தேர்தல் பரிசீலனை என்பது கடந்த கால தேர்தல் வெற்றி தோல்வி புள்ளிவிவரங்களோடு ஒப்பிட்டு மட்டும் அமைந்துவிடக் கூடாது.
வாக்காளர்கள் கடந்த கால தேர்தல் புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு வாக்களிப்பது கிடையாது. ஐந்து ஆண்டு கால தங்கள் சொந்த வாழ்நிலையில் இருந்து அனுபவத்தை பெற்று சிந்தித்து பெரும்பாலான வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள்.
அரசியல் கட்சிகளுக்கு உரிய வாக்குகளும், மதம், சாதி, இனம், மொழி, பிரதேசம், பண்பாடு போன்ற அடையாளங்களை முன்னிறுத்தும் வாக்குகளும் தேர்தலில் குறிப்பிட்ட பங்கை ஆற்றினாலும் வாழ்நிலையில் அனுபவத்திலிருந்து சிந்தித்து செலுத்தப்படும் வாக்குகள் தான் தேர்தல் போக்கை தீர்மானிக்கின்றன.
இவற்றில் பொருளாதார நெருக்கடி தீர்மானகரமான பங்கை வகிக்கிறது.
பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும். அரசியல் நெருக்கடி ஆளும் கட்சியின் நெருக்கடியாக மாறும். இந்த நெருக்கடியை மூடிமறைக்க, திசைதிருப்ப ஆளுங்கட்சி முயலும்.
பத்து ஆண்டுகள் நாட்டை ஆளும் பாஜக தனது பொருளாதார அரசியல் நெருக்கடியை மூடி மறைத்து, வகுப்புவாதத்தை கையில் எடுத்து தேர்தல் பிரச்சாரமாக மாற்றியது.
இந்தத் தேர்தலில் வகுப்பு வாதமும் அதற்கு எதிரான போராட்டமுமாகவே பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டது. ஆயினும் இவற்றைத் தாண்டி பொருளாதார அரசியல் நெருக்கடியும் தேர்தலில் பிரதிபலித்தது.
இந்த அடிப்படையில் தான் இந்தியா அளவிலும் தமிழக அளவிலும் தேர்தல் பரிசீலனையை செய்ய வேண்டும்.
திமுக தலைமையிலான கூட்டணி 40 க்கு 40 வெற்றி என்பதை சாதனையாக கொள்ளலாம். பாசிச பாஜக எதிர்ப்பு என்பதும், இந்த எதிர்ப்பு அணியை கட்டுக்கோப்பாக செயல்படுத்தி வந்ததும் இதற்குக் காரணமாகும்.
2019 தேர்தலில் திமுக 33. 52 விழுக்காடு வாக்குகள் பெற்றது. ஆனால் தற்போது 26. 93 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில் விசிக ரவிக்குமார், மதிமுக, கொமதேக போன்ற கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதை கணக்கிட்டு கழித்து விட்டாலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் திமுக அணியில் சேர்ந்துள்ளதையும் கணக்கில் கொண்டால் திமுகவின் வாக்கு சதம் குறைவு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இது திமுகவின் ஐந்தாண்டு ஆட்சியின் விளைவு என்பதை பாடமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாஜகவை பொறுத்த அளவில் இந்த தேர்தலில் இந்தியாவிலேயே குறிவைக்கப்பட்ட முதல் மாநிலம் தமிழ்நாடு. அதிமுகவை முழுமையாக பிளக்க முடியாவிட்டாலும், டிடிவி தினகரனின் அமமுக, ஓபிஎஸ் அணி, பாமக மற்றும் சிறிய கட்சிகள் உள்ளிட்ட கூட்டணியை அமைத்துப் போட்டியிட்டது.
வீழ்த்த முடியாத பிரதமர் மோடியின் பிம்பம் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஒன்பது முறை தலை காட்டியது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா போன்றோரும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
கோயமுத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்சென்னை, மத்திய சென்னை, வேலூர், மதுரை, திருப்பூர் ஆகிய தொகுதிகள் குறிவைக்கப்பட்டன. இவைகளில் பாஜக வெற்றி பெற முடியாவிட்டாலும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
19 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடம் கூட வெற்றி பெற முடியவில்லை.
4 இடங்களில் டெபாசிட் காலி. பாஜக கூட்டணி மொத்தம் 14 இடங்களில் டெபாசிட் காலி. அதன் விவரம் வருமாறு.
பாஜக – 4
பாமக – 4
தமாகா – 3
ஐஜேகே -1
அமமுக -1
தேவநாதன் -1
பாஜகவின் வெற்றி கீழ்கண்டவாறு அமைந்தது.
2 வது இடம் – 7
3 வது இடம் – 11
4 வது இடம் – 1
கடந்த 2019 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 5 இடங்கள் போட்டியிட்ட 3.66 சதம் வாக்குகள் பெற்றிருந்தது இந்த முறை 19 இடங்களில் போட்டியிட்டு 9.16 சதம் வாக்குகள் பெற்றுள்ளது.
தாமரைச் சின்னத்தில் போட்டியிட்ட ஏ.சி. சண்முகம், பாரிவேந்தர், தேவநாதன், ஜான் பாண்டியன் ஆகியோரின் வாக்குகளை சேர்த்தால் 11.24 விழுக்காடு வாக்குகள் பெறப்பட்டுள்ளது.
சகல விதமான அதிகாரங்களையும் பண பலத்தையும் குறுக்கு வழி உத்திகளையும் பயன்படுத்தியே இது சாத்தியமாகியது என்றாலும் பாஜகவின் இந்த வாக்கு சதவீத அதிகரிப்பை குறைத்து மதிப்பிடக்கூடாது.
பாஜகவின் பெரிய கூட்டாளியான பாட்டாளி மக்கள் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. 2019 தேர்தலில் அதிமுக பாஜக உள்ளிட்ட அணியில் பாமக 7 தொகுதியில் போட்டியிட்டு 5.42 சதவீதம் வாக்குகளை பெற்றது.
தற்போது பாஜக கூட்டணியில் 10 தொகுதியில் போட்டியிட்டு 4.1 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளன.
பாமக போட்டியிட்ட 10 தொகுதிகளில் 4 இடங்களில் டெபாசிட் காலி. ஒரு தொகுதியில் மட்டும் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. மற்ற ஒன்பது தொகுதிகளில் 2 ஆம் இடத்தை கூட.பிடிக்கவில்லை.
அதிமுக 6 இடங்களிலும், தேமுதிக 1 இடத்திலும் எஸ்டிபிஐ கட்சி ஒரு இடத்திலும் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்திலும் பாமகவை பின்னுக்குத் தள்ளியுள்ளன.
சாதி வாக்கு வங்கியை நம்பி இருக்கும் கட்சிக்கு இந்தத் தேர்தல் ஒரு நல்ல படிப்பினை.
பாஜகவும் அதிமுகவும் கூட்டணிக்காக தங்களின் கதவுகளை அகலமாகத் திறந்தே வைத்திருந்தார்கள். பாஜக கதவு வழியே நுழைந்த அளவுக்கு அதிமுக கதவு வழியே நுழையவில்லை. எனவே தேமுதிக எஸ்டிபிஐ புதிய தமிழகம் ஆகிய கட்சிகளோடு அணி சேர்ந்து தேர்தலை சந்தித்தது.
அதிமுக 32 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடங்களில் கூட வெல்ல முடியவில்லை.6 இடங்களில் டெபாசிட் காலி, கூட்டணி கட்சியான தேமுதிக இடத்தையும் சேர்த்தால் அதிமுக கூட்டணி 7 இடங்களில் டெபாசிட் காலி.
தென்சென்னை, வேலூர், தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் அதிமுக டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக ஓபிஎஸ் மற்றும் டிடிவி ஆகிய போட்டியிட்ட தொகுதிகளில் அதிமுகவின் டெபாசிட் காலி.
கீழ்கண்டவாறு அதிமுக இடம் பிடித்துள்ளது.
2 வது இடம் – 22
3 வது இடம் – 9
4 வது இடம் – 1
2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தனித்துப் போட்டியிட்டது. பிரதமர் மோடியின் பிம்பத்திற்கு எதிராக மோடியா லேடியா? என்ற சவால் விட்டார் ஜெயலலிதா. போட்டியிட்ட 39 தொகுதிகளில் 37 ல் வெற்றி. இந்தியாவில் அதிமுக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது 44.34. சதவீதம் வாக்குகளை குவித்தது.
2019 தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, தமாக, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி போன்றவை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
அதிமுக 20 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் (தேனி) மட்டும் வென்றது.
18.40 சதவீதம் வாக்குகள் பெற்றது.
தற்போது எடப்பாடி அண்ணாமலைக்கு கூட சவால் விட முடியவில்லை. 12 இடங்கள் அதிகரித்து 32 இடங்களில் போட்டியிட்டு 19.4 சதவீதம் வாக்குகளும் கூட்டணியுடன் சேர்த்து 23.05 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக எடப்பாடி தலைமையிலான அதிமுக என்ற ஒப்பீடு தான் முக்கியமானது. சென்ற தேர்தலை விட 12. தொகுதிகள் அதிகமாக போட்டியிட்டு 1 சதவீதம் வாக்குகள் அதிகரித்திருக்கிறது.
சென்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 66 இடங்களில் வென்று 33.29 சதவீதம் வாக்குகள் பெற்றது. இதை கணக்கிடும் போது தற்போது 18.89 சதவீதம் வாக்குகள் குறைந்து இருக்கிறது.
தற்போதைய நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவையும் சட்டமன்ற தொகுதிவாரியாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிமுக 10 இடங்களை மட்டுமே வென்றதாக காட்டப்பட்டுள்ளது.
66 இடங்களில் 56 இடங்கள் எங்கே போனது.18.89 சதவீதம் வாக்குகள் ஏன் குறைந்தது என்பது குறித்து எடப்பாடி ஆய்வு செய்ய வேண்டும்.
அதிமுக தனது பலகீனத்தை தற்காலிகமாக மறைக்கவே விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்ற நிலை எடுத்ததாக தெரிகிறது.
அதிமுகவின் கூட்டாளியான தேமுதிக கடந்த 2019 தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் 4 இடங்களில் போட்டியிட்டு 3.60 சதவீதம் வாக்குகள் பெற்றது.
தற்போது அதிமுக கூட்டணியில் 5 இடங்கள் போட்டியிட்டு 2.59 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் கடைசி வரை ஈடுபடுத்து குறைவான வாக்கு தேசத்தில் தோல்வடைந்தார்.
- வது இடம். -3 தொகுதிகள்
3.வது இடம். – 2 தொகுதிகள்
என்றவாறு தேமுதிக இடம் பிடித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் 39 இடங்களில் போட்டியிட்டு 8.19 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இதே 39 தொகுதிகளில் போட்டியிட்டு 3.89 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. தற்போது 4.37 சதவீதம் வாக்குகள் அதிகரித்து தனது அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
*ஆயினும் போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் டெபாசிட் காலி
2 வது இடத்திற்கு ஒரு இடம் கூட வரவில்லை.
3 வந்து இடம். 4 தொகுதிகள்.
- வது இடம். 35. தொகுதிகள்.
இவை குறித்து நாம் தமிழர் கட்சி பரிசீலிக்க வேண்டும்.
அதிமுக திமுக எதிர்ப்பு வாக்குகள் தமிழின உணர்வு வாக்குகள். என்பவை அதிகரித்திருக்கிறது.
பாசிச பாஜக எதிர்ப்பு என்ற அரசியல் ஆபத்தை பற்றி நாம் தமிழர் கவலைப்படவில்லை என்பதை தமிழக வாக்காளர்கள் உணர வேண்டும்.