பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் மனுதர்மத்தை புத்தாக்கம் செய்யும் முயற்சி
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கண்டனம்
விஸ்வகர்மா திட்டம், தொழில்களை ஊக்குவிக்கும் நிதியுதவி என்ற பெயரில் சாதியப் படிநிலை சமூகத்தைப் பாதுகாக்கும், புதிய வடிவிலான சனாதன தர்ம ஏற்பாடு என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அதன் பொதுச்செயலாளர் த.அறம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
பிரதமர் மோடி, இந்த ஆண்டு சுதந்திர தின விழா உரையில் ‘பிஎம் விஸ்வகர்மா’ என்ற திட்டம் செப்டம்பர் 17 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், ஐந்து ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். இந்தத் திட்டத்திற்காக 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதில் 18 வகையான பாரம்பரியத் தொழில்களை செய்யும் குடும்பங்கள் (சாதிகளுக்கு) பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், தங்களது அதே குலத் தொழிலை, தங்கள் பிள்ளைகளுக்கும், வாரிசுகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த பயிற்சி வழங்கப்படும் காலத்திற்கு, ஒரு நாளைக்கு ரூ.500 வழங்கப்படும். பயிற்சிக்குப் பின்பு தொழில் தொடங்குவதற்காக ரூ.15,000 மானியமாக வழங்கப்படும். முதல் தவணையாக வட்டியில்லா கடன் ரூ.1 லட்சம் வழங்கப்படும். அடுத்த தவணையாக 5 விழுக்காடு வட்டியுடன் ரூபாய் ஒரு இலட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் கொண்டுவந்துள்ள இந்த விஸ்வகர்மா திட்டம் 18 வகையான பரம்பரைத் தொழில்களை செய்யும் பிற்பட்ட மற்றும் பட்டியல் இன மக்களை, அவர்கள் செய்யும் கடுமையான, அசுத்தமான, சமூக அந்தஸ்து குறைந்த உடல் உழைப்புத் தொழில்களிலிருந்து வெளியேறி விடாமல் தடுக்கக் கூடியது.
இந்த தொழில்களில் ஈடுபடும் சாதிப் பிரிவினர், தங்கள் குலத்தொழிலை கைவிட்டு, வேறு மேம்பட்ட தொழில்களையும், சமூக கௌரவத்தையும், கூடுதல் வருவாயையும், ஊதியத்தையும் தரும், மூளை உழைப்பு சார்ந்த தொழில்களுக்கு செல்ல விடாமல் தடுக்கும் முயற்சியாகும்.
இது இந்திய சமூகத்தில் காலம் காலமாக, பிறப்பின் அடிப்படையில் சாதியப் படிநிலை அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்து, சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்களின் உழைப்பை சுரண்டிக் கொழுப்பதை பாதுகாப்பதாகும். புதிய சமூகப் பொருளாதர நிலைமைகளுக்கு ஏற்ப, மனுதர்மக் கோட்பாட்டை மீண்டும் புத்தாக்கம் செய்யும் முயற்சியாகும்.
இந்த விஸ்வகர்மா திட்டம், தொழில்களை ஊக்குவிக்கும் நிதி உதவி என்ற பெயரில், சாதியப் படிநிலை சமூகத்தை, பாதுகாக்கும் திட்டமாகும். உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்துவதற்கு, புதிய வடிவிலான சனாதன தர்ம ஏற்பாடாகும்.
எந்தத் தொழிலையும் தொடங்கும் வகையில் ஏழைகள் மற்றும் படித்த இளைஞர்கள், இளம்பெண்கள், சிறு குறு தொழில்முனைவோர் அனைவருக்கும் நிதியுதவி வழங்கிட வேண்டும். சிறு குறு தொழில்களை காக்க வேண்டும். அனைவருக்கும் விரும்பும் கல்வியையும், பெற்ற கல்விக்கேற்ப அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்பை நிரந்தர அடிப்படையில் வழங்குவதும் அவசியம். உழைப்புக் கேற்ற ஊதியத்தையும், அனைவருக்கும் சமூகப் பொருளாதார பாதுகாப்பை வழங்க வேண்டியதும் அரசின் கடமை.
இதை எல்லாம் செய்யாமல், சனாதன தர்ம அடிப்படையில், இந்தியாவில் சாதியத்தை நிலை நிறுத்த முயல்வது, இந்து சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். சமூக நீதிக்கு எதிரான அதர்மமாகும்.
எனவே, சமூக நீதிக்கு எதிரான விஸ்வகர்மா திட்டத்தை, சமூக நீதிக்கு எதிராகப் போராடிய தந்தை பெரியார் பிறந்தநாளில், அரசியல் உள்நோக்கோடு ஒன்றிய பாஜக அரசு நடைமுறைப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, இந்த விஸ்வகர்மா திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.