கட்டுரைகள்

விவசாய தொழிலாளர்களின் விடிவெள்ளி பி.சீனிவாசராவ்

பி.எஸ்.ஆர் நினைவு தினம் செப்டம்பர் - 30

தமிழகம் கண்ட ஒப்பற்ற தலைவர்களில் ஒருவர் தோழர். பி. சீனிவாசராவ் அவர்கள். 1907  ஆண்டு ஏப்ரல் 10 ம்தேதி கர்நாடக மாநிலம்- படகராவில் ஒரு வைதீக பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

1920 ல் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் மகாசபை நாட்டு மக்களுக்கு ஒத்துழையாமை இயக்கத்திற்கு அறைகூவல் விட்டது. பெங்களூரு கிறிஸ்தவ கல்லூரியில்  படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்த சீனிவாசராவ் அக்கல்லூரியை விட்டு வெளியேறினார். வீட்டையும் விட்டு வெளியேறினார். அனைத்தையும் இழந்து ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குகொண்டார்.

1930 களில் அந்நியர் விற்பனை செய்யும் துணிக்கடை முன் போராட்டத்தில் சீனிவாசராவ் ஈடுபட்டார்.  தினசரி போராட்டம் தொடர்ந்தது. நாள்தோறும் சீனிவாசராவை போலீசார் அடித்து துவைப்பது என்பது வாடிக்கையாகி விட்டது. காவல் துறை தடி கொண்டு தாக்கியதால் மண்டை உடைந்து இரத்தம் கொட்டிச் சாலையில் சாய்ந்த அந்த இளைஞனை பார்த்த காவலர்கள் செத்து விட்டான் என்று நினைத்து சாலையோரத்தில் இருந்து சாக்கடையில் தள்ளிவிட்டு சென்றார்.

அன்றைய ஆங்கில பத்திரிகைகளில் காங்கிரஸ் தொண்டர் சீனிவாசராவ் என்ற இளைஞர் இறந்தார் என்ற செய்தியும் வந்தது.

சாலையோரத்தில் பிணமாக கிடந்த இளைஞனை தாயுள்ளத்தோடு ஒரு பெண்மணி தனது இல்லத்திற்கு ஒரு ரிக்சாவில் ஏற்றி வந்து கொதிக்க வைத்து தண்ணீரில் குளிப்பாட்டி மஞ்சள் பத்து போட்டு மருத்துவம் செய்தாள். நான்கு நாட்கள் கழித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார் சீனிவாசராவ்.

அந்நிய துணிக்கடையில் மீண்டும் மறியலில் ஈடுபட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டு  ஆறு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். சீனிவாசராவ் அடைக்கப்பட்ட சிறையில் இருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போசுடன் நட்பு கொண்டு பல நேரம் விடுதலை பற்றியும் தேசத்தைப் பற்றியும் அவரோடு உரையாடிய நல்ல வாய்ப்பைப் பெற்றார்.

1932 ஆம் ஆண்டுகளில் சட்டமறுப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட அனுபவத்தின் மூலம் காந்தியின் தலைமையில் அதிருப்தியும், அவநம்பிக்கையும் அடைந்த இளைஞர்களின் பலர் மார்க்சியத் தலைமையின் பால் ஈர்க்கப்பட்ட காலம். சென்னைக்கு வந்து தோழர். அமீர்ஹைதர்கானை சந்தித்து பின்பு 1932-1933 ல் கம்யூனிஸ்ட் ஆனார் தோழர். பி. சீனிவாசராவ் அவர்கள்.

ஜனசக்தி பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார். நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார். தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன என்று நூலும், தலைமறைவு அனுபவங்களை தலைமைக்கு எழுதிய கடிதங்களும் அவரது இலக்கிய செறிவை காட்டுகிறது.

தமிழகத்தில் கிராமப்புற மக்களை ஒன்று திரட்ட  தலைமை வழிகாட்டியபடி தஞ்சை மாவட்டத்திற்கு சென்றார்.

பி.எஸ்.ஆர்.க்கு தமிழ் பேசத் தெரியும். எழுதவோ, படிக்கவோ தெரியாது. கன்னடம் தாய்மொழி. ஆங்கிலம் சரளமாக பேசவும் எழுதவும் ஆற்றல் மிக்கவர். சென்னையில் இருந்து புறப்பட்டு தஞ்சை மண்ணிற்கு வந்தார்.

மன்னார்குடி தாலுகா, களப்பால் கிராமத்தில், களப்பால் குப்புவின் தலைமையில் ஒடுக்கப்பட்டோர் கூடினர்.

நிலப்பிரபுக்களிடம் பட்ட இன்னல்கள், அனுபவிக்கும் துன்பங்களை முதியோர் முதல் இளைஞர்கள் வரை கூறினார்கள்.

“நாங்கள் இருக்கிறோம். தைரியத்தோடு நீங்கள் துணிந்து செயல்படுங்கள்” இதுதான் பி.எஸ்.ஆரின் முழக்கம்.

தினம் தினம் கிராமங்களுக்கு சென்று ஊழியர்களைத் தயார் செய்தனர். கிராமங்கள் தோறும் கூட்டம், கொடியோற்றல், சங்கம் அமைத்தால் என கிராமத்துப் பாட்டாளிகளின் செங்கொடியின் கீழ் அணிதிரண்டனர்.

மரக்காலில் சோறு வாங்காதே,

வாழைப் பட்டையில் தண்ணீர் குடிக்காதே,

பொதுக் குளங்களில் இறங்கி குளி,

தண்ணீர் எடு,

கோவில்களுக்கு உள்ள போ,

இடுப்பில் வேட்டி கட்டு,

தோளில் துண்டு போடு,

பெண்கள் சட்டையணிந்து வெளியில் வரட்டும்.

வயலிலிருந்து கரையேறிக் குழந்தைகளுக்கு பால் கொடுங்கள்

என கூட்டங்களில் தைரியமூட்டினார்  பி.எஸ்.ஆர்.

நிலப்பிரபுக்களின் கொட்டத்தை அடக்க முதன்முதலில் 1943 ஜனவரியில் தென்கரை கிராமத்தில் சங்கத்தை உருவாக்கி செங்கொடியை ஏற்றி அடிமைப்பட்ட மக்களுக்கு புது திசைவழியைக் காட்டினார் பி.எஸ்.ஆர்

1944 ல் களப்பால் ஒப்பந்தம், மன்னார்குடி ஒப்பந்தம் இந்த இரண்டு ஒப்பந்தங்கள் மூலம் சாட்டையால் அடிப்பதையும், சாணிப்பால் கொடுப்பதும் நிறுத்தப்பட்டது. நிலப்பிரபுக்களையும், விவசாயிகளையும், அதிகாரிகளையும், கையெழுத்திட வைத்தது.

நிலச்சீர்திருத்த கோரிக்கைக்கு ஆதரவு திரட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மதுரையில் இருந்து மணலி கந்தசாமி தலைமையிலும், கோவையில் இருந்து பி.சீனிவாசராவ் தலைமையிலும் சென்ற நடைபயண யாத்திரை, பல ஆயிரக்கணக்கான மக்களிடமும் கிராமங்களிலும் செங்கொடி இயக்கம் தனது முத்திரையைப் பதித்தது.

1961 ம் ஆண்டு செப்டம்பர் 29 ம்தேதி நள்ளிரவில் தஞ்சை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ‘மாற்றம் தந்த மாமனிதர்’ தோழர் பி.சீனிவாசராவை மரணம் என்னும் இயற்கை அழைத்து கொண்டது.

செப்டம்பர். 30 பகல் ஒன்றரை மணிக்கு தஞ்சையிலிருந்து காரில் ஏற்றப்பட்டு தோழர்கள் பி.ராமமூர்த்தி, எம்.காத்தமுத்து, கே.டி.ராஜூ, உமாநாத் ஆகியோர் பி.எஸ்.ஆர் அவர்களின் விருப்பப்படி திருத்துறைப்பூண்டி கொண்டு வந்து தியாக உடல் விதைக்கப்பட்டது.

பி.எஸ்.ஆர் நினைவு தினம் செப்டம்பர் – 30

அ.பாஸ்கர் எழுதிய மாற்றம் தந்த மாமனிதர் தோழர் பி.எஸ்.ஆர் என்ற நூலிலிருந்து…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button