கதாசிரியரான சீமான், தந்தை பெரியாரைப் பற்றி அவதூறுகளை அள்ளி வீசி கொண்டிருக்கிறார்.
பெரியார் எனும் பிம்பம் முதல் தடவையாக தகர்க்கப்படுவதாக ஆனந்த தாண்டவம் ஆடுகிறார் குருமூர்த்தி. சீமானின் அவதூறுகளுக்கு எல்லாம் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக வெறுங்கையால் முழம் போடுகிறார் லண்டன் ரிட்டர்ன் அண்ணாமலை.
மொழியைப் பற்றி பெரியார் பேசியதையும் எழுதியதையும் 737 பக்கங்களில் தொகுத்து என்சிபிஎச் வெளியிட்டுள்ளது. ‘காட்டுமிராண்டி பாஷை’ என்ற இரண்டு சொற்களை மட்டும் எடுத்துக் கொண்டு பெரியாரின் மொழிக் கொள்கையைக் கணிப்பது பச்சை அயோக்கியத்தனம்.
காரணமும் சொல்கிறார் பெரியார். ஆங்கிலத்தில் ஆண்பால் என்றால் ‘ஹி’(லீமீ), பெண்பாலுக்கு ‘ஷி’ (sலீமீ). அரசனாய் இருந்தாலும் ஆண்டியானாலும் வேறுபாடு இல்லை. ஆனால் தமிழில் ஏன் அவன் & -அவள் & -அவர்-& அவர்கள் & நீ &- நீங்கள்-& தாங்கள்? எல்லோரையும் சமமாக பாவிப்பதைத் தவிர்த்து, ஒருவரை உயர்த்தவும், ஒருவரை தாழ்த்தவும், ஒருவரை மிதிக்கவும் மொழி பயன்பட்டால் அது காட்டுமிராண்டித்தனம் என்கிறார் பெரியார்.
அவருக்கு மனிதர்கள் மீதும் வளர்ச்சி மீதும் தான் அபிமானம். அதற்கு குறுக்கே எது வந்தாலும் உடைக்கத் தயங்கியதில்லை. இன்று வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் அன்றே பதிலளித்து விட்டார்.
“எனக்கு நான் பிழைக்க வேண்டுமே, என் வாழ்வு வளம் பெறவேண்டுமே, மக்களிடையில் எனக்கு மதிப்பு வேண்டுமே, என் அந்தஸ்து, எனது நிலை, எனது போக்கு வளம் பெற வேண்டுமே, என்னைப் பலர் மதிக்க வேண்டுமே, எனக்குப் பலரின் ஆதரவு வேண்டுமே என்பன போன்ற ‘என், எனக்கு’ என்கின்ற கவலையுள்ளவனுக்குத்தான் மானாபிமானம், தேசாபிமானம், மொழி அபிமானம், இலக்கிய அபிமானம், சமய அபிமானம் முதலிய அபிமானங்கள் வேண்டும். எனக்கு வெறும் மனிதாபிமானம் அதுவும் வளர்ச்சி அபிமானந்தான் முக்கியம்.” (விடுதலை -15.10.1962)
அவர் மொழியை வசைபாடி ஒதுக்கவில்லை. மனிதம், வளர்ச்சி எனும் தனது நோக்கங்களுக்கேற்ப புதுப்பிக்க முனைந்தார்.
இல்லையெனில், வீரமாமுனிவருக்குப் பின் சுமார் 200 ஆண்டுகள் கழித்து தமிழில் அவர் ஏன் எழுத்துச் சீர்திருத்தத்தில் இறங்கவேண்டும்?
“தமிழின் மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையும், அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்டமேற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடம் அன்பு செலுத்துகிறேன்” என்றார் அவர்.
பெரியாரை யாருமே எதிர்க்கவில்லை என்பது பச்சைப் பொய். அவர் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே கம்யூனிஸ்டுகள் அவரைப் போற்றியும் இருக்கிறார்கள், கடுமையான விமர்சனத்திற்கு ஆட்படுத்தியும் உள்ளார்கள்.
பெரியாரியம், மார்க்சியம், அம்பேத்கரியம் இவற்றுக்கிடையே ஒத்த கருத்துகள் உண்டு; அதே நேரத்தில் வேறுபாடுகளும் உண்டு. அவை பகை முரண்களல்ல.
இவை மூன்றும் எந்த புள்ளியில் இணைகின்றனவோ, அந்தப் புள்ளியில் கடுமையாக வேறுபட்டு, நேர் எதிரான பழமை வாத, பிற்போக்கான, எதுவும் மாறக்கூடாது என்ற சனாதனக் கருத்தைத் திணிப்பது இந்துத்துவா என்கிற தீவிர வலதுசாரி, இந்திய வகைப்பட்ட பாசிசம். இதுதான் பகை முரண்.
மறைந்த 50 ஆண்டுகளுக்கு பிறகு பெரியார் ஏன் குறி வைக்கப்பட வேண்டும்? அதுவும் அண்மைக் காலம் வரை அவரைப் போற்றி வந்த சீமான், அவரது ஒளிவுமறைவற்ற வெளிப்படையான வாழ்வின் மீது, திடீரென நாக்கூசாமல் அவதூறுகளை அள்ளிப் பொழிய வேண்டும்? ஆதரவாக அண்ணாமலை, குருமூர்த்திகள் ஆதரித்துப் பொங்க வேண்டும்.
தனது அழுகிப்போன கொள்கைகள் தமிழ்நாட்டில் விலை போகாது என்பதால், கூலிக்கு ஆள் பிடித்து கரையேறப் பார்க்கிறது பாஜக!
இந்துத்துவ பாசிசம், இந்திய சமூக வெளியை ஆக்கிரமித்திருக்காத காலத்தில், மார்க்ஸிய, பெரியாரிய, அம்பேத்கரியர்களிடையே கருத்தியல் மோதல்கள் இருந்தன. அவை அவசியமானவை.
இப்போதும் கூட பெரியாரின் மீதான இந்துத்துவத் தாக்குதலை எதிர்கொள்வதன் பேரில், திராவிடக் கருத்தியலாளர்கள் திசை மாறி மார்க்ஸியத்தையும் சேர்த்துத் தாக்குவதைப் பார்க்கிறோம்.
இதை கவனத்திற் கொள்ள வேண்டுமே தவிர, கருத்தியல் போராட்டமாக இப்போது வளர்த்தெடுத்து, தகர்க்கப்பட வேண்டிய இந்துத்துவ பாசிச சக்திகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்ப்பதாகிவிடக் கூடாது.
பெரியார் மட்டுமா செய்தார், வள்ளலார், வைகுண்டர், சிங்காரவேலர், ஜீவானந்தம் ஒன்றும் செய்யவில்லையா? என்று சீமான் கேட்பதில் நட்பு சக்திகளை சண்டைக்குள் தள்ளுவதற்கான தூண்டில் உள்ளது.
படமெடுத்து ஆடும் இந்துத்துவப் பாசிசத்தையும் அதன் நேசர்களையும், சிவப்பும், கருப்பும், நீலமும் சேர்ந்து எதிர்த்து நின்று முறியடித்தாக வேண்டும்.