அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி, வளர்ச்சி மற்றும் வேலையின்மை
டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, டாக்டர் ஜி.ரமேஷ்

தொழில்நுட்பம், முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்புப் பிரச்சினைகள் குறித்து, 2025 பிப்ரவரி 7-9, பாட்னாவில் நடைபெற்ற, அனைத்திந்திய முற்போக்குப் பேரவையின், தேசியக் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட அறிக்கை
மனிதர்கள் வாழ உணவு, உடைகள், உறைவிடம் மற்றும் பிற அடிப்படை வசதிகள் வேண்டும். ஆனால் இவை இயற்கையில் தயாராகக் கிட்டாது. மனிதர்களின் உழைப்பால் உற்பத்தி செய்யப்பட வேண்டும். மனிதர்கள் தங்களது உழைப்புச் சக்தியை உழைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி உற்பத்தியின் மூலமே இவற்றைப் பெற முடியும்.
இந்த உழைப்பு நடவடிக்கையின் பொழுது மனிதர்கள், தாங்கள் உருவாக்கும் உழைப்புக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த உழைப்புக் கருவிகளை மனிதர்களால் மட்டுமே உருவாக்க முடியும்.
உழைப்பு என்பது மனித வாழ்க்கையின் அடிப்படை. மனிதர்களுக்கு இயற்கையான தேவை. உழைப்பு இல்லாமல், உற்பத்தி இல்லாமல் மனித வாழ்க்கை சாத்தியமில்லை.
பொருள் உற்பத்தி என்பது சமூக வளர்ச்சியைத் தீர்மானிக்கும் காரணியாகும். உழைப்புச் செயல்பாட்டில் மக்கள் தங்கள் தேவைகளைப் பெற இயற்கைப் பொருட்களை மாற்றுகிறார்கள்.
உழைப்பு நடவடிக்கையின் பொழுது மனிதர்கள் எந்தப் பொருட்களின் மீது தாக்கம் செலுத்துகிறார்களோ அந்தப் பொருட்கள், உழைப்புப் பொருள்கள் எனப்படுகின்றன.
இந்த உழைப்புப் பொருட்கள் மற்றும் உழைப்புக் கருவிகள் இல்லாமல் பொருள் உற்பத்தி சாத்தியமில்லை.
உழைப்புப் பொருட்கள் என்பது இயற்கை மற்றும் இயற்கையால் வழங்கப்படும் பொருட்களாகும். அவை மாற்றப்பட வேண்டும். உழைப்புச் செயல்பாட்டில் மக்கள் இயற்கையின் மீது செயல்படும் பொழுது, கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்துகிறார்கள். அவை உழைப்புக் கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன.
உழைப்புப் பொருட்கள் மற்றும் உழைப்புக் கருவிகள் இணைந்து உற்பத்திச் சாதனங்கள் எனப்படுகின்றன. உழைப்புக் கருவிகள் தாங்களாகவே செயல்பட முடியாது. அவை தாங்களாகவே பொருட்களை உற்பத்திச் செய்வதில்லை.
மனித உழைப்பு அவற்றின் மீது செயல்படாவிட்டால், மிகச் சிறப்பான இயந்திரம் கூடப் பயனற்ற உலோகக் குவியலாகவே இருக்கும்.
மனிதனால் மட்டுமே ஒரு கருவியை இயக்கவும் பொருள் உற்பத்தியை ஒழுங்கமைக்கவும் முடியும். அதனால்தான் அவனது உழைப்புச் சக்தி உற்பத்தியின் இன்றியமையாத அங்கமாக உள்ளது.
உற்பத்திச் சாதனங்கள் மற்றும் மனித உழைப்புச் சக்தி சேர்ந்து உற்பத்திச் சக்திகள் எனப்படுகின்றன. உற்பத்திச் சக்திகள் சமூகத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான பொருளாயத உறவுகளைக் குறிக்கின்றன. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் அளவு இயற்கையின் மீது மனிதர்கள் செலுத்தும் ஆதிக்க அளவைக் காட்டுகிறது.
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மட்டம், உற்பத்தி கருவிகளின் வளர்ச்சியின் அளவு மற்றும் உழைப்புச் சக்தியால் தீர்மானிக்கப்படுகிறது.
மனிதர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் கருவிகளின் உதவியால் மட்டுமே பெற முடியும். கருவிகள் சிறந்ததாகவும் மேம்பட்டதாகவும் இருந்தால், மக்கள் சிறந்த வாழ்வாதாரத்தைப் பெறுவார்கள்.
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் பழமையான கல் கருவிகளைப் பயன்படுத்தித் தனது வாழ்வாதாரத்திற்காகப் போராடினான்.
இன்று அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி இயற்கையை மறுவடிவமைப்பதற்கான புதிய மற்றும் அளப்பரிய வாய்ப்புகளை மனிதர்களுக்கு வழங்கியுள்ளது.
உற்பத்திப் பெருக உதவியுள்ளது. மனிதர்களின் திறன்களைப் பல மடங்கு மேம்படுத்தியுள்ளது.
இன்றைய இயந்திரங்களும் தொழில்நுட்பங்களும் பல தலைமுறை விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்களின் உழைப்பை உள்ளடக்கிய ஒன்றாகும். நமது காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் இணைவு நடைபெற்று வருகிறது. அறிவியல் ஒரு நேரடி உற்பத்திச் சக்தியாக மாறியுள்ளது.
நீண்ட காலத்திற்கு முன்பே காரல் மார்க்ஸ் அறிவியல், உற்பத்திச் சக்தியாக மாறும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.
உற்பத்தி உறவு
பொருட்களின் உற்பத்தி, பரிவர்த்தனை விநியோகம் மற்றும் நுகர்வுச் செயல்பாட்டில், மக்கள் தவிர்க்க முடியாமல், சமூக உறவுகளில் நுழைகிறார்கள். அவை சமூகத்தின் பொருளாதார அடிப்படையை உருவாக்கும் உற்பத்தி உறவுகள் எனப்படுகின்றன.
உற்பத்தி உறவுகள் முதன்மையாக உற்பத்தி நடைமுறைகளில் உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர் யார்? என்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன.
சமூக மாற்றம் மற்றும் முன்னேற்றம் பற்றிப் புரிந்து கொள்ள உற்பத்திச் சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள் பற்றியும், அவற்றிற்கிடையேயான உறவுகள் மற்றும் முரண்பாடுகள் பற்றியும் புரிதல் தேவை.
சமூகப் பொருளாதார மாற்றத்தில் அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி
சமூகப் பொருளாதார மாற்றத்தை, வளர்ச்சியை விரைவு படுத்துவதில், அண்மைக் காலத்தில் அறிவியல் தொழில் நுட்பப் புரட்சி (எஸ்.டி.ஆர்) மகத்தான பங்கை வகிக்கிறது. இந்த எஸ்.டி.ஆர் புதிய மேம்பட்ட உற்பத்திச் சக்திகளுக்கு வழிவகுக்கிறது.
எஸ்.டி.ஆர், முதலாளித்துவச் சமூகத்தில் முரண்பாடுகளை, உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமிடையேயான முரண்பாடுகளை அதிகப்படுத்துகிறது. அதன் மூலம் புரட்சிகரச் சமூக மாற்றத்திற்கும், உற்பத்தி உறவுகளில் மாற்றங்களை உருவாக்குவதற்கும், சாத்தியக்கூறுகளை அதிகரிப்படுத்துகிறது.
சமூகப் புரட்சி மற்றும் அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி ஆகியவை ஒன்றையொன்று சார்ந்த, ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ளும் ஒற்றை வரலாற்றுப் போக்கின் இரண்டு பக்கங்களாகும்.
காரல் மார்க்ஸ் அறிவியலை ஒரு முற்போக்கான மற்றும் விடுவிக்கும் சக்தியாகக் கருதினார்.
அது இயற்கையின் மீது மனிதனின் ஆதிக்கத்தையும், அவனது நோக்கங்களை அடைவதற்கான ஆற்றலையும் அதிகரிக்கிறது.
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி என்பது வெறுமனே மெதுவான வளர்ச்சி மற்றும் பரிணாம விரிவாக்கம் மட்டுமல்ல, மாறாகப் பண்பியல் ரீதியான புரட்சிகரப் பாய்ச்சலையும், தொழில்நுட்பப் புரட்சியையும் கண்டிப்பாகக் கொண்ட ஒன்றாகும் என வரலாற்று அனுபவங்கள் உறுதி செய்கின்றன.
தொழில்நுட்பம் மற்றும் சமூகப் புரட்சிகளின் இயங்கியல் உட்பட, முழுச் சமூகக் கட்டமைப்பு மற்றும் அதன் மாற்றங்களிலும், தொழில்நுட்ப முன்னேற்றங்களின் தாக்கத்தின் தன்மை மற்றும் ஆழம் பற்றிய தெளிவான மற்றும் விரிவான புரிதலை மார்க்சியம் நமக்கு வழங்குகிறது.
நவீனக் கற்கால சகாப்தத்தில் வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல் ஆகியவற்றிலிருந்து, வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்புக்கு மாறியதைக் குறிக்கும் விவசாயப் புரட்சி, மனிதச் சமூக வரலாற்றில் முதல் தொழில்நுட்பப் புரட்சி எனலாம்.
சமூகத்தின் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில் ஏற்பட்ட இந்தத் தீவிரமான, பண்பியல் ரீதியான புரட்சிகர முன்னேற்றம், அடுத்தகட்ட சமூக மாற்றத்திற்கு, ஒரு சமூகப் புரட்சிக்கு இன்றியமையாத பொருளாயாத மற்றும் தொழில்நுட்ப நிலைமையை உருவாக்கியது.அதன் விளைவாக ஆரம்பகால அடிமை உடைமை சமூகங்கள், வர்க்கங்கள் மற்றும் அரசுகள் தோன்றின.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஏற்பட்ட தொழில்புரட்சி, முதலாளித்துவத்திற்கான, பொருளாயாத மற்றும் தொழில்நுட்ப அடித்தளங்களை அமைத்தது. அது மனிதகுல வரலாற்றில் இரண்டாவது தொழில்நுட்பப் புரட்சியாகும்.
அப்புரட்சியின் உந்து சக்திகள் மற்றும் சமூக விளைவுகளைப் பகுப்பாய்வு செய்து, கார்ல் மார்க்ஸ் மனிதச் சமூகத்தின் முழு வரலாற்றிற்கும் பொருந்தக்கூடிய ஒரு பொதுவான முடிவுக்கு வந்தார்.
“உற்பத்திச் சக்திகளில் நிகழும் ஒரு புரட்சி, தொழில்நுட்பப் புரட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதேவேளையில், உற்பத்தி உறவுகளிலும் ஒரு புரட்சி நடைபெறுகிறது” என்று மார்க்ஸ் குறிப்பிட்டார்.
இந்த வழியில், விவசாய மற்றும் தொழில்துறை புரட்சிகள் இரண்டும் சமூகப் புரட்சிகளுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டு, பண்பு ரீதியாக புதிய மேலும் முற்போக்கான சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்ட சமூகத்தை உருவாக்குவதற்கான பொருளாயாத மற்றும் தொழில்நுட்ப அடித்தளத்தை அமைக்கின்றன.
1960 களில் தொழில்நுட்பப் புரட்சியாக உருவான எஸ்.டி.ஆர், புதிய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக் கேற்பப் புதிய உற்பத்தி உறவுகளை உருவாக்குவதற்குத் தவிர்க்க முடியாமல் வழிவகுக்கிறது. இவ்வாறு எஸ்.டி.ஆர் இந்த ஆழமான சமூகப் புரட்சியின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
எஸ்.டி.ஆர் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம்
தானியங்கிக் கருவிகள், ரேடியோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிமெக்கானிக்ஸ் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றம், அணுசக்தி பயன்பாடு, விண்வெளி ஆய்வு மற்றும் சைபர்நெட்டிக்ஸ், வேதியியல், இயற்பியல், உயிரியல் மற்றும் பிற
அறிவியல்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியவற்றால் எஸ்.டி.ஆரில் முன்னேற்றம் ஏற்பட்டது.
அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மட்டுமல்ல, உற்பத்தியையும் தழுவுகிறது. உண்மையில் இயற்கை அறிவியல்களே, உற்பத்திச் செயல்பாட்டால் திரட்டப்பட்ட கருத்துகள் அல்லது அறிவிலிருந்து உருவாகின்றன. ஆரம்பத்திலிருந்தே, அறிவியலின் தோற்றம் மற்றும் வளர்ச்சி உற்பத்தியால் தீர்மானிக்கப்படுகிறது என இயற்கையின் இயங்கியல் என்ற நூலில் எங்கல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
உற்பத்திக்கான கருவிகள், தொழில்நுட்பங்கள் அவற்றிற்கான ஆற்றல் அடித்தளத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. உழைப்பின் தன்மையும் மாற்றமடைந்து வருகிறது. அது மேலும் மேலும் மூளை உழைப்பாக அறிவுசார்ந்ததாக மாறிவருகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம், சைபர்நெடிக்ஸில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், செயற்கை நுண்ணறிவு போன்றவை உடல் மற்றும் சில வகையான மூளை உழைப்பையும் இயந்திரமயமாக்கவும், தானியக்கமாக்கவும் சாத்தியமாக்கியுள்ளன.
எஸ்.டி.ஆர், தொழிலாளர்களின் கலாச்சாரத் தரத்தை மேம்படுத்தி வருகிறது. தொழில்சார் திறமைகள், உழைப்பாற்றல், தொழிலாளர்களின் கல்வித் தகுதி ஆகியவற்றை புதிய உயரிய மட்டத்திற்கு வளர்ந்து வருகிறது.
செயற்கை நுண்ணறிவு (ArtificiaI Intelligence) கடந்த சில ஆண்டுகளாக முக்கியப் பங்கை வகித்து வருகிறது. தற்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம், இன்றைய பல துருவ உலகில், நாடுகளிடையையே கடும் போட்டி மற்றும் போராட்டத்தின் முக்கியக் களங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு, சீனாவின் “டீப்சீக்’’ தாக்கம், விண்வெளிப் பயணம், தொற்றுநோய் காலத்தில் (கோவிட்) தடுப்பூசி உற்பத்தி போன்றவற்றை கடும் போட்டி நிலவுவதற்கான எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
“மிகப்பெரிய தொழில்நுட்ப உபகரணங்கள், அமைப்பு ஒழுக்கம் மற்றும் சிறந்த இயந்திரங்களைக் கொண்டவர்கள் வலிமையான நிலையை அடைய முடியும்’’ என்று லெனின் கூறினார்.