பாலஸ்தீனத்தை பாதுகாத்திடுக! : அனைத்துக் கட்சி எம்பிக்கள் அறிக்கை
டெல்லியில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பாலஸ்தீன தூதுவரை நேரில் சந்தித்து பாலஸ்தீன மக்களுடனான தங்களின் ஒருமைப்பாட்டை தெரிவித்தனர்.
இதனை (ட்விட்டர்) எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, “பாலஸ்தீன பிரச்சினைக்கு இந்தியாவின் நிலையான ஆதரவு நீர்த்துப் போகக்கூடாது. 1967க்கு முந்தைய எல்லைகள் மற்றும் கிழக்கு ஜெருசலேமை தலைநகரமாகக் கொண்ட இரண்டு நாடுகள் என்ற தீர்வு அமைதியை நிலைநாட்ட முடியும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கையெழுத்திட்டுள்ள அறிக்கை வருமாறு:
கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள், வன்முறை ஒருபோதும் தீர்வாகாது என்று நம்புகிறோம். ஏனெனில் அது அழிவு மற்றும் துன்பத்தின் சுழற்சிக்கு வழிவகுக்கிறது. எனவே சர்வதேச சமூகம் இன்னும் கூடுதலான முயற்சிகளை மேற்கொண்டு இந்த மோதலுக்கு அமைதியான தீர்வைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
சர்வதேச சட்டங்களுக்கு கட்டுப்பட்டு பாலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்கு மதிப்பளிக்குமாறு சர்வதேச சமூகம் இஸ்ரேல் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த மண்டலத்தில் நீடித்த அமைதியை உறுதிசெய்ய, தீவிரமான அரசு சார்ந்த மற்றும் பலதரப்பு முயற்சிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
காசாவில் நிலவும் நெருக்கடி மற்றும் பாலஸ்தீன மக்களின் துயரங்கள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கிறோம். காசாவில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டு வீசி வருவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது இனப்படுகொலைக்கான முயற்சி என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் அப்பாவி உயிர்கள் மற்றும் வீடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க பகைமையைக் கைவிடுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.
மேலும், காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அவசரமாகவும் தடங்கல் இல்லாமலும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மனிதநேயமற்ற இந்த சூழல் கருதி, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உடனடியாகவும் விரைவாகவும் எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர், மருத்துவ உதவி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி சென்றடைவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
“இங்கிலாந்து ஆங்கிலேயர்களுக்கு எவ்வளவு சொந்தமோ, பிரான்ஸ் பிரெஞ்சுக்காரர்களுக்கு எப்படி சொந்தமாகுமோ, அதேபோன்ற பொருளில் பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது” என்று பாலஸ்தீன மக்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய உரிமைகளை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் மகாத்மா காந்தி கூறியதை நாங்கள் முழுமையாக வலியுறுத்துகிறோம்.
பாலஸ்தீன மக்கள் 75 ஆண்டுகளுக்கும் மேலாக அளவிட முடியாத துன்பங்களை அனுபவித்து வருவதை உணர்ந்து, அவர்களின் அவலநிலைக்கு முடிவு காண வேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது என்பதை உறுதியாகக் கூறுகிறோம்.
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின்படி 1967ல் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளுக்கு உட்பட்டு, பாலஸ்தீனம் என்ற சுதந்திரமான நாட்டை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்துகிறோம். அத்தகைய அங்கீகாரம் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு நியாயமான மற்றும் நீடித்த தீர்வை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான படியாகும்.
பாலஸ்தீன மக்களுக்கு அவர்களின் விதிகளை அவர்களாகவே நிர்ணயித்துக் கொண்டு அமைதியோடும் பாதுகாப்போடும் வாழ இது வாய்ப்பளிக்கும்.
இப்படிக்கு
- மணி சங்கர் அய்யர், முன்னாள் ஒன்றிய அமைச்சர்
- மனோஜ் ஜா, எம்.பி.
- கே.சி.தியாகி
- தீபங்கர் பட்டாச்சார்யா, சிபிஐ(எம்எல்)
- டி.ராஜா, முன்னாள் எம்.பி.(சிபிஐ)
- முகமது அப்சல், முன்னாள் எம்.பி.
- ஜெனா ஸ்ரீகாந்த், முன்னாள் அமைச்சர்
- கே.ஆர். டேனிஷ் அலி, எம்.பி.
- ஜாவேத் அலி கா ன், எம்.பி.
- முசாபர் ஷா (ஜே&கே)
- சுபாஷினி அலி, முன்னாள் எம்.பி.
- சந்தோஷ் பாரதியா முன்னாள் எம்.பி.
- ஷாஹித் சித்திக், முன்னாள் எம்.பி.
- முகமது அதீப், முன்னாள் எம்.பி.
- நதீம் கான் –
- நிலோத்பல் பாசு முன்னாள் எம்.பி