில் அல்லது விருப்பு அளவில், ஒரு மாநிலத்தைச் சார்ந்தவர் இன்னொரு மாநிலத்திற்குச் செல்வது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால், நிலையாக அந்த மாநிலத்தில் தங்குவதாக முடிவு செய்தாலன்றி, அவர்கள் குடியேறிய மாநிலத்தவராக மாறி விடுவதில்லை. ஆதார் போன்ற ஆவணங்களில் முகவரியினை மாற்றிக்கொண்டு நிலையாக வாழ்வதற்குத் தங்கினால் மட்டுமே, குடியமர்ந்தால் மட்டுமே அவர்கள் வாக்காளர் போன்ற உரிமைகளைப் பெற முடியும்.
ஆனால், உயர், சிறப்பு நிலை மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வேற்று மாநிலத்தவர் எவரும், படிப்பு முடிந்த பின், தாங்கள் படிப்பை முடித்த மாநிலத்திலேயே தங்கிவிடுவதில்லை. ஒரு மாநில அரசின் செலவில் படித்துவிட்டு, அவர்கள் தங்கள் மாநிலத்திற்குத் திரும்பச் சென்று விடுகிறார்கள் என்பதை உச்ச நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை.
ஒவ்வொரு மாநிலமும் தமது மக்களின் வேண்டல்களையொட்டி, மருத்துவ இடங்களையும் அவற்றுக்கான கட்டமைப்புகளையும் தமது செலவில் உருவாக்கிக் கொள்கிறது. இந்த அளவில், ஒரு மாநிலம் தனது வேண்டல்களுக்காக உருவாக்கிக் கொண்ட மருத்துவ இடங்களைப் பிற மாநிலத்தவர் பெறுவதும், மருத்துவப் படிப்பு முடிந்த பின், தாங்கள் பயின்ற மாநிலத்தில் பணியாற்றாமல் தங்களது மாநிலத்திற்குச் செல்வதும் நடந்தால் என்னவாகும் என்ற வினாவினை எழுப்பி, உச்ச நீதிமன்றம் விளக்கம் கண்டிருக்கவேண்டும்.
ஒரு மாநிலத்தின் வேண்டல்களுக்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் அந்த மாநிலத்திற்குப் பயனளிக்காமல் போய்விடும் என்பதைக்கூட உச்ச நீதிமன்றம் அறிந்து கொள்ளவில்லை; ஆய்வு செய்யவில்லை.
எந்த அளவிலும் ஒன்றியம் என்ற ஒரு கருதுகோள் மட்டும் அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறவில்லை. இதற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியும்.
நாடாளுமன்றத்துக்கான தேர்தலில், ஒன்றியக் குடிமக்கள் எவரும், எந்த மாநிலத்தில் உள்ள தொகுதியிலும் போட்டியிட முடியும். ஆனால், மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களில், அந்தந்த மாநிலத்தில் வாக்காளராக இருப்பவர் மட்டுமே போட்டியிட இயலும். இது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி ஆகிய அனைத்துக்கும் பொருந்தும்.
எனவே, இருப்பிடம் அல்லது வாழிடம் என்ற அளவில் இட ஒதுக்கீடு செய்ய முடியாது என்ற அடிப்படைக் காரணியே அடிபட்டுப் போகிறது.
அண்மையில் உச்சநீதிமன்ற நீதியராக கே. வினோத் சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். உயர்நீதிமன்ற நீதியர்களின் மூப்பில் அவர் 13ஆவது இடத்தில்தான் இருந்தார். ஆனால், கேரளத்தைச் சார்ந்த எவரும் உச்ச நீதிமன்றத்தில் நீதியராக இல்லை என்பதால், அவரை நீதியர் குழு பரிந்துரைத்தது. மாநில அளவில் உச்ச நீதிமன்றத்திற்கும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளதைப் பார்க்கலாம்.
அமெரிக்கா, அய்ரோப்பாப் போன்ற பல நாடுகளில் உள்ள பொதுப் பள்ளிகளில், அந்தப் பள்ளிப் பகுதிகளைச் சார்ந்தோர் மட்டுமே சேரமுடியும் என்ற வரையறை இன்றும் உள்ளது.
மாநிலம் அல்லது ஏதோவொரு வகையிலான நிலப் பகுதி என்பது தவிர்க்க இயலாததாக இருப்பதையே இங்குக் காண முடிகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தற்போது, ஒன்றிய அரசின் நிறுவனங்கள் பலவற்றில் வேற்று மொழி மாநிலத்தவரே பெரிதும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நாளை, மாநில அரசுப் பணிகளிலும் நிறுவனங்களிலும் பணியாற்றக்கூடிய ஊழியர்கள், அனைத்திந்திய அளவில் தேர்வு செய்யப்படவேண்டும் என்ற நிலை புகுத்தப்படலாம்.
இன்று இளநிலை மருத்துவப் படிப்புகளில்கூட 15% இடங்கள் அனைத்திந்திய அளவில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இதற்கான சட்டமோ, விதியோ நடைமுறையில் இல்லை. உச்ச நீதி மன்றத்தின் இந்த அவல நிலையினைக் கொண்டுவந்துள்ளது. உச்ச நீதிமன்றம் சட்டங்களை உருவாக்கும் உரிமை பெற்றிருக்கவில்லை என்பதை நீதியர்களே பல வேளைகளில் மறந்துவிடுகின்றனர் போலும்.
இன்றைய சூழல், அடுத்தடுத்து, ஒரே நாடு ஒரே நாடாளுமன்றம் என்று சட்டப்பேரவைகளே இல்லாத நிலைமைகளுக்குக் கொண்டு சென்றுவிடலாம்.
மாநில அரசுகளைக் கலைப்பதை மறுத்த பொம்மை தீர்ப்புப் போன்று, மாநிலங்களின் பல அடிப்படை உரிமைகளை உச்ச நீதிமன்றம் காப்பாற்றித் தந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அந்த உச்சநீதிமன்றமே மாநில உரிமைகளைப் பறிப்பதற்கான கருவியாகவும் மாறிவிடக்கூடாது என்பதே இப்போதைய கவலையாக உள்ளது.