உழைப்பை போற்றும் உன்னதம் உணர்த்தும் தைத் திருநாள் வாழ்த்துகள்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
உலகெங்கும் வாழ்ந்து வரும் தமிழ் சமூகம் உழைப்பைப் போற்றும் உன்னத திருநாளாக தை முதல் நாளை வழி, வழியாக கொண்டாடி வருகிறது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்துறை தமிழறிஞர் ஒன்று கூடி, “தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு” என ஆய்ந்தறிந்து அறிவித்ததை ஏற்று, தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது.
இயற்கை சார்ந்து வாழ்ந்த மனித குலம், பயிர் சாகுபடி செய்யும் நிலைக்கு வளர்ந்து, உழவுத் தொழில் வாழ்க்கை முறையை எட்டிய நாள் முதலாக இயற்கை சூழலுக்கு பொங்கலிட்டு குறிப்பாக சூரியனை வழிபட்டு, குதூகலித்து வருகின்றது. மனித உழைப்புக்கு உதவி, உற்பத்தி பெருக்க உதவிய கால்நடைகளையும் வணங்கி மகிழும் “மாட்டு பொங்கலும்” தொடர்ந்து வருகிறது.
பெண்களும், குழந்தைகளும் கன்னியர்களோடு சேர்ந்து கும்மியடித்து கொண்டாடும் “காணும் பொங்கலும்”, தின்தோள் திறன் படைத்த இளைஞர்கள் “ஜல்லி கட்டில்” இறங்கி முரட்டுக்காளைகளை அடக்கி, வெல்லும் வீர விளையாட்டுகளும் தொடர்கின்றன.
இயற்கை பேரிடர்களின் தொடரும் தாக்குதலில் நிலைகுலைந்து போகும் வாழ்க்கை, புத்துயிர் பெற்று, வீறு கொண்டு முன்னேறும் என “தை பிறந்தால், வழி பிறக்கும்” என்று தன்னம்பிக்கை தரும் “தை” பொங்கல் தமிழர் பண்பாட்டு திருவிழா சாதி, மத, இன வேறுபாடுகள் இல்லாது உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து காணும் இன்பத் திருவிழாவாக தொன்மைக் காலம் தொட்டு தொடர்கிறது.
சாதிவெறி, மதவெறி, மொழிவெறி, இனவெறி என வெறுப்பு வளர்க்கும் அரசியலுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்று உறுதி காட்டி, கடந்த ஆண்டில் அரசியல் களத்தில் நூறு சதவீதம் வெற்றி கண்டோம்.
இயற்கைப் பேரிடர் மாறி, மாறி தாக்கிய போதும், ஒன்றிய அரசு வன்மம் காட்டி, வஞ்சித்து வரும் நிலையிலும் உழைக்கும் மக்களின் ஆதரவோடு தமிழ்நாடு முன்னேறி வரும் பெருமை கொள்கிறோம். ஆனால், சமூகத்தின் செல்வ உற்பத்தியின் உயிர் நாடியான தொழிலாளர்களின் ஊதிய அளவு ஆண்டுக்கு, ஆண்டு சரிந்து, வீழ்ச்சி கண்டு வருவதும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உறுதியளிப்பு இல்லாததால் உழவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தரவுகளின் ஆதாரத்துடன் ஆய்வுகள் கூறுகின்றன.
இருநூறு ஆண்டுகள் தொடர்ந்த நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முன்னோர்கள் வளர்த்து வழங்கிய “வேற்றுமையில் ஒற்றுமை” நல்மரபையும், மதச்சார்பற்ற பண்பையும் அடித்தளமாக கொண்டு இயங்கி வரும் அரசியலமைப்பு சட்டத்தை சிதைத்து, அழித்தொழித்து விட்டு, அந்த இடத்தில், வழக்கொழிந்து போகும் “மனுதர்ம” விதிமுறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த ஆர்எஸ்எஸ் பரிவார் கும்பல்கள் வெறி பிடித்து அலைகின்றன.
சமய வேறுபாடுகளையும், சனாதனக் கருத்தியலால் கட்டமைக்கப்பட்ட படிநிலை சாதிய சமூக வேறுபாடுகளையும் பயன்படுத்தி, மதவெறி ஆதிக்க சக்திகள் அரசியல் அதிகாரத்தில் தொடரும் பேராபத்தை உணர்ந்து, அதனை அதிகாரத்திலிருந்தும், சமூக வாழ்வில் இருந்தும் வெளியேற்ற தைத் திருநாளில் உறுதி ஏற்போம்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” மற்றும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற தமிழ் சமூகத்தின் கனவுகளை நனவாக்க, அறிவியல் கருத்துக்களையும், சமூகநீதி ஜனநாயக கொள்கைகளையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உயர்த்தி பிடித்து, சோசலிச திசைவழியில் பயணிக்க வேண்டும் என்ற விழைவோடு உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.