மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பொறுப்பேற்ற பெ.சண்முகத்திற்கு வாழ்த்துகள்
தோழர் இரா.முத்தரசன் அறிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மாநிலச் செயலாளர் பொறுப்பேற்ற
பெ.சண்முகத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தமிழ்நாடு 24-வது மாநில மாநாட்டின் நிறைவாக 81 உறுப்பினர்கள் கொண்ட மாநிலக் குழுவும், 13 உறுப்பினர்கள் கொண்ட செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டு மாநிலச் செயலாளராக தோழர் பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தோழர் பெ.சண்முகம் மாணவப் பருவத்தில் இருந்தே அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருபவர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பொறுப்பில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தவர். பயிர் வாரியாக, பாசன வாரியாக விவசாயிகள் அமைப்புகள் செயல்பட்டு வரும் சூழலில் கூட்டமைப்பை உருவாக்கி செயல்பட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி செயல்பட்டு வருபவர். ஆதிவாசிகள், பழங்குடி மக்கள் நலனுக்காக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்திலும் பங்கேற்று செயல்பட்டவர்.
வாச்சாத்தி பகுதியில் பழங்குடி மக்கள் ஆளும் வர்க்கமும், அதிகார வர்க்கமும் அரங்கேற்றிய அடக்குமுறைக்கு எதிராக போராடுவதில் அப்பகுதி மக்களை அணிதிரட்டி வழிநடத்தியவர். சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதில் முக்கிய பங்களிப்பு செலுத்தியவர்.
அரசியல் தளத்திலும் இடைவிடாமல் இயங்கி வரும் தோழர் பெ.சண்முகம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற, சமூகநீதி ஜனநாயக சக்திகளை பரந்துபட்ட ஒற்றுமை உருவாக்குவதில், அவர் மேலும், மேலும் வெற்றி பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பாக மாநில செயலாளர் இரா.முத்தரசன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.