இராம.வீரப்பன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல்
இராம.வீரப்பன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடியும், எம்ஜிஆர் கழக நிறுவனத் தலைவருமான இராம.வீரப்பன் (97) இன்று (09.04.2024) மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தோம்.
புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டையில் பிறந்த இராம.வீரப்பன் இளம் வயதில் நாடகக் கலை மீது ஆர்வம் கொண்டு அதில் ஈடுபாடு காட்டத் தொடங்கியவர்.
திரைத்துறையிலும், அரசியல் களத்திலும் புகழ்பெற்று விளங்கிய கலைஞர், எம்.ஜி.ஆர். ஆகியோரின் நட்பைப் பெற்றவர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினர், பேரவை உறுப்பினர், அமைச்சர் பொறுப்புகளில் செயல்பட்டவர்.
திரைப்படத் தயாரிப்பில் தனி முத்திரை பதித்தவர். சிவாஜி கணேசன் போன்ற மூத்த கலைஞர்களோடும் ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற அடுத்த தலைமுறை கலைஞர்களோடும் நெருங்கிப் பழகியவர். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் கொண்டவர். ஆழ்வார் ஆய்வு மையம் அமையப் பெரும் பங்களித்தவர்.
உடல் நலப் பாதிப்பு, முதுமை காரணமாக இயற்கை எய்தினார் எனினும், அவரது இழப்பு எளிதில் ஈடு செய்ய முடியாதது.
அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.