அறிக்கைகள்மாநில செயலாளர்

உதயநிதி மீதான தாக்குதல் தீய நோக்கம் கொண்டது

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் அறிக்கை

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.. 

உதயநிதி மீதான தாக்குதல் தீய நோக்கம் கொண்டது

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து தெரிவித்த கருத்து, பகுத்தறிவாளர்கள் தொடர்ந்து முன்வைத்து வருவதுதான். கடந்த காலங்களில் வாய்மூடி கடந்து சென்ற பாஜகவும், “இந்துத்துவா” கும்பலும் தற்போது வானத்துக்கும், பூமிக்கும் எகிறிக் குதித்து வருகின்றன.

ஆதிப் பொதுவுடைமை சமூகம் தகர்ந்து தனியுடைமை சமூகம் உருவானபோது ஆதிக்க சக்திகளால்  உழைக்கும் மக்களைப் பிரித்து, பிளவுபடுத்தி  வைக்கும் முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டன. அதில் இறுதியாக உருவானதும், பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருப்பதும் சனாதனக் கருத்தியலாகும். இது பகுத்தறிவு சிந்தனைக்கும் அறிவியல் கண்ணோட்டத்திற்கும் எதிரானது என்பதுடன் சமூக வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கும் அறிவீனமுமாகும். 

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பேசும் போது, “மனித வளத்தை தாக்கி வரும் டெங்கு, மலேரியா காய்ச்சல், கொரோனா தொற்று நோய் போல் சமூக ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் சனாதனத்தை எதிர்ப்பதுடன் நின்று விடக் கூடாது. அதனை அழித்தொழிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இது சமய நம்பிக்கையை இழிவு செய்யும்  நோக்கம் கொண்டதல்ல என்பதை சாதாரண அறிவுள்ளோரும் அறிவர். ஆனால், பாஜகவும், சங் பரிவார் கும்பலும் உதயநிதி ஸ்டாலின் இந்து சமயத்தை இழிவுபடுத்தியதாக பச்சை புளுகு மூட்டை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி, தமிழ்நாடு தலைவர் கே.அண்ணாமலை வரை சமய நம்பிக்கை கொண்டவர்களுக்கு மதவெறியூட்டும் மலிவான செயலில் இறங்கியுள்ளது. வட மாநிலங்களில் உள்ள அரசு அதிகாரத்தைப் பயன்படுத்த, புனைவுக் குற்றச்சாட்டுக்களை வழக்குகளாக பதிவு செய்து வருகிறது. 

இதன் மூலம் நாடு முழுவதும் பதற்றத்தை உருவாக்கி, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்னும் தனிநபர் மையப்பட்ட சர்வாதிகாரக் கட்டமைப்பை ஏற்படுத்தும் வஞ்சகச் செயலில் ஈடுபட்டு  வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த ஜனநாயக விரோதச் செயலுக்கு எதிராக ‘இந்தியா’ அணி நாடு முழுவதும் தீவிரமான இயக்கங்களை மேற்கொண்டு முறியடிக்கும் என்பதை வரலாறு உறுதி செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button