அரசியலை வெறுப்புடன் அணுகும் இன்றைய தலைமுறைக்கும் ஒற்றை நம்பிக்கைச்சுடர். கொள்கை வேறுபாடுகளைக் கடந்து மக்களாலும் மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்படுகிற ஒரே தலைவர். விவசாயத் தொழிலாளர் நலன் தொடங்கி தாமிரபரணி பாதுகாப்பு வரை எந்தப் போராட்டம் என்றாலும், தன் வயதை மறந்துவிட்டு முதலில் போய் நிற்கும் மனிதர். அதிகார வேட்கையோ, பணத் தேவையோ, புகழ் போதையோ, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இவரது முன்னெடுப்புகள் ‘ஏதாவது நல்லது செய்யணும்’ என நினைக்கும் நம் எல்லோருக்குமான நல்லுதாரணம்.
இளம் வயதிலேயே போராட்டக் களத்துக்கு வந்தவர், 100 வயதாகியும் இன்றும் தீராத உழைப்புடன் போராடுகிறார். அண்ணல் காந்தியின் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர், பொதுவுடைமைக் கொள்கையால் கவரப்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆனார். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் இவர் அனுபவித்த சித்ரவதைகள் சொல்லி மாளாது. நேரடி வன்முறைகளுக்கும் போலீஸ் அடக்குமுறைக்கும் அஞ்சாது பயணித்த நல்லகண்ணுவை இயக்குவது அறத்தின் மீதான பெரும் நம்பிக்கை.
சாதாரண வெள்ளைச் சட்டை, வேட்டி-துண்டு, ரப்பர் செருப்பு, வியர்த்துக் களைத்த உருவம் தான் நல்லகண்ணுவின் வெளி அடையாளம். ஆனால் இவரின் வாழ்க்கை நம் எல்லோருக்குமான நம்பிக்கை வெளிச்சம். ஆச்சர்ய அரசியல்வாதியாக தன் சொந்த வாழ்விலும் தூய்மையைப் பேணினார் ஐயா.
தோழர்கள் அன்போடு அவருக்களித்த ஒரு கோடி ரூபாயை அடுத்த நிமிடமே கட்சியின் வளர்ச்சிக்குக் கைமாற்றிய பண்பாளர். கண்ணியமான சமூகச் செயல்பாடுகளாலும் ஓய்வறியாத மக்கள் தொண்டாலும் தமிழ மக்களின் மதிப்பையும் மரியாதையையும் சொத்தாகச் சேர்த்திருக்கும் இந்தத் தோழர், நமக்கான பெருமிதத் தமிழர்.
ஆனந்த விகடன் (01.01.2025)