கட்டுரைகள்

அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி, வளர்ச்சி மற்றும் வேலையின்மை-2

டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, டாக்டர் ஜி.ரமேஷ்

தொழில்நுட்பம், முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்புப் பிரச்சினைகள் குறித்து, 2025 பிப்ரவரி 7-9, பாட்னாவில் நடைபெற்ற, அனைத்திந்திய முற்போக்குப் பேரவையின், தேசியக் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட அறிக்கையின் நிறைவுப் பகுதி

முதலாளித்துவத்தின் கீழ் அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி

பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்தவும் ,சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் தேவைகளை நிறைவு செய்யவும் அனைத்து நாடுகளும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். ஆனால், முதலாளித்துவ அரசுகள் அவ்வாறு செய்யவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முக்கிய உந்துசக்தியாக இருப்பது லாப வெறியும், கடுமையான போட்டியுமாகும்.

இலாப நோக்கம், சந்தையில் தங்கள் போட்டியாளர்களை தோற்கடிக்க வேண்டுமென்ற வெறி ஆகியவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை வளர்க்க வேண்டும், உற்பத்தியில் அவற்றின் பயன்பாட்டையும் ஊக்குவிக்க வேண்டுமென முதலாளிகளை கட்டாயப்படுத்துகின்றன.

முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் வரம்புகளுக்குள் அறிவியல் மிகப்பெரிய முன்னேற்றங்களுடன் முன்னேற முடியும்.

முதலாளித்துவ விஞ்ஞானிகள் தங்களை சுதந்திரமானவர்களாகவும் தடையற்றவர்களாகவும் நினைக்கின்றனர். மனிதகுலத்திற்காகவோ அல்லது அறிவுக்காகவோ தங்கள் ஆராய்ச்சிகளை நடத்துவதாகவும், அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு சமூகம் அவர்களை கௌரவித்து வெகுமதி அளிக்கவும், சூழ்நிலைகள் அனுமதிக்கும் இடங்களில் அவர்களின் கண்டுபிடிப்புகளை நடைமுறை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் தயாராக இருப்பதாக அவர்கள் எதார்த்த உண்மைகளுக்கு மாறாக நினைக்கிறார்கள்.

இந்த முதலாளித்துவ அறிவியல் சுதந்திரத்தின் உண்மை நிலை என்னவென்றால், அறிவியல் எப்போதும் மூலதனத்திற்காகவே பாடுபட்டு வருகிறது. மூலதனம் தனது லாபத்தை அதிகரிப்பதற்காக அறிவியல் கண்டு பிடிப்புகளை,கோட்பாடுகளை பயன்படுத்துகிறது.

முதலாளித்துவ விஞ்ஞானிகள் தந்திரமானவர்கள் அல்ல. அவர்களையும் அறியாமல் அவர்கள் மூலதனத்திற்கு கட்டுப்பட்டவர்களாகவும், அதற்கு சேவை செய்பவர்களாகவுமே உள்ளனர்.
அறிவியலும் தொழில்நுட்பமும் சுரண்டலுக்கான கருவிகளாக இருக்கும் முதலாளித்துவ சமூகங்களில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் வெளிப்படையான முரண்பாடுகள் உள்ளன.

ஏகாதிபத்தியம் பெரும்பாலும் அறிவியல் மற்றும் பொறியியலை ஒருதலைப்பட்சமாக தனது வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறது. ஏகபோகங்கள் தங்களுக்கு அதிக லாபத்தை தரும் அறிவியல் துறைகளை வளர்ப்பதில்தான் அக்கறை கொண்டுள்ளன.மிகவும் அதிகமான லாபம் தரும் போர்த்தளவாடங்களை உற்பத்தி செய்தல் அவற்றிற்கான ஆராய்ச்சிகளை முடுக்கிவிடுதல் போன்றவற்றில் தான் பேரார்வம் காட்டுகின்றன.

அறிவியல் தொழில் நுட்பத்தை இராணுவமயமாக்கலுக்கு பயன்படுத்துவது என்பது சமகால முதலாளித்துவ சமூகங்களில் நிலவும் மோசமான, ஆபத்தான போக்காகும். முதலாளித்துவத்தின் அராஜகமும் போட்டியும் அறிவியலில் வணிக ரகசியங்களை உருவாக்குகின்றன. ஏகபோகங்கள் ஆயிரக்கணக்கான முக்கியமான கண்டுபிடிப்புகளை அவற்றின் “வணிக மதிப்பு” உயரும் வரை ரகசியமாக வைத்திருக்கின்றன. இது அறிவியல் வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் எதிரானதாகும்.

வளரும் நாடுகளை சுரண்டுவதற்கு வளர்ந்த நாடுகளின் கைகளில் எஸ்.டி.ஆர் ஒரு கருவியாக மாறியுள்ளது.

சோசலிசத்தின் கீழ் எஸ்.டி.ஆர்.

சோசலிசத்தின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புரட்சி முற்றிலும் மாறுபட்ட நோக்கங்கள், வாய்ப்புகள் மற்றும் விளைவுகளைக் கொண்டுள்ளது.

சமூகத்தின் அனைத்து உறுப்பினர் களின் நல்வாழ்வையும் முழுமையான வளர்ச்சியையும் உறுதி செய்வதற்காக சோசலிசம் , திட்டமிடப்பட்ட அமைப்பு முறையில் உற்பத்தியை உறுதிப்படுத்துகிறது. அதனால்தான் சோசலிசமும், கம்யூனிசமும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புரட்சியின் முன்னேற்றத்திற்கு தங்குதடையற்ற வாய்ப்பை வழங்கும்.
அவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சாதனைகளை மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்தும். மக்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் சோசலிசம் தீங்கு விளைவிக்காது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, சோசலிசத்தின் கீழ் மட்டுமே மனிதர்கள் மற்றும் சமூகத்தின் நலன்களுடன் ஒத்துப்போகும்.

சோசலிச சமூகத்தில் அறிவியல் உற்பத்தியை வளர்ப்பதற்கும் உழைக்கும் மக்களின் பொருளாயாத மற்றும் கலாச்சார தர மட்டத்தை உயர்த்துவதற்கும் ஒரு முக்கிய கருவியாகும்.
தொழில்நுட்ப முன்னேற்றத்திலும் உழைக்கும் மக்களின் உற்பத்தி திறன்களை வளர்ப்பதிலும் இயற்கை அறிவியல் ஒரு தீர்க்கமான பங்கை வகிக்கிறது. மக்களின் கலாச்சார மற்றும் தொழில்நுட்ப மட்டத்தை மேம்படுத்துகிறது.

சோசலிசத்தின் கீழ் அறிவியல் என்பது, படைப்பாற்றல் மற்றும் முன்னெப்போதும் கண்டிராத அளவிலான சமூக முன்னேற்றத்தின் ஒரு வலிமையான ஆயுதமாகிறது.

சோசலிச அமைப்பு, ஆராய்ச்சிகளை அரசின் பொதுவான திட்டமிடப்பட்ட வழிகாட்டுதலில் மக்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் மேற்கொள்ள சமூகத்திற்கு வாய்ப்பளிக்கிறது.
ஏராளமான அறிவியல் நிறுவனங்களின் பணிகளை ஒருங்கிணைக்கவும் சோசலிச சமூக அமைப்பு உதவும். இதனால் விஞ்ஞானிகள் மிக முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்த முடியும். சோசலிச சமூகத்தில் நிலவும் இயங்கியல்-பொருள்முதல்வாதக் கண்ணோட்டம்,

அறிவியலை பிற்போக்குவாதம் மற்றும் மதத்தின் மோசமான செல்வாக்கிலிருந்து விடுவிக்கும்.

விஞ்ஞானிகளை, உண்மையான அறிவியல் வழிமுறையுடன் பிணைக்கிறது.உண்மையான அறிவியல் முறைமை என்ற ஆயுதத்தை விஞ்ஞானிகளுக்கு வழங்குகிறது.

ஆனால், முதலாளித்துவத்தில் அறிவியல் தொழிலாளி வர்க்கத்திடமிருந்து பிரிக்கப்படுகிறது. மூலதனம் அறிவியலை, உழைப்பைச் சுரண்டுவதற்குப் பயன்படுத்துகிறது. அறிவியல் லாபத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சோசலிசத்தில், அறிவியல் தொழிலாளி வர்க்கத்துடன் இணைக்கப்படுகிறது. இது சோசலிச உற்பத்திக்கும் மக்களின் பொருளாயாத மற்றும் கலாச்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் மக்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

சோசலிசத்தை கட்டியெழுப்ப அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெறுவது முக்கியம் என்று லெனின் கருதினார்.

அறிவியல் ஓர் உற்பத்தி சக்தி

அறிவியல் வேகமான முறையில், அளப்பரிய உற்பத்தி சக்தியாக மாறி வருகிறது. அறிவியல் நேரடி உற்பத்தி சக்தியாக மாறுகிறது என்பது, ஏதோ உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தியில் ஈடுபடும் மனிதர்களுடன் தொடர்பின்றி, சுதந்திரமான உற்பத்திச் சக்தியாக அறிவியல் செயல்படுகிறது என்று பொருளல்ல.

தொழில்நுட்பம் மற்றும் மனிதர்கள் உழைப்பு மூலம் மட்டுமே உற்பத்தி சக்தியாக அறிவியல் செயல்படுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புரட்சி, இயற்கையாகவே உற்பத்தி தொழில் நுட்பத்தில் ஆழமான பண்பியல் ரீதியான மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது.
அறிவியல் சாதனைகள் என்பது, மேம்பட்ட உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் பொதிந்துள்ளன.

இன்று அணுசக்தி, பாலிமர் வேதியியல், நுண்ணுயிரியல், மின்னணுவியல் போன்ற தொழில்களும் அறிவியலின் உருவாக்கங்களாகும். அறிவியலின்றி அவை இருக்க முடியாது.
உற்பத்தி என்பது, அறிவியலைத் தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தும் நடைமுறையாக மாறிவருகிறது. பொருளாயத சக்தியாக்கப்பட்ட அறிவாகவும் உற்பத்தி விளங்குகிறது.

அண்மைக்கால அறிவியல் கண்டுபிடிப்புகள் முழுமை படுத்தப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்டமான ஆய்வகமாகவும் உற்பத்தி நடைமுறை மாறி வருகிறது.

அறிவியல் சாதனைகள் உற்பத்தியாளரில், அவரது அறிவில், திறனில் மற்றும் உழைப்பு சார் அனுபவத்தில் பொதிந்துவிடுகிறது.

நவீன ஒருங்கிணைந்த இயந்திரமயமாக்கல், உழைப்பை அறிவுசார் உள்ளடக்கத்தால் நிரப்புகிறது. அது உழைப்பாளி, உயர்ந்த கலாச்சார, தொழில்நுட்ப மற்றும் தரமான தொழில்சார் திறமைகளை கொண்டிருக்க வேண்டும் என்று கோருகிறது.

உழைப்பாளிக்கு நவீன அறிவியல் வழங்கப்படுவது என்பது, அவரது திறனை மேம்படுகிறது, உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது. அவரை ஒரு செயலூக்கமுள்ள கண்டுபிடிப்பாளராகவும், பகுத்தறிவாளராகவும் மாற்றுகிறது. அவரது ஆராய்ச்சிப் பணி, உற்பத்தித் துறையில் ஆழமாக ஊடுருவி, பயன்மிகுந்த பணியாக மாறி விடுகிறது. அறிவியல் நவீன உற்பத்தியின் அடிப்படை கூறுகளில் ஒன்றாக மாறி வருகிறது.

அறிவியல் நேரடி உற்பத்தி சக்தியாக மாறி வருகிறது என்று நாம் கூறும்போது, ​​இது முதலில் எந்திரவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் பிற இயற்கை மற்றும் தொழில்நுட்ப அறிவியல்களுக்குப் பொருந்தும்.

அதேநேரத்தில் சமூக அறிவியல், குறிப்பாக பொருளாதார அறிவியல்கள், உற்பத்தியில் தனது பங்பை அதிகரித்து வருகின்றன.

கணித முறைகள் மற்றும் மின்னணு கணினிகளின் உதவியுடன், இந்த அறிவியல்கள், உற்பத்தி மேலாண்மையை மேம்படுத்துகின்றன.

பொருள்கள், தொழிலாளர் மற்றும் நிதி வளங்களை மிகவும் திறம்பட பயன்படுத்த, இக்கால பரந்த அளவிலான உற்பத்தியில் பொருளாதார அறிவியல்கள் (Economic Sciences) உதவுகின்றன.

தொழிலாளர்களின் சிந்தனைகளை வார்த்தெடுக்கவும், அவர்களின் கண்ணோட்டத்தை உருவாக்குவதிலும் சமூக அறிவியல்கள் (Social Sciences) பெரும் பங்கை வகிக்கின்றன.

மனித குலம் எதிர் கொள்ளும் அவசரப் பிரச்சினைகளுக்கு அறிவியல் தீர்வு காண்கிறது. அது மட்டுமன்றி, சமூக முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய பாதைகளைக் கண்டறிய உதவும் முக்கியமான கோட்பாட்டுப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவும் அறிவியல் உதவுகிறது.

சமூக வளர்ச்சியில் அறிவியல் ஒரு முற்போக்கான மற்றும் விடுதலைக்கான பங்கை வகிக்கிறது. அதன் கண்டுபிடிப்புகள் மனிதர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கூட்டு சக்தியை மேம்படுத்துகின்றன. மேலும் அறிவொளிக்கான வழிமுறை யாகவும் செயல்படுகின்றன. தவறு மற்றும் மூடநம்பிக்கைகளை அகற்றி, இயற்கையைப் பற்றியும், தங்களைப் பற்றியும் சரியான அறிவை மனிதர்களுக்கு வழங்குகிறது.

தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்

அமில மழை, ஓசோன் படலத்தில் ஓட்டை விழுதல், மண் அரிப்பு, காடுகள் அழிப்பு போன்றவை பெரும் அச்சுருத்தலாக மாறியுள்ளன. வேதிப்பொருட்கள், அணுக்கழிவு உள்ளிட்ட கழிவுகளால் ஆறுகள் கடல்கள், சுற்றுச்சூழல் மாசடைகின்றன.

கடந்த சில நூற்றாண்டுகளாக கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் ஏற்பட்ட அதிவேக அதிகரிப்பால் புவி வெப்பம் அதிகரித்துவருகிறது. இதனால் கடலோர நகரங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. நீண்ட வறட்சி மற்றும் கடுமையான புயல்கள் ஏற்படுகின்றன. பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுநோய்களின் தாக்கம் அதிகரிக்கிறது. முதலாளித்துவத்தின் கீழ் எஸ்.டி.ஆர் மற்றும் உற்பத்தியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், புவியில் ஒரு உயிரனமாக நாம் வாழும் நிலைக்குக் கூட அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.

அராஜகமான, உடனடி லாபத்திற்கான முதலாளித்துவ உற்பத்தி நடவடிக்கையின் தீய பின்விளைவுகள் இயற்கையை கடுமையாக பாதித்துள்ளது. அதைப் பற்றிய சிந்தனையோ, அக்கறையோ, கவலையோ முதலாளிகளுக்கு இல்லை.

“இயற்கை மீதான, மனித வெற்றிகளைப் பற்றி அளவு கடந்து களியாட்டம் போட வேண்டியதில்லை. இயற்கையின் மீதான ஒவ்வொரு வெற்றிக்காகவும் இயற்கை நம்மை பழிவாங்கவே செய்கிறது. ஒவ்வொரு வெற்றியிலும் முதல் நிலையில் நாம் எதிர்பார்த்த பலன் கிட்டினாலும் இரண்டாம், மூன்றாம் நிலைகளில் முற்றிலும் வேறுபட்ட எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டு விடுகின்றன. இயற்கைக்கு வெளியே நின்று கொண்டு அன்னிய ஆக்கிரமிப்பாளரைப் போல இயற்கையை வெல்ல முடியாது. ரத்தமும், சதையும், மூளையும் உள்ள நாம் இயற்கையின் பகுதியாய் உள்ளோம். இயற்கையின் மத்தியில் உள்ளோம். இயற்கையின் விதிகளைப் பயின்று அவற்றைச் சரியாக பயன்படுத்தும் வாய்ப்பை நாம் பெற்றிருப்பதாலேயே பிற உயிரினங்களை விட மேலானதாக நாம் உள்ளோம்“ (ஏங்கெல்ஸ் – இயற்கையின் இயக்கவியல்) என ஏங்கல்ஸ் கூறினார்.

ஆனால், முதலாளிகளுக்கு இது பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர்களுக்குத் தேவை லாபம் மட்டுமே. இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் பல உலகளாவிய பிரச்சினைகளுடன் தொடர்புடைய அபாயங்களை நீக்குவதிலோ அல்லது குறைப்பதிலோ, ஓர் கருவியாக உள்ளது.

போர் மற்றும் ராணுவத் தளவாடங்கள் தயாரிப்புகளுக்காக ஒதுக்கப்படும் வளங்களில் ஒரு பகுதியை விவசாயத்திற்கு மாற்ற முடிந்தால், உணவுப் பிரச்சினை இருக்காது. முன்னாள் காலனிகள் மற்றும் அரை காலனிகளின் சமூக-பொருளாதார பின்தங்கிய நிலையை சரிசெய்ய முடியும்.

இயற்கைப் பொருட்களுக்கு பதிலாக, மாற்றுப் பொருட்களை உருவாக்குவதற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உதவுகின்றன. அறிவியல் தொழில் நுட்பம் உருவாக்கும் பிரச்சினைகளுக்கு, அறிவியல் தொழில் நுட்பம் மூலமே தீர்வு காண முடியும். அதே சமயம் எஸ்.டி.ஆர் மூலம் இயற்கை வளங்களை கொள்ளையிடும், அழிக்கும் முதலாளித்துவம் ஒழிக்கப்பட வேண்டும்.

வேலையின்மை

வேலையின்மை உழைக்கும் மக்கள் வாழ்வின் மீது பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது குடும்பங்களை, மனித மதிப்புகளை மற்றும் சுய மரியாதையை அழிக்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்படும் முன்னேற்றம் உற்பத்தியையும் அதன் விரிவாக்கத்தையும் துரிதப்படுத்துகிறது.

ரோபோக்களும், செயற்கை நுண்ணறிவும், தானியங்கி எந்திரங்களும் ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய நான்காவது தொழிற் புரட்சி கோடிக் கணக்கான மக்களின் வேலை வாய்ப்புகளை பறிக்கப் போகிறது. இது விரைவில் மிகப் பெரிய சமூகப் பொருளாதார மற்றும் கலாச்சாரப் பிரச்சினைகளை உருவாக்கும். வேலையின்மை பிரச்சினையை முதலாளித்துவத்தால் தீர்க்க முடியாது. சோசலிசத்தால் மட்டுமே தீர்க்க முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button