ஐ.நா. சட்டத்தை அப்பட்டமாக மீறிவரும் இலங்கை அரசு!
இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் எழுதிய கட்சிக் கடிதம் வருமாறு:
அலைகடல் மீது தொலையும் வாழ்க்கை -2
போர்க்குணமிக்க தோழர்களே!
மீனவர்கள் மீது கரிசனம் கொண்டது போல, ஒன்றிய நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா அவர்களின் நாடகம் குறித்து எழுதத் தொடங்கிய கடிதம் நீண்டு விட்டது. அடுத்த இதழில் முடியலாம்.
அவருடைய நாடகம் குறித்து ஒரே கடிதத்தில் கூட முடித்து விடலாம். ஆனால்..
மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, இலங்கைக்கு கொண்டு சென்றதை கண்டித்து நமது கட்சியின் மாநிலக் குழு சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. அதனைப் படித்த இராமேஸ்வரம் மீனவ மக்களின் தலைவர்களில் ஒருவரான தோழர் அ.எடிசன் அவர்கள், கைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு நமது கட்சிக்கு நன்றி தெரிவித்தார். நமது கட்சியின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முக்கிய கருத்துகளை அவர் வரவேற்றதுடன், மீனவ மக்கள் கடந்த 40 ஆண்டு காலமாக எவ்வளவு மோசமான முறையில் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்பது குறித்த சில விபரங்களையும் எடுத்துக் கூறினார்.
அவர் கூறிய கருத்துக்களுடன் சற்று விபரமாக மீனவ மக்களின் பிரச்சனைகள், கச்சத்தீவு, எதார்த்தமான நிலைகள் இவற்றையும் சேர்த்து விவரிக்க வேண்டும் எனத் தோன்றியது.
காரணம், நமது நாட்டு மீனவர்களில் வேறு எந்த மாநில மீனவர்களுக்கும் இத்தகைய துயரங்கள் நிகழவில்லை.
தமிழ் மீனவர்கள் குறிப்பாக, புதுவை மாநிலத்தைச் சேர்ந்த காரைக்கால், மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த மயிலாடுதுறை, நாகப்பட்டினம். திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்கள் சாதாரணமானதல்ல. அவற்றை எல்லாம் குறிப்பிட வேண்டும் என நினைத்ததால் கடிதம் விரிவாகிவிட்டது.
இராமேஸ்வரம் தோழர் அ.எடிசன் குறிப்பிட்ட செய்திகளுடன், நமது நினைவில் வாழும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த, உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ஆற்றல்மிகு தோழர் லிங்கன் அவர்கள் எழுதி வெளியிட்ட “மீனவர்களும் அரசியல் பிரதிநிதித்துவமும்” என்கிற நூலில் புள்ளிவிவரங்களுடன் தரப்பட்டுள்ள பல்வேறு தகவல்களில் சில இக்கடிதத்தில் இடம்பெற்றுள்ளன. ஆகவே கடிதம் ஒன்று, இரண்டு, மூன்று என்று தொடர்வதை வாசகர்களும் தோழர்களும் பொறுத்தருள வேண்டுகிறோம்.
ஐ.நா. சபையின் கடலுக்கான சட்டத்தின் பிரிவு 73ன்படி, கடலை எல்லையாகக் கொண்ட நாடுகள், தங்கள் கடல் எல்லைக்குள் வரும் பிற நாடுகளின் படகுகளில் ஏறி பரிசோதனை மேற்கொள்ளுதல், கைது செய்தல், சட்டங்களுக்கு உட்பட்டு நீதிமன்ற நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றில் ஈடுபடலாம்.
சர்வதேச கடல் எல்லையை கடந்து, இன்னொரு நாட்டின் கடல் பகுதியில் மீன்பிடிப்பது ஒரு சிவில் பொருளாதார குற்றம் ஆகும். அது குற்றவியல் குற்றம் அல்ல.
எல்லை தாண்டி வரும் மீனவர்களை சுட்டுக்கொல்வது எந்த வகையான சட்டத்திலும் இல்லை. ஆனால் சிங்கள அரசு தொடர்ச்சியாக கடலுக்கான ஐ.நா. சட்டத்தை அப்பட்டமாக மீறி வருகிறது.
இராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ பெருமக்கள், ஏறத்தாழ 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள கடற்படையின் கடுமையான, மிகக் கடுமையான துன்ப துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
சிங்கள அரசுக்கும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்குமான மோதலுக்கு, தமிழ்நாட்டு மீனவர்கள் ஒருபோதும் காரணமல்ல.
சிங்கள அரசு தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதியது. ஒரே நாட்டில் வாழும் மக்களை இரண்டாக சிங்களவர், தமிழர் எனப் பிரித்தது.
சிங்கள அரசால் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. இதன் விளைவாக தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடினர். அகிம்சை வழியில் தங்களின் கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துரைத்தனர். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்ற ரீதியில் ஜனநாயக வழிப்பட்ட அனைத்து வடிவங்களிலும், நீண்ட பல ஆண்டுகளாய் எடுத்துரைத்ததை, சிங்கள அரசு செவிமடுத்து கேட்க மறுத்துவிட்டது.
சிங்கள அரசு ஜனநாயகத்திற்கு புறம்பான முறையில் செயல்பட்டது. தமிழ் மக்களை முற்றாகப் புறக்கணித்ததை உலகம் நன்கறியும்.
தொடர்ந்து இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து, ஈழத் தமிழ் இளைஞர்கள் பல குழுக்களாக ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடைசியாக, விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுதம் தாங்கிப் போராட எஞ்சியது. சிங்கள அரசு அவர்களுக்கு எதிரான யுத்தத்தை மேற்கொண்டது.
இப்பிரச்சனைக்கும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் என்ன தொடர்பு? இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான போரை சிங்கள அரசு, தமிழக மீனவர்களுக்கு எதிரானதாகவும் மேற்கொண்டது.
தமிழக மீனவர்களைத் தாக்கியும் படகுகளை சேதப்படுத்தியும் அவர்களது வாழ்வாதாரத்தை சீரழித்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் படகு எனத் தாக்கி விட்டோம் என்று சால்சாப்பு கூறியது.
2011 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடைபெற்ற மட்டைப்பந்துப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இலங்கை அணி தோற்றது. இதன் விளைவு, போட்டி நடைபெற்ற மறுநாள் நான்கு தமிழக மீனவர்கள் சிங்களப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தங்கள் நாட்டு அணி விளையாட்டில் தோற்றுப் போனதற்கும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் என்ன தொடர்பு? தாங்கள் தோற்று விட்டோம் என்கிற அந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள இயலாத, வெறிபிடித்த சிங்களப்படை தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றது கொடுமை அல்லவா?
1983 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13ஆம் நாள் ஒரகாடு கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி என்கிற மீனவர் இலங்கை கடற்படையால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுவே முதல் பலியாகும்.
இதிலிருந்து தொடர்ச்சியாக தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்கின்றனர்.
பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. துப்பாக்கி குண்டு துளைத்து காயம்பட்டவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்.
விவசாயிகள் தங்கள் தொழிலான விவசாயப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
நெசவாளர்கள் தங்கள் நெசவுப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
இப்படி ஒவ்வொரு தொழில் குறித்தும் உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
இதுபோன்று மீனவர்கள் தங்களின் தொழிலான மீன்பிடித் தொழிலை மேற்கொள்கின்றனர்.
கடலில் உள்ள மீன்வளத்தை யாரும் உருவாக்கவில்லை. அவற்றுக்குத் தேவையான உணவுகளை அளித்து வளர்ப்பு மீன்கள் போன்று வளர்க்கவில்லை.
இயற்கையாக அமைந்திட்ட கடலையும், அதில் உற்பத்தியாகும் மீன்களையும் மட்டுமே நம்பி, கடலோடு தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட மீனவர்கள், அவற்றையே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
உலகம் முழுவதும் மீனவர்கள் உள்ளனர். நமது நாட்டிலும் பல்வேறு மாநிலங்களில் மீனவர்கள் உள்ளனர். இலங்கையிலும் மீனவர்கள் உள்ளனர்.
இலங்கை மீனவர்களும், இந்தியக் கடல் பகுதிகளில் எல்லை தாண்டி மீன்பிடிக்கின்றனர். அவர்களில் யாராவது இந்திய கடற்படையால் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டது உண்டா?
இலங்கை மீனவர்களின் படகுகள் இந்திய கடற்படையால் சேதமாக்கப்பட்டது உண்டா?
இலங்கை மீனவர்களின் படகுகள் இந்திய கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டது உண்டா?
இலங்கை மீனவர்களின் வலைகளை அறுத்து சேதப்படுத்தியது உண்டா?
இலங்கை மீனவர்கள் எவரேனும் ஒருவர் இந்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டது உண்டா?
ஆனால்.. (தொடரும்)
தோழமைமிக்க
இரா.முத்தரசன்
மாநிலச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(ஜனசக்தி, 2023 டிசம்பர் 3-9 இதழில் வெளியானது)