தமிழ்நாடு பெயர் வைக்கக் கோரி 1956ல் உண்ணாவிரதம் இருந்து சங்கரலிங்கனார் உயிர் நீத்த தினம்
ஜனசக்தி 14 -10 - 1956
அக்டோபர் 13: தமிழ்நாடு எனப் பெயர் வைக்கக் கோரி 1956 ஆம் ஆண்டில் உண்ணாவிரதம் இருந்து தியாகி சங்கரலிங்கனார் உயிர் நீத்த தினம்.
இது தொடர்பாக 14 -10 -1956ல் ஜனசக்தி நாளிதழில் வெளிவந்த செய்தி…
தியாகி சங்கரலிங்கனார் வீரத் தியாக மரணம் எய்திய அன்றைய நாளில் 13.10.1956 நடந்தது என்ன?…
*****************************
சென்னை ராஜ்யத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிட வேண்டும், பொது வாழ்விலும் அரசாங்கத்திலும் பரிசுத்த வாழ்க்கை நிலவ வேண்டும், மக்களின் கஷ்டங்களைத் தீர்க்க சர்க்கார்.,முன்வர வேண்டும் என்பது போன்ற 12 கோரிக்கைகளை_ வலியுறுத்தி, (1956) ஜூலை 27 முதல் 77 நாட்களாக உண்ணாவிரதமிருந்து வந்த காந்தீய தேசபக்தர் தியாகி க.பெ. சங்கரலிங்கநாடார் நேற்று (13.10.1956) மதுரை எர்ஸ்கின் ஆஸ்பத்திரியில் தமது 62 வயதில் காலமானார்.
சங்கரலிங்கனார், சாவதற்கு முன் எழுதிய கடிதங்களில், தான் மரணமுற்ற பிறகு,தன் சடலத்தை கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அதிகாரிகளுக்கு எழுதியிருந்தார்.
மரணமடைந்த பின் தியாகி சங்கரலிங்கனார் சடலத்தை அவரதுமைத்துனர் திரு.சிவமுருகனிடம் சர்க்கார் ஒப்படைத்தது.
தியாகி சங்கரலிங்கனாரது மரணச் செய்துகேட்டவுடன் அருகிலுள்ள அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சியுற்று, தேசபக்தருக்கு இறுதி வணக்கம் செலுத்த ஓடோடி ஆஸ்பத்திரி முன் திரண்டனர். ஏராளமான மதுரை மக்கள் ஆஸ்பத்திரி முன் கூடி விட்டார்கள். தியாகி சங்கரலிங்கனாரின் பிரேதத்தை, ஆஸ்பத்திரியிலிருந்து நேரே மயானத்திற்கு ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ்காரர்களும், தமிழரசுக் கழகத்தினரும் ஊர்வலமாக எடுத்துச் சென்றார்கள்.
மயானத்தில் தியாகி சங்கரலிங்னாருக்கு கம்யூ. கட்சித் தலைவர்கள் கே.பி.ஜானகிஅம்மாள், எம்.என்.ஆதி நாராயணன் உள்பட கம்யூ. நிர்வாகிகளும் தொண்டர்களும் மாலைகளிட்டு வணக்கம் செலுத்தினர். மாணவர் தலைவர் ஜேக்கப்பாபு தமிழரசு கழகம் சார்பில் மாலையிட்டார். காங். தலைவர் சிதம்பர பாரதியும் மாலையிட்டார். மதுரை நகரசபை சேர்மன் திரு.ராணி ஏ.சுப்புராம் அவர்களும் மயான ஊர்வலத்தில் பங்கேற்றார்.
தகவல் : நா.சேகரன்