அறிக்கைகள்

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஏப்ரல் 9 தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் பாஜக ஒன்றிய அரசை கண்டித்தும், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஏப்ரல் 9 தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) உருவான ஆரம்ப காலத்தில் இருந்து சிறுபான்மை மக்களின் மீது வெறுப்பை விதைத்து வருவதை நாடறியும். வேற்றுமையில் ஒற்றுமை பேணும் மரபையும், மதச்சார்பற்ற பண்புகளையும் அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தை சிறுமைப்படுத்தி அழித்தொழித்துவிட்டு, நாடாளுமன்ற ஜனநாயக முறைகளை நிராகரித்து பெரும்பான்மை மத அடிப்படைவாதத்தின் அச்சில் நாட்டை “இந்துராஷ்டிரமாக” கட்டமைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது.

கடந்த 40 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார் கும்பல் இஸ்லாமிய சமய நம்பிக்கை கொண்ட, முஸ்லிம் சமூக மக்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து ஒன்றிய அரசதிகாரத்தையும், கற்பனைக்கு எட்டாத பண பலத்தையும் பயன்படுத்தி வகுப்புவாத தாக்குதலை பன்மடங்கு பெருக்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக முஸ்லிம் மக்களின் சமூக சொத்துக்களை பாராமறித்து வரும் வக்ஃப் வாரிய சட்டத்தில் திருத்தம் செய்து, முஸ்லீம் மக்களின் உரிமைகளை பறிக்கும் மசோதாவை நிறைவேற்றி, சட்டமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

எதிர்கட்சிகள், ஜனநாயக சக்திகளின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், திருத்தங்களையும் முற்றாக நிராகரித்து, ஏதேச்சதிகார முறையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதவை நிறைவேற்றிய மோடியின் ஒன்றிய அரசைக் கண்டித்தும், தேச ஒற்றுமையை, நீடித்த அமைதியை பாதுகாக்க வக்ஃப் வாரிய சட்டதிருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரும் 09.04.2025 புதன்கிழமை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறது.

மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தை கட்சியின் மாவட்டக் குழுக்கள், இடைநிலைக் குழுக்கள் வெற்றிகரமாக நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது. நாட்டின் அரசியலமைப்பை பாதுகாக்க நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பிரிவு மக்களும் பங்கேற்று ஆதரிக்குமாறு அறைகூவி அழைக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button