உள்ளூர் செய்திகள்கட்டுரைகள்

உலகமே பாராட்டிய உழைப்புக் கொடையை நடத்திக்காட்டியவர் எஸ்.ஜி.முருகையன்  

அ.பாஸ்கர்

சோவியத் ஒன்றியத்தில் மக்களை கொண்டே சாலைகள் அமைப்பது, வேளாண் பண்ணைகளை உருவாக்குவது என பல்வேறு கட்டுமானங்களை உருவாக்கினார் மாமேதை லெனின். அப்படி ஒன்றுதான் இந்த உழைப்புக்கொடை திட்டம். இந்த திட்டம் சோவியத் நாட்டில் பெரும் வெற்றியை கண்டது.

இந்தத் திட்டம் இந்தியா முழுமைக்கும் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அங்கு ஒன்று இங்கு ஒன்றுமாக செயல்படுத்தினார்கள்.

தமிழ்நாட்டில் ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் மன்னார்குடி தாலுக்கா கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தில் மிகவும் முனைப்போடும், சிறப்பாகவும் செயல்படுத்தப்பட்டது. இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளே திரும்பிப் பார்க்கின்ற அளவுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது கோட்டூர் என்று தினசரி நாளிதழ்கள் புகழ்ந்து தலையங்கம் எழுதின. ஆம் அப்படி ஒரு நிகழ்வை நடத்திக் காட்ட வழிகாட்டிய இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அதை செயல்படுத்திய எளிய மக்களின் தலைவராக இருந்த தோழர் எஸ். ஜி .முருகையன் அவர்கள்.

1955 நொச்சியூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பொதுத் தொகுதியில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டு, பிற்படுத்தப்பட்ட சமூக வேட்பாளர்களை எதிர்த்து பட்டியலின வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். மக்களின் நன்மதிப்பை பெற்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுத்தார்கள் ஊராட்சி மக்கள். ஊராட்சி மன்ற தலைவர்கள் எல்லாம் சேர்ந்து ஊராட்சி, ஒன்றிய பெருந்தலைவரை தேர்வு செய்ய வேண்டும், 47 ஊராட்சி தலைவர்களை கொண்ட ஒன்றியம் கோட்டூர். 1961 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாயத்து யூனியன் தேர்தலில் இடஒதுக்கீடு இல்லாத காலத்தில் பொதுத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பட்டியல் வகுப்பைச் சார்ந்த எஸ்.ஜி.முருகையன் அவர்களை தேர்வு செய்கின்றனர். தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முடிவை, கட்சிக்குள் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி தலைவர்களின் ஒத்த கருத்தோடு தேர்தல் களத்தில் நிற்கின்றார்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த ஒருவர் போட்டியிட்டார். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டியல் வகுப்பைச் சார்ந்த எஸ்.ஜி. முருகையன் 28 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இன்று உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கிடு அறிவித்தும் தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தை சேர்ந்த சில ஊராட்சி தலைவர்கள் நாற்காலியில் அமர ஆதிக்க சாதியினரால் அனுமதி மறுக்கப்படுகிறது நாற்காலியில் அமர்வதற்கு நீதிமன்றத்தை நாடி காத்திருக்கும் நிலை இன்றும் தொடர்கிறது.

இந்திய வரலாற்றில் இட ஒதுக்கீடு இல்லாத காலத்தில் பொதுத் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற பட்டியல் இன முதல் ஒன்றிய பெருந்தலைவர் என்ற பெருமையைப் பெற்றுத்தந்த வரலாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு. அவர்தான் எஸ்.ஜி. முருகையன்.

ஒன்றிய அரசு வாழ்த்தி பாராட்டு கடிதம் அனுப்பியது எஸ்.ஜி.முருகையனுக்கு என்பது குறிப்பிடத்தக்கதாகும். மன்னார்குடியில் இருந்து முத்துப்பேட்டை செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லை. எனவே மன்னார்குடியில் இருந்து முத்துப்பேட்டை வரை செல்லும் பாமணி ஆற்றின் கீழ் கரையை உயர்த்தி அகலப்படுத்தி சாலையாக மாற்றலாம் என்று யோசனையை முன் வைத்தார் எஸ்.ஜி.முருகையன்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வேத நாராயணன் அவர்கள் நடத்திய வளர்ச்சி மன்ற கூட்டத்தில் கோரிக்கையாகவும், இந்த சாலையின் அவசியத்தை பற்றியும், 47 கிராம மக்களும் நகரத்தோடு தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் நகரங்களுக்கு சென்று படிக்க முடியாத சூழ்நிலையும், அவசர உதவிக்கு மருத்துவமனை செல்வதற்கு கூட முடியாத சூழ்நிலை இருப்பதையும் விளக்கமாக எடுத்து கூறினார் எஸ்.ஜி.முருகையன்.

இதைக் கேட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் “நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் இந்த திட்டம் ஏற்கனவே சர்தார் வேதரத்தினம் பிள்ளை அவர்களும், மத்திய ரயில்வே கேபினட் அமைச்சர் கும்மட்டி திடல் சந்தானம் ஐயங்கார் அவர்களும் முன்வைத்த திட்டம்தான். அவர்களாலேயே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. பழைய சாலைகளை போடுவதற்கே போதிய நிதி ஆதாரம் இல்லாத இந்த சூழ்நிலையில்,  புதிய சாலை பற்றி விவாதிப்பது என்பது முடியாத காரியம் என்று கைவிரித்து விடுகிறார்”

மாவட்ட ஆட்சித் தலைவரின் பேச்சை கேட்ட எஸ்.ஜி.முருகையன் எப்படியும் சாலை அமைக்க வேண்டும் என உறுதியாக முடிவெடுக்கிறார். இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அமைப்பில் கூறுகிறார். விவாதிக்கப்படுகிறது ரஷ்யாவில் உழைப்பு கொடை திட்டம் செயல்படுத்திய விதம் குறித்தும் விவாதித்து, இந்த திட்டத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த நேரு எடுக்கும் முயற்சிகள் பற்றி விவாதிக்கப்பட்டு, இந்த சிரமதான பணியை கோட்டூர் ஒன்றியத்தில் செயல்படுத்த எஸ்.ஜி.முருகையன் அவர்களுக்கு பொறுப்பளிக்கப்படுகிறது.

ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. கோட்டூர் கட்சி அமைப்பு கூடுகிறது. மக்களை திரட்ட முடிவு எடுத்து கிராமங்கள் தோறும் அறிவிக்கப்படுகிறது. தோழர் எஸ்.ஜி. முருகையனும், கட்சியின் தலைவர்களும் இரவு பகல் என பாராமல் நடந்தும் சைக்கிளிலும் சென்று மக்களை திரட்டுகிறார்கள்.

சாலை போடும் தேதியை ஊர் முழுவதும் தண்டோரா மூலம் அறிவிக்கப்படுகிறது. வீட்டுக்கு ஒருவர் கூடை (வெட்டுக்கூடை), மண்வெட்டி, அரிவாளுடன் பாமணி ஆற்றின் கீழ்கரைக்கு வரவேண்டும் என அறிவிக்கப்படுகிறது.

மன்னார்குடியில் இருந்து முத்துப்பேட்டை வரை பாமணியாற்று கீழ்கரையில் காலை 6 மணிக்கே மக்கள் மண்வெட்டி, கூடை, கடப்பாரையோடு கூடி நின்றனர்.  மறுமுனையில் மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டு இருந்தனர். இந்தப் பகுதியில் வாழ்கின்ற ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக இது மாறியது.  மன்னார்குடி கீழ் பாலத்திலிருந்து சிரமதான பணி தொடங்குவதற்கு மக்கள் தயாரானார்கள்.

மாவட்ட ஆட்சித் தலைவர் வேத.நாராயணன் வந்து பார்க்கிறார். வியந்து போகிறார். ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.ஜி.முருகையனை ஆரத்தழுவி கண்ணீர் வடிக்கிறார். உங்களுடைய திறமையை நான் குறைவாக எண்ணி விட்டேன் என்கிறார்.

அதெல்லாம் ஒன்றுமில்லை அய்யா என்று சமாதானம் செய்கிறார் எஸ்.ஜி.முருகையன். மாவட்ட ஆட்சித் தலைவர் முதல் கூடை மண்ணை வெட்டி எஸ்.ஜி.முருகையன் தலைமேல் வைத்து சிரமதான பணியை தொடங்கி வைக்கிறார்.

மக்களின் உழைப்பை தானமாக பெற்று இந்த சாலை உருவாகி கொண்டு இருக்கிற காட்சியை படமாக எடுத்து, இந்தியா முழுமைக்கும் உள்ள திரையரங்குகளில் காட்சிப்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் ஏற்பாடு செய்கிறார்.

தஞ்சையில் பெரிய கோயிலை கட்டுவதற்காக மாமன்னன் ராஜராஜ சோழன் பெரிய அளவில் மக்களை திரட்டினார் என்பது வரலாற்றுச் செய்தியாகும். அதற்குப் பிறகு மற்றுமொரு வரலாற்று பதிவு எஸ்.ஜி.முருகையன் தலைமையில் மன்னார்குடியிலிருந்து முத்துப்பேட்டைக்கு அதிக அளவில் மக்களை திரட்டி ஒரே நாளில் உழைப்பு கொடையின் (சிரமதான) மூலம் சாலை அமைத்தது. வியக்கத்தக்கதொரு புதிய வரலாற்றை படைக்க தோழர் எஸ்.ஜி.முருகையனுக்கு வழிகாட்டிய இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாகும்.

சிறப்பான உழைப்புக்கொடை பணியை செய்த ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.ஜி.முருகையன் அவர்களை சோவியத் யூனியன் அரசு 1963-ல் தன்னாட்டிற்கு இரண்டு வார காலம் வருமாறு அழைப்பு விடுத்தது. சோவியத் யூனியனுக்கு புறப்படுகின்ற சமயம் சோவியத் புரட்சி நாளும் வந்தது.

அந்த விருந்தில் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவை சந்தித்து வாழ்த்தும் பாராட்டும் பெற்றார் எஸ்.ஜி.முருகையன்.

சோவியத் யூனியனிலிருந்து வெளியாகும் தினசரி நாளிதழான “பிராவ்தா” இதழ் இந்த வரலாற்றுச் சாதனையை தலையங்கமாக எழுதியிருந்தது. அதனை மொழிபெயர்த்து தினதந்தி நாளிதழும் “இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது கோட்டூர்” என்று தலைப்பில் தலையங்கம் எழுதியது.

தமிழ்நாட்டில் கோட்டூர் ஒன்றியத்திலிருந்து சிரமதான பணியை பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை மத்திய அரசு கவனித்தது. நேரில் கண்டறிய முகர்ஜி என்ற உயர்மட்ட அலுவலரை அனுப்பி வைத்தது. அவரும் கோட்டூர் ஒன்றியத்தில் சிரமதான பணி நடைபெற்று இருக்கும் அனைத்து இடங்களுக்கும் சென்று நுட்பமாக கவனித்தார். புதுடில்லி சென்று கோட்டூரில் நடைபெற்றிருக்கும் பணிகளைப் பற்றி விரிவான அறிக்கையை அரசுக்கு அளித்தார்.

இந்திய பாராளுமன்றம் சிரமதான சேவை வாயிலாக கோட்டூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆற்றிய சாதனையை நாடாளுமன்றத்தில் பாராட்டி “சாம்பியன் ஆஃப் சிரமதான்” என்ற விருதை எஸ்.ஜி.முருகையனுக்கு மத்திய அரசு வழங்கியது.

ஒரு மாதத்தில் மண்சாலை கப்பி சாலையாக மாறிப்போனது. அந்த சாலையில் பேருந்து வெள்ளோட்டம் வருகிறது பேருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வேத.நாராயணன், ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.ஜி.முருகையன் மற்றும் 47 ஊராட்சி மன்ற தலைவர்களும் அமர்ந்து இருக்க ஓட்டுனர் இருக்கையில் எஸ்.ஆர்.வி.எஸ் பேருந்து உரிமையாளர் ஆரோக்கியசாமி பேருந்தை இயக்கினார்.

மன்னார்குடி முத்துப்பேட்டை செல்லும் பேருந்து வழித்தடம் தொடங்கி வைக்கப்படுகிறது. வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மகிழ்ச்சி பொங்க பேருந்தை வரவேற்றனர். மனதார வாழ்த்தினர்.

எஸ்.ஜி.முருகையன் பொறுப்பில் இருந்த காலத்தில் மக்களை திரட்டி உழைப்புக்கொடையின் மூலம் போட்ட சாலைகள் ஏராளம்…..

வீராக்கி- -விக்கிரபாண்டியம் சாலை, ஆதிச்சபுரம் -வேதபுரம் சாலை, நாணலூர் – முத்துப்பேட்டை மாங்குடி இணைப்பு சாலை, கோட்டூர் -சேந்தமங்கலம் சாலை, வாட்டார்- பைங்காட்டூர் சாலை, எளவனூர் -பெருகவாழ்ந்தான் சாலை, நொச்சியூர்- கிளார்வெளி சாலை என்று பட்டியல் நீளும்.

‘இப்படிப்பட்ட மனிதர்களும் இந்த மண்ணில் வாழ்ந்துள்ளார்களா..?’ என நெகிழ வைக்கும் வரலாறு கொண்டவர் தோழர் முருகையன்! அவர் செய்த சேவையும் மக்கள் பணியும் காலத்தால் அழியாத வரலாறாய் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

(ஜனவரி – 6 எஸ்.ஜி.முருகையன் நினைவுநாள்

1979-ஆம் ஆண்டு ஜனவரி 6-ல் தஞ்சாவூர் மாவட்ட கட்சி அலுவலத்துக்குச் சென்று விட்டு வீடு திரும்பும்போது சித்தமல்லி என்ற தனது சொந்த கிராமத்திலேயே அவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சமூக விரோதிகள் வழிமறித்து கத்தியால் குத்திப் படுகொலை செய்தனர். அவருடைய படுகொலை செய்தியறிந்து தஞ்சை மாவட்ட உழைப்பாளி மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். அன்று முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று இரங்கல் உரையாற்றினார்.)

கட்டுரையாளர்: அ.பாஸ்கர்
மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button