ஏஐடியுசி: எழுச்சியின் வரலாறு -11
சென்னை தொழிலாளர் சங்கம் (மெட்ராஸ் லேபர் யூனியன்) உடல் என்றால், அதன் முதுகெலும்பாய் இருந்தவர் ம.சிங்காரவேலர். 1907ல் சட்டம் படித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் திறன்மிக்க வழக்கறிஞராகப் பணிபுரிந்து, செல்வத்தை வாரிக்குவித்தவர்.
சாதிமறுப்பு திருமணம் செய்தவர். சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளி, கல்வியியல் கல்லூரிக் கட்டடங்களும், அந்த வளாகமும் அவரது சொந்தவீடாகும். ரஷ்யப் புரட்சியின் ஆதர்சத்தில் சென்னையில், இந்தியாவின் முதல் சங்கமான மெட்ராஸ் லேபர் யூனியன் 1918ல் தோன்றியபோது அதற்குப் பெருந் துணையாக இருந்தவர். தொழிலாளர் போராட்டத்தை அடக்க 1921 ஆகஸ்ட் 21ல் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. அதில் இரண்டு பேர் பலியாகினர். கொந்தளிப்பு மிக்க அந்தச் சமயத்தில் அவர் ஆற்றிய உரை சரித்திரத்தில் இடம்பெற வேண்டியது என திரு.வி.க. எழுதினார்.
சிங்காரவேலர் பெரியாரின் நெருங்கிய தோழர். ‘தலைவர்’ என பெரியார் அழைத்த ஒரே மனிதர். நீதிமன்றங்களைப் புறக்கணிக்குமாறு காந்தியடிகள் விடுத்த அறைகூவலை ஏற்று, வக்கீல் கவுனை உயர்நீதிமன்றத்துக்குள் எரித்து விட்டு சிங்காரவேலர் வெளியேறினார். மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அவர் நடத்திய முழுஅடைப்புப் போராட்டத்தால் சென்னை ஸ்தம்பித்தது. ஆனால் அஹிம்சை எல்லைகளை மீறிவிட்டதாக காந்தி கடிந்துகொண்டார்.
1921 கயா காங்கிரஸ் மாநாட்டில், இந்தியத் தொழிலாளர்கள் சார்பில் பேசுவதாகக் கூறி, ‘தோழர்களே’ என அழைத்து, தொழிற்சங்கங்கள், விவசாயி அமைப்புகளை உருவாக்கி வளர்க்க வேண்டுமெனப் பேசினார். 1923 மே 1 ஆம் தேதியன்று சென்னையில் ஊர்வலம் நடத்தி, செங்கொடி ஏற்றி, இந்தியாவில் முதல் முறையாக மே தினம் கொண்டாடினார், இந்தியத் தொழிலாளர், விவசாயிகள் கட்சியையும் அன்றே துவக்கினார்.
1925 டிசம்பர் 26ல் கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட போது, அந்த மாநாட்டுக்குத் தலைமை ஏற்கும் பெருமை இவருக்குக்குத்தான் தரப்பட்டது.
(இன்னும் வரும்)
கட்டுரையாளர்: டி.எம்.மூர்த்தி
தேசிய செயலாளர், ஏஐடியுசி
ஆசிரியர், ஜனசக்தி
சிங்காரவேலர் குறித்து இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள ஆசை.