இன்றைக்கு ராமரைப் பற்றி நிறையப் பேசுகிறார்கள். ராமரை இந்தியாவின் அடையாளமாக மதவாத அரசியல் காட்டுகிறது. காலம் காலமாக ராம காதை நமது நாட்டில் வழக்கத்தில் இருந்தாலும், அது மதம் சார்ந்ததாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைக்கு அது அரசியல் அடையாளம்.
வெகுஜன ஊடகங்களில் பலர், ராமர் பற்றி கதைகளைப் பேசுகிறார்கள். அவர்கள் வால்மீகி ராமாயணத்தை பற்றியே அதிகம் பேசுகிறார்கள். தமிழில் உள்ள கம்பராமாயணம் பற்றி பெரும்பாலானோர் பேசுவதில்லை. அவர்கள் பிராமணிய சிந்தனை வயப்பட்டவர்கள் என்பதே காரணம்.
இதனையும் மீறி, கம்பனைப் பற்றி ஒரு சிந்தனை போக்கை முன்வைத்தவர் மகாகவி பாரதி. கம்பர் வழியாக அவர் ராமனை பார்க்கிறார்.
“கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்”
“கம்பன் கவியெல்லாம் நான்”
“எல்லை ஒன்றின்மையை குறிகளால் காட்டிட கம்பன் முயன்றதும்”
போன்ற அவரது கவிதை வரிகள், ராமகாதையை எழுதிய கம்பரை பற்றிய அவரது உயர்வான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன.
மூன்று வகையான சிந்தனை போக்கிற்கு பாரதி கம்பனை பயன்படுத்துகிறார்.
ஒன்று, மனித நேயம்
இரண்டு, கவிதை தன்மை
மூன்று, தத்துவ அணுகுமுறை
இவை இன்றைய காலத்திற்கு பொருத்தமானவை! இவற்றில் தத்துவ அணுகுமுறை பற்றி இங்கே நாம் அதிகம் பேச வேண்டாம். வைணவ சமய காப்பியமாக இருந்தாலும் கடவுள் நிலை என்று வரும்போது கம்பர் ஒரு மத சமரச நிலையையே பின்பற்றுகிறார்.இதனை ஒவ்வொரு காண்டத்திற்கும் அவர் எழுதியுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களில் காணலாம். முதல் பாடலான “அலகிலா விளையாட்டு உடையார்” என்பதில் எந்தக் கடவுளையும் அவர் குறிப்பிட்டு பாடவில்லை. இந்த கருத்துக்கு விளக்கம் தருவது போல் யுத்த காண்டத்தில் உள்ள பின்வரும் கடவுள் வாழ்த்து பாடல் அமைந்துள்ளது.
ஒன்றே என்னின் ஒன்றேயாம்;
பலவென்(று) உரைக்கில் பலவேயாம்;
அன்றே என்னின் அன்றே யாம்;
ஆமே என்னின் ஆமேயாம்;
இன்றே என்னின் இன்றேயாம்;
உள(து) என்(று) உரைக்கின் உளதேயாம்;
நன்றே நம்பிக் குடி வாழ்க்கை;
நமக்(கு) இங்(கு) என்னோ பிழைப்(பு) அம்மா!
கடவுள் ஒருவன் என்று கூறினாலும் சரிதான்,
பல கடவுள்கள் என்று கூறினாலும் சரிதான்,
கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறான் என்று கூறினாலும் சரிதான்,
கடவுள் இல்லை என்று கூறினாலும் சரிதான், இவ்வாறு இருக்கும் போது இந்தக் கடவுளை நம்பி நாம் எவ்வாறு பிழைப்பது? என்று கம்பன் கூறுகிறான்.
இங்கு ஆத்திகவாதம், நாத்திகவாதம், ஒரு கடவுள் வாதம், பல கடவுள் கொள்கை ஆகியவை எல்லாமே முன்வைக்கப்படுகின்றன. எனவே இதை நம்பி சண்டையிடுவதையும் பேசுவதையும் நாம் தவிர்க்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இது இன்றைய காலத்துக்கு பொருத்தமானது.
இத்தகைய தத்துவ விளக்கத்துக்கு பல ஆதாரங்களை இந்திய தத்துவத்தில் இருந்து நான் கூறிக் கொண்டே செல்லலாம். கம்பன் இத்தகைய கடவுள் கொள்கையை முன்வைப்பதற்கு காரணம் அவனது காலத்தில் சமய சண்டைகள் அதிகமாக இருந்தன என்பது வரலாற்று உண்மையாகும். இது பற்றி விரிவாக காண்பதற்கு இங்கே இடமில்லை.
பன்முக கண்ணோட்டம்!
ஜீவா கம்பனை ஏன் கையில் எடுத்தார் என்பதையும், கம்பன் மூலமாக ஜீவா முன்னிறுத்தும் கருத்துக்களையும் காண்பது அவசியமாகிறது. ஜீவா வாழ்ந்த காலத்தில், கம்பனை நன்கு கற்ற அறிஞர்கள் பலர் இருந்தனர். இவர்களில் பெரும்பாலோர் கம்பனை ரசித்தவர்கள். ஒரு சிறு பகுதியினர் கம்பன் பற்றிய ஆய்வில் ஈடுபட்டவர்கள்.
மற்றொரு சாரார் கம்பராமாயணத்தை சொற்பொழிவுகள் மூலம் தமிழ்நாட்டில் பரப்பிக் கொண்டு இருந்தனர். இவர்கள் அரசியல் சாராதவர்கள்.
அதே சமயத்தில் தமிழகத்தின் அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்களும் கம்பராமாயணத்தைப் பயன்படுத்த தொடங்கினர். அவர்களில் திராவிட இயக்கத்தை சார்ந்தவர்கள் கம்பன் மீது எதிர்மறையான விமர்சனத்தை வைத்தனர். அது தமிழகத்தில் தோன்றிய நிலப்பிரபுத்துவ சிந்தனைகளை எதிர்த்ததன் விளைவாகும். இவர்களை எதிர்த்து பல கம்பராமாயண அறிஞர்கள் பல கட்டுரைகளை வெளியிட்டனர்.
இந்தக் கட்டத்தில் பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த ஜீவா, கம்பராமாயணம் பற்றிய ஒரு ஆக்கபூர்வமான விளக்கத்தை முன்வைத்தார். மார்க்சியத்தின் ஒரு விதி, ‘மறுப்பின் மறுப்பு’ என்பதாகும். மார்க்சியம் ஒன்றை மறுக்கும்போது, ஒரு முந்தைய அமைப்பின் ஆக்கபூர்வமானவற்றை ஏற்றுக்கொள்கிறது. எதிர்மறையானவற்றை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறது. அதன் விளைவாக ஒரு புதிய பாதையை அது உருவாக்குகிறது. எல்லாவற்றையும் எதிர்மறையாக கருதி அழித்து விட்டால் நல்லவை எவையுமே இருக்காது. இது அராஜகவாதத்திலும் இன்மை வாதத்திலும் கொண்டு விடும்.
ஜீவாவின் கம்பன்!
இதற்கு மார்க்சியத்தின் வரலாறே சாட்சியாகும். இதுதான் ஜீவாவின் பாதையாகும். அவர் ஏற்றுக்கொண்ட பொதுவுடமை கருத்துக்களுக்கு உடன்பாடான அம்சங்களை தன் வயப்படுத்திக் கொண்டு, மாறாக உள்ளவற்றை தவிர்த்து விட்டார்.
ஒரு பொதுவுடமைவாதியின் லட்சியம், சோசலிசம் பற்றிப் பேசுவது. சோசலிச சமுதாயத்தை அமைப்பதற்கு தொழிற்சங்கப் போராட்டம் மட்டும் போதாது. அதற்கு இணையாக அரசியல் போராட்டமும் வேண்டும். அதன் இணையாக கருத்தியல் போராட்டமும் வேண்டும். அரசியல் வாதியாக இருந்த ஜீவா தொழிற்சங்க போராட்டத்திலும் தீவிரம் காட்டினார். அதே சமயத்தில் கருத்தியல் போராட்டத்திலும் கால் பதித்தார். அவரது இறுதி லட்சியமானது சோசலிசம்.
திரைப்படத் துறையில் இடதுசாரிகளால் அதிகம் செய்துவிட முடியவில்லை. அதற்கு காரணம் அது பூர்ஷுவா சாதனமாக மாறிவிட்டது. அதில் இடதுசாரி கருத்து உள்ளவர்களை நுழைய விட மாட்டார்கள்.
அதே சமயத்தில் தத்துவம், இலக்கியம் ஆகியவை இருக்கின்றன. இந்தத் துறைகளில் இடதுசாரிகள் தீவிரமாக செயல்படத் துவங்கினர். ஆனால் இவை இரண்டும் வெகுஜன கலாச்சாரத்தைச் சாராதவை. இந்த எல்லைக்குள் இருந்து கொண்டு தான், ஜீவா தன்னுடைய லட்சியத்திற்கு ஏற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டி இருந்தது. அதற்கு அவர் பாரதியின் சிந்தனைகளையும், கம்பனின் சிந்தனைகளையும் ஒரு புதிய கோணத்தில் விளக்க முற்பட்டார். இந்த விளக்கமானது ஒரு இலக்கியத் தரம் வாய்ந்த விளக்கமாகும். அவை கொள்கை விளக்கமாகவும் அமைந்து விடுகிறது. இது கம்பன் பற்றிய ஒரு இடதுசாரி விமர்சனமாகவும் அமைந்து விடுகிறது.
சோசலிசம் என்ற கருத்தை மனதில் வைத்துக்கொண்டு ஜீவா கம்பனை அணுகுகிறார். இதனை அவர் மூன்று கூறுகளாகப் பிரித்துக் கொள்கிறார்.
- சமத்துவம் பற்றிய கம்பனது கருத்து;
- சகோதரத்துவம் பற்றிய கருத்து;
- மனிதநேயம் பற்றிய கருத்து.
இவை அனைத்தும் கம்பனது காப்பியத்தில் பரவிக் கிடக்கின்றன.
ஜீவா கம்பனது நாட்டுப் படலத்தை எடுத்துக் கொள்கிறார். பின்வரும் இரு பாடல்கள் சமத்துவம் பற்றிய கருத்தை எடுத்துக்காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.
“கல்லாது நிற்பார் பிறர் இன்மையின் கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை
எல்லோரும் எல்லாப் பெரும் செல்வமும் எய்துதலாலே
இல்லாரும் இல்லை; உடையாரும் இல்லை, மாதோ!”
“வன்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை பொய் யுரை யிலாமையால்;
வென்மை இல்லை பல் கேள்வி மேவலால்”
இந்த இரண்டு பாடல்களை முதலில் தொட்டுக் காட்டியவர் ஜீவா தான். இவற்றை பின்னால் வந்த பலர் மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்.
இவற்றில் இரு கூறுகள்!
முதல் பாடலில் உள்ளது பொருளாதார சமத்துவம். அதைத்தான் அந்தப் பாடலின் இரண்டு வரிகள் கூறுகின்றன. எல்லோரும் எல்லா வளங்களையும் பெற்றுள்ளதால், அங்கு இருப்பவர்களும் இல்லை, கொடுப்பவர்களும் இல்லை.
இரண்டாவது பாடல் ஓரளவுக்கு சிந்தனை சமத்துவத்தை குறிப்பிடுகிறது. கோசல நாட்டில் வறுமை என்பதே இல்லை. ஆகையினால் அங்கு வள்ளல் தன்மை என்பது கிடையாது. அந்த நாட்டிற்கு பகைவர்களே இல்லை. ஆகையினால் வலிமை என்பது பற்றி யாருக்கும் தெரியாது. அந்த நாட்கள் பொய் பேசுபவர்களே இல்லை, எனவே உண்மை என்பதைப் பற்றியும் தெரியாது. எல்லோரும் படித்தவர்கள். ஆகையினால் அறியாமை என்பதும் கிடையாது. இத்தகைய லட்சிய சமுதாயத்தை ராமன் இருக்கும் இடமாக கம்பன் சித்தரிக்கிறான்.
நாட்டுப் படலத்தில் உள்ள இயற்கை வர்ணனை முழுவதுமே இக்கருத்துக்களை பிரதிபலிப்பதாகவே உள்ளன. இது ஒரு வகையான கற்பனாவாத சோசலிசமாகும். இதனை பேராசிரியர் நா. வானமாமலை நிலப்பிரபுத்துவ சோசலிசம் என்று அழைக்கிறார்.
மேலைநாட்டு புரூதோன் என்பவர் இத்தகைய அமைப்பு பற்றி பேசியுள்ளார். தாமஸ் மூர் என்பவரும் இத்தகைய கற்பனையான சமுதாயத்தை பற்றி பேசியுள்ளார். இதனை ஒவ்வொரு பொதுவுடமைவாதியும் மனதில் கொள்ள வேண்டும்.
சகோதரத்துவ கருத்துகள்!
ஜீவா, கம்பராமாயணத்தில் காணப்படும் மற்றொரு கருத்தை எடுத்துக் காட்டியுள்ளார். அது சகோதரத்துவமாகும். இதற்கு அவர் குகப்படலம், விபீடணன் அடைக்கலப் படலம் ஆகியவற்றில் உள்ள பல பாடல்களை சுட்டிக்காட்டுகிறார். விபீடனனை ராமன் தன்னுடைய சகோதரனாக ஏற்றுக் கொள்கிறான். குகனை ஐந்தாவது சகோதரனாகவும், சுக்ரீவனை ஆறாவது சகோதரனாகவும் ராமன் ஏற்றுக் கொள்கிறான்.
அதுமட்டுமல்ல குகனுக்கு இலக்குவனை அறிமுகம் செய்யும்போது, இலக்குவனை குகனின் தம்பியாகவும், சீதையை கொழுந்தியாளாகவும் கூறுகிறான். தன்னோடு மட்டும் அல்லாமல் தன் உறவினர்களையும் சகோதரத்துவ கொள்கையில் கொண்டு வருகிறார். இதைத்தான் ஜீவா மிக அழுத்தமாக கூறுகிறார்.
வால்மீகி, கம்பனுக்கு ஒரு படி மேலே சென்றிருக்கிறார். ராமன், ராவணனைக் கொன்ற பிறகு, அவனுக்கு ஈமக்கிரியைகள் யார் செய்வது என்ற கேள்வி எழுகிறது. விபீடணன் தயங்குகிறான். ராமன் அவனைப் பார்த்து உன்னை என் தம்பியாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்; எனவே இராவணன் என் சகோதரனாகி விடுகிறான்.
ஆகையினால் நீ செய்யாவிட்டால் நான் கிரியைகளை செய்வேன் என்று கூறுகிறான்.
கம்பர் அதற்கும் மேல், ஒரு படி செல்கிறார். விபீடணனை சகோதரனாக ஏற்றுக் கொண்ட பிறகு, தயரதனை விபீடணனின் தந்தையாகக் காட்டுகிறார். இதற்குரிய பாடல் பின்வருமாறு:
“குகனொடு ஐவரானோம் முன்பு,
பின் குன்று சூழ்வான்
மகனொடு அரறுவரானோம்;
எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் அய்ய!
நின்னுடன் எழுவரானோம்;
புகல் அரும் கானம் தந்து
புதல்வரால் பொலிந்தான் நுந்தை”
இந்தப் பகுதிகள் சகோதரத்துவத்தின் உச்சத்தை காட்டும் பகுதிகளாகும். அதே சமயத்தில் இவற்றில் மனிதநேயம் இழையோடிக் கொண்டிருப்பதையும் காண முடியும்.
மனித நேயம்!
யுத்த காண்டத்தில் ஒவ்வொருவரையும் அழிக்கும் பொழுது அவர்களது நற்பண்புகளையும் ஏற்றுக் கொள்கிறார். கும்பகர்ணனை அனுதாபத்தோடு பார்க்கிறார். ராவணனை அழிக்க வேண்டுமே என்று கூட வருத்தப்படுகிறார். தயரதனிடம் வரம் கேட்கும் பகுதியில், மனித நேயத்தின் சிகரத்தை காண முடியும்.
தனக்கு பெரும் துன்பத்தைக் கொடுத்த கைகேயியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ராமன் தந்தையிடம் கேட்கும் போது மனிதநேயத்தின் உச்சத்தைக் காணமுடிகிறது.
ஆக எல்லோரும் வாழ வேண்டும் என்ற சமத்துவ சமுதாயம் கம்பனது இந்த காவியத்தில் லட்சிய சமுதாயமாக அமைகிறது. இதன் உள்ளாக சகோதரத்துவம், மனிதநேயம் ஆகியவை இடம் பெறுகின்றன. இவை அனைத்தையும் உள்ளடக்கிய பொற்கால கனவைக் கண்டவன் கம்பன்.
கம்பனின் இராமன் ஒரு ஆதிக்க நாயகன் அல்ல. மனிதன் தெய்வமாக மாறிய கட்டம் என்று கூறுவார்கள். இங்கு தெய்வத்தை விட கம்பன் மானுட பண்புகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறான்.
“மானுடம் வென்றதம்மா” என்ற வரிகள், அவருடைய வழியைக் காட்டுகின்றன.
(இக்கட்டுரை ஜீவா அவர்கள் கூறியதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அவர் கூறாத சில அவர் வழியில் நின்று விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பொதுவுடமைவாதியும் இதனை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்)
கட்டுரையாளர்: எஸ். தோத்தாத்திரி
மார்க்சிய ஆய்வாளர்