சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் பெரியாரை சிறுமைப்படுத்தும் செயலுக்கு AIYF மாநில மாநாடு கண்டனம்

சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் பெரியாரை சிறுமைப்படுத்தலுக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) தமிழ்நாடு மாநில மாநாடு கடும் கண்டனம்.
மகாத்மா காந்தியின் தலைமையை ஏற்று, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் ஈவெரா, அந்த அமைப்பில் நிலவிய சமூக பாகுபாடுகளை எதிர்த்து வெளியேறி, பொதுவுடைமை சிற்பி சிங்காரவேலரின் தோழமையோடு சுயமரியாதை, சமதர்ம இயக்கம் கண்டவர். மனித சமூகத்தை பிளவுபடுத்தி உயர்வு, தாழ்வு, புனிதம், தீட்டு போன்ற கற்பனை கருத்தியலை வளர்க்கும் வர்ணாசிரம கட்டமைப்புக்கு எதிராக, வாழ்நாள் முழுவதும் சலிப்பின்றிப் போராடியவர் பெரியார் ஈவெரா.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவர் வழங்கிய உலகப் பொதுமறையாம் திருக்குறள் மாநாடு நடத்தி மக்களிடம் எடுத்துச் சென்றவர். மூட நம்பிக்கைகளின் நாற்றங்காலாக விளங்கி வரும் சனாதன தர்ம சாஸ்திரங்கள், அதனை நியாயப்படுத்தும் கடவுள் படைப்புகள் என அனைத்தையும் நிராகரித்து, அறிவியல் கருத்துக்கள் அடிப்படையில் பகுத்தறிவு சிந்தனையில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்ட பெரியார், இறை நம்பிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுத் திகழ்ந்தவர். தவத்திரு குன்றக்குடி அடிகளார் மீது மாறாத பாசம் காட்டியவர். சாதி, சமய மறுப்பை மையமாக கொண்டு ஞானசபை அமைத்த வள்ளலார் கருத்துக்களை ஆதரித்து வந்தவர். தமிழ் தென்றல் திருவிக வுடன் நட்புறவு கொண்டவர்.
சாதி, மதங்கள் அண்டா நெருப்பாக வாழ்ந்த பெரியார் தமிழ் சமூகத்தின் தனித்துவப் பண்புகளை முன்னெடுத்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கும், சமூக விடுதலைக்கும் சமரசமின்றி போராடி வந்தவர் . சமூகநீதிப் போராட்டத்தில் சமூக ரீதியான இட ஒதுக்கீடு பெற்று, சாதனை கண்ட இயக்கமாக வாழ்ந்தவர். அந்த மகத்தான சமூக சீர்திருத்த போராளியின் புகழுக்கும், பெருமைக்கும் இழுக்கு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்துமத வெறிக் கும்பல் அவதூறு குப்பைகளை பெரியார் மீது கொட்டி வருகிறது. இந்த இழிசெயல் கும்பலில் சிலர் கரைந்து போய், வெறி பிடித்து கதறி வருவதை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில 18-வது மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
பெரியார் ஈவெரா முன்னெடுத்து தந்த சமுக சீர்திருத்த புரட்சியை முன்னிலும் உறுதியுடன், பரந்துபட்ட முறையில் எடுத்துச் செல்ல, அனைத்துப் பிரிவு இளைஞர்களையும் மாநாடு அறைகூவி அழைக்கிறது.