கட்டுரைகள்

சனாதனத்துக்கு எதிரான சங்கநாதம்

த.லெனின்  

“சனாதனத்தை ஒழிப்போம்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதால், தம்முடைய மத உணர்வுகள் புண்பட்டுவிட்டதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்லி காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

“சனாதனம் குறித்து தவறாகப் பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுத்தத் தவறிய தமிழக அரசு மீது தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், அரசு அதிகாரிகள், ஆயுதப்படை ஊழியர்கள் உள்ளிட்ட 260க்கும் மேற்பட்டோர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். அதில், “பொதுவெளியில் சனாதன தர்மம் பற்றிய அவதூறாக பேசியது வெறுப்பு பேச்சுக்கு சமம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளனர்.

வெறி பிடித்த வட இந்திய சாமியார் ஒருவர், உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் தரப்படும் என அறிவித்து கலவரத்திற்கு வித்திட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த உதயநிதி, “என் தலையை சீவ பத்து ரூபாய் சீப்பு போதும்” என்று நகைச்சுவையாக கூறிவிட்டு கடந்து விட்டார். அத்தோடு தான் சொன்ன கருத்தில் உறுதியுடன் இருப்பதாகவும் எப்போதும் அதையே வலியுறுத்துவேன் என்றும் உறுதிபட சொல்லிவிட்டார்.

இவை அனைத்தும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பொறுப்பற்ற வெறுப்பு பேச்சால்தான் விளைந்தது. மாறாக இந்து சமூகத்தில் இன்று வரை பீடித்து இருக்கிற சாதிய ஒடுக்குமுறைதான் சனாதனம் என்பது

“வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்                                           உள்ளுவரோர மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி”

என்றார் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை.

“சூத்திரனுக்கு ஒரு நீதி – தண்டச்                                                                                       சோறுண்ணும் பார்க்குக்கு வேறொரு நீதி எனச்                                                                    சாத்திரம் சொல்லிடு மாயின் – அது                                                                                   சாத்திரமன்று சதி என்று கண்டோம்!”

இது பாரதியின் கவி முழக்கம்.

இந்து மதத்திற்குள் மக்களை பிரிவினை செய்யும் சாதி முறைக்கு எதிராக எழுந்தவைதான் இவை.

சனாதன தர்மம் என்றால் நிலையான தர்மம் (Eternal Law) என்று பொருள். இது வேதங்களில் இல்லை. மனுஸ்மிருதி, பாகவத புராணம், பகவத் கீதை ஆகியவற்றில்தான் குறிப்பிடப்படுகிறது.

சனாதன மதம்தான் இந்து மதம் என்று சொல்லப்படுகிறது. அதாவது சாதி முறை இன்றி இந்து மதம் இல்லை. சனாதனத்தை ஒழிக்காமல் சமத்துவத்தை, சமூக நீதியை எட்ட முடியாது. இந்து என்ற பாரசீகச் சொல்லுக்கு மாற்றாகதான் சனாதன் தர்மம் என்பது வழக்கிற்கு வந்தது.

இந்து மதத்திற்கு உள்ளேயே சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக ஆரிய சமாஜ் தோற்றுவிக்கப்பட்டது. அது பிராமணர்களின் மேலாண்மையை கேள்விக்குள்ளாக்கியது. உருவ வழிபாட்டை ஏற்க முடியாது என்றது. அத்துடன் சாதி பிரிவினைகளுக்கு எதிராகவும் கருத்துக்களை முன்வைத்தது. இவற்றிலிருந்து தங்களை காத்துக் கொள்ள பிற்போக்கு இந்து மதவாதிகள், தங்களை சனாதன தர்மிகள் என்று அழைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். 1891 ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் இப்படியே தங்களை பதிவு செய்து கொண்டனர் என்பது வரலாறு.

இந்த சனாதான தர்மம் குறித்து சங்கரமட சந்திரசேகர சரஸ்வதி தனது ‘தெய்வத்தின் குரல்’ முதல் பகுதியில் வர்ண தர்மம் என்ற கட்டுரையில், “சனாதன தர்மத்தின் முக்கிய அம்சமே வர்ண தர்மம்தான். சனாதன தர்மத்தை ஊதி ஊதி எல்லோரிடமும் பரவச் செய்யலாம் என்பது என்னுடைய பேராசை. நமது சனாதன மதத்தில் மற்ற மதங்கள் எதிலும் இல்லாத வர்ண தருமம் இருப்பதால் இது அவசியம் இல்லை என்று எடுத்து போட்டுவிட்டு நம் மதத்தை மற்றவை மாதிரி ஆக்கிவிட வேண்டும் என சீர்திருத்தக்காரர்கள் சொல்கிறார்கள்

நவீன யுகத்தில் சமத்துவம் என்று சொல்லப்படுவதை விட சிலாக்கியமாக சமூகத்தில் ரொம்பவும் சேமம் விளைவிப்பதாக பழைய வர்ண தருமத்தில் எதுவோ இருந்திருக்க வேண்டும் என்று தானே ஏற்படுகிறது. அதனால் தான் சமூகத்தை பலவாராக பாகுபாடு செய்திருக்கிற நமது மதம் ஒன்று மட்டுமே இத்தனை எதிர்ப்புகள் இருந்தும் விட மாட்டேன் என்று இன்று வரைக்கும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறது.”

அதாவது மக்களை நான்காகப் பிரித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தர்மம் என்று இருப்பதே வர்ணதர்மம் என்றும் அந்த வர்ண தர்மமே சனாதான தர்மம் என்றும் இதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆக மக்களை பிறப்பின் அடிப்படையில் பிரித்து சாதிய நுகத்தடியில் வன்கொடுமைக்கு இலக்காக்கியும் பிராமணர்களுக்கு சலுகைகளும் முதன்மையும் அளித்துவிட்டு மற்றவர்களுக்கு அநீதியை மட்டும் வழங்குவதுதான் இந்து சமூக ஏற்பாடாக அமைந்திருப்பதை நன்கு உணரமுடியும்.

அதனால்தான் விவேகானந்தர் இந்து மதத்தில் நிலவும் சாதிய முறைக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பினார். சூத்திர ஆட்சி எழ வேண்டும் என்று தொடர்ந்து கருத்துக்களை முன்வைத்தார். 1893 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் நாள் அவரது சீடர் அலசிங்கவுக்கு அமெரிக்காவில் இருந்து எழுதிய கடிதத்தில், புத்தபெருமான் போதித்த சமத்துவம் மற்றும் சமூக உயர்வு பற்றிய நடைமுறை நற்செய்தியை வலியுறுத்தி இந்து மதத்தைக் குறை கூறியிருந்தார். இந்து மதம் போன்று பூமியில் எந்த மதமும் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் கழுத்தில் ஏறி மிதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்தில் புரையோடிக் கிடந்த இந்த சாதி முறைக்கு எதிராகத் தான் தொடர்ந்து போர்க்குரலிட்டார். சனாதன தர்மம் ஒரு தொற்று நோய் என்றும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இறுதியில் இனி இந்து மதத்தில் இருக்க மாட்டேன் என்று கூறி பல லட்சம் பேருடன் பௌத்தம் தழுவினார்.

ஆக புரையோடிய இந்த புண்ணுக்கு சிகிச்சை செய்ய சித்தமாய் இருந்தவர்கள்தான் இந்து மதத்திற்குள் பல சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட ஞானிகளாக இருந்திருக்கின்றார்கள். ஆனால் அதை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள்தான் பாஜக வகையறாக்கள், இந்துத்துவவாதிகள்.

சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம்! என கீதையில் நான்கு வர்ணத்தை நானே படைத்தேன் என்று சாட்சாத் கிருஷ்ண பரமாத்மாவே சொல்லிவிட்டார் என்று கூறி அதன் மீது எந்தக் கேள்வியும் எழுப்பக் கூடாது என்று எழுதி வைத்துக்கொண்டனர். பிராமணன் பிறவி சிறப்பாளன்; மதிக்கத்தக்கவன் மனிதரில் உயர்ந்தவன் – தேவ மந்திரமே அவன் உயர்வுக்கு காரணம். எனவே அவன் முடிவுப்படி நடக்க வேண்டும் என்று மனுதர்மம் போதிக்கிறது.

வைதீகமாயிருந்தாலும் லவ்கீகமாயிருந்தாலும் அக்னியானது எப்படி மேலான தெய்வமாகவே இருக்கிறதோ அப்படியே பிராமணன் ஞானியாக இருந்தாலும் மூடனாய் இருந்தாலும் அவனே மேலானவன் என்று போதிக்கிறது. அத்தோடு பத்து வயது உள்ள பிராமணனையும் நூறு வயதுள்ள சத்திரியனையும் தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டியது. பிராமணன் தகப்பன் மரியாதையையும் சத்ரியன் புத்திர மரியாதையும் வைக்க வேண்டியது என்றும் பிராமணன் இழிதொழிலில் செய்தாலும் அவன் வழிபடத்தக்கவன். சூத்திரன் உயரிய நற்குணங்களே உருவெடுத்தவன் ஆயினும் சரி அவனை வழிபடலாகாது.

கன்று போட்ட பசு ஒன்று துஷ்டதனம் பண்ணுகிறது. குட்டி போட்ட கழுதை ஒன்று சாதுவாக வீட்டில் இருக்கிறது. இவ்விரண்டில் பசுவை விட்டுவிட்டு கழுதைப் பாலை கறந்து கிரகிப்பார்களா? என்றும் இந்தப் பிறப்பின் அடிப்படையிலான பேதமையை மனு நியாயப்படுத்துகிறார்.

அத்தோடு பிராமண குலத்தில் பிறந்த பெண்களைக் கூட மனு விட்டு வைக்கவில்லை மாதர்களின் இயல்பே மனிதர்களுக்கு சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தை உண்டு பண்ணும். தாய், தங்கை, பெண் இவர்களுடன் தனித்தனியாய் ஒன்றாக உட்காரக் கூடாது. கற்பு நிலைமையும் நிலையா மனமும் இயற்கையாக உடையவர்கள் மாதர்கள், பெரும்பாலும் விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்று அனேக சுருதிகளிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றையும் துணைக்கு அழைத்து பெண் அடிமைத்தனத்தை வலுப்படுத்துவதே மனு தர்மம்.

அதுதான் வருண தர்மத்தின் சட்டக் கோட்பாடு. இந்து சமூகத்தில் சாதியில் உயர்ந்தவன் – தாழ்ந்தவன், ஏழை – பணக்காரன், ஆண் – பெண் என்ற பாகுபாடுகளின் தொடர்ச்சியே அதன் பண்பாட்டுக் கருவூலம் என்றால், புண்பட்டு நிற்கிற கோடானு கோடி உழைக்கும் மக்கள் இதற்கு எதிராகப் போர்க் குரல் எழுப்பாமல் அப்படியே அடிமைச் சகதியில் ஊழல்வதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுப்பி, பல நூறு ஆண்டுகளாக இந்து மத கொடுங்கோன்மையை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

இவர்கள்தான் இன்று உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பேய் கூச்சலிடுகின்றனர்.  மோடிக்கு எதிராக இந்தியா கூட்டணி அமைந்தவுடன் எதையாவது பிடித்துக் கொண்டு மக்களின் உணர்வுகளை தன்மயப்படுத்தும் முயற்சிக்கு இவையெல்லாம் உதவும் என்று தப்புக்கணக்கு போடுகின்றனர். ஆனால் மக்கள் பல அனுபவங்களைக் கொண்டவர்கள், தங்களின் சுயமரியாதையை காப்பாற்றும் எந்தப் போராட்டத்திற்கும் ஒத்துழைத்தும் அதில் ஈடுபட்டும் வந்துள்ளனர். அந்த வகையில் 21 ஆம் நூற்றாண்டில் இன்றும் மக்களிடையே பாகுபாடு காட்டும் மனு தர்மத்துக்கு எதிரான போராட்டம் தேவையாக இருக்கிறது. அந்த தேவையை உணர்ந்து சமூக சமத்துவத்தை படைக்க மதவெறி, சாதி வெறிக்கு எதிரான போராட்டம் தொடரட்டும்! அது இந்தியாவெங்கும் பற்றிப் பரவட்டும்! அநீதியை எதிர்க்கும் தீயாக அது பிரவாகம் எடுக்கட்டும்! சனாதானத்திற்கு எதிரான சங்க நாதம் ஓங்கி ஓங்கி ஒலிக்கட்டும்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button