கட்டுரைகள்

சமூக ஊடகங்களின் பிரைவசி கொள்கையும் மார்க்சியமும்

வ.மணிமாறன், ஊடகவியலாளர்

சமூக ஊடகங்களின் இன்றைய தனியுரிமை (பிரைவசி) கொள்கைகள், தனிநபர் வாதமாகவும் சுரண்டலைப் பாதுகாக்கும் கருத்தியல் சார்ந்ததாகவும் இருக்கின்றன. இதனால் தனியுரிமை என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கா? மக்களுக்கா? என்ற அடிப்படைக் கேள்வி எழுகிறது.

இன்றைக்கு ஸ்மார்ட் போன் எனப்படும் திறன்பேசிகளை பெரும்பாலான மக்கள் வைத்திருக்கின்றனர். மின்னஞ்சல் (இமெயில்) வைத்திருக்கிறோம். அந்தத் திறன்பேசியில் நம்முடைய நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் என அனைவருடைய கைப்பேசி எண்களை சேமித்து வைக்கிறோம். அவை அனைத்தும் மின்னஞ்சலிலும் பதிவாகின்றன.

அடுத்து, மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான முகநூல் (facebook), வாட்ஸ்அப் (whatsapp), மெசஞ்சர் (messenger) ஆகியவை சேகரிக்கும் தரவுப் பட்டியல் மிக நீளமானது. நம்முடைய வீட்டின் துல்லியமான முகவரி, அலுவலக முகவரி,  மின்னஞ்சல், நம்முடைய பெயர், தொலைபேசி எண், உறவுகளின் விவரங்கள், புகைப்படங்கள், காணொளிகள் (வீடியோ), நம்முடைய பொழுதுபோக்கு, வலைத்தளங்களில் பயனாளர்கள் தேடிய தகவல்கள், பயன்படுத்தும் கருவியின் ஐடி, உடல் நலம், உடல் தகுதி, கொள்முதல் செய்யும் பொருட்கள், குரல் மாதிரி (வாய்ஸ் ஆடியோ), குடும்பம், குழந்தைகள் உறவுகள் என அனைத்துத் தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன.

நாம் ஒரு வலைதளத்திற்கு (வெப்சைட்) சென்றால், நம்முடைய பெயர், வயது போன்ற தகவல்கள் கேட்கப்படுகின்றன. அல்லது மின்னஞ்சலை இணைக்கச் சொல்கிறது. அதனை இணைத்தவுடன் இமெயில் நிறுவனங்கள் திரட்டி வைத்திருக்கும் நம்மைப் பற்றிய தகவல்களை அந்த வெப்சைட்டுடன் பகிர்ந்து கொள்கிறது.

எந்த இடத்தில் இருந்து வலைதளத்தின் சேவையைப் பயன்படுத்துகிறோம்? எந்தக் கருவியில் அதைப் பயன்படுத்துகிறோம்? என்பது உள்ளிட்ட அடிப்படையான தகவல்களும் அந்த நிறுவனங்களால் சேகரிக்கப்படுகின்றன. இப்படித் திரட்டப்படும் தகவல் தொகுப்பை ‘பிக் டேட்டா’ என்கின்றனர்.

இப்படித் திரட்டப்படும் தரவுகளைக் கொண்டு, ஒரு நபருடைய விருப்பங்கள், ஆர்வங்கள், தேர்வுகள், தேவைகள் உட்பட அனைத்தையும் கொண்ட ஒரு மாதிரியை வடிவமைக்கின்றன. அதன் மூலம் நிறுவனங்கள் விளம்பரம் செய்வதும் பொருட்களை சந்தைப்படுத்துவதும் மிக எளிதாகின்றன. நம்மைப் பற்றிய தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தனித்தனி விளம்பரங்களும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான விவரங்களும் வந்து சேர்கின்றன. நம்முடைய சிந்தனையை வடிவமைக்கும்; திசைமாற்றும் செய்திகளும் நமக்கு வருகின்றன.

முகநூல் நிறுவனம் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் வருமான விவரங்களே இதற்குச் சான்றாகும். முகநூல் நிறுவனம் 2022 ஆம் ஆண்டு ஈட்டிய 116 பில்லியன் டாலர் வருமானத்தில், விளம்பரத்தின் மூலம் 113 பில்லியன் டாலர் பெற்றிருக்கிறது.

ஒவ்வொருவருடைய விருப்பங்கள், சிந்தனை ஓட்டங்கள், பண்பாட்டுப் பார்வைகள் உட்பட அனைத்தும் சேகரிக்கப்படுகின்றன. இவற்றைக் கொண்டு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தேர்தல்களில் இந்த நிறுவனங்கள் தலையிட்டதாகப் புகார்கள் எழுந்ததையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு நிறுவனம் சேகரிக்கும் நம்மைப் பற்றிய தகவல்களைக் கொண்டு, அது நாம் தான் என அடையாளம் காண முடிந்தால், அது தனிநபர் உரிமை மீறலாகும். இந்த மீறல்கள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு கடிவாளம் இடுவதற்குத் தான் பிரைவசி எனப்படும் தனியுரிமை பாதுகாப்புச் சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.

இந்தத் தனியுரிமை (பிரைவசி) பிரச்சனை இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மட்டுமல்ல, இதற்கு முந்தைய சமூகத்திலும் உள்ளது. ஆனால் இன்றைய இணைய (இன்டர்நெட்) உலகில் தனியுரிமைப் பிரச்சனை சற்று மாறுபட்டது.

டிஜிட்டல் உலகில் பிரைவசி எனப்படும் தனியுரிமை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? அதற்கான வரையறை என்ன? கார்ப்பரேட் கொள்கை வகுப்பாளர்கள் கூறும் பிரைவசியும் – கம்யூனிஸ்டுகள் கூறும் பிரைவசியும் ஒன்றா?

சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, மொனாக்கோ போன்ற நாடுகளில் வங்கிக் கணக்குகள், பணப் பரிமாற்றங்கள் தொடர்பான விவரங்கள், பெயர்களை வெளியிடக்கூடாது என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. (இதனால் தான் நம்மூர் அரசியல்வாதிகள் அங்கு சென்று பணத்தைப் பதுக்குகின்றனர்) நிதி வருவாய் மற்றும் சொத்துக்கள் தொடர்பான தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என சுவிஸ் வங்கியாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது. இதனை சுவிட்சர்லாந்து நாட்டின் பெடரல் வங்கிச் சட்டமும் உறுதி செய்துள்ளது.

பல நாடுகளில் பொதுத்துறை தவிர்த்த நிறுவனங்களின் வருமானம் மற்றும் லாபம் கமுக்கமாகவும், நிதி சார்ந்த தனியுரிமையாகவும் இருந்து வருகிறது.

நிதி சார்ந்த தனியுரிமையால் வங்கிக் கணக்குகள், பணப் பரிமாற்றங்கள் வெளிப்படைத் தன்மையற்று கமுக்கமாக வைக்கப்படுகின்றன. இதனால் நிறுவனங்களின் வருமானம் பல மடங்கு அதிகரிப்பதற்கும்; பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் குவிவதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பண மோசடிகள் நிகழ்வதற்கும் நிதி சார்ந்த தனியுரிமை காரணமாக இருக்கிறது. அதாவது சில தனிநபர்கள், நிறுவனங்கள் சொல்லும் வருமானத்திற்கும் அவற்றின் உண்மையான செல்வக் குவிப்புக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்படுகிறது. இதனை மறைப்பதற்கு நிதிசார் தனியுரிமை (பிரைவசி) உதவுகிறது.

இந்த இடைவெளி நியாயமானது, சரியானது என கருத்தியல் ரீதியாக மக்கள் நம்பவும் ஏற்கவும் இந்த நிதிசார் தனியுரிமை உதவுகிறது. அதாவது, சமத்துவமின்மை மேலும் மேலும் அதிகரிப்பதற்கும் ஆழப்படுவதற்கும் உதவும் ஒரு கருத்தியல் பொறிமுறையாக தனியுரிமைக் கொள்கை இருக்கிறது.

எனவே, பிரைவசி என்பது தனி சொத்துரிமையுடன் தொடர்புடையது என்பதை முதலில் எடுத்துரைத்தவர் காரல் மார்க்ஸ். தனியுரிமை (பிரைவசி) குறித்த முதலாளித்துவ – தாராளவாதக் கருத்தியலை விமர்சனத்திற்கு உட்படுத்தியவரும் மார்க்ஸ்தான்.

தனியுரிமை பற்றிய முதலாளிய கருத்தாக்கம் மனிதனை சமூகத்தில் இருந்து பிரித்து “தனிமைப்படுத்தப்பட்ட தனி ஒருவனாக்கி, அவனுக்குள்ளேயே சென்று விடுகிறது..” என்றும், நவீன சமுதாயத்தின் அரசியல் அமைப்பு “தனியார் சொத்தின் அரசியலமைப்பாகவே இருக்கும்” என்றும் கார்ல் மார்க்ஸ் கூறுகிறார்.

அப்படியானால், பிரைவசி உரிமைகளை நாம் முழுமையாக கைவிட வேண்டுமா? முதலாளித்துவ மதிப்பீடுகளை முற்றாக நிராகரிக்க வேண்டுமா? என்றால் கூடாது என்பதுதான் சரியான பதிலாகும்.

சமூகத்தில் இருந்து மனிதனை மிகமிக தனிமைப்படுத்தி, தனிமைப்பட்ட அந்த மனிதனின் சுதந்திரத்தின் மீதே முதலாளித்துவம் கவனம் செலுத்துகிறது. அதையே தனியுரிமை (பிரைவசி) என்கிறது.

முதலாளித்துவத்தின் கீழ் தனியுரிமை என்பது, ஒருபுறம் தனியார் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய மதிப்பீடாக நிலைநிறுத்தப்படுகிறது. அதேநேரத்தில் அதன் மறுபுறத்தில், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசுகளின் கண்காணிப்பு மூலம் சட்டப்பூர்வமாக தனியுரிமை மீறப்படுகிறது. மூலதனத்தைக் குவிப்பதற்கு இது அவசியமாகவும் இருக்கிறது.

எனவே இன்றைய தனியுரிமை (பிரைவசி) சட்டங்கள் – தொழிலாளர்கள், நுகர்வோர், குடிமக்களை தொடர்ந்து கண்காணிப்புக்குள் வைத்திருப்பதுடன், தனியார் சொத்துக்களைப் பாதுகாக்கும் பணிகளையே செய்கின்றன.

இதற்கு மாறாக தனியுரிமை பற்றிய சோசலிச கருத்தாக்கத்தில்,  தற்போதுள்ள தனியுரிமை மதிப்பீடுகள் தலைகீழாக மாற்றப்பட வேண்டும். நுகர்வோர், தொழிலாளர்கள்,  குடிமக்கள் ஆகியோருக்கு வெளிப்படை தன்மையையும் தனியுரிமைப் பாதுகாப்பையும் அதிகரிப்பதற்காக,  பணக்காரர்களையும் மூலதனத்தையும் கண்காணிப்பதில் சோசலிச தனியுரிமை கருத்தாக்கம் கவனம் செலுத்துகிறது. சுரண்டப்படும் குழுக்களின் கூட்டு உரிமையாகவே தனியுரிமையை சோசலிசம் கருதுகிறது.

இதனால் தனியுரிமை பற்றிய சோசலிச கருத்தாக்கத்தில், தற்போதுள்ள தனியுரிமை மதிப்பீடுகள் தலைகீழாக மாற்றப்பட வேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் – ஆதிக்கம் செலுத்தும் வர்க்கக் குழுக்களுக்கு தனியுரிமையுடன், செல்வமும் அதிகாரமும் செலுத்துவதற்கான கமுக்க வாய்ப்பு இருப்பது ஆபத்தானது. இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வெறியிலிருந்து நுகர்வோர், தொழிலாளர்கள் மற்றும் சாதாரண குடிமக்களை பாதுகாப்பது தான் உண்மையான தனியுரிமை ஆகும்.

வணிக இணையதளங்கள் அனைத்திலும் விளம்பரங்கள் விருப்பத் தேர்வாக மட்டுமே இருக்க வேண்டும். அதுதான் பயனாளிகளின் சுயநிர்ணயத்திற்கான வாய்ப்பை வலுப்படுத்தும். இந்த விருப்பத் தேர்வு பொறிமுறையை (Opt -in option mechanism) நடைமுறைப்படுத்துமாறு கார்ப்பரேட் நிறுவனங்களை  அரசின் சட்டங்களின் மூலம் கட்டாயப்படுத்த வேண்டும். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த விருப்பத் தேர்வை நடைமுறைப்படுத்த உடன்பட மாட்டாது. ஏனென்றால் விருப்பத் தேர்வு பொறிமுறை, தகவல்கள் திரட்டப்பட்ட, பண்டமாக்கப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்து விடும். விளம்பர வருவாய் வெகுவாகக் குறைந்து விடும். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் விருப்பத்தேர்வு பொறிமுறையை செயல்படுத்த மறுத்து விடும். பெரும்பான்மை மக்களின் தனியுரிமையைப் பாதுகாக்க இதனை செயல்படுத்தித் தான் ஆக வேண்டும்.

முகநூல் (பேஸ்புக்) உட்பட சமூக ஊடகங்களில் எழும் தனியுரிமைப் பிரச்சனைகளுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் தனியுரிமை குறித்து ஆய்வு செய்யும் போது,  பயனாளிகள் தங்களைப் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தப்படுகிறது. தங்களைப் பற்றிய அதிகப்படியான விவரங்களை வெளியிடுவதால் பயனாளிகளின் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக இந்த ஆய்வுகள் கூறுகின்றன. தனியுரிமையை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக சூழல் ஆகியவற்றில் இருந்து துண்டித்து, தனிப்பட்ட ஒன்றாக இந்த ஆய்வுகள் கருதுகின்றன. இதனால் பயனாளிகள் தங்களைப் பற்றிய விவரங்களை அதிகமாக வெளியிடாவிட்டால் தனியுரிமையைப் பாதுகாக்க முடியும் என்று கூறுகின்றன.

உண்மையில் இந்த ஆய்வுகள், பயனாளிகளின் தரவுகளை முகநூல் நிறுவனம் எவ்வாறு பண்டமாக்குகிறது? பயனாளிகளை எப்படிச் சுரண்டுகிறது? என்பதை பார்க்க மறுத்து விடுகிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சமூக சூழல் பயனாளிகளின் நடத்தைகளை கட்டுப்படுத்துகின்றன என்பதையும்; சமூக ஊடகங்களில் தங்களைப் பற்றிய விவரங்களைப் பகிர்வதற்கு அடிப்படையாக இருக்கும் விருப்பங்களையும் இந்த ஆய்வுகள் புறக்கணிக்கின்றன. இதனால் தனியுரிமை (பிரைவசி) பற்றிய இவற்றின் விளக்கங்கள், தனிநபர் வாதமாகவும் சுரண்டலைப் பாதுகாக்கும் கருத்தியல் சார்ந்ததாகவும் இருக்கின்றன.

கார்ப்பரேட் நிறுவனங்களின் விருப்பங்கள், நவதாராள வாதம், முதலாளித்து வளர்ச்சி போன்றவற்றைத் தவிர்த்து விட்டு, தனியுரிமையை தனி ஒருவரின் நடத்தையாக மட்டும் குறுக்கிப் பார்ப்பது, பெரும்பான்மை மக்களின் தனியுரிமையை பாதுகாப்பதற்கு உதவாது. கார்ப்பரேட் நிறுவனங்கள் விருப்பம் போல் பயனாளிகளின் தகவல்களைத் திரட்டுவதற்கும் அதனை பண்டமாக மாற்றி பல்லாயிரம் கோடிகளை குவிப்பதற்கும் மட்டுமே இந்த தனியுரிமைக் (பிரைவசி) கொள்கை பயன்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button