
ரஜனி பாமி தத் என்கிற பெயர் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றுடன் கலந்து போன பெயர். குறிப்பாக விடுதலைக்கு முன்னரான கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் பெரும் பாத்திரமாக இருந்த பெயர்.
லண்டன் ஓரப்பகுதி கிராமம் ஒன்றில் அக்கால நம்மூர் ‘ஒரு ரூபா’ டாக்டர் போல, ஏழைகளின் மருத்துவராக இருந்தவர் உபேந்திர கிருஷ்ண தத். அவர் ஸ்வீடிஷ் பெண் ‘அன்னா பாமியை’ மணந்து கொண்டார். கிளமன்ஸ் பாமி தத், ரஜனி பாமி தத் என்கிற அவர்களது இரு மகன்களும் பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தாலும், கம்யூனிஸ்ட்களாலும் மறக்க முடியா மனிதர்களாயினர்.
ரஜனி என்றால் இரவில் பிறந்தவன் எனப் பொருள். அம்மாவின் பாமி, அப்பாவின் தத் சேர்ந்து அவர் ரஜனி பாமி தத் ஆனார். இந்தியாவில் ஆர் பி தத் என அறியப்படலானார். தோழர்களால் ரஜி என அழைக்கப்பட்டார்.
கல்லூரி காலத்திலேயே, சோவியத் தாக்கத்தால் அவர்கள் புரட்சிகர இயக்கம் நோக்கி சாய்ந்தனர். கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் நாயக இளைஞர்களாகவும் வளர்ந்தனர். ஆர் பி தத் ‘லேபர் மன்த்லி’ தொடங்கி 53 ஆண்டுகள் அதன் எடிட்டராக ஏராளம் எழுதி குவித்தார். சிபிஜிபி என்கிற கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுவில் செயல்பட்டார்.
ஷாபுர்ஜி சக்லத்வாலா, எமிலி பர்ன்ஸ், ஹாரி பொலிட் போன்றவர்கள் கூட்டாளிகள்.
சக்லத்வாலாவும் தத்தும் ஒருவரையொருவர் நேசித்த தோழர்கள். 1922ல் வெளியான எம்.என்.ராயின்India in Transition, 1926ல் வெளியான தத்தின் Modern India இரண்டும் அப்போதைய அறிவுசார் இளம் கம்யூனிஸ்ட்களுக்கு பொக்கிஷங்களாயின. இந்தியா குறித்த மார்க்சிய ஆய்வு நூல்களாக அவை பார்க்கப்பட்டன.
பிரிட்டிஷ் கட்சியில் அப்போதிருந்த இளம் தோழர்களில் சிலர் – சார்லஸ் அசிலே, ஜார்ஜ் அலிசன், பென் பிராட்லி, பிலிப் ஸ்ப்ராட் போன்றோர் இந்தியா வந்தனர். இங்கிருந்த இளம் குழு தோழர்களுடன் ஸ்ப்ராட் தொடர்பு கொண்டு மீரத் சதி வழக்கில் சிறைக் கொடுமையையும் அனுபவித்தார். சிங்காரவேலர் பேத்தியையும் மணந்து, இந்தியாவிலேயே வாழ்ந்து மறைந்தார். அது தனி வரலாறு.
இங்கிலாந்திற்கு படிக்கப்போன ஏராள இந்திய இளைஞர்கள் மார்க்சியம் பக்கம் திரும்பினர். ஆர்.பி.தத்திற்கும் இதில் பெரும் பங்குண்டு. அவர்களில் பலர் பெரும் பொறுப்புகளில் பின்னர் அமர்ந்தனர். அவர்களில் சிலர் டி.ஆர்.காட்கில், எஸ்.சி. சர்கார், ஜோதிபாசு, ஹக்சர், மோகன் குமார மங்கலம், இந்திரஜித் குப்தா, புபேஷ் குப்தா, என்.கே.கிருஷ்ணன், பெரோஸ் காந்தி, நிகில் சக்கரவர்த்தி, ரேணுகா, ஹஜ்ரா பேகம், டாக்டர் அகமது, தேவி பிரசாத் சட்டோ, திலிப் போஸ், ஜகதீஷ் குப்தா எனச் சொல்லலாம்.
அப்போதெல்லாம் கோமிண்டர்ன் (மூன்றாவது அகிலம்) என்ன எழுதி அனுப்புகிறதோ அதுதான், அனைத்து கம்யூனிஸ்ட்களுக்கும் பாடத்திட்டம். வேறு பிரதியை நினைத்துக்கூட பார்க்க முடியாது. மெத்த படித்த இந்த அனைத்து இளைஞர்களும், சோவியத் மகுடியில் முழுமையாக மனதை கொடுத்தனர். முளைவிட்ட இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், ஸ்டாலின் பேசிய அறிக்கைகளும், கோமிண்டர்ன் அறிக்கைகளும் தான் road map.
எம் என் ராயின் தாக்கம் நீங்கிய நிலையில், பிரிட்டிஷ் தோழர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பு கூடியது. தத் முக்கிய வழிகாட்டியாக வரலானார். ஹிட்லரின் பாசிசத் தன்மை உணரப்பட்ட நிலையில், கோமிண்டர்ன் டிமிட்ராவ் அறிக்கை வழியே, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களில் அய்க்கிய முன்னணி என்கிற கோட்பாட்டை முன்னெடுத்தது.
இந்தியாவிலும் காங்கிரசுடன் இணைந்து என்கிற அறிவுரையை டிமிட்ராவ் முன் வைத்தார். இதற்கு முன்னால் இருந்த, காந்தி- காங்கிரஸ் குறித்த விமர்சன பார்வையில் கொஞ்சம் தணிவு ஏற்படலானது. தத்தும் பிற கம்யூனிஸ்ட்களைப் போலவே காந்தியை ‘ரீ ஆக்ஷனரி ‘ எனத்தான் எழுதி வந்தார்.
ஆறாவது கோமிண்டர்ன் வழிகாட்டல், மிக மோசமான இடது குறுங்குழு வாதம் நோக்கியே, இந்தியாவில் கம்யூனிஸ்ட்களை அழைத்துச் சென்றது. தத் அக்கூட்டத்திற்கு செல்லாவிடினும், அவர் இந்த செக்டேரியன் நிலைப்பாட்டை மிக அதிகம் உயர்த்திப்பிடித்தவர் என பார்க்கப்பட்டார். ஸ்டாலினின் ஊதுகுழல் எனப் பெயர் எடுக்கும் அளவு அவரது எழுத்துக்கள் சென்றன. இந்த தாக்கம் இந்திய கம்யூனிஸ்ட்கள் மீதும் பரவியது. காந்தியும் காங்கிரசும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாயினர். இந்திய தல நிலைமை குறித்த அறியாத்தனத்தால் விமர்சிக்கப்பட்டு வந்த காலமிது.
1936ல் இன்றும் கட்சி வட்டாரத்தில் புகழ் வாய்ந்த சொற்றொடராக இருக்கும் Dutt- Bradley thesis வெளியானது. ஆர்.பி.தத் மற்றும் பென் பிராட்லி பெயரில் வந்த ஆவணப்படி, காங்கிரசுடன் சேர்ந்து உள்ளிருந்து வேலை செய்வது என்ற திசை பின்னர் உருவானது. இளம் பி.சி.ஜோஷி பொதுச் செயலராகி, இதை முன்னெடுக்கலானார்.
இந்த சூழலிலும் வங்கத் தோழர்கள் தங்கள் செக்டேரியன் பாதையை விடாமல் league against Gandhism- fight the reactionary and bourgeois ideology of Gandhism’ என்று இயங்கியதாக சோம்நாத் லாகிரி நினைவு கூர்ந்துள்ளார். சோம்நாத் லாகிரி மட்டுமே ஓராண்டு அரசியல் அமைப்பு அவையில் கம்யூனிஸ்ட்கள் சார்பில் இருந்தவர்.
மாஸ்கோ சென்ற கிளமன்ஸ் தத், ஹாரி பொலிட், பென் பிராட்லி அங்கே வந்திருந்த அன்றைய காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர் மினு மசானியை சந்தித்து CSP- CPI இடது கட்சிகளின் நெருக்கம் குறித்து, அணி குறித்து உரையாடினர். கிளமன்ஸை, ரஜனி தத் என மசானி அப்போது தவறாக புரிந்து கொண்டார். கம்யூனிஸ்ட்களிடம் அவநம்பிக்கை வைத்திருந்த மினு மசானி இரு நிபந்தனைகளை விதித்தார். சி.பி.ஐ யை கலைத்துவிட்டு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் சேரவேண்டும். கோமிண்டர்ன் இணைப்போ, உத்தரவுகளோ கூடாது என்பன நிபந்தனைகள். இது நடைபெறாது என அவர் அறிவார்.
இந்தியாவில் ஆங்காங்கே காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் கம்யூனிஸ்ட் தோழர்கள் இயங்கத்தொடங்கினர். நம்பூதிரிபாத், ராமமூர்த்தி, ஜீவா போன்றோரை இப்படி சொல்லமுடியும்.
காங்கிரசில் மாறுபட்டு ‘பார்வேர்ட் கட்சியை’ தொடங்கிய நேதாஜி Left Consolidation Platform ஒன்றை உருவாக்கினார். எம் என் ராய், ஜேபி, நரேந்திரதேவ், பி சி ஜோஷி, நேதாஜி என பெரும் குழாம் சிறிது காலம் சேர்ந்தும், பின் ஒருவரை ஒருவர் நம்பாமல் செயல்பட்டு, ஒற்றுமையை குலைத்துக்கொண்டனர்.
சுவிட்ஜர்லாந்தில் 1936 ல் நேருவை சந்தித்த ஆர் பி தத், காங்கிரஸ் இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சியை தோழமையாக பார்த்து வளர உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நேரு மார்க்சியத்தை ஆழமாக கற்றவராக தெரியவில்லை என்றாலும், அதன் மீது Emotional Attachment அவருக்கு இருப்பதாக தத் மதிப்பிட்டார். நேரு மீது தத்தின் தாக்கம் இருந்ததை, அவர் இந்தியா திரும்பிய உரைகள் காட்டின என்கிற பேச்சு இருந்தது. சிபிஅய் மத்திய கமிட்டி ஜூலை 1936 அறிக்கையில், காங்கிரஸ் மேடையிலிருந்து கணிரென ஒலித்த நேருவின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரல் என இதனை பதிவிட்டது.
லக்னோ காங்கிரசில் நேருவின் தலைமையுரையை- 12 பக்க அளவில் முழுமையாக தத் ‘லேபர் மந்த்லியில்’ வெளியிட்டார்.
அதேபோல் நேதாஜியிடமும் சிறிய அளவு செல்வாக்கை தத்தால் உருவாக்க முடிந்தது. வியன்னாவில் இருந்து The Indian Struggle நூலை எழுதிய நேதாஜியிடம் கம்யூனிஸ்ட்கள் மீது கடும் விமர்சனம் இருந்தது. அவர்கள் தேசியத்திற்கு விரோதமானவர்கள், நாத்திகர்கள், மத விரோதிகள் என நேதாஜி விமர்சித்து வந்தார். நேரு கூட இந்த ‘கம்யூனிச பாச வலையில்’ இருக்கிறார் எனக் கூட பேசினார். லண்டனில் 1938ல் நேதாஜி இருந்தபோது, தத் அவரை சந்தித்து உரையாடினார். தத் தலைமையில் நேதாஜி பேசுகிற கூட்டங்கள் அமைக்கப்பட்டன.
அதற்கு பின்னர் டெய்லி ஒர்க்கர் பத்திரிகை பேட்டியில், நேதாஜி விடுதலை இந்தியா சோசலிச பாதையையே தேர்ந்தெடுக்கும் என்றார். இந்த தாக்கத்தை அவர், காங்கிரசிலிருந்து வெளியேறி இடது மேடை ஒன்றை அமைக்கும்வரை இருந்ததைக் காண்கிறோம்.
1940ல் ஆர்.பி.தத் எழுதிய India Today பெரும் புகழை ஈட்டிய புத்தகமாக இன்றுவரை இந்திய கம்யூனிஸ்ட்களால் உணரப்படுகிறது. அப்புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டு, இரகசியமாக பெறப்பட்டு படிக்கப்பட்டது. இந்தியா குறித்த மேம்பட்ட மார்க்சிய புரிதலாக அது பாவிக்கப்பட்டது.
1939ல் இரண்டாம் உலகப்போரை ‘ஏகாதிபத்திய யுத்தம்- நாடுகளை பங்குபோட வளங்களை கொள்ளையாக்கிட போர்’ என்றுதான் இந்திய கம்யூனிஸ்ட்களும் பார்த்தனர். சோவியத் யூனியன் போரில் இங்கிலாந்து அமெரிக்க அணியில் இறங்கியவுடன், பாசிசத்திற்கு எதிரான ‘மக்கள் யுத்தம்’ என்ற நிலையை எடுத்தனர்.
கட்சி தடை காலத்தில், தலைவர்கள் சிறைக் காலத்தில், கூடி விவாதித்து முடிவு என்பது பிரச்சனையாக இருந்தது. தத் ‘மக்கள் யுத்தம்’ என எழுதிய கட்டுரைகள் உடனடியாக இங்கு தாக்கத்தை உருவாக்கவில்லை. ஆறுமாதம் ஏதோவொரு வகையில் முடிந்த விவாதங்களை மேற்கொண்டு, மக்கள் யுத்தம்- பிரிட்டிஷ் ஆதரவு நிலைப்பாட்டிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வந்தனர். குவிட் இந்தியாவிலும் 1942ல் பங்கேற்கவில்லை என்ற விமர்சனத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட்கள் உள்ளாயினர். ராஜாஜி, அம்பேத்கர், பெரியார், இந்து மகா சபா உட்பட எவரும் குவிட் இந்தியாவை ஆதரிக்கவில்லை – குவிட் இந்தியாவிற்கு எதிராகவே நின்றனர். ஆனாலும் விமர்சனக் கணைகள் கம்யூனிஸ்ட்கள் மீதே அதிகம் விழுந்தன.
பாகிஸ்தான் தீர்மானத்தை முஸ்லீம் லீக் 1940ல் நிறைவேற்றியது. தொடர்ந்த ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட்களும், சுயநிர்ணய உரிமை பார்வையில் இத்தீர்மானத்திற்கு ஆதரவு நிலை எடுத்தனர். புகழ் வாய்ந்த ‘அதிகாரி தீசிஸ்’ அறிந்தவர் இதை உணர்வர். 1946ல் ரஜனி பாமி தத் இந்த நிலை ஏற்புடையதல்ல என எழுதலானார்.
1946ல் இந்திய கம்யூனிஸ்ட்கள் ‘17 அரசியல் அசெம்பிளிகள்’ என தீர்மானித்தனர். லண்டனில் இருந்த டாங்கேவிற்கும் தந்தி அனுப்பப்பட்டு, பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இப்படி ஒரு தீர்மானத்தை கொணரக் கோரினர். தோழர் டாங்கே தந்தியை தோழர் தத்திடம் காட்டினார். தத் ‘மய்யப்பட்ட ஒரே அரசியல் நிர்ணய சபை தான் ‘ தீர்வாக இருக்கும். 17 என்று கோரினால் இந்தியா என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும் என்கிற எச்சரிக்கையை செய்தார். லேபர் மந்த்லியிலும் ஒரே ‘மய்யப்பட்ட அரசியல் நிர்ணய சபை’ என எழுதி, இங்குள்ளவர்களுக்கு வழிகாட்டினார்.
அதேபோல் இந்தியாவை பிளவுபடுத்தும் மவுண்ட்பாட்டன் திட்டத்தை அவர் ஏற்கவில்லை.
இந்தியா வந்த பாமி தத் – காந்தி, நேரு, படேல், ஆசாத்,ஆசப் அலி, ராஜாஜி போன்றவர்களை சந்தித்தார். காங்கிரஸ் – கம்யூனிஸ்ட்கள் சேர்ந்து தோழமையுடன் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டினார். காங்கிரசின் ‘பாஸ், இரும்பு மனிதன்’ என கருதப்படும் படேலுடன் தான் அதிக நேரம் விவாதிக்க வேண்டியிருந்தது என தத் குறிப்பிட்டுள்ளார். பெதிக் லாரன்ஸ் தூதுக்குழு வந்த 1946 மார்ச்சில், டெய்லி ஒர்க்கர் பத்திரிகையாளராக தத் இந்தியப் பயணம் இருந்தது. தனது தந்தையின் மூதாதையர் இடமான கல்கத்தா சென்று மகிழ்ந்தார். தொழிலாளர் கூட்டங்களில் உரையாற்றினார். மே தின பேரணியில் பங்கேற்றார். கல்கத்தா தோழர்களின் அன்பில் திளைத்தார்.
அதேபோல் தன்னை சந்தித்த சோசலிஸ்ட் தலைவர் மதுலிமாயிடம், 1947 நவம்பரில், காங்கிரசை விட்டு நீங்கள் வெளியே போவது நல்லதல்ல என எடுத்துரைத்தார் தத். நேருவிற்கு ஆதரவான சக்திகள் வெளியேறுவது, படேல் போன்றவர்களையே பலப்படுத்தும் என அவர் கருதினார்.
1948ல் தோழர் ரணதிவே தலைமையில் மீண்டும் குறுங்குழு வாதம் கட்சியைப்பற்றியது. பெற்ற விடுதலையை ஏற்கவில்லை. அதிவீர நிலைப்பாடுகளால், லட்சம் உறுப்பினர்களை தொட்ட கட்சி பெருமளவு சரிந்து 20 ஆயிரம் என்றானது. தத் நேருவின் வெளிநாட்டு கொள்கையை பாராட்டி எழுதினார். திரும்பவும் கட்சி நிதானமடைய அவரின் கருத்துக்கள் உதவின. இந்திய கம்யூனிச இயக்கம் பற்றி புகழ் வாய்ந்த நூல் எழுதிய ஓவர் ஸ்ட் ரீட்- விண்ட்மில்லர், 1951 கட்சி திட்ட வரையறைகளில் ரஜனி பாமி தத் செல்வாக்கு இருந்ததாக மதிப்பிட்டுள்ளனர்.
பின்னொரு காலத்தில் டாங்கே இவ்வாறு நினைவு கூர்ந்தார். மிக முக்கியமான கட்சி வரலாற்று கட்டங்களில் எல்லாம், ஆற்றுப்படுத்த தத் நம்மோடு நின்றுள்ளார். எம் பி ராவ் எடிட் செய்த கட்சி வரலாற்று ஆவணம் இப்படி பதிவை செய்தது.
“On so many critical the CPGB and Palme Dutt had corrected us- the three party letters of 1933, Dutt Bradley Thesis 1936, after Hitler attack, criticism on our wrong stand with regard to Muslim League and finally his letter to Andhra comrade in 1949”
1959ல் கேரளா இ.எம்.எஸ் ஆட்சி கலைக்கப்பட்டபோது, நேருவை விமர்சித்தார் தத். 1962 இந்திய சீனா போரை, தொடர்ந்த 1964 கம்யூனிஸ்ட் இயக்க உடைவை அவர் துரதிருஷ்டமான நிகழ்வுகள் என வருந்தினார்.
தத் தனது மார்க்சிய பயிற்சியால், இந்தியத் தோழர்களுக்கு துணையாக நின்றார். சோவியத்தை ஸ்டாலினை உயர்த்திப் பிடித்தார். இந்திய மக்களின் விடுதலைக்காக ஓயாமல் குரலை லண்டனில் கொடுத்து வந்தார். அவர் காந்தியை கடுமையாக விமர்சித்தவர்தான். அதே நேரத்தில் லண்டனில் அவர் தேர்தலில் நின்றபோது, 1945ல் மகாத்மாவின் ஆசியை கோரினார். காந்தியும் வெற்றிபெற நல்வாழ்த்துகள் என்கிற செய்தியை அனுப்பியதாகவும் அறிய முடிகிறது. ஹங்கேரி 1956, செக் 1968 சோவியத் தலையீடுகளை தத் வரவேற்பவராகவே இருந்தார். அவர் அதை நியாயப்படுத்தியது விமர்சனமானது. அப்போது கம்யூனிஸ்ட்களுக்கு இருந்த ஒரே பற்றுக்கோல் சோவியத்தாக இருந்தது.
தத் Labour Monthly ல் பெரும் அறிஞர் பெருமக்கள் எழுதி வந்தனர். இந்தியா குறித்தும் ஏராள கட்டுரைகள் வந்தன. மார்க்சியம், சோவியத் பற்றி எழுதப்பட்டது. காந்தியின் கட்டுரை கூட அதில் இடம் பெற்றது. அவர் எழுதிய Britain, India and Swaraj அதில் வந்தது. இந்தியத் தோழர்கள் சட்டோ (சரோஜினி நாயுடு சகோ), எம் என் ராய்., கிருஷ்ண மேனன், சக்லத்வாலா, பி சி ஜோஷி, டாங்கே, சர்தேசாய், என் எம் ஜோஷி (தொழிற்சங்க தலைவர்), ஷேக் அப்துல்லா போன்றவர் எழுதியுள்ளனர்.
உலக அறிஞர்கள் பலர் அதில் பங்களித்தனர். பெர்னார்ட் ஷா, ரொமயின் ரோலந்த், எமிலி பர்ன்ஸ், ரால்ப் பாக்ஸ், ஸ்ட் ராட்சி, கார்ல் ராடெக், மௌரிஸ் டப், ஒலாப் பாமி, நெக்ருமா, பால் ராப்சன், புகாரின், கிளாரா ஜெட்கின் எனச் சிலரை சொல்லலாம்.
லண்டனில் வாழ்ந்த தத், இந்தியா குறித்து விடாமல் சிந்தித்தவராக இருந்தார். இப்படி 50 ஆண்டுகளுக்கு மேலாக தன் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவழித்த மனிதர், இந்தியாவில் கம்யூனிஸ்ட் அல்லாதார் மத்தியில் ஏனோ போய் சேரவில்லை. விடுதலைக்கால அனைத்து தலைவர்களுடனும் தன் விவாதத்தை நடத்தியவராக தத் இருப்பதைக் காணமுடிகிறது.
லேபர் மன்த்லி இதழ்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இந்தியாவில் அவருக்கு நெருக்கமாக இருந்த திலிப் போஸ் அவர் பற்றி எழுதியுள்ளார். சக்லத்வாலா பற்றி எழுதிய டாக்டர் பஞ்சனன் ஷாகா ரஜனி பாமி தத் குறித்து தனி நூல் ஒன்றும் எழுதியுள்ளார். இந்தியாவின் உற்ற நண்பராக விளங்கிய தத் மறைந்து (1974) அய்ம்பது ஆண்டுகள் ஆன நிலையில், அவர் குறித்த சில செய்திகளை எழுதத் தோன்றியது.