மாநில செயலாளர்

ஒளிவு, மறைவு,- மிரட்டல் அரசியல்!

கட்சிக் கடிதம்

போர்க்குணமிக்க தோழர்களே!

அரசியலில் எதுவும் நடக்கலாம்!

அரசியலில் நிரந்தர நண்பர்கள் இல்லை.

அரசியலில் நிரந்தரப் பகைவர்கள் இல்லை.

இவ்வாறான ஓர் வியாக்கியானம் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றது.

இத்தகைய வியாக்கியானங்கள் எல்லா அரசியல் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் பொருந்துமா? எனில் பொருந்தாது. கொள்கையற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

பாஜகவுடன் இனி எப்போதும் உறவில்லை, கூட்டணி இல்லை என மேடைதோறும் முழங்கினார் அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் திரு கே.எடப்பாடி பழனிசாமி `எனது தாய் ஜெயலலிதாவை விட 100 மடங்கு ஆற்றல் மிக்கவர்’ என்றார். அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழலை அம்பலப்படுத்துவேன் என்றார் பாஜகவின் தற்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலை.

இரு கட்சிகளுக்கிடையே பணிப்போர் அல்ல பகிரங்கப் போரையே மாதக் கணக்கில் இடைவெளியின்றி கோடை இடி போன்ற முழக்கத்துடன் இரு கட்சிகளிலும் மேற்கொண்டு வந்தன.

பாஜகவுடன் ஒட்டுமில்லை உறவுமில்லை எக்காலத்திலும் இல்லை என்பதனை எடப்பாடியார் மட்டுமல்ல, அக்கட்சியின் அனைத்துத் தலைவர்களும் ஆங்காங்கே முழங்கியே வந்தனர்.
ஒருமித்த குரலாக ஒலிக்காமல் பார்த்துக் கொண்டது பாஜக. தூக்கம் கலைந்தவராய் நிம்மதி இழந்தவராய் திமுக மட்டும்தான் ஒரே எதிரி என்று திடீரென்று சேலத்தில் கூறினார் எடப்பாடி!
திடீர் மாற்றம் ஏன் ஏற்பட்டது? திகைத்து நிற்கின்றனர் அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் .

ஆர்.எஸ்.எஸ் -ன் அரசியல் பிரிவான பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களோடு போர் நடத்திக் கொண்டிருக்கிறது. நியாயமற்ற போரை, ஓர் அநியாயமான அநாகரிகமான போரை, ஒருதலைபட்சமான போரை நடத்திக் கொண்டுள்ளது.

ஒன்றிய அரசின் நேர்மையற்ற போரை தமிழக மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

  • ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்று கையெழுத்திட வேண்டும். இல்லையெனில் கல்விக்குரிய தொகையான ரூ.2152 கோடியைக் கொடுக்க முடியாது,
  • நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரால் தற்போதுள்ள 39 தொகுதிகளை மக்கள்தொகை விருதாச்சாரப்படி மாற்றி அமைப்போம், 31 ஆக குறைப்போம்!
  • மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4032 கோடியைக் கொடுக்க மாட்டோம்.
  • இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு, சீரமைக்க தமிழ்நாடு அரசு கோரிய நான்காயிரம் கோடி ரூபாயில் ஒரு பைசாவும் கூட தரமாட்டோம்.
  • நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்க மாட்டோம்.
  • இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்வோம்!
  • பொது சிவில் சட்டம் நிறைவேற்றியே தீருவோம்.
  • சுங்கச் சாவடிகளின் கட்டணத்தை உயர்த்துவோம், புதிய சுங்கச்சாவடிகளை மேலும் மேலும் திறப்போம்!
  • நகைக் கடனை முழுமையாகச் செலுத்தினால்தான் மறு கடன்.
  • ஏடிஎம்–ல் பணம் எடுத்தால் கடுமையான கட்டணம் விதிப்போம்

என ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும் ஒட்டு மொத்த நாட்டு மக்களுக்கு எதிராகவும் ஓர் யுத்தத்தை நடத்திக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நிதிநிலை அறிக்கை, வேளாண்மை அறிக்கைகளைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீது ஒவ்வொரு நாளும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இத்தகைய சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் பேரவைக் கூட்டத்தில் நாள்தோறும் தவறாமல் கலந்து கொண்டு தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, தீர்வு காண வேண்டிய பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார், பேரவைக் கூட்டத்தைத் தவிர்த்து விட்டு, திடீரென்று டெல்லிக்குச் சென்றார்.

அவரது வருகையை மோப்பம் பிடித்த பத்திரிகை, தொலைக்காட்சி, செய்தியாளர்கள் எடப்பாடியைச் சந்தித்துக் கேட்டனர் எங்கு வந்தீர்கள்? என்ன விசேஷம் என விசாரித்தனர்.
சிரித்துக் கொண்டே சொன்னார் டெல்லியில் கட்டப்பட்டுள்ள எங்கள் கட்சி அலுவலகத்தைப் பார்வையிட வந்தேன் என்று பதற்றமின்றிக் கூறினார்.

அன்று 25.3.2025 மாலை தன் சகாக்களையும் டெல்லிக்கு அழைத்தார்.

வேலுமணி, சி.வி.சண்முகம், முனுசாமி தம்பிதுரை எனப் பட்டாளத்துடன் இரவு 8 மணி முதல் 10 மணி வரை உள்துறை அமைச்சர் அமிதஷாவைச் சந்தித்தார்கள்.

இரண்டு மணி நேர உரையாடலுக்குப் பின்னர் வெளியே வந்தனர். பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் எடப்பாடி, சிரித்துக் கொண்டே சொன்னார் தமிழ்நாட்டு மக்கள் பிரச்சினை குறித்துப் பேசினோம் – அரசியல் குறித்துப் பேசவில்லை என்றார்.

மார்ச் 28 இல் மிக ரகசியமாக அண்ணா திமுகவின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் டெல்லி சென்றார். அமித் ஷாவை, நிதியமைச்சர் நிர்மலாவைச் சந்தித்தார். அவருடன் பாஜகவின் தமிழக தலைவர்கள் இருவர் உடனிருந்தனர்.

எடப்பாடி சந்திப்பைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அமித்ஷா – அண்ணாமலை சந்திப்போம் நடைபெற்றது.

செங்கோட்டையன் டெல்லி பயணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி.

அரசியல் பேசவில்லை என்று அடித்துச் சொன்னார் எடப்பாடி. ஆனால், அமித் ஷாவுக்கும் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. விரைவில் முடிவு அறிவிக்கப்படும். 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தனர்.

இவை மட்டுமன்றி, செங்கோட்டையனுக்கு ஒன்றிய அரசின் சார்பில் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

செங்கோட்டையன் தன் கட்சிக்குத் தெரியாமல் தலைமைக்குத் தெரியாமல் சென்றது ஏன்? அமித்ஷாவை நிர்மலாவைச் சந்தித்தது ஏன்? சந்திப்பில் தமிழக பாஜகவின் இரு தலைவர்களும் கலந்து கொண்டது ஏன்?

செங்கோட்டையன் தானாகச் சென்றாரா? அல்லது அமித்ஷாவின் ஆணையை ஏற்றுச் சென்றாரா?

எடப்பாடியார் தானாகச் சென்று அமித்ஷாவைச் சந்தித்தாரா? அல்லது அமித்ஷாவின் ஆணையை ஏற்றுச் சென்றாரா?

ஒளிந்து மறைந்து அரசியல் செய்ய வேண்டிய நிர்பந்தம் நெருக்கடிகளுக்கு எடப்பாடி ஆட்பட்டுள்ளாரா?

அத்தகைய நெருக்கடி எது? பொதுச் செயலாளர் பதவியா? கட்சி அங்கீகாரமா? தேர்தல் சின்னமா? கொடநாடு கொலை, கொள்ளை வழக்கா? தனது நண்பர் வீட்டில் நடந்த சோதனையா? தனது சம்மந்தி மீதுள்ள வழக்கா? இவைகளைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு எடப்பாடியை மிரட்டுகின்றதா?

பணியவில்லை என்றால் இரட்டை இலைச் சின்னமும், கட்சியின் அங்கீகாரம் இவைகள் இல்லை என்று எடப்பாடியை அமித் ஷா மிரட்டினாரா?

அமலாக்கத்துறை வருமான வரித்துறை இவைகள் ஏவி விடப்படும் என்று அச்சுறுத்தலா?
பணியை மறுத்தால் செங்கோட்டையனை வைத்துக் கட்சியை உடைப்பேன் என்று உரத்துக் கூறினாரா?

பொதுச் செயலாளர் பதவி காலியாகி விடும் என்று மிரட்டப்பட்டாரா? ஒளிந்து, மறைந்து அரசியல் நடத்திட வேண்டிய நிர்ப்பந்தம் ஏன்?

மிரட்டலுக்கு அடிபணிந்திட வேண்டிய அவலம் ஏன்?

எடப்பாடியார் மனம் விட்டுப் பேசுவாரா? உண்மையைத் தனது கட்சித் தொண்டர்களுக்கு ஒளிவு மறைவின்றிக் கூறுவாரா?

  • தமிழ்நாட்டுக்கு எதிராக ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் எதிராக உள்ள அதிமுக,
  • குறிப்பாக தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காத அதிமுக,
  • தொகுதி சீரமைப்பில் தமிழகம் பாதிக்கப்படுவதை எதிர்த்து முதலமைச்சர் ஏற்பாடு செய்த கடந்த 5.3.2025 ல் நடைபெற்ற கூட்டத்தில் திரு ஜெயக்குமாரை அனுப்பி முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானத்தை ஆதரித்துப் பேசியதுடன், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்ற உதவிய அதிமுக,
  • தமிழ்நாட்டிற்குரிய நிதியினை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் எனக் கூறும் அதிமுக,
    வக்பு வாரியத்தில் திருத்தம் கூடாது எனக் கூறி தமிழ்நாடு அரசுடன் இணைந்து நிற்கும் அதிமுக,
  • ஒன்றிய அரசின் நீட் நுழைவுத் தேர்வை ஏற்காத அதிமுக,
  • ஒன்றிய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் அதிமுக,

இப்படி திடீரென ‘யு டர்ன்’ எடுத்து அமித் ஷாவை வருடுவது ஏன்?

தமிழ்நாட்டு மக்களுடன் இணைந்து மக்களுக்காக இருக்கும் எடப்பாடியாக இருக்கப் போகின்றாரா? அல்லது அமித்ஷாவின் அரட்டல் மிரட்டலுக்கு அஞ்சி, நடுங்கி, ஒடுங்கி எடப்பாடியார் எட்டப்பராக மாறப் போகின்றாரா?

மீண்டும் சந்திப்போம்
வணக்கம்

தோழமைமிக்க,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button